Aug 29, 2017

விடியாமலா போய்விடும்?

அலுவலகத்தில் ஒரு பணிப்பெண் இருக்கிறாள். அலுவலகம் இயங்கும் கட்டிடடத்திற்கான பணிப்பெண். தமிழரசி. அவளைப் பார்க்கும் போதெல்லாம் பேசுவேன். பெரும்பாலும் ‘வேலை எப்படி போகுது?’ ‘சாப்பிட்டாச்சா சார்?’ என்பது மாதிரியான பட்டும்படாத உரையாடல். தனக்குத் திருவண்ணாமலை சொந்த ஊர் என்று சொல்லியிருந்தாள். அதற்கு மேல் பேசிக் கொள்ள எதுவுமில்லை. அதுவுமில்லாமல் இளம்பெண்ணிடம் சம்பந்தமேயில்லாமல் என்ன பேசுவது?

நேற்று பார்த்த போது ‘கிளம்பறேன் சார்’ என்றாள். வேலையை விட்டுச் செல்கிறாள் போலிருக்கிறது.

‘வேற பக்கம் வேலைக்கு போறியா?’ 

‘ஆமா சார்..ஆஸ்திரேலியா போறோம்’ என்றாள். அவள் சொன்ன தொனியில் குதூகலம் தெரிந்தது. ‘அவர் ஆஸ்திரேலியா போறாரு...நானும் போறேன்’

‘அவர்’ என்றால் கணவனாகத்தானே இருக்க வேண்டும்? திருமணமானவள் என்று தெரியாது.

‘என்னது உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா’ என்று போலியான அதிர்ச்சியுடன் கேட்ட போது ‘போன மாசம்தான் சார்’ என்றாள்.

‘என்ன தமிழ்...ஒரு ஸ்வீட் கூட இல்லை?’

சிரிப்புதான் பதில். அலுவலகப் பணிப்பெண். இவளைத் திருமணம் செய்து கொள்கிறவன் ஆஸ்திரேலியா செல்கிறவன் என்றால் எப்படிப் புரிந்து கொள்வது என்பது எனது குழப்பமாக இருந்தது.

‘லவ்வா?’

‘ஆமாம் சார்’ - ஒரு வெட்கப் புன்னகை.

‘சூப்பர்..எவ்வளவு வருஷமா?’

‘ரொம்ப வருஷமா...’ மீண்டும் புன்னகை.

‘அப்படின்னா?’

விசாரிக்காமல் விட்டால் தலை வெடித்துவிடும் எனக்கு. 

‘வீட்ல ஒத்துகிட்டாங்களா?’ இந்தக் கேள்வியைக் கேட்கும் வரைக்கும் அவள் எல்லோரையும் போலவே என்று நினைத்திருந்தேன்.

அப்படியில்லை. அவனும் அவளும் வெவ்வேறு ஊர்களைச் சார்ந்தவர்கள். இருவருக்கும் பெற்றோர் இல்லை. அதனால் வீடு என்பதும் இல்லை. சிறு வயதிலிருந்தே ஆதரவற்றவர்கள். பெங்களூரில் ஒரு விடுதிதான் இருவரையும் தத்தெடுத்திருக்கிறது. சர்ச் நடத்துகிற விடுதி அது. சர்ச்சில் இருவரும் சந்தித்திருக்கிறார்கள். நண்பர்களாகி பிறகு காதலர்கள். பதினெட்டு வயது வரைக்கும் தேவாலயத்தில் கவனித்துக் கொள்வார்கள். அதன் பிறகு அவரவர் தமக்கான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம். பாதிரியாரின் ஒப்புதல் அவசியம்.

பத்தாம் வகுப்பிலேயே இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்திருக்கிறார்கள். பதினெட்டு வயது நிறைவடையும் போது பாதிரியாரிடம் தெரிவித்திருக்கிறார்கள். தமிழரசி படிப்பில் சுமார். அனுக்கு படிப்பு நன்றாக வருமாம். 

‘என்னால படிக்க முடியாது..நீ படி..நான் வேலைக்குப் போறேன்’ என்று சொல்லியிருக்கிறாள். இளங்கலை, முதுகலை என அவன் படித்துக் கொண்டிருந்த போதுதான் இவள் பல பணிகளையும் செய்திருக்கிறாள். அவன் இப்பொழுது இயற்பியலில் எம்.ஃபில் முடித்துவிட்டான். அவனுக்கு படிக்கும் போது பல உதவிகளைச் செய்ததாகப் பெருமையாகச் சொன்னாள். ‘அவனுக்கு நான் செய்யாம வேற யாரு செய்வாங்க’ என்றாள். இப்பொழுது முனைவர் பட்டத்துக்காக (பி.ஹெச்.டி) ஆஸ்திரேலியா செல்கிறான். உதவித் தொகையை அவன் படிக்கவிருக்கும் கல்லூரியே கொடுக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொண்டு இணைந்து கிளம்புகிறார்கள்.

எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது?

வெளியிலிருந்து பார்க்கும் போது அழகியல் மட்டும்தான் தெரிகிறது. அவர்களது வலியையும் வேதனையையும் அவள் காட்டிக் கொள்ளவே இல்லை. இந்தத் தருணத்தில் அவர்களது அத்தனை துக்கங்களையும் கீழே போட்டு அழுத்தியபடி ஆஸ்திரேலியப் பயணம் என்கிற சந்தோஷம் சிரித்துக் கொண்டிருந்தது.

‘நல்லா இருங்க’ என்றேன்.

‘தேங்க்ஸ் சார்’ 

எனக்கு அவர்கள் இருவரிடமும் நிறையப் பேச வேண்டும் எனத் தோன்றியது. அவர்களுக்கு நேரமில்லை. வியாழக்கிழமை கிளம்புகிறார்கள்.

சில மனிதர்கள் எவ்வளவோ யோசிக்கச் செய்து விடுகிறார்கள். இத்தகைய மனிதர்கள்தான் வாழ்க்கைக்கான பாடங்களை கற்றுக் கொடுத்தபடியே இருக்கிறார்கள்.

எல்லாமும் இருந்தும் எதையாவது சுமையாகக் கருதுகிறவர்கள்தான் அதிகம். எவ்வளவுதான் சுமை இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாத மனிதர்கள் வெகு சொற்பம். தமிழரசி இரண்டாம் வகை. எல்லா மனிதர்களுக்கு ஏதேனும் துக்கமும் வலியும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இங்கே யாருக்குத்தான் வேதனை இல்லை? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துன்பம். அதையே நினைத்துக் கொண்டிருந்தால் மாறிவிடுமா என்ன? எதுவுமே மாறப் போவதில்லை. அழுத்தமும் அழுகையும்தான் கூடும். 

எதிர்கால இலக்கு ஒன்றை நிர்ணயித்துக் கொண்டு வெறித்தனமாக ஓடிக் கொண்டேயிருக்கிறவர்கள் எல்லாவற்றையும் சிதறடித்தபடியே ஒடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கண்களுக்கு தெரிவதெல்லாம் இலக்கு மட்டும்தான். அதை மட்டுமே மனதில் நிறுத்தியபடி ஓடுகிற ஓட்டத்தில் துக்கமாவது வேதனையாவது!

9 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

மனதிற்கு ரொம்ப பிடித்தது. அருமை.

Paramasivam said...

வாழ்க மணமக்கள். உறுதிக்கு இவர்கள் எடுத்துக்காட்டு.

சுதா சுப்பிரமணியம் said...

Best Wishes for their future

Anonymous said...

wow....best of luck for them......

Anonymous said...

Wow very Touching when reading !!!!!!!!!!!!!!!!!!!

சேக்காளி said...

//இருவருக்கும் பெற்றோர் இல்லை. அதனால் வீடு என்பதும் இல்லை. சிறு வயதிலிருந்தே ஆதரவற்றவர்கள்//
அநாதைகள்
என்ற அனுபவத்தை எத்தனை எத்தனை கோணங்களில் சந்தித்திருப்பார்கள்.தவிர்க்க எத்தனை முயற்சித்திருப்பார்கள்.
ஆஸ்திரேலியாவிலாவது அதன் தாக்கமின்றி வாழட்டும்.

சேக்காளி said...

அரை டவுசர் என்ற உங்களின் ஒரு பதிவை ஞாபகப் படுத்தியது.
உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா அந்த பதிவு?

Baskar said...

Really felt happy for that couple. Though we have everything still we always worry or complain about something. Atleast after reading theses kind of articles, we should grateful to god and also think positive about life.

Anonymous said...

//எதிர்கால இலக்கு ஒன்றை நிர்ணயித்துக் கொண்டு வெறித்தனமாக ஓடிக் கொண்டேயிருக்கிறவர்கள் எல்லாவற்றையும் சிதறடித்தபடியே ஒடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கண்களுக்கு தெரிவதெல்லாம் இலக்கு மட்டும்தான். அதை மட்டுமே மனதில் நிறுத்தியபடி ஓடுகிற ஓட்டத்தில் துக்கமாவது வேதனையாவது! // Motivating words :-) :-) :-)