Jan 30, 2017

மழைக்காற்று

சனிக்கிழமையன்று பெரம்பலூரில் நல்ல மழை பெய்ந்திருந்தது. நிலமெல்லாம் சகதி. ஞாயிறு மதியம் பேருந்திலிருந்து இறங்கி நின்று சவரக்கடையைத்தான் தேடினேன். மலேஷியன் ஸ்டைல் சலூன் ஒன்றிருந்தது. தலையில் விதவிதமாகக் கோடு போட்டு படம் எடுத்து மாட்டியிருந்தார் கடைக்காரர் . நம் தலையில் கோடு போட வசதி வாய்ப்புகள் இல்லையென்பதால் முகத்தைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தேன். மழையின் குளிர்காற்றை உணர்ந்து பல மாதங்களாகிவிட்டன. மேற்கு மண்டலம் படு மோசம். நிலைமை விபரீதமாகிக் கொண்டிருக்கிறது. எந்த விவசாயியின் முகத்திலும் சுணக்கமே இல்லை. ஆழ்துளைக் கிணறுகளை நம்பிக் கொண்டிருப்பவர்கள் கூட இன்னமும் பதினைந்து நாட்களுக்குத் தாண்டினால் பெரிது என்கிறார்கள். பங்குனி சித்திரையை நினைக்கவே பயமாக இருக்கிறது.

தென்னம்பிள்ளைகளையும் கால்நடைகளையும் காத்துக் கொள்ள தினசரி ஆயிரம் ரூபாய்க்குத் தண்ணீர் வாங்கி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். ‘எப்படியாவது மழை வரும் வரைக்கும் இழுத்துவிட்டால் உயிர் பிழைத்துக் கொள்ளும்’ என்று நம்புகிறார்கள். மழை பெய்யாமல் சாயும் ஒவ்வொரு அந்தியும் அவர்களின் நம்பிக்கையில் பெரும் சம்மட்டியைக் கொண்டு அடிக்கிறது. 

பவானி ஆறுதான் எங்கள் ஊரின் வற்றாத ஜீவ நதி- இரண்டாண்டுகள் முன்பு வரைக்கும். இப்பொழுது அணையில் நீர் இல்லை. வயலிலும் நீர் இல்லை. பசுமை கொழிக்கும் சமயங்களில் எல்லாம் கணுக்கால் உயரத்திற்கு நீரை வயலில் நிறுத்தி வைத்திருப்பார்கள். அப்படி நின்றால்தான் நெல் விளையும் என்பார்கள். இருபத்தைந்து கிலோமீட்டர் தெற்கே சென்றால் காய்ந்து கிடக்கும். அந்தப் பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தை நம்பியிருப்பார்கள். வயிறு எரியும். வெறும் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவுதான். ஒரு பக்கம் சிக்கனமில்லாத பயன்பாடு. இன்னொரு பக்கம் கஞ்சத்தனத்துடன் நீர் செலாவணி. அரசாங்கம் நினைத்திருந்தால் ஆறுகள், அவற்றிலிருந்து கால்வாய்கள், துணைக் கால்வாய்கள், தடுப்பணைகள் என விஸ்தரித்து அக்கம்பக்கத்து குளம் குட்டைகளை நிரப்பி பரவலாக நீர் வசதிகளை உருவாக்கி எல்லோருக்கும் நீர்ப்பயன்பாட்டை சமமாக்கியிருக்கலாம். அரசு செய்யவில்லை. செழித்துக் கொண்டிருந்த விவசாயிகள் ‘அவனும் விவசாயிதானே?’ என்று அளவோடு பயன்படுத்தி கடைமடை வரைக்கும் நீரை அனுப்பி வைக்கலாம். அவர்களும் செய்யமாட்டார்கள். இவர்களும் செய்யவில்லை. இரண்டே வருடங்கள்தான். நிலைமை தலைகீழாகியிருக்கிறது. ஆழ்குழாய்க் கிணறுகளையே பார்க்காத பூமியில் எழுநூறு அடிக்குச் சென்றாலும் நீர் இல்லை.

புவி உருவாகி நானூற்றைம்பது கோடி வருடங்கள் ஆவதாகச் சொல்கிறார்கள். ஆதி மனிதன் உருவாகி அறுபது லட்சம் வருடங்கள் ஆகிறதாம். பரிணாம வளர்ச்சியில் இன்றைய மனிதன் உருவாகி இரண்டு லட்சம் வருடங்கள் ஓடிவிட்டன. நாகரிக சமூகம் உருவாகி ஆறாயிரம் வருடங்கள் ஆகின்றன. கி.பி.1800களில்தான் தொழில் வளர்ச்சி உண்டாகிறது. 1990களில் உலகமயமாக்கலும் தாராள மயமாக்கலும் வந்து சேர்கின்றன. நானூற்றைம்பது கோடி வருடங்களாகத் தப்பிப் பிழைத்த வளம் கொழித்த பூமி கடந்த இருநூறு வருடங்களில் வேட்டையாடப்படுகிறது. நீர்வளம் சுண்டுகிறது. காற்று மாசடைகிறது. ஆகாயம் கரிப்பிடிக்கிறது. மண் மலடாகிறது. பஞ்ச பூதங்களில் நான்கை சீரழித்துவிட்டோம். நெருப்பு நம்மைக் கவ்விக் கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இல்லையா இது?

நம் முன்னோர்கள் நமக்களித்த வளங்களில் ஐம்பது சதவீதத்தைக் கூட அடுத்த சந்ததிகளுக்குக் கொடுக்கப் போவதில்லை. இதை எப்படி வளர்ச்சி என்பது? இது வீக்கம். நம்முடைய வளங்களையெல்லாம் பெருமுதலாளிகள் சுரண்டிச் சுரண்டி பண மூட்டைகளாகக் கட்டி நமக்கு சில்லரைகளை அள்ளி வீசுகிறார்கள். அந்தச் சில்லரைகளில் மயங்கி நாடும் தேசமும் மனிதனும் வளர்வதாக நம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அவர்கள் வீங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீங்குவதற்காக நமது சந்ததிகளின் எதிர்காலத்தை காலடியில் போட்டு மிதித்து வீங்குகிறவர்கள் மேலே செல்ல நம் தோள்களைக் கொடுக்கிறோம்.

சற்றேறக்குறைய முப்பது நிமிடங்களில் இதைத்தான் பேசினேன். ‘பச்சையைக் காக்க’ என்பது தலைப்பு.

சொல்ல நினைத்தவற்றை அழுத்தமாகச் சொன்னேன் என்று தெரியும். ஆனால் மேடைகளுக்கு ஏற்ற மொழியில் பேசினேனா என்று தெரியவில்லை. எனக்கு முன்பாகப் பேசிய அருட்பிரகாசமும், எனக்குப் பிறகு பேசிய சுமதிஸ்ரீயும் பழுத்த மேடைப் பேச்சாளர்கள். எதை வேண்டுமானாலும் தலைப்போடு இயல்பாகக் கோர்க்கத் தெரிந்தவர்கள். சிரிக்கச் செய்கிறார்கள். கைதட்டச் செய்கிறார்கள். எல்லாவற்றையும் எந்தப் பதட்டமும் இல்லாமல் வெகு இயல்பாகச் செய்தார்கள். எனக்கு இன்னமும் அந்தக் கலை பிடிபடவில்லை. இன்னும் சில மேடைகள் தேவைப்படக் கூடும்.

பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றத்தின் தலைவர் சரவணன் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக அழைத்திருந்தார். ‘பெரம்பலூர் புத்தகக் கண்காட்சியில் உங்களை பேச அழைக்கிறோம். கூட்டங்களில் பேச எவ்வளவு பணம் தர வேண்டியிருக்கும்?’ என்றார். ஒன்றில் தெளிவாக இருக்கிறேன். அரசுப் பள்ளிகள், அரசு சார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் எந்த நிகழ்வுக்கும் பணம் வாங்குவதில்லை. இன்றைக்கு மட்டுமில்லை- என்றைக்குமே இப்படித்தான் இருக்க வேண்டும் என இருக்கிறேன். அதே போலத்தான் புத்தகக் கண்காட்சி மாதிரியான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளிலும். நமக்கு சற்றேனும் அறிவு இருப்பதாக நம்பி அழைக்கிறார்கள். அதை எளிய மக்களிடம் பகிர்ந்து கொள்ள பணம் எதற்கு? எதைக் கற்றுக் கொள்கிறேனோ அதை இந்த மக்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

வரும் போது கூட நானே வந்துவிடுகிறேன் என்றுதான் சொல்லியிருந்தேன். பெங்களூரு திரும்புவதற்கு அவர்களாகவே பேருந்துக்கு முன்பதிவு செய்துவிட்டார்கள். திருச்சி வரைக்கும் மகிழ்வுந்தில் அழைத்து வந்து இடையில் ஒரு நல்ல கடையில் நிறுத்தி உணவு வாங்கிக் கொடுத்து கை நிறைய இனிப்பும் பலகாரமும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அனுப்பி வைத்தார்கள். வெகு மரியாதை.

தாரேஸ் அகமது என்ற மாவட்ட ஆட்சியர்தான் ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக பெரம்பலூர் புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். அவரைப் போன்ற மாவட்ட ஆட்சியர் கிடைத்ததற்கு பெரம்பலூர் மாவட்டத்து மக்கள் வெகு அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும். நிறையச் செய்திருக்கிறார். அதில் புத்தகக் கண்காட்சியும் ஒன்று. அவருக்குப் பிறகாக வந்திருக்கும் ஆட்சியர் நந்தகுமாரும் அதே ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வருடக் கண்காட்சி ஆறாவது ஆண்டு. அக்கம்பக்கத்து கல்வி நிறுவனங்களான ஹேன்ஸ் ரோவர், தனலட்சுமி சீனிவாசன், ராமகிருஷ்ணா போன்றவை  உறுதுணையாக இருக்கின்றன. நன்கொடைகள் வழங்குகிறார்கள். சரவணன் கைக்காசு சில லட்சங்களைச் செலவு செய்கிறார். உற்சாகத்துடன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

சென்னை, ஈரோடு, மதுரை, நெய்வேலி போன்ற இன்னொரு வெற்றிகரமான புத்தகக் கண்காட்சியை பெரம்பலூர் நடத்திக் கொண்டிருக்கிறது. கோடிகள் வரைக்கும் வியாபாரம் ஆவதாகச் சொல்கிறார்கள். பின் தங்கிய, சிறிய மாவட்டமான பெரம்பலூருக்கு இது மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வு என்றுதான் நம்புகிறேன். நிகழ்த்திக் கொண்டிருக்கும் அத்துணை பேரையும் மனமாரப் பாராட்ட வேண்டும்.

இரவில் பத்தேகாலுக்கு பேருந்து. சுமதிஸ்ரீ மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது சரவணன் அருகில் வந்து ‘நீங்க இப்போ கிளம்பினால் சரியாக இருக்கும்’ என்றார். இரவில் திருச்சி கே.பி.என் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்த போது வெள்ளையும் சுள்ளையுமாக வேட்டி சட்டையில் புத்தகங்கள், பலகாரம், மடிக்கணினி என்று இரண்டு மூன்று பைகளை வைத்துக் கொண்டு நின்றேன். வித்தியாசமாகப் பார்த்தார்கள். பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகு எதை எதையோ மனம் யோசித்துக் கொண்டிருந்தது. தந்தை ஹோன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.வரதராஜன் கைகொடுத்து ‘உங்கள் செயல்களைப் பற்றி நிறையப் பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்றார். நான் கவிதை எழுதியதை மறந்துவிட்டார்கள். எழுதுவதைச் சொல்கிறார்கள்தான் ஆனால் நிசப்தம் அறக்கட்டளையைத்தான் முன்னிறுத்துகிறார்கள். பெயருக்கு முன்னாலும் நிசப்தம் என்று சொல்லித்தான் அறிமுகப்படுத்துகிறார்கள். அது இயல்புதான். நம்முடைய எந்தச் செயல்பாடு அடுத்தவர்களைக் கவர்கிறதோ அதோடுதான் நம்மைக் கோர்ப்பார்கள். இன்று நிசப்தம் முன்னிறுத்துகிறது.

நன்றி யாருக்குச் சொல்வேன் என்று தெரியும்தானே?!

5 எதிர் சப்தங்கள்:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

காதுகள் எப்போதும் பாக்கவாட்டில் விரிந்திருப்பதன் நோக்கமே யார் பேசினாலும் கேட்கத்தானே ? கண்களுக்கு மட்டும்தான் யார் பேசுகிறார்கள் என்ற பேதம் செய்கிறது .அதனால் நாம் பேசுவது காதுக்கு போய் சேர்ந்தாலே புண்ணியம் .நீங்கள் இது போல புண்ணியம் ஏற்கனவே செய்ய தொடங்கிவிட்டீர்கள் .நன்றி மக்களுக்காக உங்கள் அறிவை படையல் செய்தமைக்காக .

சேக்காளி said...

// எதைக் கற்றுக் கொள்கிறேனோ அதை இந்த மக்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.//
எல்லோருக்கும் இந்த எண்ணம் வந்து விட்டால் இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்?

இரா.கதிர்வேல் said...

உரையினை கேட்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்
https://www.youtube.com/watch?v=YlLfo8qC65g

ஏகலைவன் said...

மேடையில் பேசுவது என்பது ஒரு கலை, அது தங்களுக்கு வந்து கொண்டு இருக்கிறது.
தங்களின் முந்தைய கானோலியை யூடுபில் கண்டேன், உணர்ச்சி மயமான பேச்சு.
நான் கடந்த ஒரு மாதமாக https://school.bighistoryproject.com/bhplive#human-evolution என்ற ஒரு வலை தளத்தில் பிரபஞ்சம் தோற்றம் பற்றிய அருமையான தகவல்களை உள்ளடக்கியது,இந்த மாதிரியான ஒரு வலைதளத்தை நமது பள்ளி எங்கும் கொண்டு செல்ல வேண்டும்.
தங்கள் கட்டுரை மூலம் அதை நிகழ்த்த முடியும்.

எனது தமிழில் குறை இருந்தால் அனைவரும் மன்னிக்க வேண்டும்.

Paramasivam said...

சுமார் பத்து வருடங்களுக்கு முன் பெரம்பலூர் சென்றுள்ளேன். புது பேரூந்து நிலையம் முழு பயன்பாட்டில் வரவில்லை. இப்போது நன்கு பெரிய ஊராகி இருக்க வேண்டும்.இல்லையெனில் கொடிகளில் புத்தகங்கள் விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை. இது ஒரு புறம் இருக்க, உங்கள் சேவை மனதை தொடுகிறது. வாழ்க வளர்க.