Feb 21, 2017

தடுப்பூசியும் குழப்பங்களும்

சில வாரங்களுக்கு முன்பாக உறவினர் ஒருவர் அழைத்து ‘எம்.ஆர். தடுப்பூசியைக் குழந்தைகளுக்கு போடுவதில் தவறொன்றும் இல்லை அல்லவா?’ என்றார். அப்பொழுது இது குறித்து ஒன்றும் தெரியவில்லை. இது நாமாகவே பதில் சொல்லுகிற விஷயமும் இல்லை. சில மருத்துவர்களை அழைத்துக் கேட்ட போது ‘அதெல்லாம் பிரச்சினையில்லை...போடச் சொல்லுங்க’ என்றார்கள். அதையே அந்தப் பெற்றோரிடமும் சொன்னேன். ஆனால் பதில் சொல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் ‘மருத்துவர்களிடம் கேட்டேன்..அவர்கள் போடச் சொல்கிறார்கள்’ என்று பாரத்தை மருத்துவர்கள் மீது இறக்கி வைத்து பதில் சொன்னேன். அதற்கடுத்த சில நாட்களில் மேலும் ஒன்றிரண்டு பெற்றோரிடமும் இதே ரீதியிலான உரையாடல் தொடர்ந்தது. கவனமாக பதில் சொன்னாலும் சற்றே பதறாமல் இல்லை. அடுத்தவர்களின் குழந்தைகளுக்கு என்றால் மருத்துவர்கள் சொன்னார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்; நம் குழந்தைக்கு கேட்கும் போது என்ன முடிவை எடுப்பது?

குழப்பம்தான்.

நேற்று தமிழக அரசு ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒரு கோடியே எண்பது லட்சம் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசி போடுகிற இலக்கு இருக்கிறது. கடந்த இருபது நாட்களில் அறுபது லட்சம் குழந்தைகளுக்கு போட்டிருக்கிறார்கள். இன்னமும் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் பாக்கி. எப்படியும் ஐம்பது லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் தவிர்த்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. ஓசூரிலிருந்து தினமும் அலுவலகம் வந்து போகிற நண்பர் ‘எதுக்குங்க ரிஸ்க்?’ என்றார். அவரது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை. கணவனும் மனைவியும் படித்தவர்கள். நல்ல வசதி. ஆனால் இப்படியொரு முடிவை எடுக்கிறார்.

தட்டம்மை- ரூபெல்லா (எம்.ஆர்) தடுப்பூசி விவகாரத்தில் உண்டாகியிருக்கும் இந்த குழப்பங்களுக்கு படித்தவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆமாம். அவர்கள்தான் காரணம். எல்லாவற்றையுமே அரையும் குறையுமாக தெரிந்து வைத்திருக்கிறோம். நம்மைச் சுற்றி சதி பின்னப்பட்டிருப்பதாக நம்பிக் கொள்கிறோம். சரியோ தவறோ- நாமாகவே ஒரு முடிவுக்கு வருகிறோம். யார் எதைச் சொன்னாலும் ‘அப்படியும் இருக்குமோ?’ என்று குழம்பி அடுத்தவர்களையும் குழப்புகிறோம். 

முழுமையாக விவரம் தெரிந்தவர்களும் தப்பித்துக் கொள்கிறார்கள். எதுவுமே கேள்விப்படாதவர்களும் தப்பித்துக் கொள்கிறார்கள். வாட்ஸப், ஃபேஸ்புக் என்று வைத்துக் கொண்டு அல்லோலப்படும் அரைகுறைகளின்பாடுதான் பெரும் திண்டாட்டமாக இருக்கிறது. உண்மையிலேயே தெளிவடைய முடியவில்லை. இதுவரையிலும் தடுப்பூசிகளுக்கு இவ்வளவு பெரிய குழப்பம் எப்பொழுதாவது வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. போலியோவுக்கு ரயில் நிலையம், பேருந்து நிலையம், பள்ளிக்கூடங்கள் என்று ஒரே நாளில் சகல இடங்களிலும் முகாம்களை அமைத்து ஊற்றிவிடுகிறார்கள். வழியில் போகிற வருகிற குழந்தைகளையெல்லாம் அழைத்து ஊற்றும் போது யாரும் எதிர்ப்பு சொல்வதில்லை. இந்த எம்.ஆர் தடுப்பூசியின் குழப்பத்திற்கு காரணமே பள்ளிகளிலிருந்து கொடுத்து அனுப்பிய ஒப்புதல் விண்ணப்பம்தான் என்று நினைக்கிறேன். 

‘உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடவிருக்கிறோம். எங்களுக்கு எதுவும் தெரியாது. நாளைக்கு ஏதாச்சும்ன்னா நீங்கதான் பொறுப்பு’ என்று சொல்லாமல் சொன்னால் திக்கென்று இருக்குமா இருக்காதா? இப்படி பொறுப்பைத் துறந்து ‘எல்லாத்தையும் நீங்களே பார்த்துக்குங்க’ என்றால் அரையும் குறையுமாக இருக்கும் நடுத்தரவர்க்கத்தினர் குழம்பத்தான் செய்வார்கள். நோயைத் தடுக்கிறோம் என்ற பெயரில் ஏதாவது வம்பு வந்து சேர்ந்துவிடக் கூடாது என்று யோசிப்பதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்? நமக்கு என்றால் கூட ஆனது ஆகட்டும் என்று நினைக்கலாம். குழந்தையை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்?

‘அமெரிக்கா நம்மையெல்லாம் வைத்து டெஸ்ட் செய்யுதாமா’ என்று எங்கிருந்தோ கிளம்புகிற செய்திகளையெல்லாம் நம்ப வேண்டியதில்லைதான். ஒருவேளை- அதில் உண்மை இருந்து தொலைந்துவிட்டால் என்ன செய்வது என்று பதறாமல் இருக்க முடிவதில்லையே. நம் ஊரில் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ‘இதையெல்லாம் செய்யமாட்டார்கள்’ என்று வரையறை ஏதாவது இருக்கிறதா? காசு கிடைக்குமென்றால் எதை வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்கள் என்றுதானே இவர்களைப் பற்றி பிம்பப்படுத்தி வைத்திருக்கிறோம். அமெரிக்க மருந்துக் கம்பெனி கோடிகளைக் கொட்டிக் கொடுத்திருப்பான். இவர்கள் தலையை ஆட்டியிருப்பார்கள் என்றுதான் மனம் நம்பச் சொல்கிறது. இவர்களின் பரிசோதனைக்கு நம் குழந்தை பலியாகிவிடக் கூடாது என்று சாமானிய மனிதனின் மனநிலையில் இருந்து யோசிப்பதில் என்ன தவறு?

எல்லாவற்றிலும் நடுத்தர வர்க்கத்தையும் எளிய மனிதர்களையும் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. 

என்னால் மருத்துவர்களிடம் பேச முடிகிறது. ஒரு மருத்துவரினால் தெளிவாகச் சொல்ல முடியவில்லையென்றால் இன்னொரு மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள முடிகிறது. இந்த நாட்டில் ஒவ்வொரு தகப்பனுக்கும் இது சாத்தியம் என்று எப்படிச் சொல்ல முடியும்? கூலிக்குச் செல்கிறவனிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்து ‘வேணும்ன்னா போட்டுக்க..நாளைக்கு எங்களைக் கேட்கக் கூடாது’ என்று சொன்னால் அவன் ‘இந்த சங்காத்தமே வேண்டாம்’ என்று சொல்வதை எப்படி தவறென்று சொல்ல முடியும்?

அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தடுப்பூசிக்கு நான் எதிரியில்லை. ஒரு எளிய தகப்பனாக இருந்து இந்த விவகாரத்தைப் பார்க்கும் போது பயமாகத்தான் இருக்கிறது. இப்படியொரு பயம் ஏன் உண்டாகியிருக்கிறது என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பெற்றோரிடமிருந்து எதற்காக இப்படியொரு ஒப்புதல் விண்ணப்பத்தை அரசாங்கம் கேட்டது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பெற்றோரிடம் எழுத்துப்பூர்வ அனுமதியெல்லாம் கேட்காமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் யாரும் எதுவும் கேட்டிருக்கப் போவதில்லை. இத்தனை விவாதங்கள் உண்டாகி நினைத்தவர்கள் எல்லாம் மருத்துவர்கள் ஆகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அரசாங்கமே அதற்கான இடத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. 

‘அரசாங்கத்துக்கே சந்தேகம் இருக்கிறதோ?’ என்ற குழப்பத்தை ஏன் விளைவித்தார்கள் என்று அரசுதான் விளக்க வேண்டும்.

ஒரு சாரார் சொல்வதைப் போல அரசாங்கமும் கார்போரேட் நிறுவனங்களும் செய்கிற ‘சதி’க்கு எம் பிள்ளைகளை சோதனை எலிகளாகவும் கொடுக்க விரும்பவில்லை. இன்னொரு சாரார் சொல்வதைப் போல ‘தடுப்பூசி போடவில்லையென்றால் அது உன் குழந்தைக்கு நீ செய்கிற துரோகம்’ என்ற பழிச்சொல்லையும் தாங்க விரும்பவில்லை. ஒரு எளியவனாகக் கேட்பதெல்லாம் அரசாங்கத்திடமிருந்து மிகச் சாதாரண விளக்கத்தை மட்டும்தான்.

16 எதிர் சப்தங்கள்:

வெட்டி ஆபீசர் said...

அவரு ஏன் உங்க கிட்ட வந்து கேட்டார்? அரசாங்கமே இந்த தடுப்பூசி திட்டத்தை செயல் படுத்தும்போது ஏன் இப்படி ஒரு குழப்பம்?

பெற்றோர்க்கு குழப்பம்னா இரண்டு மூன்று குழந்தை மருத்துவர்களை போய் பார்த்து விசாரித்து முடிவுக்கு வரவேண்டும்...அடுத்தவர்களை கேட்டு முடிவு செய்ய இது படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு விஷயமில்லை.

வளர்ந்த நாடுகளிலேயே இந்த தடுப்பூசி போடப்படும்போது நம்ம நாட்டில் என்ன வித்தியாசமான அணுகுமுறையை எதிர்பாக்கிறோம்?

Elango Kannappan said...

‘தடுப்பூசி போடவில்லையென்றால் அது உன் குழந்தைக்கு நீ செய்கிற துரோகம்’ .. இது உங்களுடைய புரிதல்.. தடுப்பூசி போடாமல் இருப்பதுதான் சிறந்தது...Dr உமர்பாரூக் எழுதிய புத்தகத்தை படியுங்கள்..இணையத்தில் நிறைய கிடைக்கும், நிறைய பேர் பேசி இருக்கிறார்கள் (healer baskar,etc..)... பிறகு நிலையான புரிதலுக்கு வாருங்கள்.
https://goo.gl/51EMiZ

Unknown said...

www.anatomictherapy.org/tvideos.php

சேக்காளி said...

இத்தனை வருடம் இல்லாத ஒன்றை இப்போது வேண்டாம் என்றால் என்ன குறைந்து விடும்?

Usha said...

மணி,
மருத்துவரீதியாகா என்னிடம் தெளிவான பதில்லிலை, பயமுறுத்தும் நோக்கமும் இல்லை, எனினும் நான் வசிக்கும் நாட்டில் இருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருந்துக் கொம்பனிகள் குறிப்பாக இந்தியாவில் தமது புதிய கண்டுபிடிப்புகளை இந்தியக் குழந்தைகளில் சோதனை முயற்சிக்குப் பயன் படுத்துவார்கள்... இவர்களுக்குத் தேவை ஓர் ஆரோக்கியமான மனித உடல்(குழந்தைகள்). அது மட்டும் தான் வேற எந்த ஈகைத் குணமும் அற்றவர்கள். அதுவும் இலவசமான சேவை, சில வேளைகளில் அவர்கள் கண்டுபிடித்தவற்றை காசு கொடுத்து வாங்கிப் பாவிக்க வேணும்(சொந்தச் சிலவில் சூனியம்). எல்லாத் தடுப்பூசிகளும் போட வேண்டிய கட்டாயமில்லை. இங்கும் வெளிநாட்டுக் குழந்தைளுக்கு மட்டும் எல்லா தடுப்பூசிகளும் பரிந்துரைப்பார்கள். நாம் தான் தெளிவாக இருக்க வேணும்.

The Unprejudiced Observer said...

அன்பு மணி,
தடுப்பூசி பற்றிய குழப்பங்களில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிப்பது அறிவியல் என்ற போர்வையில் அலோபதி மருத்துவர்களும் அறியாதவர்களும் சொல்வதினால் தான்...
தடுப்பூசியில் இருப்பது நோய்க்கிருமிகளே!!.அதுவும் எந்த நோயை தடுக்கும் என்று சொல்கிறார்களோ அந்த நோயின் பலம் குறைந்த நோய்க்கிருமிகளே..
தடுப்பூசி ஒன்றும் அலோபதி மருத்துவத்தை சார்ந்ததல்ல.. அது ஐசோபதி(isopathy means the theory that the product of a disease can be used to cure that same disease, as in the treatment of smallpox with substance taken from the varioles.).ஐசோபதியின் அறிவியல் தன்மை என்ன? இவர்கள் அதை ஒத்துக்கொண்டார்களா? அதன் விளைவுகள் எவ்வளவு மோசமானது.இது சரி என்றால் ஏன் எயிட்ஸ் நோய்க்கு தடுப்புமருந்து கண்டுபிடிக்கவில்லை..
இன்னும் விரிவாக சொல்லப்போனால் எந்தெந்த வியாதிக்கெல்லாம் இவர்கள் தடுப்பூசி போடுகிறார்களோ அதற்கெல்லாம் நவீன மருத்துவத்தில் மருந்தே கிடையாது.(எ.கா:அனைத்து வகை அம்மை,மஞ்சள் காமாலை.கக்குவான் இருமல்,மூளைக்காய்ச்சல் ,போலியோ etc.)
வந்தபிறகு நலப்படுத்த முடியாத வியாதிகளை வராமல் தடுக்க முடியும் என்று மக்களை நம்பவைக்க முயற்ச்சிக்கின்றனர்.

அம்மை,தட்டம்மை,தாளம்மை மற்றும் தொற்றும் கொடிய கொள்ளை நோய்கள் வரும் காரணங்களை களைவதே சிறந்த அரசின் நடவடிக்கையாக இருக்க முடியும்.அதை விடுத்து குழந்தைகளை கொடுமைப்படுத்துவது ஏற்ற செயலாக இருக்க முடியாது.
நோய் வராமல் தடுப்பது என்பது ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவது,பசிப்பிணியை ஒழிப்பது இதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் தானகவே மேம்படும்.
நோய் மற்றும் ஆரோக்கியம் பற்றிய வள்ளுவனின் வாக்கை இவர்கள் சட்டை செய்வதில்லை.

“நோய்நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்“

காரணங்களை களைவதே சிறந்த தடுப்பு முறை.

Unknown said...

Centers for Disease Control and Prevention.
https://www.cdc.gov/vaccines/vac-gen/side-effects.htm#mmr
என்ற வலைத்தளத்தில் இந்த தடுப்பூசி ஏற்படுத்தும் விளைவுகள் உள்ளது . இது அரசு வலைத்தளம்.
தடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்...!
http://www.vikatan.com/news/coverstory/79315-politics-behind-vaccinations-what-experts-say.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

சுதா சுப்பிரமணியம் said...

For long time I had this confusion, but no proper person to ask.. Thanks for writing..

வெட்டி ஆபீசர் said...

தடுப்பூசி போடறத தப்புனு முட்டாள்தனமா பின்னூட்டம் போடற எத்தனை பேருக்கு மருத்துவ படிப்பு தகுதி இருக்குனு பார்க்கணும்...

இதுல ஒருத்தர் இவ்ளோ நாளா இல்லாததை இப்போ வேணாம்னு சொன்னா என்னா ஆயிடபோதுன்னு கேக்குறார்...சரிதான்...AIDS கூடத்தான் 1960 காலகட்டத்துல கெடையாது...அதனால?

கூகுளை நம்பி மட்டும் இந்த மாதிரி முடிவுக்கு வர மக்கள் கூகுளை வெறும் பேட்டரி மாத்துறது ஐபோன் செட்டிங்ஸ் மாத்துறதுக்கு மட்டும் உபயோகப்படுத்திக்கணும்...

மத்தபடி ஜேம்ஸ் பாண்ட் படங்கள்ல காமிக்கிற மாதிரி உலகநாடுகள் சதி அப்புடி இப்பிடினு மெண்டல் மாதிரி உளறாம...குழந்தை மருத்துவ நிபுணர்கள் சொல்றத கேட்டு நடக்கணும்...

இப்புடியே போனா மருத்துவ கல்லூரிகள் எல்லாம் வெளிநாட்டு மருந்து கம்பெனிகளோட கைக்கூலிகள்ன்னு மூடச்சொல்வாங்க போலருக்கு...

முடியல...

வெட்டி ஆபீசர் said...

http://www.who.int/mediacentre/factsheets/fs367/en/

ர. சோமேஸ்வரன் said...

மருத்துவராவதற்கு முன் மனிதராக மாறுங்க
https://siddhahealer.blogspot.in/2017/02/blog-post_19.html
மருத்துவர் புகழேந்தியின் தட்டம்மை தடுப்பூசி குறித்த ஆய்வு உங்கள் பார்வைக்கு.
https://drive.google.com/file/d/0Bzc4QN6yiz9KOGNNclZ6b2xFWkk/view?usp=sharing

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வதந்திகள் பரவியதால் பெற்றோரில் பெரும்பாலோர் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தயங்கினர். அதனால்தான் விரும்புவோருக்கு மட்டும் தடுப்பூசி போடப் பட்டது. வேறு காரணத்தால்தான் லேசாக வாந்தி வந்து விட்டால் கூட தடுப்பூசியால்தான் வந்தது என்று கூறத் தயங்க மாட்டார்கள்.
வயிறில் குடற்புழு நீக்கத்திற்காக அரசால் அல்பண்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப் படுகிறது ஆனால் இதனை மாணவர்கள் தூக்கி எறிந்து விடுகின்றனர். அல்பண்டசோல் மாத்திரையின் விலை அதிகம் டாக்டரிடம் போனால் 300 ரூபாய் பீஸ் கொடுத்து இதே மாத்திரையை அவர் எழுதிக் கொடுத்து கூடவே உபயோகமில்லா டானிக் ஒன்றையும் வாங்கி 500 க்கு மேல் செலவு செய்வதுதான் நமது வழக்கம். நாம் முட்டாள்கள் நம்மை எல்லோரும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் . இவை எல்லாமே அயல் நாட்டு சதி என்று கூறுவதுதான் தற்போதைய trend

shan said...

உங்கள் பதிவை பார்த்து தெளிவடைந்தவர்களும் அதன் கீழ் உள்ள பின்னூட்டங்களை பார்த்து குழம்பி போனார்கள். நானும் தான்.. :-(

kailash said...

MMR is usually given around 1 and 4 yrs , many kids in school would have been vaccinated for MMR already . If you check the records of your child you can easily find this out . If its private clinic you would have paid for it , if its government hospital it is free. Currently the vaccination given in school camps are free , government should have clarified this and should have told every one that vaccination is not required for the kids who have been vaccinated already.

Unknown said...

Mani, mahi ku potteengala illaya?

Unknown said...

அன்பு மணிகண்டன் அவர்களுக்கு,

தடுப்பூசி பற்றிய உங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்ததற்க்கு நன்றி.

இந்தியாவிலும் தடுப்பூசிகளுக்கு எதிர்ப்புகள் உள்ளன என்பது எனக்கு ஆச்சரியம் அளித்தது. இது வளர்ந்த மேலை நாடுகளுக்கே உரிய பிரச்சனை என்று எண்ணி இருந்தேன்.

நான் அறிந்தவரையில் இன்றும் MMR (Mumps Measles Rubella) தடுப்பூசியின் பரவலான எதிர்ப்புக்கு காரணம்1998 இல் அண்ட்ரு வேக்பீஃல்ட் (Andrew Wakefield) தலமையிலான குழு, பிரபல மருத்துவ இதழான லேன்சட் (Lancet) இதழில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையே. அந்த ஆய்வின் முடிவாக ஆட்டிசம் (Autism) தன்மைக்கும் MMR தடுப்பூசிக்கும் மறைமுக தொடர்பு இருக்கலாம் என்றும் இது பற்றி மேலும் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் வேக்பீஃல்ட் பரிந்துரைத்தார். பண்ணிரன்டு குழந்தைகள் வைத்து மட்டுமே நடத்தப்பட்ட இந்த ஆய்வு சில நாளிதழ்களில் முதல் பக்க செய்தியாக வந்நது. இதனை தொடர்ந்து 2000மாவது ஆண்டுகளின் முற்பகுதயில் வேக்பீஃல்ட் மீண்டும் இதே போன்ற பரிந்துரைகளை முன்வைத்து MMR தடுப்பூசியின் பயன்பாட்டை தள்ளிபோட வலியுறுத்தினார். ஆனால் பின்னர் நடத்தப்பட்ட மற்ற ஆய்வுகளில் வேக்பீஃல்டின் ஆய்வு அறிவியல் பூர்வமற்றது என்றும் சுயலாபத்திற்காக தவறான அறிக்கையை வேக்பீஃல்ட் வெளியிட்டார் என்றும் நிருபிக்கப்பட்டது[1].

MMR தடுப்பபூசிக்கும் ஆட்டிசத்திற்கும் எவ்வித தொடர்பு இல்லை என்று இப்பொழுது நிருபிக்கபட்டுவிட்டாலும் வேக்பீஃல்டின் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் இன்றும் உள்ளது. இதற்கு மற்றொரு காரணம் ஆடிசத்திற்கான முதல் அறிகுறிகள் தோன்றும் வயதும் MMR தடுப்பூசி போடப்படும் வயதும் ஏறக்குறைய ஒன்றே. அதனால் ஆடிசத்திற்கு காரனம் MMR தடுப்பூசி என்று கருதி இன்றும் தடுப்பூசி தவிர்க்கப்படுகிறது. மருத்துவரும் எழுத்தாளருமான பென் கோல்டகர் (Ben Goldacre) தனது Bad Science புத்தகத்தில் MMR புரளி பற்றியும் மற்ற போலி அறிவியலை பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்[2].

பொதுவாக தடுப்பூசிகளை பொருத்தவரை, இதனை பயன்படுத்தவதனால் வரும் நன்மைகள் இதனால் விளையக்கூடும் என்று எண்ணும் அபாயங்களை விட பன்மடங்கு அதிகம். இதற்கு இணையான ஓர் உதாரணம் குழந்தை பிறப்பு. குழந்தை பிறப்பின்போது தாய்க்கும் சேய்க்கும் எப்பொழுதும் ஒர் அபாயம் உண்டே. இது உயிர் அபாயமும் கூட. இருப்பினும் இதன் பொருட்டு பொதுவாக எவரும் குழந்தை பெற்றுக் கொள்ள மறுப்பதில்லை. அது போலவே தடுப்பூசியும்.

குறிப்புகள்:
[1]. https://en.wikipedia.org/wiki/MMR_vaccine_controversy
[2]. http://www.badscience.net/2008/08/the-medias-mmr-hoax/ - நேரம் இருப்பின் Bad Science முழு புத்தகத்தையும் படிக்க பரிந்துரைப்பேன்.

பின் குறிப்பு:
தமிழில் தொடர்ந்து எழுதுவதில்லை. பிழை இருப்பின் மன்னிக்கவும்.