Mar 3, 2017

பன்னாட்டுக் கல்வி

சர்வதேச வணிக அமைப்பு (WTO)க்கு முன்னால் ஒரு மிகப்பெரிய இலக்கு இருக்கிறது. எல்லாவிதமான சந்தைகளும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் அது. தொண்ணூறுகள் வரைக்கும் இந்தியர்களுக்கு வரவும் செலவும் சரியாக இருக்கும். தேவைக்கு ஏற்ப வாங்கினால் போதும் என்ற மனநிலைதான் நிலவியது. அதன் பிறகு தாராளமயமாக்கல் என்ற பெயரில் சந்தையின் வாசல்கள் திறக்கப்பட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் வரத் தொடங்கின. பொருட்கள் சந்தைகளில் குவிந்தன. சம்பளம் வெகுவாக உயர்ந்தது. தேவையிருந்தால் மட்டும் பொருட்களை வாங்க வேண்டும் என்கிற சராசரி இந்திய மனநிலை அடித்து நொறுக்கப்பட்டது. தேவை இருக்கிறதோ இல்லையோ எல்லாவற்றையும் வாங்கிக் குவித்தார்கள். அதன் பிறகுதான் நம்முடைய தனிமனித/சமூக/தேசப் பொருளாதாரம் என்பதே முற்றாக மாறிப் போனது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

அப்பொழுதெல்லாம் GAT ஒப்பந்தம் என்று அடிக்கடி செய்தித்தாள்களில் வரும். என்னவென்று புரியாது. இப்பொழுது ஒரு எழுத்தைச் சேர்த்து GATS என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழகத்தின் விவாதப் பொருளாக இது இல்லையென்றாலும் நாம் பேசிக் கொண்டிருக்கிற NEET தேர்வுடன் வெகுவான பிணைப்பைக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. The General Agreement on Trade in Services என்பதன் சுருக்கம் அது. அந்நிய நாட்டு நிறுவனம் சேவை (Service) துறையில் என்ன விதிமுறைகளின்படி நுழையலாம் என்பதான ஒப்பந்தம் இது. கல்வியையும் சேவைத் துறையில் கொண்டு வந்து பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழையவிருக்கின்றன. 

காட்ஸ் ஒப்பந்தப்படி வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்திய மாணவர்களைத் தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்லலாம்; இந்தியாவிலேயே வளாகம் அமைக்கலாம்; உள்ளூரில் அலுவலகம் தொடங்கி ஆட்களைப் பிடிக்கலாம்- இப்படி நான்கைந்து வாய்ப்புகள் இருக்கின்றன. நம் மாணவர்கள் அமெரிக்கா செல்லாமல் அமெரிக்கக் கல்வி நிறுவனங்களே இந்தியா வந்தால் நல்லதுதானே என்று நினைக்கலாம். நல்லதுதான். ஆனால் இதில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன. வெளிநாட்டு நிறுவனம் எவ்வளவு பணம் வசூல் செய்யப் போகின்றன என்று தெரியாது. இந்தியக் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் தொகைக்கே வரைமுறைகள் இல்லாத நம் தேசத்தில் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களையா ஒழுங்குபடுத்தப் போகிறார்கள்? 

‘வங்கியில் கடன் வாங்கிப் படியுங்கள்’ என்பார்கள். நம் மக்கள் தலையை அடகு வைத்தாவது பிள்ளைகளைச் சேர்ப்பார்கள்.

பொதுவாகவே பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ‘கூடிக் கழுத்தறுப்பதை’ கவனித்திருக்கலாம். தமது போட்டி நிறுவனத்திடம் ‘உங்கள் நிறுவனத்தை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்’என்பார்கள். இரு நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் என்ன நடக்கிறது என்றெல்லாம் விவரம் தெரியாது. கூடிய சீக்கிரமே ஒரு நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் வாங்கிவிட்டதாக செய்தித்தாள்களில் செய்தியும் வரும். அதோடு சரி. அதன் பிறகு தாம் வாங்கிய நிறுவனத்தின் ஊழியர்களை மெல்ல மெல்ல வெளியேற்றி அந்நிறுவனம் இருந்த சுவடே இல்லாமல் அழித்துவிடுவார்கள். போட்டி நிறுவனங்களைக் காலி செய்யும் உத்தி இது. இதே உத்தியை பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் செயல்படுத்தி இந்தியக் கல்வி நிறுவனங்களைக் காலி செய்வதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. Monopoly என்பதை கல்வித்துறையில் நாம் வெகுவிரைவில் எதிர்பார்க்கலாம். 

மிகைப்படுத்திச் சொல்லவில்லை. 

அப்படியொரு சூழல் வருகையில் இந்திய தனியார் கல்வி நிறுவனங்களே எதிர்த்து நிற்க முடியாது என்கிற போது அரசுக் கல்வி நிறுவனங்கள் என்னவாகும் என்று யோசிக்க வேண்டிய தருணம் இது. இன்றைக்கு அரசு மாணவர்களைச் சுட்டிக்காட்டி ‘பாடத்திட்டம் எளிமையாக இருக்கட்டும்’ ‘நுழைவுத் தேர்வு இல்லாமல் இருக்கட்டும்’ என்று பேசிப் பேசியே அரசுக் கல்வி நிறுவனங்களையும் அரசு பாடமுறைகளையும் தமிழகத்தில் மிக வலுவற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியதில்லையா?

இன்றைக்கு நம்முடைய பாடத்திட்டங்களும் கற்பித்தல் முறையும் எத்தனை விஞ்ஞானிகளை உருவாக்கியிருக்கின்றன? அடிப்படை அறிவியலில் எவ்வளவு சர்வதேச விருதுகளை தமிழர்கள் வாங்குகிறார்கள்? கிட்டத்தட்ட பூச்சியம். நாம் வெறுமனே பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடைநிலை ஊழியத்தைச் செய்யக் கூடிய மொன்னையான ஊழியர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். படித்து முடித்து வந்தவுடன் பல்லாயிரக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது என்ற ரீதியில் ஒரு கவர்ச்சியை உருவாக்கி கல்வியின் முதுகெலும்பில் ஓங்கி அடித்திருக்கிறோம். இன்றைக்கே நிலைமை இப்படி இருக்கும் போது நாளை பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே கால் வைக்கும் போது நிலைமை இதைவிட மோசமாகிவிடாதா?

பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தமக்கு எப்படியான ஆட்கள் தேவை என்பதைக் கல்வி நிறுவனங்களிடம் சொல்வார்கள். அவர்கள் மாணவர்களை அப்படி வடிவமைத்துக் கொடுப்பார்கள். அறிவியல், கணிதம் என்கிற ஆராய்ச்சி படிப்புகள் வலுவிழந்து போகிற வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆராய்ச்சி படிப்புகள் காலியாகக் கூடிய சூழல் உண்டாகும். அரசு கல்வி நிறுவனங்கள் வலுவிழந்து சீரழிந்து கிடக்கும் போது நினைத்தாலும் கூட மேலே எழுப்ப முடியாது. வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் எதைச் சொல்லித் தர விரும்புகின்றனவோ அதுதான் இங்கே சொல்லித் தரப்படும்.

அதீத கற்பனையைக் கலந்தெல்லாம் எழுதவில்லை.

இந்தியா ஏற்கனவே காட் ஒப்பந்தத்தில் இணைந்திருக்கிறது. பன்னாட்டுக் கல்வி நிறுவனங்கள் உள்ளே வருவதை நம்மால் தடுக்க முடியும் என்றெல்லாம் நம்பிக்கையில்லை. அந்நிய நுழைவைத் தடுத்து நிறுத்துவதற்காகக் கடந்த இருபத்தைந்து வருடங்களில் எவ்வளவு போராட்டங்களைப் பார்த்திருக்கிறோம்? அவற்றில் எவ்வளவு போராட்டங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன? எவ்வளவு துறைகளில் நம்மவர்களால் அந்நிய நிறுவனங்கள் உள்ளே வருவதைத் தடுக்க முடிந்திருக்கிறது? எண்ணெய் நிறுவனங்கள், விமானத் துறையில் ஆரம்பித்து ஆயுள் காப்பீடு வரைக்கும் கிட்டத்தட்ட முக்கியமான துறைகளில் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைதிருக்கின்றன. கல்வித்துறையில் முழுமையாக கால் பதிக்க வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கு வெகு காலம் ஆகாது.

நம்முடைய பாடத்திட்டம், கற்பித்தல் முறை, மாணவர்களின் கற்கும் திறன் என எல்லாவற்றையும் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தாவிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். அரசுக் கல்வி நிறுவனங்களைத் திறம் மிக்கதாகவும் பன்னாட்டு போட்டிகளைச் சமாளிக்கக் கூடியதாகவும் மாற்றியே தீர வேண்டிய சூழலில் இருக்கிறோம். தேசிய அளவிலான தேர்வுகள், அவற்றை எதிர்கொள்ளும் அளவுக்கான பாடத் திட்டங்கள், அதைச் சரியாகக் கற்பிக்கும் திறன் மிக்க ஆசிரியர்கள் என்று கல்வித்துறையில் நாம் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள் நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம் செய்யாமல் நாம் வலுவிழந்து கொண்டேயிருப்பது நல்லதுக்கு இல்லை. வெறுமனே ‘பாடங்கள் எளிமையாக இருக்கட்டும். தேர்வுகள் எளிதாக இருக்கட்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தால் அந்நியர்கள் நம் கல்வியில் கபடியாடுவதைப் பார்க்க வேண்டிய சூழல் நிச்சயமாக உருவாகிவிடும்.

மாணவர்கள் சிரமப்படுவார்கள்தான். இட ஒதுக்கீட்டு முறையில் சிக்கல்கள் உண்டாகக் கூடும். மறுக்கவில்லை. மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான வழிமுறைகள் நிறைய இருக்கின்றன. அதைவிட்டுவிட்டு மொத்தமாகவே எளிமைப்படுத்துதல் என்பது அபத்தமானது. 

இன்னமும் விரிவாகப் பேசுவோம். 

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//தேசிய அளவிலான தேர்வுகள், அவற்றை எதிர்கொள்ளும் அளவுக்கான பாடத் திட்டங்கள், அதைச் சரியாகக் கற்பிக்கும் திறன் மிக்க ஆசிரியர்கள் என்று கல்வித்துறையில் நாம் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள் நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம் செய்யாமல் நாம் வலுவிழந்து கொண்டேயிருப்பது நல்லதுக்கு இல்லை.//
ஆனால் இதையெல்லாம் யோசித்து முன் முடிவுகளை எடுக்க வேண்டிய அரசு எதையும் செய்வதாக இல்லையே.
அரசு அமைய ஓட்டளிக்கும் நாமும் அரசு சீரமைப்பை பற்றி யோசிக்காமல் நாளொரு பிரச்னை, பொழுதொரு போராட்டம் என்று தானே கழிக்க வேண்டியிருக்கிறது.
ஆர் கே நகரில் இருந்தாவது ஆரம்பித்தால் நல்லது.
நடக்குமா?

Packirisamy N said...

ஏழை நாடுகளின் நிலைமை இதுதான்!
https://www.youtube.com/watch?v=btF6nKHo2i0
https://www.youtube.com/watch?v=RVsB07CcSNw

AJAX said...

Arrival of foreign players have strengthened local players in all industries such as banks, telecom, automobile and other sectors. The same will happen for education. They will bring with them the international standards, local colleges will be forced to change to survive. Governments will have to wake up and upgrade local infrastructure.

Karthik.vk said...

அருமை அண்ணா...என்னுடைய வழிகாட்டி அமெரிக்காவில் ஆய்வாளராக இருக்கிறார்.அவர் அமெரிக்காவில் நீர்த்துப் போனவற்றைப் பற்றி இந்தியாவில் பெருமை பேசுபவர்களை கேவலமாக ஏசுவார்..இங்கே கற்றுக் கொள்ளவும் கடினப் படவும் நிறைய மாணவர்கள் தயாராக உள்ளோம்..ஆனால் எங்களை யார் கண்டு கொள்கிறார்கள்...அரசியல் மாற்றம் வேண்டும் அண்ணா

Unknown said...

அன்பு மணிகண்டன் அவர்களுக்கு,

பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் நுழைவது நல்லது என்றே தோன்றுகிறது.

இத்தகைய நிறுவனங்கள் நுழைவதற்கு பலமான எதிரப்புகள் வரும். இந்த எதிர்ப்பு தனியார் பள்ளி கல்லூரிகளிடமிருந்துதான் அதிகம் வரும் என்று நம்புகிறேன். ஏனெனில் இவர்கள்தான் பன்னாட்டு கல்வி நிறுவனங்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காரணம் பன்னாட்டு கல்வி நிறுவனங்களால் இந்திய தனியார் கல்வி நிறுவனங்களை விட குறைவான கட்டணத்தில் ஆனால் தரத்தில் சற்றும் குறையாத கல்வியை தர முடியம். இப்போட்டியினை சமாளிக்க பெருந்தொகை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை குறைக்க வேண்டியிருக்கும் அல்லது தங்கள் தரத்தை மேலும் உயர்த்த வேண்டியிருக்கும். இதில் எது நடந்தாலும் நடுத்தரவர்கத்தினற்கு நன்றே.

நீங்கள் James Tooley's The Beautiful Tree (http://www.amazon.in/Beautiful-Tree-Personal-Educating-Themsleves/dp/1939709121) படித்துள்ளீர்களா. கல்வித்துறையில் உங்களுக்க மிகுந்த ஆர்வம் உள்ளதால் இப்புத்தகத்தை பரிந்துரைக்கிறேன். படித்து உங்கள் கருத்துக்களை பகிரமுடியுமானால் மகிழ்ச்சி.

நன்றி
ஈஸ்வர்