Jan 15, 2017

ஜல்லிக்கட்டுவும் போலிகளும்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிறைய இளைஞர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். மதுரை, நெல்லை போன்ற பெருநகரங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டக் களத்திற்கு வந்திருக்கிறார்கள் என்றால் எங்கள் ஊரில் கூட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். ஆச்சரியமான விஷயம் இது. எந்தத் தலைவனும் முன்னால் இல்லை; எந்தக் கட்சிக் கொடியும் பறக்கவில்லை. இளைஞர்கள் அவர்களாகவே கூடியிருக்கிறார்கள். தன்னெழுச்சியான போராட்டம் இது. அண்மைக் காலத்தில் நடைபெற்ற இத்தகைய போராட்டங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டன. ஒரு சில நாட்களிலேயே போராட்டம் நடந்ததற்கான அடையாளமே இல்லாமல் துடைத்து வீசப்பட்டதை பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்திலும் ஆட்சியாளர்களின் அடக்குமுறை இருந்தாலும் கூட பெரும்பாலான ஊர்களில் காவல்துறையினர் அனுமதித்திருக்கிறார்கள். 

போராட்டத்தை அரசு விட்டு வைத்திருப்பதன் பின்னணியில் நிறையக் காரணங்கள் இருக்கக் கூடும். ஆளுங்கட்சியின் சிக்கல்கள், தமிழகத்தின் வறட்சி, விவசாயிகளின் தற்கொலைகள் என எல்லாவற்றையும் சில நாட்களுக்கு மறைத்து வைப்பதற்கு ஒரு காரணம் தேவையாக இருக்கிறது. அந்த வகையில் ஜல்லிக்கட்டு பயன்படுகிறது. தலையையும் காட்டி வாலையும் நீட்டுகிற செயல் இது. ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என்று அறிவிப்பதும் பிறகு அடக்குவது போலக் காட்டிக் கொள்வதும் அரசியல் விளையாட்டின் காய் நகர்த்தல்கள். 

வழக்கமாக இத்தகைய நிகழ்வுகளில் தலையைக் காட்டி மொத்த கவனத்தையும் தம்மை நோக்கித் திருப்பி நீர்த்துப் போகச் செய்யக் கூடிய எந்தச் சில்லரை அரசியல்வாதியும் போராட்டக் களங்களில் கண்ணில்படவில்லை என்பதுதான் மிகப்பெரிய ஆசுவாசம். இளைஞர்கள் கூடியிருக்கிறார்கள்; பெருமளவிலான போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்; ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டிருக்கிறது; திரளான மக்கள் ‘ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்’ என்று நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என்றாலும் கூட ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவான போராட்டம் ஜனவரி 15க்கு மேல் தொடர்வதற்கான வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. அடுத்த ஜனவரி மாதம் வரைக்கும் இதை மறந்துவிடுவார்கள். கடந்த ஆண்டிலும் கூட இதுதான் நடந்தது. இனியும் இதுதான் நடக்கும். தொடர்ச்சியான சட்டப்போராட்டம், மக்களின் நீண்டகால ஆதரவு, அதைக் கட்டிக்காக்கும் போராட்டக் குழு போன்றவையின்றி நடைபெறும் போராட்டங்கள் சிதறிப் போய்விடும் என்பதுதான் நிதர்சனம். அப்படிச் சிதறுவதற்கான எல்லாவிதமான சாத்தியக் கூறுகளையும் இப்போதைய ஜல்லிக்கட்டு போராட்டம் கொண்டிருக்கிறது. இன்றைக்கு தன்னெழுச்சியாகக் கூடியிருக்கும் இளைஞர்களை வழிநடத்துகிற ஆள் என்று யாருமே தெரியவில்லை என்பது ஒருவகையில் அவலம்தான். ஒருவேளை அப்படியொரு தலைவன் உருவாகியிருந்தால் இந்தப் போராட்டத்தின் முனை மழுங்கடிக்கப்பட்டிருக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் பேச வேண்டியிருக்கிறது-

இந்தப் போராட்டமானது வெறும் ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவான போராட்டமாக மட்டுமே இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. பீட்டா(PETA) மாதிரியான போலி அமைப்புகளுக்கு எதிரான செயல்பாடாகவும் இருக்க வேண்டும். உள்ளுக்குள் ஒரு நோக்கத்தை வைத்துக் கொண்டு வெளியில் இன்னொரு நோக்கத்தை பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கும் எந்தவொரு அமைப்புமே போலியானதுதான். இன்றைக்கு விலங்கு வதைக்கு எதிராகச் செயல்பட வேண்டுமானால் இந்தியா முழுவதும் pink revolution என்ற பெயரில் தினந்தோறும் லட்சக்கணக்கான ஆடுகளையும் மாடுகளையும் நவீனமயமாக்கப்பட்ட தொழிற்சாலைகளில் கொன்று பதப்படுத்தி பொட்டலம் கட்டி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தொழிலுக்கு எதிராகப் போராட வேண்டும். தோல் உற்பத்திக்காகவே வளர்க்கப்பட்டு கொல்லப்படும் உயிர்களின் நலனுக்காகப் போராட வேண்டும். லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு கேரளாவில் அடிமாடாகிற பாவப்பட்ட ஜீவன்களுக்காக சாலையை மறிக்க வேண்டும். எவ்வளவோ இருக்கின்றன. எல்லாவற்றையும் மேம்போக்காக விட்டுவிட்டு ஜல்லிக்கட்டுவுக்கு எதிராக வரிந்து கட்டினால் நோக்கத்தைச் சந்தேகப்படத்தான் வேண்டும். இத்தகைய அமைப்புகளின் உண்மையான நோக்கங்கள், அவர்களுக்கான நிதி ஆதாரம், உண்மையிலேயே அவர்களின் செயல்பாடு என்னவென்பது குறித்தெல்லாம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

பீட்டா மாதிரியான பன்னாட்டு அமைப்புகளை எதிர்த்து அரசியல் நடத்தாமல், போராடாமல் வெறும் ஜல்லிக்கட்டை நடத்துவது என்பது குறுகிய கால சந்தோஷமாக மட்டுமே நிலைத்துவிடும். 

அதே சமயம் எந்தவொரு அமைப்பிலும் தம்மை இணைத்துக் கொள்ளாமல் ஜல்லிக்கட்டுவுக்கு எதிராகப் பேசுகிறவர்கள் முன்வைக்கிற சில கருத்துக்களையும் உதாசீனப்படுத்த வேண்டியதில்லை. தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் மட்டுமே நடைபெறுகிற ஒரு நிகழ்வை எப்படி ஒட்டுமொத்த தமிழர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு என்று முன் வைக்க முடியும்? காயம்படும் வீரர்களின் குடும்பத்துக்கான பதில் என்ன? ஜல்லிக்கட்டுவில் இருக்கும் சாதிய வேறுபாடுகளை ஆதரிக்கிறீர்களா? ஜல்லிக்கட்டு மட்டுமே நாட்டு மாடுகளைக் காப்பதற்கான ஒரே சாத்தியக் கூறா? போன்ற சில கேள்விகளை நாமும் உணர்ச்சிவசப்படாமல் விவாதிக்க வேண்டியிருக்கிறது. 

இவையெல்லாம் நம்முள் விவாதித்து முடிவுக்கு வர வேண்டிய கேள்விகள். ஆனால் எவனோ ஒரு அமெரிக்கக்காரனும், கே.எஃப்.சியில் கோழியைக் கொறிக்கும் நடிகனும், ‘மீன் இல்லாம சாப்ட மாட்டேன்’ என்று கொஞ்சுகிற நடிகையும் தமிழர்களின் வாழ்வியல் அடிப்படையைக் கூட புரிந்து கொள்ளாத நீதிமான்களும்  ‘அய்யோ மாடு பாவ்வ்வ்வம்’ என்று சொல்லி நாம் நமது பண்டிகையை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்வதைத்தான் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இத்தகையவர்களையும் பின்புலமாக இருந்து இவர்களைத் தூண்டி விடுகிறவர்களையும் எதிர்த்து நம் எதிர்ப்புணர்வைக் காட்ட வேண்டியிருக்கிறது.

நம்முடைய பண்பாட்டை ஒழிப்பதும் பிறவற்றை உள்ளே திணிப்பதும் காலங்காலமாக நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஜல்லிக்கட்டு விவகாரத்தையும் அத்தகைய ஒன்றானதாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. போகி என்ற பெயரில் நம்முடைய வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள் கொளுத்தப்பட்டன. பல புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இன்னமும் கூட போகியன்று சென்னை போன்ற பெருநகரங்கள் புகை மூட்டம் மிகுந்து திணறுகின்றன. இதைப் பற்றி எந்த நீதிமன்றமாவது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறதா என்று தெரியவில்லை. தீபாவளியன்று கொளுத்தப்படும் பட்டாசுகள், அதைத் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளில் சிக்கி வாழ்வைத் தொலைக்கும் இளம்சிறார்கள் குறித்து யாருக்காவது காதில் புகை வந்ததா என்றும் தெரியவில்லை. விநாயகர் சதுர்த்தியன்று  கரைக்கப்பட்டு சீரழிக்கப்படும் நதிகளும் குளங்களும் குட்டைகளையும் பற்றி எந்தப் பெரிய புரட்சியாளனும் வாயைத் திறப்பதில்லை. இசுலாமிய பண்டிகைகளின் போது கொல்லப்படும் உயிர்களின் எண்ணிக்கையை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இந்தியா முழுவதும் நடைபெறும் சேவல் சண்டைகள் பற்றி எந்த முத்தும் உதிர்வதில்லை- ஜல்லிக்கட்டுவின் போது எந்தக் காளையும் சாவதில்லை. ஆனால் சேவல் சண்டையில் பெரும்பாலும் ஒரு சேவல் கொல்லப்பட்டுவிடும். இதையெல்லாம் கண்டுகொள்ளாத விலங்கு ஆர்வலர்களும், உயிர்காப்பாளர்களும், சூழலியல் புரட்சியாளர்களும் ஜல்லிக்கட்டுவுக்கு எதிராக ஒன்றிணையும் போது அவர்களின் நிலைப்பாடு குறித்து சந்தேகம் வலுக்கத்தானே செய்யும்?

ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவான போராட்டங்கள் ‘சீசனல் போராட்டமாக’ ஓய்ந்துவிடக் கூடாது என்றுதான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். நீண்டகால நோக்கில் தொடர்ச்சியான முன்னெடுப்புகளையும் சட்டப்போராட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும். அதைச் செய்வதற்கு அரசியல் ஆதாயம் பார்க்காத நேர்மையான சில இளைஞர்கள் முன் வந்து ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். அதை வலுவிழக்கச் செய்யும் செயல்களை அரசும் உளவுத்துறையும் கண்டிப்பாக மேற்கொள்ளும். ஆனால் அத்தகைய வேலைகளை நேர்மையான ஊடகங்கள் எதிர்த்து அமைப்பைக் காக்க உதவ வேண்டும். இன்று கூடியிருக்கும் இளைஞர்கள் ஒன்றுபட்டு நின்று நம்முடைய உரிமையை மீட்டெடுக்க வேண்டும். எவ்வளவோ இருக்கின்றன. பார்க்கலாம்.

5 எதிர் சப்தங்கள்:

நெய்தல் மதி said...

தமிழ் நாட்டில் நேர்மையான ஊடகங்களா?

Unknown said...

சமீபத்தில்தான் சாப்பாட்டு முறை மாறியதாக எழுதி இருந்தீர்கள்.இவ்வளவு விரைவில் சங்கீதமும் மாறுமென்று எண்ண முடியவில்லை.

Paramasivam said...

//இவையெல்லாம் நம்முள் விவாதித்து முடிவுக்கு வர வேண்டிய கேள்விகள். ஆனால் எவனோ ஒரு அமெரிக்கக்காரனும், கே.எஃப்.சியில் கோழியைக் கொறிக்கும் நடிகனும், ‘மீன் இல்லாம சாப்ட மாட்டேன்’ என்று கொஞ்சுகிற நடிகையும் தமிழர்களின் வாழ்வியல் அடிப்படையைக் கூட புரிந்து கொள்ளாத நீதிமான்களும் ‘அய்யோ மாடு பாவ்வ்வ்வம்’ என்று சொல்லி நாம் நமது பண்டிகையை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்வதைத்தான் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.// PeTAவை தடை செய்ய நாம் போராட வேண்டும் என்பது தான் முடிவு.
இது மற்றொரு "GreenPeace"

@Ganshere said...

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் மட்டுமே நடைபெறுகிற ஒரு நிகழ்வை எப்படி ஒட்டுமொத்த தமிழர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு என்று முன் வைக்க முடியும்?
B4 regularizing JK it happened in 300 places. then it got reduced to 35 .. 15 ....single digit. B'cause organizers has to deposit 2 Lac. and many formalities to organizers and participating party. And madurai is the oldest city in Tamil nadu. It has its roots in Madurai.

காயம்படும் வீரர்களின் குடும்பத்துக்கான பதில் என்ன?
-- some trust has to be formed either by public
ஜல்லிக்கட்டுவில் இருக்கும் சாதிய வேறுபாடுகளை ஆதரிக்கிறீர்களா?
no one will support it.
how about the JK regularization act of TN? doesn't it address anything. I dont have much Idea about it. I believe anybody who is qualified (phycically) can/should participate. I guess none will object that.
ஜல்லிக்கட்டு மட்டுமே நாட்டு மாடுகளைக் காப்பதற்கான ஒரே சாத்தியக் கூறா?
if there are other ways pl. share. But JK should not be banned it just has to be regularized.

@Ganshere said...

Paramasivam: Whats wrong with GreenPeace? pls share link