Nov 15, 2016

பேசணும் தம்பி

பெங்களூரில் ஒரு பேராசிரியர் இருக்கிறார். ஓய்வு பெற்றவர். பிரசிடென்ஸி கல்லூரி மாணவர். மாரத்தஹள்ளியில் அவரது மகன் வீட்டில் சந்தித்துப் பேசிய போது அந்தக் காலத்துக் கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர்   ‘நாய் கூடத்தான் வயிறு வளர்க்குது..வெறும் அறிவாளியாவும் பணக்காரனாவும் இருந்தா போதுமா?’என்றார். அவர் சொன்னதன் நேரடியான அர்த்தம் இதுதான் - தாக்கத்தை உண்டாக்குகிற ஆளுமையாக இருக்க வேண்டுமாம். Influential.

ம்க்கும். 

நம்மைச் சுற்றிலும் அத்தனை பேரும் அறிவாளிகளாக இருக்கிறார்கள் அல்லது என்னைப் போலவே தம்மை அறிவாளி என்று நம்பிக் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தாக்கம் உண்டாக்குகிறேன் பேர்வழி என்று களமிறங்கினால் குருட்டுவாக்கில் நம்மைத்தான் தாக்குவார்கள்.

‘பேசணும் தம்பி’என்றார் பேராசிரியர். அது முதல் படி. பேசிப் பேசியே வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்பது அவரது நம்பிக்கை. திராவிடக் கட்சிகள் செழித்தோங்கிய காலத்தில் படித்த பேராசிரியர் அவர். அப்படிச் சொல்லவில்லையென்றால்தான் ஆச்சரியம்.

அந்தக் காலத்தில் தம் கருத்துக்களையும் கொள்கைகளையும் விதைப்பதற்கு பேச்சுக் கலையைத்தான் பயன்படுத்தினார்கள். ஆனால் பேச்சின் வழியாக பதவி வருகிறது என்று தெரிந்த பிறகு பதவியைப் பெற்றுக் கொள்ளவும் சம்பாதிக்கவும் பேசினார்கள். இப்பொழுதெல்லாம் பேசுவது ஒரு வியாபாரம். லட்சக்கணக்கில் வாங்குகிறார்கள். அரசியல் கட்சிகளில் மட்டும் பேச்சாளர்கள் காசு வாங்குவதில்லை. ஆன்மிக சொற்பொழிவுகளிலிருந்து, சுய முன்னேற்ற பேச்சாளர்கள், இலக்கியப் பேச்சாளர்கள் வரை அத்தனை பேரும் அள்ளிக் கொழிக்கிறார்கள். ஜாடிக்கு ஏற்ற மூடி. ஏரியாவுக்கு ஏற்ற பிடி. அது போக விமானப் பயணச் சீட்டு, தங்குமிடம், உணவு என்று தருவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். 

‘அவனுக்கெல்லாம் வாய் இல்லைன்னா நாய் கூடச் சீண்டாது’ என்று சிலரைக் கை நீட்டிப் பேசுவார்கள். இல்லையென்றால்தான் நாய் கூடச் சீண்டாது. அதுதான் இருக்கிறதே- அத்தனை பேரும் தாங்குகிறார்கள். பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் வழக்குத் தொடுத்துவிடுவார்கள். ‘அடுத்த அப்துல்கலாம்’ ‘அடுத்த கிருபானந்தவாரியார்’ என்ற லட்சியக் கனவுகளோடு லட்சங்களை பெட்டிகளில் நிரப்புகிற பட்டியலில் கன பேச்சாளர்கள் சேர்வார்கள்.

இன்றைய காலத்தில் பேச்சு மட்டுமே போதுமானதாக இருப்பதில்லையென்றாலும் பேச்சு முக்கியமான கருவி. பேசிப் பழகிக் கொள்ள வேண்டும். திரும்பிய பக்கமெல்லாம் பேச்சு ஏதாவதொருவிதத்தில் யாரையாவது பாதித்துக் கொண்டுதான் இருக்கிறது. பேச்சைவிடவும் எழுத்து வலிமையானதுதான் என்றாலும் பேச்சின் வீச்சுக்குக்கும் பரவலுக்கும் பக்கத்தில் எழுத்து நிற்கக் கூட முடியாது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

கோபிச்செட்டிபாளையத்தில் ஹைதர் காலம் என்ற ஒலிப்பதிவு கடை இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வெகுபிரபலம். கொஞ்சம் எக்குத்தப்பாகத்தான் காசு வாங்குவார்கள். ஆனால் அவர்களிடமில்லாத பாடல்களும் இருக்காது; பேச்சும் இருக்காது. எப்படித்தான் சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியாது. அந்தச் சேகரிப்புக்காகவே காசு கொடுக்கலாம். சின்னஞ்சிறு கடைதான். வெளியில் மரப்பலகை போட்டு வைத்திருக்கிறார்கள். கடையைச் சுற்றிலும் சுவாரஸியமாக நிறைய எழுதி வைத்திருப்பார்கள். மரப்பலகையில் அமர்ந்தபடியே அவர்களின் பட்டியலிலிருந்து பாடல்களையும் பேச்சுக்களையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் பதிவு செய்து தருவார்கள்.

கடந்த வாரத்தில் ஹைதர் காலத்தில் ஐம்பதுகளைத் தாண்டிய ஒரு மனிதர் கிட்டத்தட்ட அறுபது பேச்சாளர்களின் பேச்சுக்களை பதிவு செய்து கொண்டிருந்தார். ஒரு பேச்சை பதிவு செய்து தர அறுபது ரூபாய் வாங்குகிறார்கள். கணக்குப் போட்டுக் கொள்ளலாம். மூன்றாயிரத்து அறுநூறு ரூபாய் என்றதும் எனக்கு அடிநாக்கு வறண்டு போனது. அந்த நடுத்தர வயதுக்காரர் அடிக்கடி இப்படி வந்து பேச்சுக்களைப் பதிவு செய்துவிட்டுப் போவதாகச் சொன்னார். எனக்கு பேச்சாளர் என்றால் அண்ணா, கருணாநிதி, வைகோவில் தொடங்கில் மரபின் மைந்தன் முத்தையா, சாலமன் பாப்பையா, ராஜா, பர்வீன் சுல்தானா என்று பதினைந்து சொச்சம் பேர்களைத் தெரியும். 

அவரிடம் ‘அப்பாவுக்கு வீட்டில் போரடிக்காம இருக்க யாராச்சும் பேசினதைப் பதிவு செஞ்சு கொடுக்கலாம்ன்னு இருக்கேன்..ஐடியா சொல்லுங்க’ என்றேன். வேளுக்குடியில் ஆரம்பித்து ஐம்பது பேர்களையாவது சொல்லியிருப்பார். ‘இவரோட பேச்சு இந்தத் தலைப்புல இருக்கும்...பதிவு பண்ணுங்க’ என்றார். சற்று குழம்பித் தெளிந்து அறிவொளி, வேளுக்குடி என்று பத்து பேர்களின் பேச்சைப் பதிவு செய்தேன். அறுநூறு ரூபாய் காலி. ‘இது போதுங்கண்ணா’ என்று அதோடு நிறுத்திக் கொண்டேன். அந்த மனிதருக்கு எழுதுபவர்கள் யாரையும் தெரிந்திருக்கவில்லை. பேச்சு மட்டும்தான். 

‘எதுவும் படிக்க மாட்டீங்களா?’ என்றேன்.

‘பேச்சு ஒண்ணு போதாதா தம்பி?’ என்றார். 

பேச்சு போதும்தான். ஆனால் வழவழா கொழகொழா இல்லை. நறுக்குத் தெறிக்க வேண்டும். பயிற்சியில்லாமல் வராது. மேடைப்பேச்சு மட்டுமில்லை- தனிப்பட்ட மனிதர்களுடனான உரையாடல்களின் போதும் கூட கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. 

மேடைப் பேச்சு ஒரு கலையென்றால் கார்போரேட் பேச்சு இன்னொரு கலை. ஈயம் பூசின மாதிரியும் இருக்கும்; பூசாத மாதிரியும் இருக்கும். அதிலேயே சில ஜகஜ்ஜாலக் கில்லாடிகளும் உண்டு. Merger and Acquisition என்ற தனிப்பிரிவு இருக்கிறது அல்லவா? ஹெச். ஆர் ஆட்களையே தூக்கி விழுங்கிவிடுவார்கள். அவ்வளவு நேக்குப் போக்கு. அந்தப் பிரிவின் பெருந்தலைகள் பேசுவதைக் கேட்கக் கேட்க அலாதியாக இருக்கும். நெய்யும் தேனும் சொற்களில் தடவி காதுக்குள் விடுவார்கள். டெல் நிறுவனத்தில் பணியாற்றிய போது அப்பிரிவின் தலைமை அதிகாரி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். மிகச் சாதாரணமான தலைப்புதான். ஆனால் அவர்கள் சொல்வதுதான் சரி என்று நம்மை நம்ப வைத்துவிடுகிற வித்தையைத் தெரிந்து வைத்திருந்தார். பிற பிரிவுகளிலும் இத்தகைய ஆட்கள் உண்டுதான். ஆனால் எம் அண்ட் ஏ பிரிவு ஆட்கள் இந்தக் கலையில் பழம் தின்று கொட்டை போட்டிருப்பார்கள். பல கோடி மதிப்புள்ள நிறுவனங்களை வளைப்பது என்றால் சாதாரணக் காரியமா?

‘சாமி உன்ரகிட்ட இருந்து இத்துனூண்டு பழகிட்டாலும் கூட இந்த கார்போரேட் உலகத்துல காலத்தை ஓட்டிடுவேன்’ என்று நினைத்துக் கொண்டே வாயைப் பிளந்திருந்தேன்.

அதென்ன Influential Talk?  

கார்போரேட் நிறுவனங்களிலும் தனிமனித உரையாடல்களிலும் தாக்கம் உண்டாக்குவதை அறிவியல் பூர்வமாக செய்து பார்க்கிற ஆட்கள் இருக்கிறார்கள். பேச்சுக்கலை வித்தகர்கள். அவர்களின் கூற்றுப்படி Influential Talk என்றால் வெறுமனே பேசுவது இல்லை. ஆயிரத்தெட்டு சூட்சமங்கள் இருக்கின்றன. மேல்மட்டத்தில் மூன்று வகையாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். தனிப்பட்ட மனிதர்களுடனான உரையாடலில் தாக்கம் உண்டாக்குவது (Individual influence), அக்கம் பக்கத்தாரிடம் தாக்கம் உண்டாக்குவது (Neighborhood influence), இந்தச் சமூகத்தில் தாக்கம் உண்டாக்குவது (Society influence).

மிக எளிமையாகச் சொன்னால்- நான் சொல்வதை பக்கத்து இருக்கைக்காரர் கேட்கிறாரா? கேட்பது மட்டுமில்லாமல் மனம் மாறுகிறாரா? அப்படி மாறினால் அது தனிமனிதத் தாக்கம். நாம் செய்ய விரும்புகிற காரியத்தை அல்லது சொல்ல வருவதை அக்கம்பக்கத்துக் காரர்களிடம் பதிய வைக்க முடிகிறதா அல்லது அவர்களைத் தலையாட்ட வைக்க முடிகிறதா? இது இரண்டாம் வகை- neighborhood influence. நூற்றுக்கணக்கானவர்கள் நாம் சொல்வதைக் கேட்கச் செய்வது சமூகத் தாக்கம். 

தனி மனிதத்தாக்கம்தான் தொடக்கம். ஆனால் நம் சமூக ஊடகக் காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பலரும் சமூகத் தாக்கத்தில்தான் குறியாக இருக்கிறோம். அதில்தான் பிரச்சினை தொடங்குகிறது. அடிப்படையே தெரியாமல் ராக்கெட் விடுகிற வித்தை அது. நேரடியாகவே சமூகத் தாக்கம் மற்றும் அக்கம்பக்கத் தாக்கத்தில் வெற்றியடைந்துவிடலாம்தான். ஆனால் குடும்பம் வீணாகப் போய்விடும். உறவுகளை கலைந்துவிடும். நாம் அவர்களைக் கைவிட்டிருப்போம் அல்லது அவர்கள் நம் மீது நம்பிக்கை இழந்திருப்பார்கள்.

வீட்டில் இருப்பவர்களிடம் நம்மால் தாக்கத்தை உருவாக்க முடிகிறதா? அப்படியென்றால் அடுத்தடுத்து ஆட்கள். நம் எண்ணத்தில் வருகிற முதல் நூறு ஆட்களில் எத்தனை பேரிடம் நம்மால் தாக்கத்தை உண்டாக்க முடியும்? ஐந்து சதவீதம்? பத்து சதவீதம்? அங்குதான் நாம் நிற்கிறோம்.

ஏற்கனவே சொன்னது போல வெறும் பேச்சினால் மட்டும் அடுத்தவர்களிடம் தாக்கம் உண்டாக்கிவிட முடியாது. நம் மீதான நம்பகத் தன்மை, நம்மைக் குறித்த நல்ல அபிமானம் என்று நிறைய பின்ணனியில் இருக்கின்றன. வெகு காலம் பிடிக்கும். ஆனால் பெரிய மனிதர் ஆவதென்றால் விடிவதற்குள் ஆகிவிட முடியுமா என்ன? 

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//நம் மீதான நம்பகத் தன்மை, நம்மைக் குறித்த நல்ல அபிமானம் என்று நிறைய பின்ணனியில் இருக்கின்றன//