Jan 21, 2017

விருதைத் திருப்பியளித்தல்

ஒரு சமூகப் பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக விருதைத் திருப்பித் தருவது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. சில மாதங்களுக்கு  முன்பு சாகித்ய அகடமியின் விருதுகளை சில எழுத்தாளர்கள்- வெளிமாநில எழுத்தாளர்கள்தான் - திருப்பி அனுப்பிய போது அது அவசியமில்லை என்கிற எண்ணம்தான் இருந்தது. ஆனால் அப்படியில்லை. எழுத்தாளனின் தார்மீகக் கோபம் மக்களின் கரங்களுக்கு எவ்வளவு வலு சேர்க்கும் என்பதைக் கூட்டத்தில் ஒருவனாக நிற்கும் போது உணர முடிகிறது. சமூகத்தின் பெரும்பாலான மக்கள் ஒரு பிரச்சினைக்காக குரல் எழுப்பும் போது மக்களுக்கு தார்மீக ஆதரவளிக்கும் வகையில் தமக்கு அளிக்கப்பட்ட விருதினை திருப்பித் தருவது என்பது அழுத்தத்தைக் கூடுதலாக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.

தமிழக எழுத்தாளர்கள் விருதுகளை பத்திரமாக உள்ளே வைத்துப் பூட்டிக் கொள்வார்கள். விதிவிலக்குகள் உண்டு. லட்சுமி சரவணக்குமார் ஒரு விதிவிலக்கு. தமக்கு வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதை சாகித்ய அகடமியிடமே திருப்பியளித்திருக்கிறார்.


இன்றைக்கு தமிழகமே கொந்தளித்துக் கிடக்கிறது. காலை பெங்களூரிலிருந்து கிளம்பி ஊருக்கு வரும் போது வழிநெடுகிலும் போராட்டங்கள்தான். குக்கிராமங்களில் கூட ஷாமியானா பந்தலிட்டு ஏழெட்டு பேரிலிருந்து சில நூறு பேர்கள் வரைக்கும் ஊர் ஊருக்கும் அமர்ந்திருக்கிறார்கள். கோபிச்செட்டிபாளையம் பெரியார் திடல் நிரம்பி வழிகிறது. பெருங்கூட்டமாகத் திரண்டு அமைதிப் போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் இறங்கி பார்த்துவிட்டு வந்தேன். அத்தனை பேரும் ஓரே அளவிலான உற்சாகத்துடன் இருக்கிறார்கள் என்பதுதான் சிறப்பம்சமே. இன்றைக்கு தேர்தலே நடத்தாமல் கூட எத்தனை சதவீத தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்று அனுமானித்துவிடலாம்.

எந்த இடத்திலும் பெரிய சச்சரவுகள் இல்லை. கலவரங்கள் இல்லை. நாளுக்கு நாள் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு ஒழுங்குடன் இவ்வளவு பேர் திரண்ட இத்தகையதொரு போராட்டத்தை இனி நம் வாழ்நாளில் சந்திப்போமா என்று தெரியாது. தமிழகத்தின் வரலாறு எழுதப்படும் போது இந்தப் போராட்டத்தை விட்டுவிட்டு எழுதிவிட முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம். இத்தகையதொரு உணர்வுப்பூர்வமான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரசுகள் வழங்கிய விருதுகளை திருப்பியளிக்கும் செயலை மனப்பூர்வமாக பாராட்ட வேண்டும்.

சேலத்தில் ஒரு முன்னாள் இராணுவ வீரர் திருப்பிக் கொடுத்திருக்கிறார். எழுத்தாளர்களில் லட்சுமி சரவணக்குமார் மட்டும் திருப்பிக் கொடுத்திருக்கிறார். பிற எழுத்தாளர்கள், நடிகர்கள் என்று வேறு யாரும் மூச்சே விடவில்லை. நடிகர்களை விட்டுவிடலாம். எழுத்தாளர்கள் இருக்கிறார்களே- வாயைத் திறந்தாலே ‘நீ விருதைத் திருப்பிக் கொடுத்துடு’ என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து கிடப்பார்கள் போலிருக்கிறது. இரண்டு மூன்று கொலுக்கட்டைகளைத் தொண்டைக்குழியில் சிக்க வைத்திருக்கிறார்கள்.

விருது வாங்கிய போதெல்லாம் உச்சந்தலையும் உள்ளங்காலும் புரியாமல் குதித்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அமைதியாக மோட்டுவளையைப் பார்த்தபடியே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். விருதைத் திருப்பியளிப்பது என்பது அவரவர் விருப்பம். தரவில்லையென்றால் யாரும் எதுவும் கேட்க வேண்டியதில்லை. கேட்டாலும் ‘இவனுக்கு இது பொறுக்கலையா? நாம வாங்கின விருதைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி டார்ச்சர் பண்ணுறான்’ என்று ரத்தக்குசு விடக் கூடும். அவர்களை விட்டுவிடலாம்.

ஆனால் லட்சுமி சரவணக்குமாரை பாராட்டியே தீர வேண்டும். திருப்பித் தர வேண்டாம் என்று சாகித்ய அகடமி அலுவலகத்தில் மன்றாடியிருக்கிறார்கள். ஒருவேளை நிரந்தர தீர்வு கிடைத்தால் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம். போராட்டத்தின் பெருவெளிச்சத்தில் லட்சுமியின் இந்த ஆகப்பெரிய செயல் அதிகளவில் கவனம் பெறவில்லை. இன்னமும் கவனம் பெற்றிருக்க வேண்டும். தமிழக அளவில் ப்ளாஷ் அடித்திருக்க வேண்டிய செயல் இது. 

பணம், விருது என்பதெல்லாம் வரும் போகும். மக்களோடு எந்தத் தருணத்தில் உடன் நின்றோம் என்கிற கர்வம் இருக்கிறது அல்லவா? அதுதான் எழுத்தாளனுக்கான பெருமிதம். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக லட்சுமி சரவணக்குமார் தமது விருதைத் திருப்பியளித்தார் என்று காலகாலத்துக்கும் யாராவது ஒருவர் எங்கேயாவது சொல்லிக் கொண்டேயிருப்பார். சமூக உணர்வும், மக்களோடு இணைந்து நிற்கும் மனமும் இன்றைய எழுத்தாளனுக்கும் இருக்கிறது என்பதை லட்சுமி சரவணக்குமார் காட்டியிருக்கிறார்.

அவருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அதே சமயத்தில் ‘நான் சொல்லித்தான் லட்சுமி சரவணக்குமார் விருதை திருப்பிக் கொடுத்தார்’ என்கிற தொனியில் ஒரு இலக்கிய மோஸ்தர் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததை கடங்கநேரியான் உள்ளிட்ட நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். சங்கடமாக இருக்கிறது. எழுதியவரைவிடவும் லட்சுமி சரவணக்குமாருக்கு சமூகம் குறித்தான பிரக்ஞை அதிகம் என்றே நம்புகிறேன். முடைநாற்றமெடுத்த அரசியல் குட்டையில் ஊறிக் கிடப்பதன் வெளிப்பாடு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். யாரைச் சொல்கிறேன் என்று புரியாதவர்கள் விட்டுவிடலாம். விக்கிபீடியாவில் அவர் பற்றிய பக்கத்தில் அவருக்கு மத்திய அரசின் துறையொன்று விருது வழங்கியிருப்பதைப் எழுதி வைத்திருக்கிறார்கள். ‘நான் சொல்லித்தான் லட்சுமி திருப்பிக் கொடுக்கிறார்’ என்று எழுதுவதாக இருந்தால் தம்மிடம் இருக்கும் விருதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அதன் பிறகு எழுதியிருக்க வேண்டாமா? என்ன இழவெடுத்த லாஜிக் என்றே புரியவில்லை. ஊரான் வீட்டு நெய்யே என்று எச்சில் வழிய அடுத்தவனின் செயலில் தமக்கான கிரெடிட்டை எடுத்துக் கொள்கிற அல்பத்தனத்தைப் பற்றி இந்தத் தருணத்தில் எழுதி சர்ச்சைகளை உருவாக்க வேண்டியதில்லைதான் என்றாலும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது.

லட்சுமி சரவணக்குமாரின் சமூக உணர்வு சார்ந்த இந்தச் செயலை பல ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளிக்கொணர வேண்டும். செய்வார்களா என்று தெரியவில்லை. லட்சுமி யாரிடமும் வளைந்து போகாதவர். அதுமட்டுமில்லை- பொடனி அடியாக அடிக்கவும் தயங்காதவர். சொறிந்துவிடுகிறவர்களாக இருந்தால் நம்மூரில் இடம் தருவார்கள். திமிறுகிறவராக இருந்தால் ஓரம்தான் கட்டுவார்கள். ஓரங்கட்டுகிறவர்கள் கட்டிவிட்டுப் போகட்டும். வரலாறு உன்னை நினைவில் வைத்திருக்க வாழ்த்துகிறேன். திரண்டு நிற்கும் சமூகத்துக்கு ஆதரவாக தோளோடு தோள் சேர்க்கும் லட்சுமியின் இந்தச் செயலுக்கு ஆதரவாக பல்லாயிரம் பேர் மனதார வாழ்த்துவார்கள். அவர்களோடு நானும் ஒருவனாகவே இருக்கிறேன். இந்தத் தமிழ்ச் சமூகத்தில் தன் பிழைப்பு, தன் புகழ், தன் பாதுகாப்பு என்றே வாழும் பெரும்பாலான எழுத்தாளர்களின் மத்தியில் சமூகத்தின் உணர்வுகளோடு பிரக்ஞைப்பூர்வமான, தனித்த எழுத்தாளனாகத் தெரியும் லட்சுமி சரவணக்குமாருக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்.

2 எதிர் சப்தங்கள்:

ரேவா said...

என் மனப்பூர்வமான வாழ்த்துகளும் லக்‌ஷ்மி சரவணக்குமாருக்கு...

மாணவர்களோடு ஏதோ ஒரு வகையில் இணைந்துகொள்ளமுடிந்தது எவ்வகையான உணர்வைக்கொடுத்ததோ அதே உணர்வோடு இந்த எழுத்தாளனை வாழ்த்துவதிலும் இணைந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன்.

வாழ்த்துகள்.

சேக்காளி said...

//வரலாறு உன்னை நினைவில் வைத்திருக்க வாழ்த்துகிறேன்.//