Feb 14, 2017

அரசியல் தெளிந்தது

கடந்த முப்பதாண்டு காலம் தமிழக அரசியலைக் குதறிச் சின்னாபின்னமாக்கி சாக்கடையாக மாற்றிக் கொண்டிருந்த சசிகலாவின் அரசியல் கனவுக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவை புனித முகமாக்கி அதன் பின்னால் இருந்தபடியே ரவுடியிசம், சொத்துப் பறிப்பு, ஊழல் என்று கயமைத்தனங்களால் தமிழகத்தைச் சீரழித்துக் கொண்டிருந்த சசிகலாவுக்கு எதிராகத் தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. தொண்ணூறுகளுக்குப் பிறகாக தமிழகம் முழுவதும் விரவிக் கிடந்த பயம், நடுக்கம், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆட்டங்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறந்திருப்பதாகத்தான் உணர்கிறேன்.

அரசியல் நாகரிகம் என்பதே கிஞ்சித்தும் இல்லாத ஒரு சூழலில் கருணாநிதி ஓய்ந்து, ஜெயலலிதா மறைந்து மிகப்பெரிய வெற்றிடம் உருவான போது ஆசுவாசமாக இருந்தது. இனி நாகரிக அரசியலையும் சக மனிதர்களை மதிக்கும் போக்கும் தமிழக அரசியலிலும் உருவாகக் கூடும் என்ற நம்பத் தொடங்கிய தருணத்தில் சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர், சட்டமன்ற ஆளுங்கட்சித் தலைவர் என்று அடுத்தடுத்த குண்டுகளை வீசினார்கள். ‘சிரித்துக் கொண்டார்கள்..அதனால் சந்தேகம் வலுத்தது’ என்று கேவலமாகப் பேசிய போது எரிச்சல் வந்தது. நேற்றைய தினம் வரைக்கும் நாலாந்தர அரசியல்வாதியைப் போல பேசிக் கொண்டிருந்த சசிகலாவின் பேச்சும், உடல்மொழியும் மீண்டுமொரு இருண்ட காலத்திற்கு தமிழகம் இழுத்துச் செல்கிறதோ என்ற பயத்தை உருவாக்காமல் இல்லை.

உச்ச நீதிமன்றத்தால் எழுதப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு எதிரான இந்தத் தீர்ப்பைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தமிழகம்.

எழுபத்தைந்து நாட்களாக ஜெயலலிதாவை உள்ளே வைத்துக் கொண்டு எவ்வளவு பெரிய மனிதனையும் கிட்டவே அண்டவிடாமல் தனது சர்வாதிகாரத்தின் கோர முகத்தைக் காட்டியது ஒரு சாம்பிள்தான். ஆசிட் அடிப்பதும், மிரட்டுவதும், உதைப்பதும், சொத்துக்களை பறிப்பதும், ஊடகங்களை அதட்டுவதும் என எல்லாவிதத்திலும் திகிலூட்டிக் கொண்டிருந்த வன்முறையாளர்களுக்கு இது ஒரு சம்மட்டி அடி. ஆடிட்டரை செருப்பால் அடித்தும், ஐஏஎஸ் அதிகாரி மீது ஆசிட் அடித்தும், மருத்துவரை சிறையில் அடைத்தும், எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் காலில் விழச் செய்தும், அதிகாரிகளைக் குறுகச் செய்தும் அருவெறுப்பான அரசியலை நடத்திக் கொண்டிருந்தார்கள். 

எதிர்ப்பவர்களை எல்லாம் இல்லாமல் போகச் செய்கிற வல்லமை அவர்களிடமிருந்தது. வாயை அடக்குகிற முரட்டுத்தனம் இருந்தது. தமிழகத்தில் யாரையும் வழிக்குக் கொண்டு வருகிற வலையமைவை வைத்திருந்தார்கள். அதுதான் பயத்தைக் கொடுத்தது. யார் குரல் கொடுத்தாலும் கருணையே இல்லாமல் அவர்களின் குரல்வளையை நெறித்தார்கள். ஊடகங்கள் மெளனமாகின. ‘நமக்கு எதுக்கு வம்பு’ என்ற மொன்னைச் சமூகத்தை வெற்றிகரமாக உருவாக்கி வைத்திருந்தார்கள்.

தமிழகம் முழுவதுமே சசிகலா எதிர்ப்புணர்வு புகைந்து கொண்டிருந்தது. இன்றைக்கு யாரை அலைபேசியில் அழைத்துப் பேசினாலும் உற்சாகம் கரைபுரளத்தான் பேசுகிறார்கள். இவ்வளவு வன்மத்தைச் சம்பாதித்து வைத்திருந்த ஒரு பெண்மணி அடுத்த முதல்வராகிவிட வேண்டுமென வெறியெடுத்துத் திரிந்தது அருவெறுப்பை உண்டாக்கியிருந்தது. நீ யார் எங்களை ஆள்வதற்கு என்பதை எப்படி கேட்பது எனத் தெரியாமல் தமக்குள் புகைந்து கொண்டிருந்தார்கள்.

விடியல் பிறந்திருக்கிறது.

இப்பொழுதும் கூட நீதியை விலை கொடுத்து வாங்குவதற்கும் மத்திய அரசை வளைப்பதற்கும் எல்லாவிதமான முயற்சிகளையும் சமீபகாலத்தில் சசிகலா தரப்பு செய்திருக்கும். சசிகலா முதல்வராவதற்கு அவசரப்பட்டதும் கூட இந்தத் தீர்ப்பை மனதில் வைத்துத்தான். தமக்கு எதிராக எழுதப்பட்டுவிட்டால் உடனடியாக திவாகரனுக்கோ, நடராசனுக்கோ அல்லது வேறொரு போனாம்போக்கிக்கோ முதல்வர் பதவியைக் கொடுத்துவிடலாம் என்று துள்ளினார்கள். ஓபிஎஸ்ஸை விட்டுவைத்தால் அவரிடமிருந்து பொறுப்பை கைமாற்றுவது கடினம் என்று பயப்பட்டார்கள். ஒருவேளை சசிகலா முதல்வராகியிருந்தால் அடுத்த முப்பது வருடங்களுக்கு மாஃபியாவின் கரங்களிலிருந்து தமிழகம் விடுபட்டிருக்கவே முடியாது. நம்முடைய தலைமுறை முழுக்கவும் வெறுப்பரசியல் தொடர்ந்திருக்கும். 

தடுத்து நிறுத்திய ஆளுநருக்குத்தான் மனப்பூர்வமான நன்றியைச் சொல்ல வேண்டும்.

ஓபிஎஸ் ஒன்றும் உத்தமர் இல்லைதான். பத்தாண்டு காலம் இவர்களுக்குத்தான் கட்டுப்பட்டுக் கிடந்தார். அப்பொழுதெல்லாம் வாயே திறக்காதவர் தன்னை ராஜினாமா செய்யச் சொன்னவுடன் பேசத் தொடங்கினார். ‘நீ சி.எம்; நான் பொ.செ’ என்று சொல்லியிருந்தால் ஒருவேளை அவர் அமைதியாகவே இருந்திருக்கக் கூடும். ஓபிஎஸ் நல்லவரோ கெட்டவரோ ஆனால் மன்னார்குடி குழுமத்தளவுக்கு மோசமானவராக இருந்துவிட முடியாது என்ற நினைப்பிலேயேதான் தமிழகம் அவர் பின்னால் திரண்டது. அவரை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முட்டுச்சந்தில் நம்மைக் கொண்டு போய் நிறுத்தியிருந்தது தமிழக அரசியல் சூழல்.

மிகப்பெரிய ஆபத்து நீங்கியிருக்கிறது. நமக்கு அவகாசம் கிடைத்திருக்கிறது. இனி நாம் பொறுமையாக முடிவு செய்யலாம்- உருவாகியிருக்கும் வெற்றிடத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வோம். யார் நமக்குச் சரியானவர், எந்தக் கட்சி வர வேண்டும்?  யார் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரமும் வாய்ப்பும் மக்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது. 

இனிமேல்தான் புனிதப்படுத்துதலை அடித்து நொறுக்க வேண்டும். அதிகாரத்திற்கும் ஆட்சிக்குமாக நாக்கைத் தொங்கப் போட்டுத் திரியும் யாருமே புனிதர்கள் இல்லை. வெறியெடுத்த வேட்டை நாய்கள். அதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்வோம்.

மற்றபடி, இன்றைய தீர்ப்பின் காரணமாக தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தில் வெளிச்சம் விழுந்திருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். இன்றைய தினத்தைக் கொண்டாடுவோம்!

14 எதிர் சப்தங்கள்:

Shankari said...

Well said...

சேக்காளி said...

என்னமாவது கமெண்டு எழுதணும் போல இருக்கு. ஆனா சந்தோசத்துல கையும் ஓடல காலும் ஓடல.
ஆகையால்
//இன்றைய தினத்தைக் கொண்டாடுவோம்!//

சேக்காளி said...

நீதி காப்பற்றப் படுகிறதோ இல்லையோ.ஆனால் இந்த தீர்ப்பு நீதியின் மீதான நம்பிக்கையை துளிர்க்கச் செய்திருக்கிறது.

ADMIN said...

மகிழ்ச்சி.

Unknown said...

எழுத்தாளர் மணிகண்டன் அவர்களுக்கு கோபம் வரலாம், ஆனால் கோபத்தின் முழு உருவமாக மணிகண்டன் இருந்தால் நாடு தாங்காது! :) கொஞ்சம் கருணை காட்டுங்க.

அன்பே சிவம் said...

பொறுமை காத்தவரால்
பொறுமை நம்மை காத்தது...

venkat said...

மணிகண்டன் அவர்களுக்கு, உங்களின் வெளிப்படையான அரசியல் கட்டுரையை கண்டு ஆச்சரியமும், பயமும் அடைகிறேன். ஆச்சரியம் அடைவதற்கு, உங்கள் நேர்மையான விமர்சனம் காரணம். இன்றைய நிலையில், எந்த பத்திரிகையின் அரசியல் கட்டுரையிலும் ஒரு சார்பு நிலை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. கடந்த இருபத்து ஐந்து வருடங்களாக ஒரு அரசியல் பத்திரிகையை விடாமல் தொடர்ந்து வந்தேன். எனக்கு சிறியவயதிலிருந்து அந்த பத்திரிகைதான் அறிவாளிகளின் அடையாளமாக காட்டப்பட்டது. என்னையறியாமல் தமிழர், தமிழ் இனம் என்றால் என் கண்கள் கலங்கி விடும். செஞ்சோலையில் குண்டு விழுந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த பத்திரிகையில் மட்டும் எந்த கண்டிப்பும் வெளியிட வில்லை. எனக்கு பொசுக்கென்று ஆகி விட்டது. நம் எல்லாருக்கும் பெரியவர்களால் சிறிய வயதில் ஏற்படுத்தப் பட்ட பிம்பம் அழிவதற்கு நெடு நாள் ஆகும். ஒரு வேளை, நான் சார்ந்த இனத்தின் காரணத்தினாலோ என்னமோ, அந்த வருணாசிரம பத்திரிகையை நெடு நாள் கொண்டாடியதற்கு வெட்கப்பட்டேன். அதற்கப்புறம் அந்த பத்திரிகையை படிப்பதில்லை. அதற்கப்புறம் அரசியல் மீதிருந்த ஆர்வமும் குறைந்து விட்டது. உங்களின் நேர்மையான விமர்சனத்தை படிக்கும் பொழுது, சந்தோஷமாக இருக்கிறது. இன்றைய தினத்தில் எல்லா பத்திரிகையும் ஏதோ ஒரு சார்புதான். உங்கள் கட்டுரை மட்டும் வெளிப்படையாக இருந்தது. சந்தோசம். எனக்கு ஒரே ஒரு அச்சம், இன்றைய கால கட்டத்தில், இந்த மாதிரி நேர்மையாக இருப்பவர்களுக்கு வரக்கூடிய எந்த கஷ்டமும் உங்களுக்கோ, உங்களை சார்ந்தவர்களுக்கோ வரக்கூடாது என்பது, ஒரு சக மனிதன் என்கிற முறையில் எனக்குத் தோன்றும் எண்ணம். உங்களை இதுதான் எழுத வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் பெரிய மனிதன் இல்லை. இருப்பினும், உங்களையும், எழுத்துக்களையும் நீண்ட நாள் படிப்பவன் என்கிற தகுதியில் அஞ்சுகிறேன். தொடருங்கள் உங்கள் பணியை. வளர்க பாரதம்.

சக்திவேல் விரு said...

வருங்கால அரசியல் சிங்கம் அண்ணன் மணி வாழ்க ....

Nuru said...

அருமையான பதிவு. ஆனால் நீங்கள் பரப்பன அக்ராஹார சிறை அருகே உள்ளீர்கள் பத்திரமாக இருக்கவும்

Aravind said...

ணாந் சொல்ல விரும்பியதை எல்லாம் ணன்பர் வெங்கட் சொல்லிட்டார். ஒரு தேர்ண்த எழுத்தாளரிடமிருண்து இப்படி ஒரு தலைப்பு வரும் என்று என்னால் ணம்பமுடியவில்லை. அவள் எவ்வளவு கேவலமானவவளாக இருப்பினும் உங்கள் பதிவிர்க்கு சனியன் ஒளிண்தது என்று தலைப்பு இடுவது அவள் பக்கம் குருட்டுத்தனமாய் இருப்பவர்கள் ணீங்கள் சொல்வதை படித்து சிண்தித்து திருண்தும் வாய்ப்பை இல்லாமல் செய்கிரது. ணாட்டை சீர்த்திருத்தும் உயரிய ணோக்கோடு எழுதும் உங்கள் எழுத்தில் கந்நியத்தையும் பொருமையையும் எதிர்ப்பார்க்கிறோம். உங்கள் மீதுள்ள உயர்ண்த மதிப்பு காரநமாகவே இதை ஸொல்கிரேன். அசுத்தத்த்தை தூய்மை செய்யும் ணீர் ணிச்சயம் தூய்மையாய் இருக்கனும்.

இரா.கதிர்வேல் said...

ஜெயலலிதா தான் கொள்ளையடித்து, ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பாதுக்காக்கவே சசிகலாவை உடன் வைத்திருந்தார் என்று நேற்றைய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. New 18 சேனலில் இது ஒளிபரப்பப்பட்டுக்கொண்டேயிருந்தது. ஆனால் உங்கள் பதிவு சசிகலாவை மட்டும் குறிவைக்கிறது. சந்திரலேகா மீது ஆசிட் வீசியது எதற்கு என்று நாட்டுக்கே தெரியும். ஜெயலலிதாவை புனிதபடுத்த வேண்டியதில்லை. இந்த வழக்கை நடத்தியதற்காக திமுகவிற்கு நன்றி சொல்ல வேண்டும். திமுகவைத் தவிர வேறு யாரு வழக்கை நடத்தியிருந்தாலும். ஜெயலலிதா தப்பித்திருப்பார்.

Paramasivam said...

தமிழகம் எங்கும் ஒரு நிம்மதி பெருமூச்சு. கருணாநிதி குடும்ப அரசியல் தான் அதிமுக நிலை பெற உதவியது. ஆனால், இடையில் நடராஜன் & கோ நம்மை பயமூட்டி வைத்திருந்தார்கள். ஆகவே, இப்போது ஒரு நிம்மதி பெருமூச்சு

Catherine Augustine said...

இந்த தலைப்பு போடுறதுக்கே ஒரு தைரியம் வேணும்

hitechramesh said...

Wai...MAni...Sani...Super?..i like...it..!this what u expect? like u people..have any thoughts...?One sided comments...? Media..darlings..always..danderous..people..who ever it is..O.k!
dont..u think..! always want..in depth..writngs from u..dont be in silly manner..