Apr 8, 2017

எச்சுல பொறந்த கச்சாயம்

//எச்சுல பொறந்த கச்சாயம் //

சரியான அர்த்தம் புரியவில்லை மணி. ஆனால் கோபம் கொப்பளிப்பது போல்  தெரிகிறது. என் எண்ணம் சரி என்றால் வார்த்தை பிரயோகங்களில் கவனமாக இருங்கள். தவறுகளை களைவதும், திரும்ப நடைபெறாமல் தடுப்பதும் தான் நோக்கமாக இருக்கும் போது இதெல்லாம் (எச்சுல பொறந்த கச்சாயம்) நோக்கங்களை விட்டு விலகிட வழி வகுக்கலாம்.

அன்புடன் சேக்காளி.


சேக்காளி எப்பொழுதுமே கேலியும் கிண்டலுமான பின்னூட்டங்களாக எழுதுகிறவர். ‘என் நாவலை பாடப்புத்தகமாக வைக்கிறார்கள்’ என்று சொல்லும் போது கூட ‘ஒருவேளை எப்படி நாவல் எழுதக் கூடாதுன்னு பசங்களுக்கு சொல்லித் தருவதற்காக இருக்குமோ?’ என்ற ரீதியில் கேட்கக் கூடிய பேர்வழி. அவரையே பதறச் செய்து தனிச்செய்தியில் பம்மச் செய்திருக்கிறது - ‘எச்சுல பொறந்த கச்சாயம்’. இப்படியெல்லாம் எழுதுகிறானே இவனைப் பிடித்து கும்மியெடுத்து பரப்பன அக்ரஹாராவில் பக்கத்து அறையில் அடைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் அறிவுரையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

கச்சாயம் ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. வாழைப்பழத்தையும் கோதுமை மாவையும் பிசைந்து கூடவே கருப்பட்டியும் ஏலக்காயும் கலந்து எடுத்து எண்ணெய்யில் பொரித்தால் கச்சாயம் ரெடி. நம்மவர்கள் நவீனமாகிவிட்ட காலத்தில் கோதுமைக்கு பதிலாக மைதாவையும் கருப்பட்டிக்கு பதிலாக அஸ்காவையும் உள்ளே நுழைத்துவிட்டார்கள். அவ்வளவுதான் கச்சாயம். நம்பிக்கையில்லையென்றால் கச்சாயம் செய்வது எப்படி என்று கூகிளில் தேடிப் பார்க்கவும்.

எச்சு என்றால் எச்சில் என்றோ அல்லது எச்சுக்கு எதுகை மோனையாக ஏதாவதொரு கெட்ட வார்த்தையையோ எடுத்துக் கொண்டு எனக்கு வம்பு தும்பைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டியதில்லை. எக்ஸ்ட்ரா என்பதைத்தான் கொங்கு வட்டாரத்தில் எச்சு என்று ஆக்கிவிட்டார்கள். ‘சோறு எச்சா போச்சு’ என்றால் ‘சோறு அதிகமாகிவிட்டது’ என்று அர்த்தம். ‘எச்சுமுச்சா பேசிடுவேன்’ என்றால் கொஞ்சம் அதிகமாகப் பேசிவிடுவேன் என்று பொருள்.

எச்சுல பொறந்த கச்சாயம் என்பது கொங்குநாட்டின் ரைமிங் சொலவடை. 

‘நீ என்ன எச்சுல பொறந்த கச்சாயமா’ என்றால் ‘நீ என்ன பெரிய இவனா’ என்கிற தொனியில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றபடி இபிகோவில் வழக்குப் பதிகிற அளவுக்கு டைனமைட் வெடி குண்டு என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அப்படியே குண்டக்கமண்டக்க எழுதினாலும் கூட அவர்களுக்கு இருக்கிற பிக்கலுக்கும் பிடுங்கலுக்கும் இணைய சில்லுண்டிகளையெல்லாம் கண்டுகொண்டிருப்பார்கள் என்று நினைத்து பதற வேண்டியதுமில்லை. ஆர்.கே.நகர் தேர்தலிலிருந்து விஜயபாஸ்கர் ரெய்டு வரைக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. நமக்குத் தெரிந்த பிரச்சினைகள் இவை. கொசுக்கடியிலிருந்து உப்புச் சப்பில்லாத சோறு வரைக்கும் நமக்குத் தெரியாமல் எத்தனை இருக்கின்றனவோ?

ஒருவேளை அப்படி ஏதாவது சந்தேகம் வந்தாலும் எங்கள் ஊர் அமைச்சரை அழைத்துக் கேட்கக் கூடும். ‘எச்சுல பொறந்த கச்சாயம்ன்னா உங்களை பெரிய ஆளுன்னு சொல்லுறானுங்க’ என்பார். அப்படியா ‘அவனை நேரில் வந்து பார்க்கச் சொல்லும்மய்யா..ஏதாவதொரு வாரியத்தலைவர் ஆக்கிவிடுவோம்’ என்று 23 ஆம் புலிகேசி சொல்வதோடு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்கள். இதற்கு பயந்து நள்ளிரவில் கண்விழித்து அறிவுரை சொல்ல வேண்டியதில்லை. மீறிச் சொன்னால் ‘சேக்காளிதாங்க எழுதச் சொன்னாரு’ என்று சொல்லி கூட்டாளி ஆக்கிக் கொள்வேன்.

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

////எச்சுல பொறந்த கச்சாயம் //

சரியான அர்த்தம் புரியவில்லை மணி. ஆனால் கோபம் கொப்பளிப்பது போல் தெரிகிறது. என் எண்ணம் சரி என்றால் வார்த்தை பிரயோகங்களில் கவனமாக இருங்கள். தவறுகளை களைவதும், திரும்ப நடைபெறாமல் தடுப்பதும் தான் நோக்கமாக இருக்கும் போது இதெல்லாம் (எச்சுல பொறந்த கச்சாயம்) நோக்கங்களை விட்டு விலகிட வழி வகுக்கலாம்.
அன்புடன் சேக்காளி.//
ஒரு அகநானூற்று விசயத்த இப்பிடி புறநானூறா ஆக்கிட்டேரே ய்யா.

சேக்காளி said...

//கொசுக்கடியிலிருந்து உப்புச் சப்பில்லாத சோறு வரைக்கும் நமக்குத் தெரியாமல் எத்தனை இருக்கின்றனவோ?//
"நாலு பேரு மட்டுமே பாக்க முடியும்" ங்கற சட்டம் இருக்குற ஊருல பதினாலு பேரால பாக்க முடியுது ன்னா கொசுக்கடி,உப்பு இல்லாத சோறு ங்கறதையெல்லாம் நம்பித்தான் ஆகணும்.