May 10, 2017

துண்டிப்பு

நேற்று வழக்கத்திற்கு மாறாக சற்று முன்னதாகவே அலுவலகத்திலிருந்து கிளம்பிவிட்டேன். வெயில் இருக்கும் போதே வீட்டை அடைவது ஒரு சுகம். சாலை முழுவதும் பராக்கு பார்க்க எவ்வளவோ இருக்கின்றன. என்னிடம் ஓர் அலைபேசி இருந்தது. நான்காயிரத்து ஐநூறு ரூபாய். வாட்ஸப், ஃபேஸ்புக் என்று சகலமும் இருக்கும். சிக்னலுக்கு சிக்னல் அதை எடுத்து நோண்டிக் கொண்டிருப்பது வழக்கமாகியிருந்தது. இந்தப் பழக்கம் எல்லை மீறி ஊருக்குச் செல்லும் போது பேருந்துகளில் கூட செல்போனை பார்க்கத் தொடங்கியிருந்தேன். பயணங்கள்தான் பாடப்புத்தகங்கள். அதைப் படிக்காமல் சேகரிக்க வேண்டிய எல்லா அனுபவங்களையும் இழந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. சாலையின் வேடிக்கைகள் எதுவுமே கண்ணில்படாமலேயே நடந்து கொண்டிருந்தன.

அதற்கும் வெகு காலத்திற்கு முன்பு நோக்கியா 1100தான் கைவசமிருந்தது. எந்த வசதியுமில்லாத எளிமையான அலைபேசி அது. அதிகக் காசு கொடுத்து வேறு அலைபேசியை வாங்கவேண்டியதில்லை என்ற கஞ்சத்தனத்தின் காரணமாக காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். செல்போனை விடவும் உலகத்தை அதிகமாகப் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. ‘வாட்ஸப் நெம்பர் கொடுங்க’ என்று கேட்கிறவர்கள் அதிகமாகியிருந்தார்கள். நாமும் வாட்ஸப் வைத்துக் கொள்வோம் என்றுதான் குழியில் விழுந்தேன். அது மெல்ல மெல்ல ஆக்கிரமித்து ஃபேஸ்புக், ஜிமெயில் என்று இழுத்துக் கொண்டேயிருந்தது. ஒரு வழியாகியிருந்தேன். அரைக்கணத்தில் தோன்றிய விஷயம்- இந்தக் கருமாந்திரத்தைத் தூக்கிப் போட்டுவிட வேண்டும். தூக்கி வீசியாகிவிட்டது. ஒரு மாதம் ஆகிறது. 

நோக்கியா 130 ஒன்றை அப்பா வாங்கி வைத்திருந்தார். ஆயிரத்து ஐநூறு ரூபாய் என நினைக்கிறேன். இரண்டு சிம் கார்டுகளைப் போட்டு வைத்துக் கொள்ளலாம். அழைப்பு வந்தால் பேசலாம். திருப்பி அழைக்கலாம். குறுஞ்செய்தி கூட அனுப்புவதுண்டு. அதற்கு மேல் ஒன்றுமில்லை. மற்ற நேரங்களில் அதைக் கண்டுகொள்ள வேண்டும் என்றே தோன்றுவதில்லை. முன்பு வைத்திருந்த அலைபேசியைக் காலையில் ஒரு முறை சார்ஜரில் போட்டால் மாலையில் இன்னொரு முறை ஏற்றிக் கொண்டிருக்க வேண்டும். இது அப்படியில்லை. கடந்த ஞாயிறு காலையில் மின்சாரத்தில் இணைத்து வைத்திருந்தேன். நான்கு நாட்கள் ஆகிறது. இன்னும் இரண்டொரு நாட்களுக்குக் கூடத் தாக்குப் பிடிக்கும் போலிருக்கிறது.

ஆசுவாசமாக இருக்கிறது. சமீபத்தில் சந்திக்கும் நண்பர்களிடமெல்லாம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். விளம்பரம் என்றில்லை-

இன்றைக்கு செல்போன்கள்தான்தானே நம்முடைய பெரும் நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன? விழித்திருக்கும் போது ஒரு நாளில் எவ்வளவு முறை அலைபேசியைப் பார்க்கிறோம் என்று கணக்குப் வைத்துப் பார்த்தால் தெரியும். ‘இது இல்லாவிட்டால் அது’ என்று ஏதாவதொரு காரணத்திற்காக தலையைக் குனிந்து கொண்டேயிருக்கச் செய்கிறது. எதுவுமே இல்லையென்றால் சேகரித்து வைத்திருக்கும் நிழற்படங்களையாவது புரட்டிக் கொண்டிருக்கிறோம். ‘சும்மா இருத்தல்’ என்பதையே முழுமையாக இழந்துவிட்டது போலத்தான். சும்மா இருத்தல் சுகம் மட்டுமில்லை- யோசிப்பதற்கான தருணம் அது. நம்மை, நம் வாழ்க்கையை, நம்மைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றிய எண்ண ஓட்டம் அலையடிக்கும் தருணம். இப்பொழுது அதை முழுவதுமாக அலைபேசிக்குத் தின்னக் கொடுத்திருக்கிறோம்.

நவீன அலைபேசிகளால் நல்ல விஷயங்கள் இருக்கின்றனதான். மறுக்கவெல்லாம் இல்லை. ஆனால் நம்முடைய சுயத்தை, நேரத்தை என எல்லாவற்றையும் மெல்ல மெல்லத் தொழில்நுட்பத்திடம் இழந்து கொண்டிருப்பதாகத்தான் படுகிறது. வெறுமனே நேரம், உடல்நலம் சார்ந்த விஷயம் மட்டுமில்லை இது. மனரீதியாக நம்முடைய மாறுதல்களையும் கவனித்துப் பார்க்கலாம். அலைபேசியைப் பார்க்க முடியாத போது தேவையில்லாத பரபரப்பு பற்றிக் ஆழ்மனதில் ஒருவிதமான restless இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். யாராவது நம்முடைய அலைபேசியைத் தொடும் போது ஒட்டிக் கொள்ளும் பதற்றம்- இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து வாழ்க்கையை எங்கேயோ இழுத்துக் கொண்டு போகிறது. 

'always connected' என்ற பெயரில் எப்பொழுதுமே வெர்ச்சுவல் உலகத்தோடு நம்மை இணைத்து வைத்துக் கொண்டு ரத்தமும் சதையுமான நிஜ உலகத்திலிருந்து துண்டித்து நிற்கிறோம். செல்போன்கள் நமக்கான தகவல்களைக் கொடுக்கலாம். உலகம் நமக்கான அனுபவங்களைக் கொடுக்கிறது. எதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

கடந்த தலைமுறை ஆட்களிடம் ஒரு முக்கியமான பலம் இருந்தது. புதிய முகம் ஒன்று கண்ணில்பட்டால் உற்றுப் பார்த்தே ஆளை எடை போட்டுவிடுவார்கள். அவனுக்கும் நமக்கும் சம்பந்தமிருக்கிறதோ இல்லையோ- ‘இவன் இப்படித்தான்’ முடிவுக்கு வந்திருப்பார்கள். சற்றேறக்குறையத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்கள். சக மனிதனை கவனித்தலும் அவனை எடை போடுவதும் ஒரு பலம்தான். இன்றைக்கு சக மனிதனை எத்தனை பேர் நுணுக்கமாகப் பார்க்கிறோம். பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் வெள்ளிக்கிழமை இரவு பேருந்துக்கு நிற்கும் கூட்டத்தைப் பார்க்க வேண்டும். எண்பது சதவீதம் பேர் செல்போனைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இங்கே மட்டுமில்லை- எங்கேயும் அப்படித்தான். தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? யார் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எந்தச் சிரத்தையுமில்லாத தலைமுறை இது. உலகத்திலிருந்து நம்மை பிரித்து வைக்கும் வஸ்தாக அலைபேசி மாறியிருக்கிறது.

உலகம் இப்படித்தான். வெகு வேகமாக எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுக் கொண்டேயிருக்கிறது. நவீன அறிவியல் வாழ்க்கையைச் சுலபமாக்கிக் கொடுப்பதாகவும், செகளரியங்களைக் கொண்டு வந்து கொட்டுவதாகவும் நினைக்க வைத்துவிடுகிறது. ‘இதெல்லாம் நமக்கு வேண்டாம்’ என்று சொன்னால் பழந்தலைமுறை ஆள் சொல்லுகிற அறிவுரை போலத்தான் இருக்கும். ஆனால் இத்தகைய அதிநவீனத்திலிருந்து நம்மைத் துண்டித்துக் கொள்ளும் போது ஒருவிதமான திருப்தியும் நிம்மதியும் கிடைப்பதைப் பழகிக் கொள்ள வேண்டும். 

ஹைதராபாத்திலிருந்த போது அவசரத்திலும் ஓசையிலிருந்தும் விலகிப் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. தனியாக ஒரு அறையெடுத்து அலைபேசி, தொலைக்காட்சி என்று எல்லாவற்றையும் அணைத்து வைத்துவிட்டு வெறுமனே இருந்தேன். தனிமையும் அமைதியும்தான். நகர வாழ்க்கையிலிருந்து துண்டித்துக் கொண்டு அமைதியைச் சுவாசித்த அற்புதமான அனுபவம் அது. அத்தகைய அனுபவத்தைத்தான் இப்பொழுதும் உணர்கிறேன். இந்த உலகம் ‘இதுதான் உனக்கான வாழ்க்கை’ என்று நம்மை எங்கேயாவது தள்ளிவிட்டுக் கொண்டேயிருக்கும். அதுதான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டு நாமும் கடிவாளம் போட்ட குதிரைகளாக ஓடிக் கொண்டேயிருப்போம். தீடிரென்று தோன்றும்- இது எங்கேயோ இழுத்துச் செல்கிறது என்று. அப்பொழுது துண்டித்துக் கொள்ள வேண்டும். ‘இதெல்லாம் சாத்தியமா’ என்று தோன்றும்தான்.  இருப்பது ஒரு வாழ்க்கை. அதை எப்படி வாழ வேண்டும் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும். ஐபோன்காரனுக்கும் சாம்சங்காரனுக்குமா நம் வாழ்க்கையை அடமானத்துக்கு எழுதிக் கொடுத்திருக்கிறோம்? 

சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.

7 எதிர் சப்தங்கள்:

கே.எஸ்.சுரேஷ்குமார் said...

முன்பே பலமுறை பேசித்தீர்த்ததுதான். கைபேசியில் ச.வ பார்க்க முடியவில்லை என்றால் கை நடுங்க ஆரம்பிப்பதுமட்டும்தான் இல்லையேதவிர மனம் பதட்டமடைகிறது. ஒரு மணிநேரம் தொடர்ந்து நோட்டிஃபிகேஷன் வராத ஃபோன்களை செத்த பிள்ளையை கையில் வைத்திருப்பதுபோல் உணரவேண்டியிருக்கிறது. இது கிட்டத்தட்ட குடியைப் போல்தான். அளவோடு குடித்தால் நீண்டநாட்கள் உயிரோடு இருக்கலாம் அல்லது அதிகம் பாதிப்பில்லை என்பதெல்லாம் சால்ஜாப்புகள். நிர்தாட்சண்யமாக புறக்கணிக்கவேண்டும். குடியை விரட்ட எனக்கு என் பெண் குழந்தை உதவியாய் இருந்தாள். அவ்ளது சிரித்த முகத்தைப் பார்த்து, படுக்கையறையில் இரவில் செல்லச் சண்டையிட்டு சிரித்து மகிழ ஆரம்பித்தபின்தான் இன்னொரு உலகம் இருப்பதாக நம்பினேன். இப்போது புதிதாக ரசிக்கிறேன். அதுபோல எல்லா காட்சிகளையும் ரசிக்கவேண்டும் என முடிவெடுக்க வேண்டும். இது சாத்தியம்தான். இப்போதெல்லாம் சற்றே ஃபோனிலிருந்து நிமிர்ந்து பார்த்தால் பல வருடங்கள் கடந்ததுபோல இருக்கிறது. இப்படியே போனால் ஆயுசுக்கும் குனிந்தநிலையிலேயே வாழ்ந்து செத்து செல்ஃபோனை படையலாக வைக்கநேரும் போலிருக்கிறது.

Karthik R said...

Today i forgot to carry my smartphone. I felt an unexplainable happiness in not having it!!!

I have already closed my whatsapp account and facebook account. Life is peaceful offline :)

Unknown said...

அன்பு நண்பரே,
வணக்கம்!
என் வயது 58, நானும் இந்த மாயவலையில் வீழ்ந்துவிட்டேன்,தங்கள் கட்டுரை அந்த மாயவலையில் இருந்து மீள யோசிக்கின்ரேன்,நன்றி

Mohi said...

I need my phone to read your article. So it is going to be hard.

சேக்காளி said...

அப்டியே இந்த தொல்லைக்காட்சி மகாதொடர்களையும் ரெண்டு சாத்து சாத்துங்க.

போத்தி said...

@Mohi... I use a pc to read. Reaing via PC is not as bad as reading via phone. Because, we don't carry the pc with us all the time.

Paramasivam said...

ஆம், நானும் நோக்கியாவுக்கு மாறலாமா என எண்ணத்தில் இருந்தேன். அஅலமாரியில் குறைந்து எடுக்க வேண்டும்.