Jan 27, 2017

பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி

‘என்னையும் நம்பி பேசக் கூப்பிடுறாங்க’ என்று எழுதியிருந்தேன் அல்லவா? அந்த பெரம்பலூர் புத்தகக் கண்காட்சியின் அழைப்பிதழ் இது. தினமும் பேச்சாளர்கள் வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமையன்று நானும் பேசுகிறேன். ‘பச்சையைக் காக்க’ என்பதுதான் தலைப்பு. இயற்கை சார்ந்து இனி நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள், சூழலியல் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைப் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

பிற எல்லாவற்றையும் விடவும் இன்றைக்கு இதுதான் முக்கியமாகத் தெரிகிறது. பல நூறு கோடி ஆண்டுகளாக உருவாகி மெருகேறிய இந்தப் புவியை வெறும் ஐம்பதாண்டுகளில் சின்னாபின்னப்படுத்தியிருக்கிறோம். கொத்திக் குதறியிருக்கிறோம். எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு வாழ்வதற்கே தகுதியில்லாத மலட்டு மண்ணாக அடுத்த சந்ததியினருக்குக் கொடுத்துச் செல்வதற்கான எல்லாவிதமான முஸ்தீபுகளிலும் ஈடுபட்டிருக்கிறோம். வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யவே விரும்புகிறேன்.

29.01.2017 அன்று என்னைப் பேசச் சொல்லியிருக்கிறார்கள். அன்றைய தினமே இன்னமும் மூன்று பேர்கள் பேசுகிறார்கள். மற்ற மூவருமே கவிஞர்கள். நல்லவேளையாக நான் கவிதை எழுதியதையெல்லாம் மறந்துவிட்டார்கள். நெல்லை ஜெயந்தா நன்றாகப் பேசுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுமதி ஸ்ரீ பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அடித்து நொறுக்குவார். அவர்களைவிட நன்றாகப் பேசினால்தான் எடுபடும். இல்லையென்றால் ‘எவண்டா இவன்...’ என்று சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது. எழுத்தைப் போலவேதான் பேச்சும். பேசப் பேச மெருகு கூடும். 

பள்ளி, கல்லூரிக்காலங்களில் நிறையப் பேசியதுண்டு. அரட்டை அரங்கத்தில் வட்டத்திற்குள் எல்லாம் வந்தேன். அதன் பிறகு கொம்பை வளர்த்துக் கொண்டு பேச்சிலிருந்து துண்டித்துக் கொண்டேன். அது மிகப் பெரிய தவறு. பேச்சும் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதம்தான். நமது எண்ணங்களை ஆழமாகப் பதிய வைக்க பேச்சும் நிச்சயமாகப் பயன்படும். இனித் தொடர்ந்து பேசுவதற்கான வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். பார்க்கலாம்.

பெரம்பலூர் பகுதிக்காரர்கள் யாரேனும் இருப்பின் சொல்லுங்கள். ஞாயிறு மதியமே பெரம்பலூருக்கு வந்து மாலை வரையிலும் அக்கம்பக்கத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு வரலாம். 














4 எதிர் சப்தங்கள்:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

பேச்சு எழுத்து போல பேசப் பேசத்தான் வரும் .சரிதான் .ஆனால் உங்களைப் போல எழுத்தின் வீச்சில் உயரங்களைத் தொட்டவர்கள் மேல் இன்னும் அதிக எதிர்பார்ப்பு இருப்பது நிதர்சனம்.வாழ்த்துக்கள் .

KRISH.RAMADAS said...

வருக வருக நண்பரே. எங்கள் ஊருக்கு வரும் உங்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்களை நேரடியாக வரவேற்கும் வாய்ப்பு இல்லாமல் நான் துபாயிலிருக்கின்றேன்.

உங்களுக்கு அருமையான தலைப்பு கிடைத்திருக்கிறது. இந்த தலைப்பு குறித்து நீங்கள் பேசும் போது சுற்று சூழல் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பில் இலகியகர்த்தாக்கள் தங்கள் எழுத்து வெளியை பயன் படுத்த வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துங்கள். திரு.நக்கீரன் என்ற எழுத்தாளர் இந்த துறையில் நிறைய எழுதுகின்றார். இன்னும் பலர் ஈடுபட வேண்டும். குறிப்பாக சிற்றிதழ்கள் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி வருகின்றேன்.

சமீபத்தில் கி.ச.திலீபன் என்ற இளைய இல்க்கிய ஆர்வலன் கொண்டு வந்த சிற்றிதழ் ஓலைச்சுவடி என்ற இதழை முழுக்க முழுக்க சுற்று சூழல் இதழாக கொண்டு வந்துள்ளான் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். அட்டைப் படமே எழுத்தாளர் நக்கீரன் படம் தான்.

பெரம்பலூர் அருகில் சாத்தனூர் என்ற ஊரில் உள்ள " கல் மரம் " , சிருவாச்சூர் மதுர காளியம்மன் கோயில், மங்கள மேட்டில் உள்ள ஆற்காடு நவாப் கோட்டை, வாலிகண்டபுரத்தில் உள்ள வாலீஸ்வரர் ஆலயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கிருஷ்.ராமதாஸ்,
சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்,
27.01.17.

Saravanan Sekar said...

கற்றோர் மட்டுமின்றிக் கல்லாதோரையும் கடைத்தேற்றக்கூடியது பேச்சு ... கற்றிலன் ஆயினும் கேள் - என்றது தமிழ் மறை ...

பெரம்பலூரில் தங்களின் பேச்சு சிறக்க வாழ்த்துக்கள்

சேக்காளி said...

//பெரம்பலூர் பகுதிக்காரர்கள் யாரேனும் இருப்பின் சொல்லுங்கள். ஞாயிறு மதியமே பெரம்பலூருக்கு வந்து மாலை வரையிலும்//
வெள்ளோட்டம்(ரிகர்சல்) பா(ர்)க்கணும் ன்னு சொல்லுங்க.