Mar 1, 2017

வருக! வருக!!

கருவேல மரங்களுக்கும் சீமைக்கருவேல மரங்களுக்கும் வேறுபாடு உண்டு. கருவேல மரங்கள் நம் மண்ணின் மரங்கள். கருகருவென்றிருக்கும். நீண்ட முட்கள் வெண்மையாக இருக்கும். சீமைக்கருவேல மரங்களை வேலிக்காத்தான் என்று எங்கள் ஊர்ப்பக்கம் சொல்வார்கள். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் இதற்கு. மஞ்சள் நிறக் காய் காய்க்கும். முட்கள் சிறியதாக இருக்கும். ஆனால் எப்பொழுதுமே பசுமை மாறாத மரங்கள் இவை. இருக்கிற நீரையெல்லாம் உறிஞ்சி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய திறன் வாய்ந்தவை. வெறும் இரண்டு இஞ்ச் உயரம் வளர்ந்திருக்கும் சீமைக்கருவேலஞ் செடியை நம்மால் அவ்வளவு எளிதில் பிடுங்கிவிட முடியாது. வெகு ஆழத்திற்கு வேர் பரப்புகிற இந்தச் செடிகளால் அப்படியென்ன எதிர்மறை விளைவுகள் என்று கேட்கிறவர்கள் கோடை காலத்தில் அவை வளர்ந்திருக்கும் இடங்களைச் சென்று பார்க்க வேண்டும். 

அக்கம்பக்கத்தில் ஒரு மரத்தை தப்பிக்கவிடாதவை இவை. நிலத்தடியில் வெகு ஆழத்திற்குச் சென்றும் மண்பரப்பின் கடைசித்துளி ஈரப்பதத்தையும் உறிஞ்சி தம் பசுமையைக் காப்பாற்றிக் கொண்டு அடுத்த தாவரங்களை கருகச் செய்வதை நேரடியாகப் பார்க்கலாம். அப்படியே தம் பசுமை காத்தாலும் இம்மரங்களால் எந்தப் பயனுமில்லை என்பதே உண்மை. இலைகளை ஆடு தின்ன முடியாது. விறகுக்குத் தவிர வேறு எந்தப் பயனுமற்ற மரங்கள் இவை. நோய்க்கிருமியைப் போல வெகு தீவிரமாக பரவக் கூடிய கொடூர தாவரம் இது.

தமிழகம் முழுவதுமாக இம்மரங்களை ஒழிக்க சிறப்புச் சட்டம் இயற்றச் சொல்லி மதுரை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. வைகோ நடத்திய வழக்கு இது. அவரோடு இன்னமும் சிலரும் வழக்குதாரர்களாக இருக்கிறார்கள். வைகோ மீதான எவ்வளவு அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும் பசுமை மற்றும் சூழலியல் சார்ந்து அவர் முன்னெடுக்கக் கூடிய இத்தகைய நடவடிக்கைகளை மனம் திறந்து பாராட்ட வேண்டும். வெறுமனே வாய்ச்சவடால்களால் காலத்தை ஓட்டிவிடுகிற அரசியல் தலைவர்களுக்கிடையில் யார் எப்படி விமர்சித்தாலும் இத்தகையை செயல்பாடுகளில் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறார். 

இனி அரசு விழித்துக் கொள்ளும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் தமிழகம் முழுவதிலும் இருக்கக் கூடிய சீமைக்கருவேல மரங்களை அரசாங்கமே முழுமையாக ஒழிப்பதற்கான சாத்தியம் வெகு குறைவு. 

வேமாண்டம்பாளையம் என்கிற கிராமத்தில் இம்மரங்களை அழிப்பதற்கான தொடக்கத்தை எதிர்வரும் சனிக்கிழமையன்று தொடங்குகிறோம். நம்பியூர் ஒன்றியத்தில் பெரிய கிராமம் இது. பல நூறு ஏக்கர் விவசாயம் நிலம் காய்ந்து கிடக்கிற ஊர். எங்கும் வெயிலும் வெக்கையுமே நிரம்பிக் கிடக்கும் வறண்ட பூமி. இந்த ஊரில் காமராஜர் காலத்தில் கட்டிய மிகப்பெரிய குளம் இருக்கிறது. கிட்டத்தட்ட அறுபத்தாறு ஏக்கர் பரப்புடைய குளம். ஆனால் குளம் முழுக்கவும் சீமைக்கருவேல மரங்கள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. குளம் குட்டைகள் சாலைகள் என எங்கும் நிறைந்து கிடக்கும் இந்த மரங்களை அழிக்க கிட்டத்தட்ட முந்நூறு மணிநேரமாவது பொக்லைன் எந்திரங்கள் வேலை செய்ய வேண்டும் என்று கணக்கிட்டிருக்கிறோம். இந்தக் கணக்கு பொது இடங்களில் உள்ள மரங்களை மட்டும் ஒழிப்பதற்கான கணக்கு. இவை தவிர தனியார் நிலங்களிலும் மரங்கள் மலிந்து கிடக்கின்றன. அதை அந்தந்த இட உரிமையாளர்களே அழிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

பொக்லைன் எந்திரங்களுக்கு மணிக்கணக்கில் வாடகை தர வேண்டும். கணக்குப் போட்டால் இரண்டு லட்ச ரூபாயைத் தாண்டும். Y's மென் க்ளப் ஒரு லட்சம் தருகிறார்கள். நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்சம் ஒதுக்கியிருக்கிறோம். பொக்லைன் எந்திரத்துக்கான டீசல் செலவை மாவட்ட நிர்வாகம் தருகிறது. வறட்சியின் காரணமாக ஊரில் விவசாய வேலை எதுவும் நடைபெறுவதில்லை. எனவே ஊர் பொதுமக்கள்தான் கூடவே இருந்து எந்திரங்களின் செயல்பாடு, மரங்களை ஒதுக்குதல், ஏலம் என எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளவிருக்கிறார்கள். பஞ்சாயத்து ஊழியர்கள் களத்தில் இறங்குகிறார்கள். எல்லாவற்றையும் கண்காணிக்க தனிக்குழு ஒன்றை அமைக்கவிருக்கிறோம். சீமைக்கருவேல மரங்களைப் பொறுத்தவரை இது பன்முனைத் தாக்குதல்.

ஒரேயொரு கிராமத்திற்கு மட்டுமே இவ்வளவு செய்ய வேண்டியிருக்கிறது. தமிழகம் முழுவதும் பனிரெண்டாயிரத்து அறுநூறு கிராமப் பஞ்சாயத்துகள் இருக்கின்றன. நகராட்சி, பேரூராட்சியெல்லாம் தனிக்கணக்கு. சராசரியாக ஒரு கிராமப் பஞ்சாயத்துக்கு ஒரு லட்ச ரூபாய் (இது மிகக் குறைந்தபட்சக் கணக்கு) என்றாலும் கூட மொத்தம் எவ்வளவு தேவைப்படும் என்று கணக்குப் போட்டுக் கொள்ளலாம். ஒதுக்கப்படுகிற தொகையில் கமிஷன் அடிப்பது, நியூட்டர் விடுவதெல்லாம் தனிக்கணக்கு. அரசாங்கமே சீமைக்கருவேல மர ஒழிப்பைச் செய்துவிடும் என்று நம்பினால் இந்தச் செயல்பாடு எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதற்காக இதைச் சுட்டிக் காட்டுகிறேன்.

அரசு சாரா நிறுவனங்கள், சூழலியல் அமைப்புகள், உள்ளூர் பொதுமக்கள், தனிமனித ஆர்வலர்கள் என எல்லோருமே சேர்ந்து இயக்கமாகச் செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். தமிழகம் முழுவதுமே இதை ஒரே சமயத்தில் செயல்படுத்த வேண்டும். ஒருபக்கம் செய்து இன்னொரு பக்கம் விட்டுவிட்டால் மீண்டும் பரவிவிடும்.

நேற்று வேமாண்டம்பாளையத்தில் ஊர்க்கூட்டம் நடைபெற்றது. உள்ளூர் பொதுமக்கள், Y's மென் அமைப்பின் சார்பில் அபிலாஷ், மருத்துவர் சத்தியசுந்தரி, எஸ்.வி.சரவணன், அரசு தாமஸ், கார்த்திகேயன், அவிநாசி அத்திக்கடவு ஒருங்கிணைப்பாளர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட கூட்டம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றிருக்கிறது.

நிசப்தம் பங்குபெறுவது என்பது இரண்டாம்பட்சம். காசோலையைக் கொடுத்தோம் கிளம்பினோம் என்றிருப்பதாக இருந்தால் அதில் பலன் ஏதுமில்லை. மக்களின் ஈடுபாடு இருக்க வேண்டும். நம்முடைய ஊர்; நம் வேலை என்கிற உணர்வு அவர்களிடம் இருக்க வேண்டும். அப்படியான ஈடுபாடு இல்லையென்றால் நாம்தான் பேச வேண்டும். அப்படி பேசி அவர்களை நம்மோடு இணைத்துக் கொண்டால் நிச்சயமாக வெற்றிகரமாகச் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக ஊர்க்கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்களிடம் இதையேதான் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தேன். இதுவொரு உதாரணமான தொடக்கம். மக்களின் தன்னெழுச்சியுடன் நடத்தினால் அது அக்கம் பக்கமெல்லாம் பரவக் கூடும். 

உள்ளூர் மக்கள் உடன் நிற்கிறார்கள். ஊர் பெரியவர்கள் களமிறங்குகிறார்கள். அனுபவஸ்தர்கள் கை கோர்க்கிறார்கள். நேற்று கூட்டம் முடிந்த பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அழைத்துப் பேசினார்கள். ஊர்மக்களில் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். கூட்டம் திருப்தியாக இருந்ததாகச் சொன்னார்கள். வருகிற சனிக்கிழமையன்று தொடங்குகிறோம். சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் நிசப்தம் அறக்கட்டளையின் முக்கியமான செயல்பாடாக இதைச் சொல்லலாம். இதுவரையிலும் ஓர் ஊரையே திரட்டி எந்தக் காரியத்தையும் செய்ததில்லை. இதுதான் தொடக்கம். மற்றவர்களின் உதவியோடு சேர்ந்து தொடங்குகிறோம். 

வாய்ப்பிருப்பவர்கள் வருக! அடுத்தடுத்த களத்துக்குச் சென்று கொண்டேயிருப்போம்.

(விவரங்களுக்கு அரசு.தாமசு- 9842097878 அவர்களை அழைக்கலாம்)

9 எதிர் சப்தங்கள்:

ர. சோமேஸ்வரன் said...

மறு பக்கத்தை முன்வைக்க விரும்புகிறேன்.

http://www.vikatan.com/pasumaivikatan/2015-sep-10/special-categories/109626.html


ஆபத்தும் இல்லை...
அவசியமும் இல்லை!


முனைவர் பார்த்திபன், பேராசிரியர் மற்றும் தலைவர், வனக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம்: 'சீமைக்கருவேல் மரத்தைப் பற்றி சூழலியலாளர்கள் ஆவேசமாக முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது அத்தனை ஆபத்தான மரம் அல்ல. அதேநேரத்தில் நிச்சயம் வளர்த்தே ஆகவேண்டிய அத்தியாவசியமான தாவரமும் அல்ல. இதுவும் வழக்கமான தாவரங்களைப் போன்றதுதான். இது கார்பன்டைஆக்ஸைடை அதிகளவு வெளியிடும் என்பது தவறான தகவல். அனைத்துத் தாவரங்களும் கார்பன் டை ஆக்சைடை உட்கொண்டு, ஆக்சிஜனை வெளிவிடும் என்பதுதான் அறிவியல். அதற்கு சீமைக்கருவேல் விதிவிலக்கல்ல. இதனுடைய வேர் அதிகபட்சம் 12 மீட்டர் தூரம் வரை போகும். நிலத்தடியில் உள்ள நீரை உறிஞ்சுவதும், ஒளிச்சேர்க்கைக்காக காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஓரளவுக்கு உறிஞ்சுவதும் வறட்சியைத் தாங்கி வளரும் அனைத்து தாவரங்களுக்குமான பொதுவான குணம். இந்தத் தாவரத்தால் தமிழகம் பாலைவனமாகி விடும் என்பதெல்லாம் அதீத கற்பனை.
மற்ற தாவரங்களில் இருந்து இதை வேறுபடுத்துவது அதன் விரைவான வளர்ச்சிதான். ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடிப்பவனுக்குத்தானே பரிசு கிடைக்கும். அதுபோலத்தான் இதுவும். மற்றவர்களுக்கு பரிசு கிடைக்கவில்லை என்பதற்காக முதலில் வந்தவரை குற்றம் சொல்ல முடியாது.
இப்போதும் தென்மாவட்டங்களில், இந்த மரத்தை விதைத்து, குத்தகைக்கு விடும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த மரத்தை விற்று வரும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்தும் விவசாயிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், தற்போது இந்த மரம் அழிக்க வேண்டிய ஒன்று என்ற கருத்து வலுத்து வருகிறது. 'தேவையில்லை’ என நினைப்பவர்கள் இதை அழிக்கலாம். நீர்நிலைகள், விவசாய நிலங்கள், பாதைகள் போன்றவற்றை இந்த மரங்கள் ஆக்கிரமித்திருந்தால் அப்புறப்படுத்தலாம்.'


சீமைக்கருவேலில் இருந்து பூச்சிவிரட்டி!


தென் மாவட்டங்களில் சீமைக்கருவேல் மரத்தைப் பயன்படுத்தி முக்கியத் தொழிலாக மூட்டம் போட்டு கரி தயாரிக்கும் தொழில் இருந்து வருகிறது. அடுத்த கட்டமாக, சீமைக்கருவேலில் இருந்து பூச்சிவிரட்டி தயாரிக்க முடியும் என்பதை அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் நம்மிடம் பேசிய விருதுநகர் மாவட்டம், அணிக்கலக்கியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ. இவர், இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் 'ஓடம்’ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளார்.
'2005ம் ஆண்டு முதல் எங்கள் நிறுவனம் உயிரி எரிபொருள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதை இணையதளம் மூலமாகத் தெரிந்துகொண்ட அமெரிக்காவிலுள்ள கென்டகி பல்கலைக்கழக வேதியியல் பொறியியல்துறை பேராசிரியர் ஜெப்ரிஸி, எங்களைத் தொடர்பு கொண்டு... சீமைகருவேல் விறகை எரித்து 'உட் வினிகர்’ தயாரித்து பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தலாம் என்று சொல்லி ஆராய்ச்சிக்கு அனுமதி கேட்டார். நாங்களும் சம்மதம் சொன்னதால், 12 மாணவர்களுடன் அவர் இங்கு வந்து ஒரு மாதம் தங்கி பூச்சிவிரட்டி பற்றி ஆராய்ச்சி செய்தார். அது நல்ல பலனளித்தது.
சீமைக்கருவேல் மரத்துண்டுகளை இரும்புக்கலனில் போட்டு 3 மணி நேரம் வரை எரியூட்டினால் வாயு வெளிப்படும். அதைக் குளிர்வித்தால் 'உட் வினிகர்’ கிடைக்கும். 8 கிலோ சீமைக்கருவேல் மரத்துண்டுகளை சூடுபடுத்த 5 கிலோ சீமைக்கருவேல் விறகு தேவைப்படும். ஆக, 13 கிலோ சீமைக்கருவேலில் இருந்து...
3 கிலோ கரியும், 6 லிட்டர் உட் வினிகரும் கிடைக்கும். உட் வினிகரை 10 லிட்டர் தண்ணீரில், 500 மில்லி அளவில் கலந்து தெளித்தால் பூச்சிகள் கட்டுப்படும். உட் வினிகர் தயாரிப்புக் கலன் அமைக்க, 15 ஆயிரம் ரூபாய் செலவாகும்' என்றார்.

ர. சோமேஸ்வரன் said...

''வறட்சி மாவட்டங்களுக்கு... வாழ்வாதாரம்..!''


விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெயமுருகன் சீமைக்கருவேல மரங்களை வெட்டி, கரியாக்கி விற்பனை செய்து வருகிறார். அவரது அனுபவத்தைக் கேட்போம்,
''எங்க அப்பா காலத்துல இருந்தே கரி மூட்டத்தொழில்தான் செய்றோம். ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாதிரியான வறட்சியான மாவட்டங்கள்ல, இருக்கிற மக்களோட வாழ்வாதாரத்துக்காகத்தான் சீமைக்கருவேல மர விதைகளைத் தூவுனாங்கனு எங்க அப்பா சொல்லுவாரு. இந்த சீமைக் கருவேலமரம் இருக்கிற நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து மரங்களை வெட்டி, விறகாக செதுக்கி கூம்பு வடிவத்துல அடுக்கி கரி மூட்டம் போடுறோம். நல்ல மரங்களா இருந்தா, ஏக்கருக்கு சராசரியா 10 ஆயிரம் ரூபாயும், ஓரளவு சுமாரான மரங்களா இருந்தா, ஏக்கருக்கு சராசரியா 6 ஆயிரம் ரூபாயும் கொடுத்து குத்தகைக்கு எடுத்துக்கிறோம். ஓர் ஏக்கருக்கு சராசரியா 15 முதல் 20 டன் விறகு கிடைக்கும். ஒரு டன் விறகுக்கு சராசரியா 350 கிலோ கரி கிடைக்கும். கரி டன்னுக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், தூர்கரி (வேர்ப்பகுதி கரி) டன்னுக்கு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையாகுது. வெட்ட வெட்ட சீமை கருவேலமரம் வளர்றதுனால தட்டுப்பாடு இல்லாம, விறகு வெட்டுற தொழிலும், கரி மூட்டத்தொழிலும் தினசரி நடக்குது... வருமானமும் கிடைக்குது'' என்றார்.


சீமைக்கருவேலில் இருந்து மின்சாரம்!


சீமைக்கருவேல் மரங்களைப் பொடியாக்கி அதை மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளில் பயன்படுத்துவது பற்றி சில விஷயங்களைச் சொன்னார், சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த அண்ணாதுரை.
'சீமைக்கருவேல் மரங்களை வேரோடு பிடுங்கி, அரைத்துத் தூளாக்கும் இயந்திரத்தை நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்த இயந்திரம் மூலம் சீமைக்கருவேல் மரங்களை வேரோடு பிடுங்கி, அரைத்துத் தூளாக்கி விடலாம். இந்த மரத்தூளுக்கு தனியார் பயோ மின் உற்பத்தி நிலையங்களில் அதிகத் தேவையுள்ளது. இம்மரத்தை விறகுக்காக விற்பதை விட இப்படி தூளாக்கி விற்கும்போது அதிக வருவாய் கிடைக்கும்.
பல தொழில்முனைவோர் விவசாயிகளிடம் பணம் பெறாமல் இந்த இயந்திரத்தின் மூலம் சீமைக்கருவேல் மரங்களை அழித்து வருகிறார்கள். அதில் கிடைக்கும் மரத்தூளை மின்சார ஆலைகளில் விற்று லாபம் சம்பாதித்து வருகிறார்கள். சுற்றுச்சூழலுக்கு தீமை செய்கிறது எனச் சொல்லும் சீமைக்கருவேலை இப்படி முறையாகப் பயன்படுத்தினால், மரங்களின் பரவல் தடுக்கப்படுவதுடன் அதை மாற்றுச் சக்தியாகவும் பயன்படுத்த முடியும்' என்றார்.

SIV said...

வேல மரம் என்ற ஒன்றும் உள்ளது. வெண்மையான பட்டை கொண்டு முட்களுடன் இருக்கும். வறண்ட பகுதிகளில் வளரும். அதுவும் நம் மண்ணின் மரமே...

ர. சோமேஸ்வரன் said...

இலவசமாக அழித்துக் கொடுக்கிறோம்!

'ஏனாதி’ பூங்கதிர்வேல், தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமைக்கருவேல் ஒழிப்பு இயக்கம்:

"எங்க குழுவுக்கு தகவல் கொடுத்தா நாங்க இலவசமாவே அகற்றிக் கொடுக்கிறோம். தமிழ்நாட்டுல எந்தப் பகுதியா இருந்தாலும் சரி... ஊராட்சித் தலைவர், பொதுமக்கள் கையெழுத்துப் போட்டு விண்ணப்பம் அனுப்பினா, அடுத்த 10 நாள்ல வேலைகளைத் தொடங்கிடுவோம். தேவைப்பட்டா வேற மரங்களையும் நட்டுக் கொடுப்போம். நாங்க அழிக்கிற சீமைக்கருவேல மரங்களை விற்பனை செய்றது மூலமா கிடைக்கிற தொகையை ஜே.சி.பி. உள்ளிட்ட செலவுகளுக்குப் பயன்படுத்திக்குவோம். இதுவரை 600 ஏக்கர் நிலப்பரப்புல சீமைக்கருவேல் மரங்களை அழிச்சிருக்கோம்."
பூங்கதிர்வேல்: 7806919891

Unknown said...

சீமைகருவேலை மற்ற முல்லை நிலத்தில்
இயல்பாக வளரும் பல்வகை தாவரங்களின்
இடத்தையும் பிடித்து கொண்டு பல்லுயிர்
சூழலை கெடுக்கிறது. சீமைகருவேலை
இல்லாத ஒரு கொங்கு கிராமத்தில்
நீங்கள் முல்லை நிலத்தின் அழகை
காணலாம்.
மற்றபடி சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட
திடீர் மக்கள் தொகை பெருக்கம் 60களில்
உச்சத்தை அடைந்தது. அந்த காலகட்டத்தில்
நிலமற்ற மக்களின் விறகு தேவையை
சீமைகருவேலை போக்கியது. அந்த
சூழல் இப்பொழுது மாறிவிட்டது.
இதுதான் சீமைகருவேலையை அழிக்க
சரியான தருணம்

கொமுரு said...

வாழ்த்துக்கள்

Paramasivam said...

திரு R.Somasundareswaran அவர்களின் மாற்று கருத்துகளுடன் நானும் உடன் போகிறேன். முனைவர் பார்த்திபன் கருத்துகள் முக்கியமானவை.

Thirumalai Kandasami said...

மணி அண்ணா , எங்கள் ஊரில் எல்லாம் 50 ஏக்கர் சீமை கருவேலமரத்தை சுமார் 10 லட்சம் வரை ஏலம் எடுத்து வெட்டி செல்கிறார்கள்.
(நாமக்கல் மாவட்டம் ). வெட்டப்படும் மரக்கட்டைகளை ஏலம் விட்டு ஊர் பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாம் (புது மரம் நடுதல், குளம் தூர் வாருதல் ). நீங்க முன்னயே செஞ்சுரிப்பீங்கனு நெனைக்கிறேன்.

Kumaravel said...

வாழ்த்துக்கள் .. பிற மரங்களை தேர்வு செய்யும் போது, பனை மரத்தையும் தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் . பனை மரம் நம் தமிழ்நாட்டின் பரம்பரிய மரம் . விதை விதைத்து முளைத்து விட்டால் இதனை அதிகம் பராமரிக்க தேவை இல்லை . மழை நீரை சேமிக்கவல்லது . பனை மர விதை பொடிச்சின்னாம்பாளையம் வாய்க்கால் கரையில் அதிகம் கிடைக்கும் .