May 5, 2017

மரப்பேய்

சீமைக்கருவேல மரங்களின் பலன்களையும் தீமைகளையும் விளக்கும் அறிவியல் சார்ந்த தரவுகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நம் ஊரில்தான் மக்கள் நலன் என்பது பொருட்டே இல்லை. எல்லாமே அரசியல் ஆக்கப்பட்டுவிடுகிறது. ஒரு தரப்பு ஒழிக்க வேண்டும் என்றால் இன்னொரு தரப்பு நேர் எதிர்மாறாகப் பேசுகிறார்கள். நடுவில் இருப்பவர்கள் மண்டை காய்ந்து ‘எப்படியோ போகட்டும்’ என்று விட்டுவிடுகிறார்கள். 

மதுரை உயர் நீதிமன்றம் சீமைக்கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என உத்தரவிட பலரும் களமிறங்கினார்கள். சில பத்திரிக்கைகள் ‘சீமைக்கருவேல மரம் தீமை விளைவிப்பவை அல்ல’ என்று எழுதினார்கள். பெயர் சொல்லியே எழுதலாம்- பசுமை விகடனில் எழுதினார்கள். ஒரு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்திருக்கிறார்கள். 

சீமைக்கருவேல மரங்களின் நன்மைகளையும் தீமைகளையும் தரவுகளோடு விவரிக்கிற தமிழ் கட்டுரைகள் எதுவும் கண்ணில்படவில்லை. ‘நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சுகின்றன’ என்று சொல்கிறவர்களிடம் ‘எவ்வளவு நீரை உறிஞ்சுகிறது என்ற புள்ளிவிவரத்தைக் கொடுங்கள்’ என்று கேட்டால் அவர்களிடம் துல்லியமான பதில் இல்லை. சீமைக்கருவேல மரம் வெப்பத்தை வெளியிடுகிறது என்று சொன்னால் ‘எந்தத் தருணத்தில் எவ்வளவு டிகிரி வெப்பத்தை வெளியிடுகிறது’ என்று சொல்ல வேண்டும். அப்படியில்லையெனில் நீதிமன்றத்தை அணுகுகிறவர்கள் மேம்போக்கான பதில்களைக் காட்டி‘ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை’ என்று சொல்லித் தடையை வாங்கத்தான் செய்வார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை சீமைக்கருவேல மரத்தை எதிர்ப்பவர்களிடம் மட்டுமில்லை- ஆதரிப்பவர்களிடமும் உறுதியான தரவுகள் இல்லை. ‘எரிபொருளாகப் பயன்படுகிறது’ என்று தட்டையான காரணத்தை முன்வைக்கிறார்கள். எரிபொருளாகப் பயன்படுகிறது என்பதனால் எவ்வளவு தீமையை விளைவித்தாலும் விட்டுவிடலாமா என்ன?

நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் வாதப் பிரதிவாதங்களை சற்று அணுக்கமாக கவனிக்க வேண்டியிருக்கிறது. 

சீமைக்கருவேல மரம் குறித்து தமிழில்தான் தரவுகள் இல்லையே தவிர இம்மரத்தின் நன்மை, தீமைகள் குறித்து ஆங்கிலத்தில் நிறையக் கட்டுரைகள் இருக்கின்றன. இணையத்தில் தேடி எடுக்க முடியும். தரவுகளுடன், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கட்டு பிரசுரம் செய்யப்பட்ட கட்டுரைகள் இவை. இத்தகைய கட்டுரைகளில் இருக்கும் தகவல்கள் தமிழுக்கும் வந்து சேர வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. நம்முடைய மக்களிடம் சூழல் சார்ந்து புரிதலை உண்டாக்குவதற்கான எளிமையான அதே சமயம் தரவுகளுடன் கூடிய கட்டுரைகள் அவசியமாகப் படுகின்றன.

Prosopis juliflora என்பது சீமைக்கருவேல மரத்தின் தாவரவியல் பெயர். Mesquite என்பதும் அதன் பெயர்தான். அநேகமாக பெரு தேசத்திலிருந்து பிற நாடுகளுக்கு பரவியிருக்கக் கூடும் என்றுதான் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். வெறுமனே ‘இந்த மரம் தீங்கானது’ என்று பெருமொத்தமாக முடிவுக்கு வர வேண்டியதில்லை. இம்மரத்தின் நன்மைகளையும் அலசலாம். பிரேசிலின் வேளாண்மை அமைச்சரகத்தின் விஞ்ஞானி ஒருவருடைய கட்டுரை மரத்தின் நன்மைகளைப் பேசுகிற கட்டுரைகளில் முக்கியமானது. பெரும்பாலும் 1960களில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளையே தரவுகளாகத் தருகின்ற கட்டுரை அது.

மரங்களின் பயன்கள் என்று கீழ்கண்டவற்றை முன்வைக்கிறது-
  • குறைந்த நீருள்ள இடங்களில் பயிர் செய்ய முடியும்.
  • காடு வளர்ப்புக்குப் பயன்படுகிறது.
  • ஏழைகளின் பொருளாதார உதவிகளை மேம்படுத்தும் வகையில் இந்த மரத்தைப் பயன்படுத்த முடியும்.
  • விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
இவை ஒரு பக்கம் இருக்கட்டும். 

சமீப காலத்தில் பிரசுரம் செய்யப்பட்டிருக்கும் கட்டுரைகள் யாவுமே இம்மரத்திற்கு எதிரான கருத்துக்களைத்தான் முன்வைக்கின்றன. சீமைக்கருவேல மரத்திற்கு எதிரான கட்டுரைகள் அத்தனையும் முன்வைக்கின்ற மிக முக்கியமான கருத்து- Invasive Trees என்பது. படையெடுக்கும் மரம். எந்த வகையான மண்ணாக இருப்பினும் ஊடுருவி பிற தாவரங்களுக்கான வளங்களை உறிஞ்சி வகை தொகையில்லாமல் பரவிவிடுகிற தன்மையைச் சுட்டிக் காட்டுகின்றன.

மிக வேகமாகப் பரவக் கூடிய எந்த உயிரினம்/தாவரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் சூழலியல் சமநிலையின் அடிப்படையான தத்துவம். ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் அதீதமாகப் பரவக் கூடிய விலங்குகளையும் தாவரங்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. அதே அடிப்படையில் தமிழகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. நம் ஊர்களில் பார்த்தீனியமும் சீமைக்கருவேல மரமும் அளவு கடந்து பரவியிருக்கின்றன. நீர் நிலைகளையும், நீர் வரத்துப் பாதைகளையும் இவைதான் ஆக்கிரமித்து நிறைந்திருக்கின்றன. இவைகளை அழிக்காமல் நீர் நிலைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியம் வெகு குறைவு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Agressive Invasive உயிரினம் என்பவை வெறும் படையெடுப்பை மட்டும் நிகழ்த்துவதில்லை. அந்தந்த மண்ணுக்குரிய உயிரினங்களை அழித்து அந்த இடத்தை தாம் எடுத்துக் கொள்கின்றன. சீமைக்கருவேல மரத்துக்கு இது அப்படியே பொருந்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சீமைக்கருவேல மரம் வளர்கிற இடத்தில் கருவேல மரம், வெள்ளை வேல மரம் போன்ற பிற மரங்களை முற்றாக வறண்டு போகச் செய்துவிடுகின்றன. 

‘P. juliflora litter caused far greater mortality of native Indian species than litter from P. cineraria’ என்று 2012 ஆம் ஆண்டு வெளியான ஆராய்ச்சிக் கட்டுரையில் அறிவிக்கிறார்கள். வன்னிமரமும்(Cineraria) சீமைக்கருவேல மரமும்(Juliflora) ஒரே தாவரவியல் குடும்பத்தைச் சார்ந்தவை. ஆனால் சீமைக்கருவேலமானது பல இந்தியத் தாவரங்களைக் கொல்லுகிற தன்மையுடன் இருப்பதாக முடிவு எழுதுகிறார்கள். அந்தந்த மண்ணுக்குரிய தாவரங்களைக் அழித்து தம்மை பெருக்கி வளர்த்து அப்பகுதியின் தாவரவியல் சமதன்மையைக் குலைக்கின்ற காரணத்திற்காகவும் இம்மரங்களை அழிக்க வேண்டியிருக்கிறது. 

இத்தகைய பல காரணங்களையும் உள்ளடக்கித்தான் Global Invasive Species Database (GISD) என்ற பட்டியலில் சீமைக்கருவேல மரத்தைச் சேர்த்திருக்கிறார்கள்.
மேற்சொன்ன எதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் அரசியல் சாயத்துடன் பேசுகிறவர்கள் ‘இந்த மரத்தை வெட்டக் கூடாது’ என்கிறார்கள். சீமைக்கருவேல மரத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறவர்கள் நீர் நிலைகளின் சீரழிவு, மண்ணின் சமநிலைக் குலைவு ஆகிய இரண்டு வாதங்களுக்கும் தெளிவான தீர்வுகளை முன் வைக்க வேண்டும். நிழல் கொடுக்கிறது, விறகாகப் பயன்படுகிறது என்பதையெல்லாம் தாண்டி கடந்த அறுபதாண்டுகளில் புதராக மண்டி நீர் நிலைகளைப் பாழ்படுத்தி, பிற தாவரங்களை அழித்து சூழலியல் சமநிலையைக் குலைத்து பெரும் எதிர்விளைவுகளை சீமைக்கருவேல மரங்கள் உண்டாக்கியிருக்கின்றன என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். 

எவ்வளவு ஏழைகள் விறகுக்காக இம்மரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்ற புள்ளிவிவரத்தைத் தமிழக அரசுதான் தர வேண்டும். இந்த ஒரு காரணத்தை முன் வைத்து இம்மரங்களை விட்டுவைக்கலாமா என்பதை அந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் முடிவெடுக்கலாம். 

மற்றபடி, சீமைக்கருவேல மரங்கள் நீரை உறிஞ்சுகின்றன என்பதற்கு சர்வதேச அறிவியல் கட்டுரைகளில் இருந்து கூட தரவுகளை எடுக்க முடியும். “mesquite will exploit sources of deep water by growing a taproot” என்பது 1963 ஆம் ஆண்டில் வெளியான Depth of Roots in Soil என்கிற ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறுமனே எழுதப்பட்ட கட்டுரை இல்லை அது. அமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தில் இம்மரத்தின் வேர் 53.3 மீட்டர் அளவுக்கு (கிட்டத்தட்ட 175 அடி ஆழம்) சென்றிருக்கிறது என்று கண்டறிந்து தரவுகளோடு எழுதப்பட்ட கட்டுரை அது. 175 அடி ஆழம் என்றால் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். அந்தக் கட்டுரையானது அமெரிக்க சூழலியல் சங்கத்தின் Ecology என்ற சர்வதேச சஞ்சிகையிலும் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. (Author: Walter S. Phillips; Volume 44; Issue 2; April 1963)

சீமைக்கருவேல மரங்கள் நம் மண்ணில் உண்டாக்கக் கூடிய எதிர்மறையான விளைவுகள் என்ன, அவற்றை ஏன் அழிக்க வேண்டும் என்பதற்கான கேள்விகளுக்கு அறிவியல் சஞ்சிகைகளிலும், ஆராய்ச்சிக் கட்டுரைகளிலுமிருந்து தகவல்களை எடுத்து முன்வைக்க முடியும் என்பதற்காக இதையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. சூழலியல் சார்ந்த அரசியல் என்பது உலக அளவில் எப்பொழுதும் உண்டு. இங்கும் அதன் வேர் நீண்டிருக்கிறதோ என்று பயமாக இருக்கிறது. மண்ணை, மக்களை, உழவனை பாதிக்கிற ஒரு விவகாரம் இது. திறந்த மனதுடன் விவாதிப்பதுதான் சரியாக இருக்குமே தவிர மேம்போக்காக ‘சரி’ ‘தவறு’ என்று மக்களைக் குழப்புவது எதிர்காலத்திற்கு நாம் செய்கிற மிகப்பெரிய துரோகம். அது எந்தக் காலத்திலும் அழியாத வடுவாக இருந்து கொண்டேயிருக்கும்.

7 எதிர் சப்தங்கள்:

Shankari said...

Wonderful article. I was thinking to collect info against this tree..
We could see this tree in Rajasthan every where and was happy to hear the news of banning in Tamilnadu. But as you have correctly said people either support or oppose blindly without knowing the facts.
Thanks a ton for sharing the details!

ADMIN said...

சீமைக்கருவேல மரம் வளர்கிற இடத்தில் கருவேல மரம், வெள்ளை வேல மரம் போன்ற பிற மரங்களை முற்றாக வறண்டு போகச் செய்துவிடுகின்றன.
//// உண்மைதான்./// கண்கூடாக கண்டு அனுபவித்தது. எங்கள் ஊரில் உள்ள குட்டைகளில் ஆரம்பத்தில் கருவேல மரங்கள், வெள்ளை வேல மரங்கள்தான் அதிகம் இருந்தது. ஒன்றிரண்டு சீமை கருவேல மரங்கள் பார்த்திருக்கிறேன். இப்போது சீமை கருவேல மரங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பெயருக்கு கூட ஒரு கருவேல மரமோ, வெள்ளை வேல மரமோ கிடையாது.

நிகழ்காலத்தில்... said...

நீங்க பாட்டுக்கு வெட்டிட்டு போயிட்டா நாங்க திரைமறைவு வேலை எல்லாம் அந்த முள்ளு காட்டுக்குள்ள எப்படிச் செய்யறது.. அதான் ஸ்டே வாங்கினோம் ..

சேக்காளி said...

நல்லதா கெட்டதா என்பதை ஆராய்ந்து இது போன்ற கட்டுரைகளை வெளியிட வேண்டிய தமிழக அரசின் இணைய தளம் கலைஞரை குற்றம் சொல்ல பயன்படுகிறதாம்.
நம்மை காப்பாற்ற ,நம் நலன்களை முன்னெடுத்துச் செல்ல நம்மால் தேர்ந்தெடுக்கப் பட்ட சமஉ க்களுக்கு தெர்மாக்கோலை பயன்படுத்தி நீர் ஆவியாவதை தடுப்பது பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறதாம்.
இதையெல்லாம் தாண்டி எங்களுக்காக சிந்திக்கவும் ஒரு ஐடிக்காரன் இருக்கார்.

Muthu said...

// பெயர் சொல்லியே எழுதலாம்- பசுமை விகடனில் எழுதினார்கள். //

இதற்கேன் இவ்வளவு தயக்கம் ? பெயர் சொல்லித்தானே எழுதவேண்டும் ? இது ஒன்றும் தனிப்பட்ட பிரச்சினை அல்லவே, பொதுப்பிரச்சினைதானே ? எனவே என்ன சொல்கிறார்கள் என்பதையும் யார் சொல்கிறார்கள் என்பதையும் வெளிப்படையாக வைத்து விவாதிப்பதுதான் முறையாக இருக்கும்.

இதுபோன்ற விஷயங்களில் யார் என்பதும் சொல்லப்படும் விஷயத்திற்கு கனம் கூட்டும் என்பதால் பெயர் குறிப்பிட தயங்கவேண்டியதில்லை.

Unknown said...

மரப்பேய் - அருமையான சொல்தேர்வு:)

Anand Viruthagiri said...

அருமையான பதிவு !

இது போன்ற அறிவியல் சார்ந்த தரவுகள், கட்டுரைகள் பற்றிய அறிமுகங்கள் சீமை கருவேல மரங்களின் தீமைகள் பற்றிய தெளிவான புரிதலை ஊக்குவிக்கும்.

நீங்கள் எதிர்த்து கொண்டிருப்பது புற்றுநோய் போல் விஸ்தரித்துள்ள மரங்களை மட்டுமல்ல, அவைகளை அழிக்க விடாமல் தடுக்கும் பெரும் மனித சக்தியுடனுமே (அரசு, நீதிமன்றம், நிறுவனங்கள், பத்திரிகைகள்).

ஆனால் இந்த போராட்டதிற்கு தேவையான மனவலி உங்களிடம் உள்ளது, மணி. மென்மேலும் கரங்கள் உங்களுடன் கைகோர்த்து வலுசேர்க்கும் என்று நம்புகிறேன்.