Nov 9, 2016

மோடியும் ஆயிரமும்

திரும்பிய பக்கமெல்லாம் பொருளாதார மேதைகளாக இருக்கிறார்கள். 

பணத்தை ஹவாலாவில் பதுக்கியிருப்பார்கள். தங்கமாக மாற்றியிருப்பார்கள். ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய்களை முடக்குவதால் சிறு குறு வியாபாரிகள்தான் பாதிக்கப்படுவார்கள் என்று அடித்து நொறுக்குகிறார்கள். மோடியை நாகரிக கோமாளி என்றெல்லாம் எழுதித் தீர்க்கிறார்கள். மோடி எதைச் செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்கிற மனநிலை தேவையற்றது. அவகாசமே தராமல், செய்தியைக் கசியவிடாமல் வைத்திருந்து ஒரே இரவில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்வது என்பது லேசுப்பட்ட முடிவில்லை. தைரியமான, அசதாரணமான முடிவு இது.

ஹவாலா என்பது இந்திய ரூபாய் தாள்களை அப்படியே கொண்டு போய் சுவிட்சர்லாந்தில் பதுக்குவதில்லை. இங்கேயிருக்கும் புரோக்கரிடம் நூறு கோடி ரூபாயைக் கொடுத்தால் அந்தப் பணத்தை அவன் வாங்கி வைத்துக் கொண்டு நாம் கைகாட்டுகிற வெளிநாட்டு ஆளுக்கு நூறு கோடி ரூபாய்க்கான அந்நாட்டுப் பணத்தைத் தரச் சொல்லி அங்கேயிருக்கும் ஹவாலா புரோக்கரிடம் நாம் பணம் கொடுத்து வைத்திருக்கும் புரோக்கர் சொல்வான். ஆக, ரூபாய் நோட்டுக்கள் இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கின்றன. 

இன்றைக்கு ஒவ்வொரு அமைச்சரும் மாதாந்திர தவணையாக எவ்வளவு ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்கிற கணக்கு யாருக்காவது தெரியுமா? அரசு அதிகாரிகளின் மாறுதலுக்காகவும் பணி ஆணைகளுக்காகவும் முழுவதும் கை மாறுகிற தொகையின் அளவு தெரியுமா? கணக்கில் வராத கயமைத் தனங்கள் நம்மைச் சுற்றிலும் பல்லாயிரம் கோடிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இவை அத்தனையும் உடனடியாக பொருட்களாக மாற்றப்படுவதில்லை. தாய்லாந்தில் தீவு வாங்கியது, தலைநகரில் தியேட்டர் வாங்கியது, விவசாய நிலங்களாக வாங்கிப் போட்டது, டிவி சேனல் தொடங்கியது போக இன்னமும் தீர்க்கப்படாத கணக்குகள் ஏகப்பட்டவை இருக்கும். குறைந்தபட்சம் கணக்கு தீர்க்கப்படாத தொகைளுக்காவது பாதிப்பை உருவாக்குவது அவசியமில்லையா?

ஆண்டவன், ஆள்கிறவன் என எல்லோருமே கொள்ளையர்கள்தான்.

தண்ணீர் தொட்டியின் மூடிக்குக் கீழாக உறையை வைத்து அதில் பணக்கட்டுக்களை பதுக்கி வைத்திருக்கும் சினிமாக்காரர்களைத் தெரியும். பாழடைந்த மோட்டார் அறையில் பழைய சாக்குகளில் கட்டி பணத்தைக் கட்டி வைத்திருக்கும் மிராஸ்களைப் பற்றிய கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாம் மிகச் சில கோடிகள் மட்டுமே. கரூரில் சிக்கிய அன்புநாதன் மாதிரியான மனிதர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். குடோன்கள் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கின்றன. இங்கே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மட்டுமே அயோக்கியர்கள் இல்லை. வியாபாரிகளும்தான். ஊர்ப்பக்கம் எந்த நகைக்கடையிலும் துணிக்கடையிலும் டெபிட் கார்டை ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டு முதல் ஐந்து சதவீதம் சர்வீஸ் சார்ஜ் என்பார்கள். காரணம் அட்டை வழியான பரிமாற்றத்தைக் கணக்கில் காட்ட வேண்டும். பணமாக வாங்கிக் கொண்டால் அந்தப் பிரச்சினை இல்லை. ஒரு கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்தால் ஐம்பதாயிரம் ரூபாயைக் கணக்குக் காட்டினாலும் கேட்க ஆளில்லை. இரண்டு பவுன் நகை வாங்கினாலும் ஐம்பதாயிரம் ரூபாயை நோட்டாகத்தான் கொடுக்க வேண்டும். முகூர்த்த நாட்களில் சர்வசாதாரணமாக ஐநூறிலிருந்து ஆயிரம் பவுன் விற்பார்கள். கணக்குப் போட்டு பார்த்துக் கொள்ளலாம். ஜவுளிக்கடைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. எத்தனை மருந்துக் கடைகளில் பில் கொடுக்கிறார்கள்? தேசிய நெடுஞ்சாலையோர கடைகளில் கணக்கில் வராத வருமானம் ஒரு நாளைக்கு எவ்வளவு? 

சிறு வியாபாரியோ, குறு வியாபாரியோ- மறைத்துச் சம்பாதித்தால் அது எவ்வளவு தொகையாக இருந்தாலும் கறுப்புப் பணம்தான். தெரிந்தோ தெரியாமல் நாட்டின் பொருளாதார முதுகெலும்பில் மெல்ல மெல்ல அரிப்பை உண்டாக்குகிறார்கள். இதையெல்லாம் ஒழுங்குபடுத்துவது அவசியமான செயல் இல்லையா? சேர்க்கைக்காக கல்லூரிகளில் கொழித்த பணம், பருப்பு பதுக்கியது, அரிசி பதுக்கியது, நில புரோக்கர்கள், தனியார் மருத்துவமனைகள் என்று எப்படிப் பார்த்தாலும் ஒவ்வொரு வெள்ளையும் சுள்ளையும் தலையிலும் பெரும் பாறாங்கல்லை தூக்கி வைத்து அமுக்கியிருக்கிறது இந்த அறிவிப்பு.

ஆயிரம், ஐநூறை சட்டைப்பையில் வைத்திருக்கும் சிறிய மனிதர்கள்தான் பதறுகிறார்கள். கோடிகளில் சுருட்டி வைத்திருக்கும் பெரிய மனிதர்கள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் புழுங்கிக் கொண்டிருப்பார்கள். நமக்குத் தெரிவதில்லை. புழுங்கட்டும். தவறேதுமில்லை.

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களை முடக்குவது என்கிற திட்டத்தின் காரணமாக இந்தியப் பொருளாதாரமே முடங்கிவிடும் என்று சில சமூக வலைத்தள பொருளாதார மேதைகள் எழுதியிருந்தார்கள். இந்தியாவில் இந்தியாவில் புழங்குகிற கள்ள நோட்டுக்கள் எவ்வளவு என்று கூகிளில் தேடிப் பார்க்கலாம். ரிசர்வ் வங்கி இருபத்தொன்பது ரூபாய் செலவு செய்து ஆயிரம் ரூபாயை அச்சிட்டால் முப்பத்தொன்பது ரூபாய் செலவு செய்து அதே மாதிரி தொகையை அச்சிட்டு நானூறு ரூபாய் வரைக்கும் விற்று இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடுகிறார்கள். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் முக்கிய வருமானமே இதுதான் என்கிறார்கள். 

ஆயிரமாயிரம் கோடி ரூபாய்த் தாள்கள் இந்தியாவில் கள்ள நோட்டுக்களாகத்தான் புழங்குகின்றன. விலையுயர்வுக்கும், பண வீக்கத்துக்கும் இவைதான் பெரும் உதவியைச் செய்கின்றன. எதிர்காலத்திலும் கள்ள நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரக் கூடும் என்றாலும் இதுவரை சுற்றிக் கொண்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான கோடித் தாள்களை ஒழித்துக் கட்டுவதற்கு வேறு உருப்படியான வழியொன்றைச் சொல்லிவிட்டு பொருளாதாரம் குறித்துப் பேசலாம்.

‘இனி ரெண்டு நாளைக்கு ஏழைகள் என்ன செய்வார்கள்’ என்று பொங்கல் வைக்க வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன். ஐம்பது ரூபாய்க்கு விற்க வேண்டிய பொருள் எழுபது ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கும் போது ஏழைகள் பாதிக்கப்படுவதில்லையா என்றும்தான் கேட்கலாம். இந்த இருபது ரூபாய் விலையுயர்வுக்கு என்ன காரணம்? பதுக்கலும் கறுப்புப் பணமும் கள்ள நோட்டும் இல்லையா? ஏதாவதொரு வகையில் யாராவது பூனைக்கு மணி கட்டித்தானே ஆக வேண்டும்? மோடியின் அரசாங்கம் கட்டியிருக்கிறது.

இப்படி திடீரென அறிவிப்பு செய்தால் எல்லோருக்குமே கஷ்டம்தான் மறுக்கவில்லை. வீட்டுச் செலவுக்காக இரண்டு ஐநூறு ரூபாய்களை வைத்திருப்பவர்கள், மகன் அல்லது மகளின் திருமணத்துக்காக நிலத்தை விற்று பணமாக வாங்கி கையில் வைத்திருப்பவர்கள், பணியாளர்களுக்கு சம்பளமாகக் கொடுப்பதற்கென சில ஆயிரங்களைக் கையில் வைத்திருப்பவர்கள் என்று பார்த்தால் சிரமம்தான். ஆனால் இப்படியான அதிரடியான முடிவுகளை எடுக்கும் போது தற்காலிக பாதிப்புகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 

நம்மிடம் கைவசம் இருக்கிற பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் PAN அட்டை மற்றும் ஆதார் அட்டையைக் காட்ட வேண்டியிருக்கும். இதில் ஏதேனும் தகிடுதத்தங்கள் நடக்குமா என்று கணிக்க முடிவதில்லை. ஏதாவது ஓட்டைகள் இருக்குமா என்று தெரியவில்லை. இருக்கக் கூடும். ஆனாலும் கூட இந்த தைரியமான முடிவை வரவேற்கத் தயங்க வேண்டியதில்லை என்று நிச்சயமாகச் சொல்லலாம். 

இம்முடிவின் குறுகிய கால நீண்டகால விளைவுகளைப் பற்றி உண்மையான பொருளாதார நிபுணர்கள் விரிவாக எழுதுவதையும் விவாதிப்பதையும் கவனிப்பதற்காகக் காத்திருக்கிறேன்.

மற்றபடி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மோடி எதிர்ப்பு என்கிற அரசியல் அடையாளங்களையும் நம்மிடம் இருக்கும் ஐநூறு ஆயிரங்களையும் மறந்துவிட்டு யோசித்தால் இதை வரவேற்கத் தோன்றும் என்றுதான் நினைக்கிறேன். சாமானியனாக எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. தமிழக தேர்தலுக்கு முன்பு இதைச் செய்திருந்தால் மோடி இருக்கும் திசையை நோக்கி சாஷ்டாங்கமாக காலில் விழுந்திருப்பேன். 

மோடிக்கு வாழ்த்துக்கள். 

14 எதிர் சப்தங்கள்:

Buiik said...

அருமையாக சொன்னீங்க...

Siva said...

Sirappu

Geetha Sambasivam said...

அருமையான அலசல். வாழ்த்துகள். நூற்றுக்கு இருநூறு சதம் ஆதரவு தெரிவிக்கிறேன்.

Paramasivam said...

நன்றாகத்தான் உள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போல், நமக்கான சில அசௌகரியங்களை மறந்து விட்டு பார்த்தால், இது நல்ல முயற்சி. நான் நேற்று மாலை தான் இரு நூறு ரூபாய் நோட்டுகள் செலவழித்தேன். ஐநூறை மாற்றி இருக்கலாம். இன்று வெறும் முப்பது ரூபாயுடன் உட்கார்ந்து உள்ளேன். கட்டாய ஓய்வு. வெளியில் செல்லவே முடியாது. பரவாயில்லை. நாட்டுக்காக எனது பங்கு, நீங்கள் சொல்வது போல்.

சேக்காளி said...

எத்தனையோ விசயங்களில் மோடி,பாஜக மீது அதிருப்தி உண்டு.ஆனால் இந்த தைரியமான முடிவிற்காக பாராட்டுகிறேன்.
நன்றி மோடி"ஜி".

சேக்காளி said...

நாட்டின் எல்லையில் காத்துக் கிடக்கும் வீரனையும்,கடந்த ஆண்டின் வெள்ள காலத்து செனனை,கடலூர் மக்கள் நிலையையும் நினைத்து சிரமங்களை இரண்டு நாள் பொறுத்துக் கொண்டால் செத்தா போய் விடுவோம்.

அன்பே சிவம் said...

நிச்சயம் பாராட்டதக்கது. ஆனால் பெரிய மருத்துவமனையில் சிகிக்சை பெறும் நோயாளிகள் நிலை?!

அன்பே சிவம் said...

சாமி சத்தியமா எங்க ஊரு ஆசுபத்திரிக்கு வாரவுகளத்தேன் சொன்னே, நீங்க தப்பா புரிஞ்சிகிட்டாதீங்க

சேக்காளி said...

//Blogger அன்பே சிவம் said...
சாமி சத்தியமா எங்க ஊரு ஆசுபத்திரிக்கு வாரவுகளத்தேன் சொன்னே, நீங்க தப்பா புரிஞ்சிகிட்டாதீங்க//
இதைத்தான் கொசறு கமெண்டு ன்னு சொல்லணும்.

Mohamed Ibrahim said...

Lot of differentiation with Modi (for Saffron mindset) but welcoming such type of move for the sake of nation! Temporary crisis is there.
Worried about Lower middle class can't declare their non related bank savings..

”தளிர் சுரேஷ்” said...

மோடியின் முடிவு தைரியமானதுதான்! சாமான்ய கூலித்தொழிலாளர்கள்தான் கொஞ்சம் அதிகம் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்! நல்ல அலசல்!

ravisai said...

மோடிஜீ க்கு ஆயிரம் நன்றிகள் இது இது தான் மோடி யாருக்கு இருந்தது இந்த தைரியம் வாழ்க பல்லாண்டு !!!!

Unknown said...

யார் யார் கருப்பு பணம் வைத்து இருப்பார்கள் என்று மணிகண்டன் என்ற இந்திய கடைகோடி குடிமகனால் சொல்ல முடிகிர விசயம் இந்திய துனைகண்டத்து உயர் நிலை குடிமகன்களுக்கு தெரியதா? கள்ள பணம் கண்டுபிடிகிர எந்திரம் தான் நம்மிடம் இல்லையா? இது அரசியலுக்கு உதவாது சரி இந்த நடவடிக்கையே சாதரன மக்கள் பாதிக்காத அளவு நடைமுறை படுத்த நம்மிடம் திட்டமிட ஆட்கள் இல்லையா? அல்லது இவர்கள் யார் இதை நம்மிடம் எதிர்பார்க்க என்ற ஏளனமா? ஆனல் ஒன்று உறுதி எதிபார்த்த அரசியல் பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை. அரசுவின் வேலை மக்களை காப்பது தான் கஷ்டபடுத்துவது அல்ல.

seyonyazhavaendhan said...

மிக மிகத் தவறான வாதம். செல்லாது செல்லாது என்று நாட்டாமை போல், overnight அறிவிக்கவேண்டிய அவசியமில்லை. petrol bunkல் செல்லும்போது, மற்ற இடங்களில் ஏன் செல்லாது?
1978ல் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 1000ரூபாய் நோட்டு, திரும்பவும் அறிமுகப்படுத்தப்பட்டது 2000ஆம் ஆண்டில்தான். கடந்த 16 ஆண்டுகளாக 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததால் பயனடைந்தவர்கள் பதுக்கல்காரர்களா? பொதுமக்களா? இப்போது 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தவேண்டிய அவசியம் ஏன் வந்தது? பதுக்கல்காரர்கள் எளிதாகப் பதுக்கலாம் என்பதைத் தவிர, பொதுமக்களுக்கு இதனால் என்ன பயன்?
மேல்தட்டு மக்களின் பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகள் on line transactions, Credit, Debit கார்டுகள் வழி நடைபெறும்போது, 2000 ரூபாய் நோட்டு யார் நாக்கு வழிக்க? 1978ல் இருந்து 2016 வரை 38 ஆண்டுகளாக, அதிகபட்ச மதிப்புள்ள 1000 ரூபாய் நோட்டுகளால் பதுக்கப்பட்ட பணம், பல லட்சம் கோடிகள் என்றால், 2000 ரூபாய் நோட்டு கறுப்புப் பணப் பதுக்கலை அதிகரிக்காதா?
93% இந்தியர்களுக்கு (Adults) ஆதார் அட்டை இருக்கிறது, வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கிறது. (“About 93 percent of adults in India have Aadhaar card, says UIDAI ...”)
புதிய ரூபாய் நோட்டுகள் அடிப்பது வழக்கமான நடைமுறை. புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகளை போதுமான அளவு அச்சடித்து, அதை வங்கிகளுக்கு அனுப்பியபின்பு, பழைய நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளை, 15 நாள்களுக்குள் மொத்தமாக மாற்றிக்கொள்ள வேண்டும், தங்களிடம் உள்ள 500. 1000 ரூபாய் நோட்டுகளை மொத்தமாக (one time deposit) ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் செலுத்தி, (உரிய வரி செலுத்தி) செலுத்தி, புதிய நோட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்திருந்தால், பொதுமக்களுக்கு இவ்வளவு சிரமங்கள் வந்திருக்குமா? எந்தப் பதுக்கல்காரனும் வரிசையில் நின்று நோட்டை மாற்றவில்லை. ராகுலும் ரஜினியும் எப்பேர்ப்பட்ட கயவர்கள் என்று மக்களுக்குத் தெரியும்.
பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கவேண்டிய அவசியமேயில்லை. அதேபோல் டிசம்பர் 30, மார்ச் 31, 2017 என்று கால அவகாசம் கொடுத்து, கறுப்பையெல்லாம் புதிய 2000 ரூபாய்களாக மாற்ற அவகாசமும் கொடுக்க வேண்டியதில்லை.
செல்லாது என்று நள்ளிரவில் சொல்வதன் நோக்கம்? இவர்கள் ஹிட்லரின் வாரிசுகள். நாட்டு மக்களை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருந்தால்தான், நவீன ஹிட்லரின் திறமையின்மை, ஊழல், செயலற்ற அரசு, கறுப்புப்பண முதலைகளுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது, நாட்டை வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு விலைபேசிக்கொண்டிருப்பது, இவை எதைப்பற்றியும் மக்கள் சிந்திக்க முடியாமல் செய்யமுடியும். அவர்கள் தங்கள் செயல்திட்டத்தில் தெளிவாக இருக்கிறார்கள். "மாட்டுக்கறி திங்காதே" என்று இவன் சொல்வதைக் கேட்டு, நாம் கொந்தளித்துக்கொண்டிருக்கும்போது, நான்கைந்து ஒப்பந்தங்கள் மூலம் நாடு விலைபேசப்பட்டிருக்கும்.
கொஞ்சம் மக்கள் அமைதியான மனநிலைக்குத் திரும்புகிறார்கள் என்று தெரிந்ததும், "பொது சிவில் சட்டம்" என்பான். அதுவும் ஓய்ந்து விட்டால் "ராமனுக்குக் கோயில் கட்டுவோம்" என்பான்.
“கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்” , கேடுகெட்ட இந்த நாடு நமக்குக் கொடுத்திருக்கும் இந்தக் கேடு, மக்களின் நண்பர்கள் யார், மக்களின் எதிரிகளின் நண்பர்கள் யார்யாரென்று நீட்டி அளக்கும் கோல், அவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.