Mar 2, 2017

பாலியல்

இரு குழுக்களுக்கு இடையே சண்டை. குழுவில் இருப்பவர்கள் பள்ளி மாணவர்கள். வெறித்தனமாக அடித்துக் கொண்டதில் ஒரு மாணவன் இறந்துவிட்டான். காவல்துறையினர் விசாரித்ததில் ‘ரொமான்ஸ்’தான் அடிநாதமான பிரச்சினையாக இருந்திருக்கிறது. அவளை யார் காதலிக்க வைக்கப் போகிறார்கள் என்ற சண்டையில் நடந்த மோதல் இது. பெங்களூரில் இந்த வாரம் நடந்த சம்பவம் இது. இத்தகைய சம்பவங்கள் மாதம் இரண்டு அல்லது மூன்றாவது செய்தித்தாள்களில் இடம்பெற்றுவிடுகின்றன. இன்னமும் இடம் கிடைக்காத செய்திகள் எவ்வளவு இருக்கின்றன என்பது மன்மதனுக்கும் ரதிக்கும்தான் வெளிச்சம்.

மாணவர்களின் காதல் விவகாரங்களில் பள்ளிக்கூடங்கள்தான் தலையிட வேண்டும் என்று இரண்டு மூன்று பேர்கள் பேசியிருந்தார்கள். பள்ளிகள் என்ன செய்ய முடியும்? மாணவர்களும் மாணவிகளும் பேசக் கூடாது, பார்க்கக் கூடாது என்று தடுப்பதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது. அது இன்னமும் கிளறிவிடுவதைப் போலத்தான். நம்மைச் சுற்றிலும் திரும்பிய பக்கமெல்லாம் காமத்தீயைக் கிளறிவிடுவதாகத்தான் இருக்கின்றன. கிளறியும் விட்டுவிட்டு அடக்கியும் வைப்பது என்பதுதான் மனச்சிக்கல்களின் மூலாதாரம்.

சமீபத்தில் நிகழ்ந்த அல்லது நாம் கேள்விப்பட்ட கொலைகளைப் பட்டியலிட்டுப் பார்க்கலாம். அதில் எவ்வளவு கொலைகள் பாலியல் சம்பந்தமானவை என்று ஒரு புள்ளிவிவரத்தைத் தேடினால் தோராயமாக பத்தில் ஏழாவது பாலியல் சார்ந்த கொலைகளாக இருக்கும். எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. வரைமுறையில்லாத அல்லது வடிகட்டத் தெரியாத காமம் நம் சமூகம் எங்கும் விரவிக் கிடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமது தீர்க்கப்படாத உடல் அல்லது மன இச்சைகளை ஏதேனும் ஒரு வழியில் அடைந்துவிடுவதற்காக கட்டவிழ்த்துத் திரியும் மனங்கள் அச்சமூட்டக் கூடியவை. அவை எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவை.

                                                                                   (Art: Harry McDermott)

இளைஞர்கள் என்றில்லை- இதே பிரச்சினைதான் வயது முதிர்ந்தவர்களுக்கும். காமத்தைப் பொறுத்தவரையிலும் உடலும் உள்ளமும் சரிசமமாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உருவாகக் கூடிய பாலியல் இச்சைகளை நம் உடல் வடிகட்டக் கூடியதாகவும் அதற்கேற்ற திறனும் வாய்ப்புகளும் மிக்கதாக இருக்கும் வரை மனிதனுக்குச் சிக்கல்கள் எதுவும் இல்லை. அப்படியில்லாமல், மனதின் தேடல்கள் அதிகரித்து உடல் ஒத்துழைக்க மறுக்கும் போது மனம் விகாரமான உருவங்களை எடுக்கும். நவீன உலகில் மனம் எட்டுக்கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. திரைகளிலும் தாள்களிலும் ஆண்களும் பெண்களும் நம் மனதின் மேல் அடுக்குகளைச் சுரண்டிக் கொண்டேயிருக்கிறார்கள். நம் கனவுகளிலும் மனதின் அடியாழங்களிலும் அவர்கள் உருவாக்கக் கூடிய அதிர்வுகள் நிறைந்த காமக் களியாட்டங்களை வெளியேற்ற இயலாமல் உடல் தடுமாறும் போது மனம் பித்துப் பிடித்துப் போகிறது. சைக்கோக்கள், பாலியல் கொடூரன்கள், காமுகர்கள் என்று விதவிதமான பெயர்களையும் உருவங்களையும் எடுக்கிறார்கள்.

இன்றைய தொழில்நுட்பம் எல்லாவற்றையும் கொண்டு வந்து கொட்டுகிறது. ஊடகங்கள், திரை, இணையம் என சகலமும் காமத்தை கண்ணியாக வைத்துக் கொண்டுதான் இயங்குகின்றன. Anal, Oral, Gangbang என்று பாலியலின் சகல கூறுகளையும் மேய்ந்துவிட முடிகிறது. அக்குவேறு ஆணிவேறாக சலனப்படங்களாகவும் எழுத்துக்களாகவும் கொண்டு வந்து குவிக்கிறார்கள். பத்து வயதுப் பையனால் எல்லாவற்றிலும் நுழைந்துவிட முடிகிறது. ஆனால் எதையும் அவனால் வெளிப்படையாக பேசவும் விவாதிக்கவும் முடியாது. அதுதான் பிரச்சினை. நம்முடைய சமூகக் கட்டமைப்பு அப்படித்தான் இருக்கிறது. இங்கே காமம் என்பது அடுத்தவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக உணர்ந்து அனுபவிக்கக் கூடிய வஸ்து என்று வைத்திருக்கிறோம். வெளிப்படையாக பேசுவதும் விவாதிப்பதும் நல்ல மனிதர்களுக்கு அழகில்லாத செயல். இப்படி எல்லாவற்றையும் virtual ஆக மட்டுமே அனுபவிக்கும் மனமும் உடலும் பதின்ம வயதுக் குழந்தைகளுக்கு வாய்த்துவிடுகின்றன. சக நண்பர்களிடமும் அல்லது வேறு யாரிடமும் உரையாடக் கூடிய வாய்ப்பிருப்பவர்கள் ஓரளவு வடிகட்டிவிடுகிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் உள்ளேயே புதைத்துக் கொள்கிறவர்களின் மனம் கோர வடிவங்களை எடுக்கத் தயங்குவதில்லை.

காமம் சார்ந்த வன்முறைகளில் ஈடுபடுகிறவர்களை மனோவியல் ரீதியாக அணுகும் போது இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். பதினைந்து அல்லது பதினாறு வயதுகளில் உடல் தினவுறும் போது அதுவரை சேகரித்து வைத்திருந்த கச்சடாவையெல்லாம் தனது பாலியல் உறுப்புகளின் வழியாக வெளியேற்ற முயற்சிக்கிறது. அது சாத்தியமில்லாத போது வன்முறையை நாடுகிறது. பல சமயங்களில் எளிய இலக்குகளான குழந்தைகளை நோக்கி கவனத்தைத் திருப்புவதுதான் துரதிர்ஷ்டம். குழந்தைகள் பயந்து வெளியே சொல்லிவிட மாட்டார்கள். 

நவீன தொழில்நுட்பம் வளர்கிற வேகத்துக்கு நம்முடைய பக்குவத்தன்மை வளரவில்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். இவற்றையெல்லாம் எப்படி சமாளிப்பது என்ற புரிதல் இல்லாமல் வெகுவாகத் திணறிக் கொண்டிருக்கிறோம். இன்று அல்லது நாளைக்கு முடிந்துவிடக் கூடிய பிரச்சினையாகவும் இது இல்லை. இன்னமும் பல வருடங்களுக்கு நீடிக்கக் கூடும். ஆனால் எதிர்காலத்திலாவது சமாளிப்பதற்கான முன்னெடுப்புகளும் நம்மிடம் எதுவுமேயில்லை. ‘இதெல்லாம் எப்பவுமே இருக்கக் கூடியதுதான்’ என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் அப்படியில்லை. காமம் மற்றும் பாலியல் சார்ந்த புரிதல்கள் எதிர்காலத் தலைமுறையினரிடம் உருவாகாத போது இன்னமும் மோசமான விளைவுகளை நாம் சந்திக்கக் கூடும்.

பாலியல் கல்வி, பாலியல் உரையாடல்கள் என்பனவற்றில் நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம். அந்தரங்க உறுப்புகளைப் பற்றிக் குழந்தைகளிடம் விரிவாகப் பேசக் கூடிய அளவில் கூட நம்மிடம் திறன் இல்லை. விந்துவும் கருமுட்டையும் இணைந்துதான் குழந்தை உருவாகிறது என்பதை எட்டு வயதுக் குழந்தையிடம் உங்களால் விளக்கிவிட முடியுமா? முயற்சித்துப் பார்க்கலாம். திணறுவோம். செக்ஸ் என்ற சொல்லை பத்து வயதுக் குழந்தையிடம் விளக்க முடியுமா? ஒன்றரை வயது ஆண் குழந்தையின் ஆணுறுப்புக்கு விறைப்புத்தன்மை உண்டு. ஏன் விறைக்கிறது? அதன் தேவைகள் என்ன என்பதை அந்தக் குழந்தை பனிரெண்டு அல்லது பதின்மூன்று வயதில்தான் தெரிந்து கொள்கிறது. அதுவும் தானாகவே- அரையும் குறையுமாக. பெற்றவர்களோ ஆசியர்களோ சொல்லித் தருகிறார்களா என்ன? குழந்தைகளிடம் பேசுகிற அளவுக்கு நம்மிடம் பாலியல் சார்ந்த பக்குவமான புரிதல்கள் இல்லை என்பதுதான் நிதர்சனம். 

சுய இன்பம் தவறு, குழந்தைகள் தங்களின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு விளையாடக் கூடாது, ஆண் குழந்தை அம்மாவையும் பெண் குழந்தை அப்பாவையும் கட்டிப்பிடித்துப் படுக்கக் கூடாது என்றெல்லாம் விதவிதமான முன்முடிவுகளால்தானே நம் மனம் நிரம்பிக் கிடக்கிறது? ஆறு வயதுப் பெண் குழந்தைக்கு ‘யாராவது தொட்டால் அம்மாகிட்ட சொல்லு’ என்கிற அளவுக்குத்தான் சொல்லித் தருகிறோம். ‘சொன்னீன்னா கொன்னுடுவேன்’ என்று சொல்லிச் சொல்லியே அவன் தொடலாம். குழந்தை யாருடைய பேச்சைக் கேட்கும் என்று நம்புகிறீர்கள்? குழந்தைகளுக்கு பயம் அதிகம். யார் மிரட்டுகிறார்களோ அவர்களின் வார்த்தைகளுக்குக் கட்டுப்படும்.

பாலியல் பற்றி ஆசிரியர்கள் பேசுகிறார்களோ இல்லையோ- பெற்றவர்கள் பேச வேண்டும். தவறேதுமில்லை. ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி; பெண் குழந்தையாக இருந்தாலும் சரி- வெளிப்படையாகப் பேசலாம். இங்கே வெளியில் யாருமே பாலியலை முழுமையாகப் பேசுவதில்லை. ஆனால் குழந்தைகளின் மனதுக்குள் கச்சடாக்கள் வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றன. யாராவது பேசித்தானே கச்சடாக்களை நீக்க முடியும்? வெளியில் ஆண்களும் பெண்களுமாக உடலைத் திறந்து காட்டி ‘இது மட்டும்தான் உலகம்’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். பதின்ம வயதை நெருங்கும் போது அது மட்டும்தான் உலகமோ என்று குழந்தைகளும் நம்பத் தொடங்குகிறார்கள். அதை எளிதில் தாண்டிச் சென்றுவிட்டால் குழந்தைகள் இதையே நினைத்துக் கொண்டேயிருக்க மாட்டார்கள். இல்லையென்றால் காமமும் பாலியலும் உடலும்தான் பிரதானம் என்று அவர்கள் கருதிக் கொண்டிருப்பார்கள். மனமும் உடலும் கொந்தளிக்கும் பதின்ம வயதில் விபரீதங்களை நோக்கி குழந்தைகள் செல்லாமல் தடுக்க சமூகம் முயற்சிக்கிறதோ இல்லையோ பெற்றவர்கள்தான் முயற்சிக்க வேண்டும். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதில் அர்த்தமில்லை.

4 எதிர் சப்தங்கள்:

கொமுரு said...

மிக அருமையான கட்டுரை , இது போன்ற மனிதனின் ஆதாரமான உணர்வுகளை இங்கு பேச ஆளே இல்லை . நீங்கள் கண்டிப்பாக காமம் தொடர்பான கட்டுரைகளை எழுதுங்கள் . வாழ்த்துக்கள் மணிகண்டன்

சக்திவேல் விரு said...

காமம் பற்றி அருமையான கட்டுரை..
காமம் பற்றிய தெளிவான புரிதல் கல்யாணம் ஆகி குழந்தை பெற்ற பெற்றோருக்கு முதலில் வேண்டும் பின்னர் தான் அவர்களால் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் கூறமுடியும். இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு பிரைமரி ஸ்கூலில் இது பற்றிய அடிப்படைகளை சொல்லி தருகிறார்கள். அதுவும் பெற்றோர்கள் விருப்ப பட்டால் மட்டுமே. 90% இந்தியன் பெற்றோர்கள் இதில் விருப்பம் தெரிவிப்பது இல்லை என்பது தான் கொடுமை ஏனென்றால் அவர்களுக்கே முதலில் காமம் பற்றிய புரிதல் இல்லாதது தான் காரணம்...

சேக்காளி said...

காமம் பற்றிய தயக்கம் தவிர்த்து, பேச எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்?

Jasper said...

மதங்களில் சுய இன்பம், மற்றும் விலை மாதர்களிடம் செல்வது தவறு என வலியுறுத்தி விடுவதால் அந்த நேர உணர்ச்சிகள் கட்டுபாடின்றிப் போகும்போது குழந்தைகள் மேல் வன் பிரயோகம் செய்கிறார்கள்.எல்லாவற்றையும் விவாதிப்பது அழகல்ல என்று கருத்தும் உள்ளது. சரி, தவறு என யார் சொல்ல முடியும்? அது relative எனக் கருதுபவர்களும் உண்டு. திருமண வயது தள்ளிப் போவதும் ஒரு காரணம்.பாலியல் கல்வி பெற்றோர் மூலமும் பள்ளிக்கூடங்களிலும் விவாதிக்கப் பட வேண்டும். சொல்லிக் கொடுப்பவர்களில் பாலின வேறுபாடும் பார்க்கக் கூடாது. அந்தரங்க உறுப்புகள் சுத்தம் என்பதில் இருந்தும் ஆரம்பிக்க வேண்டும்.பயம் மட்டுமல்ல சில சமயங்களில் குழந்தைகளின் உணர்ச்சியைத் தூண்டி, பல முறை முயன்று பின் sexual abuse நடத்தப படுகிறது என்பதையும் வெளிப்படையாகப் பேச வேண்டும். நீதி போதனை வகுப்புகள் மூலம் புகை, மது, போதை பழக்கங்களை அறவுடன் களைய வேண்டும். அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பும் அனைவர் கையிலும் உள்ளது என உணர்ந்து இப்படிப் பட்ட செயல்களில் தனி மனித ஒழுக்கம் தான் தேவை என்பதை வலியுறுத்த வேண்டும்.