Oct 27, 2016

நட்சத்திர மரங்கள்

நரிக்குறவர்கள் துப்பாக்கியை எடுத்து வருவார்கள். நீண்ட இரட்டைக் குழல் துப்பாக்கி. தமது மூட்டையை விரித்து வைத்து அதிலிருக்கும் வெடிமருந்துகளை எடுத்து உள்ளே திணித்து அதன் மீது காகிதத்தைச் சுருட்டி வைத்து அழுத்தி அதன் மீது சிறிய இரும்புக் குண்டை வைத்து எல்லாவற்றையும் சேர்த்து ஒரு நீண்ட மெல்லிய கம்பியை வைத்து இடிப்பார்கள். அவர்கள் இதைச் செய்து முடிக்க பத்து நிமிடங்களுக்கு மேலாகும். சிதறி ஓடியிருந்த கொக்குகள் திரும்பவும் வந்து வேம்பு மரத்தில் அமர்ந்திருக்கும். சுடுவதில் நிபுணன் துப்பாக்கியை வாங்கி சுற்றி நிற்கும் குழந்தைகளை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு மேலே குறி வைத்துச் சுடுவான். ஒரு வெடிச் சப்தத்திற்கு பிறகு கொக்கு ஒன்று துள்ளி விழும். குழந்தைகள் ஓவென்று கத்தி ஆர்பரிப்பார்கள். விழுந்த கொக்கை எடுத்து தனது தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் பிற கொக்குகளோடு சேர்த்துக் கோர்த்துக் கொள்வான் இன்னொருவன். சப்தம் கேட்ட பிற கொக்குகள் சிதறி பறந்திருக்கும். ஆசுவாசமாக மீண்டும் துப்பாக்கியை நிரப்புவார்கள். வெடிக்கும். துள்ளி விழும்.

சுட்டுவிட்டுக் கிளம்பும்போது ஏழெட்டுக் கொக்குகளாவது ஒரு மரத்திலிருந்து அடித்திருப்பார்கள். அப்படியிருந்தும் பல நூறு கொக்குகள் அந்த மரங்களில் இருந்து கொண்டேயிருந்தன. அந்த வேம்பு வயல்வெளிகளில் எல்லாம் இல்லை. எங்கள் வீதியிலேயேதான் இருந்தது. ஒரே தெருவில் மூன்று பெரும் வேம்புகள். பல்லாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த மூன்று மரங்களையும் வெட்டினார்கள். கொக்குகள் வருகின்றன. குப்பை விழுகிறது என்று சல்லித்தனமான காரணங்களைச் சொன்னார்கள். பஞ்சாயத்திலிருந்து ஆட்கள் வந்து பச்சை மரங்களை அடியோடு வெட்டிச் சென்ற இரண்டொரு நாள் கழித்து வேர்களின் மீது மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தினார்கள். அதோடு சரி. தெருவே காந்தல் அடிக்கத் தொடங்கியது. கோடை தகித்தது. எங்கள் ஊரில் இதையெல்லாம் மறந்து வெகு வருடங்களாகிவிட்டன.

இப்பொழுது மரங்களும் இல்லை. கொக்குகளும் இல்லை.

கடந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது ஒரு திருமண மண்டபத்தில் வைத்து பசுமைகோபி அமைப்பினர் மரக்கன்றுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். எங்கள் வீதியில் ஒரு மரத்தையாவது வளர்த்துவிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஒவ்வொரு மரத்தை நிராகரிக்கவும் உள்ளூர்வாசிகளிடம் ஒரு காரணமிருக்கிறது. தூங்கு மூஞ்சி மரத்தை வீட்டுக்கு முன்பாக வைக்கக் கூடாது. புங்கன் மரத்தில் பேய் இருக்கும். வேம்பு சுவரைத் தகர்க்கும். புளியன் வீட்டுக்கு முன்பாக இருந்தால் பிசாசு வீட்டுக்குள் வரும். மகாகனியை கோவிலில்தான் வைக்க வேண்டும். இப்படி கிட்டத்தட்ட ஒவ்வொரு மரத்துக்கும் மரங்களுக்கும் ஏதாவதொரு காரணம் வைத்திருக்கிறார்கள். 

சலித்துப் போனது.

ஏதாவது பூச்செடி வைக்கலாம் என்றார்கள். அளவான உயரம். குப்பை விழாது. வீட்டுக்கு முன்பாக மணமாக இருக்கும். இப்படி மொக்கைத்தனமான ஆசைகள். மரமென்று வைத்தால் நான்கைந்து பறவைகளாவது வாழ்வதற்கேற்ற மரமாக இருக்க வேண்டும். இருக்கிற மரங்களையெல்லாம் வெட்டி வெட்டி வாழ்ந்த பறவைகளையெல்லாம் ஊரைவிட்டு விரட்டியடித்துவிட்டு ‘வீதி சுத்தமாக இருக்கிறது’ என்று சந்தோஷப்படும் கேவலமான ஜென்மமாக மனிதன் மாறி பல காலம் ஆகிவிட்டது.

‘செடியெல்லாம் வேண்டாம். மரமாக வைக்கலாம்’ என்பதில் உறுதியாக இருந்த பிறகு பூவரசு மரத்துக்கு அனுமதி தந்தார்கள். ஓரளவு குட்டையாகத்தான் இருக்கும். நல்ல நிழல் கிடைக்கும். குருவிகள் நிறையத் தங்கும். எடுத்து வந்து குழி தோண்டி செடி நட்டு வலையமைத்து நீரூற்றிய போது சந்தோஷமாக இருந்தது. கடந்த வாரத்தில் ஏழெட்டு புது இலைகள் துளிர்த்திருந்தன. ஆறு மாதத்தில் வளர்ந்துவிடக் கூடும். வீட்டில் நான் இல்லாத போது யாரோ ஒரு பிரகஸ்பதி வந்து ‘பூவரச மரம் வீட்டுக்கு முன்னாடி ஆகாது’என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

‘ஆகாதுன்னு சொன்னதுக்கு அப்புறம் மனசுக்குள்ள உறுத்திட்டே இருக்கும்...புடுங்கி வீசிடலாமா?’ என்று அம்மா கேட்டார். என்ன பதிலைச் சொல்வது? செண்டிமெண்டல் அட்டாக். வீட்டுக்கு முன்பாக வைக்கக் கூடிய மரமென்று எது என்ற குழப்பமே தீராத போது வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று சொன்னால் யார் கேட்பார்கள். எந்த மரத்தைச் சொன்னாலும் ‘அது ஆகாதுங்க’ என்று சொல்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். குழப்பமாக இருந்தது.

‘இதனால்தான் இந்த மரத்தை வைக்கிறோம்’ என்று உறுதிபடச் சொல்வதற்கு ஒரு காரணம் அவசியமாக இருக்கிறது. 

சமீபத்தில் ஒரு ஜோதிடரிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. வாஸ்து பார்ப்பார். ‘வீட்டுக்கு முன்னாடி வைக்கிற மாதிரி ஒரு மரமா சொல்லுங்க..யாரும் எதுவும் சொல்லக் கூடாது’ என்றேன். அவரிடம் உபாயம் இருந்தது. யாரோ சில புண்ணியவான்கள் பிறந்த நட்சத்திரத்துக்கும் ராசிக்கும் ஏற்ப மரங்களை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இடமும் வாய்ப்புமிருந்தால் நட்சத்திரம், ராசி இரண்டுக்குமேற்ற மரங்களை வளர்க்கலாம். ஒருவேளை சாத்தியமில்லையென்றால் நட்சத்திரத்துக்கேற்ற மரங்களை வளர்க்கச் சொன்னார். அது கிடைக்கவில்லையென்றால் ராசி மரத்தையாவது வளர்க்கச் சொன்னார்.

இதையே மக்களிடமும் எடுத்துச் சென்றால் வீட்டுக்கு ஒரு மரம் தப்பித்துவிடும்.

‘வீட்டுத் தலைவரின் ராசிக்கு ஏற்ற மரத்தை வீட்டுக்கு முன்பாக வைத்து தினமும் பார்த்து வந்தாலே பல பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம்’ என்றார் ஜோதிடர். மூடநம்பிக்கையோ அவநம்பிக்கையோ தெரியாது. ஆனால் நல்ல காரியம் நடைபெறுவதற்கு தோதான நம்பிக்கை. இதையே அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம். ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் குடும்பத் தலைவரின் ராசி/நட்சத்திரத்துக்கேற்ற மரங்களைக் கொடுத்துவிடலாம். அவர்கள் வளர்த்துவிடுவார்கள்.

‘பசுமைகோபி’ கார்த்திகேயனிடமும், தாமஸிடமும் பேசியிருக்கிறேன். விதைகளைச் சேகரித்து தாமே முளைக்க வைத்துத் தருவதாகச் சொன்னார்கள். 

நாஞ்சில்நாடன் ‘சங்க இலக்கியத்தில் மட்டும் 207 தாவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன’ என்கிறார். இன்றைக்கு நமக்கு எத்தனை மரங்களை அடையாளம் தெரியும்? கீழே சுமார் முப்பத்தைந்து மரங்களின் பெயர்கள் இருக்கின்றன. இதில் நமக்கு எத்தனை மரங்களைத் தெரியும் என்று நமக்கு நாமே கேட்டுப் பார்த்துக் கொள்ளலாம். அத்தனையும் நம் நாட்டின் பாரம்பரியமான மரங்கள்தான். இந்த மண்ணில் வளர்ந்து செழித்த மரங்கள்தான். ஒவ்வொன்றாகத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

செடிகளை வளர்த்து வீடுகளுக்குக் கொடுத்து அவர்களிடம் எடுத்துச் சொல்வது கூட பெரிய காரியமில்லை. செய்துவிடலாம். பிரச்சினை என்னவென்றால் இந்தச் செடிகளை வளர்க்க விதை போட வேண்டுமா, பதியன் போட வேண்டுமா என்று கூடத் தெரியாது. இனிமேல்தான் விவரங்களைத் தேட வேண்டும். விதைகளைச் சேகரிப்பது, பதியன் போடுவதாக இருப்பின் பதியன்களைச் சேகரிப்பது போன்ற வேலைகளை ஆரம்பிக்கவிருக்கிறோம். விதைகள் கிடைக்குமிடம், இதில் அனுபவமுள்ளவர்களின் தொடர்பு எண் ஆகியவை இருப்பின் கொடுத்து உதவினால் பெரிய உபகாரமாக இருக்கும். இதைச் செய்து முடித்த பிறகு எல்லாவற்றையும் விரிவாக எழுதுகிறேன். நிச்சயமாக ஆர்வமுள்ளவர்கள் பலருக்கும் பயன்படும்.

நட்சத்திரங்களுக்கேற்ற மரங்கள்:

அஸ்வினி -எட்டி 
பரணி- நெல்லி
கிருத்திகை -அத்தி 
ரோகிணி - நாவல்
மிருக சீரீடம் - கருங்காலி
திருவாதிரை -செங்கருங்காலி
புனர்பூசம் -மூங்கில்
பூசம் - அரசு
ஆயில்யம் -புன்னை
மகம் - ஆலமரம்
பூரம் - பலா
உத்திரம் -அலரி
அஸ்தம் -வேலமரம் 
சித்திரை- வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுசம் - மகிழம்
கேட்டை - புராய்மரம்
மூலம் - மாமரம்
பூராடம் - வஞ்சி 
உத்திராடம் - பலாமரம்
திருவோணம் - எருக்கமரம்
அவிட்டம் -வன்னி
சதயம் - கடம்பு
பூரட்டாதி - தேமா
உத்திரட்டாதி -வேம்பு
ரேவதி - இலுப்பை

ராசிக்கேற்ற மரங்கள்:

மேஷம்-செஞ்சந்தனம்
ரிஷபம்-ஏழிலைப்பாலை
மிதுனம்-பலா
கடகம்-பொரசு
சிம்மம்-பாதரி
கன்னி-மா
துலாம்-மிகிழம்
விருச்சிகம்-கருங்காலி
தனுசு-அரசு
மகரம்-எட்டி
கும்பம்-வன்னி
மீனம்-ஆல்

8 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//இந்தச் செடிகளை வளர்க்க விதை போட வேண்டுமா, பதியன் போட வேண்டுமா என்று கூடத் தெரியாது.//
இப்படி தொடரும் வாழ்க்கை எங்கு போய் முடியும்?

Vaa.Manikandan said...

முப்பத்தைந்து மரங்களைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்வதில் போய் முடியும் :)

சேக்காளி said...

ர. சோமேஸ்வரன் said...

//உறுதிபடச் சொல்வதற்கு ஒரு காரணம் அவசியமாக இருக்கிறது// உண்மை ஜி, பொது வெளியில் செய்கிற எந்த செயல்களுக்கும் முதன்மையான காரணம் அவசியம். இல்லாவிடில் ஆதரவு கிடைப்பது சுலபமில்லை.

சக்திவேல் விரு said...

இப்படித்தான் என் கிராமத்தில் இருந்த எல்லா மரங்களையும் எதோ ஓர் அல்ப காரணமான வாஸ்து ஜோசியம் வீட்டுக்கு ஆகாது செவுத்துக்கு ஆவாதுன்னு சொல்லி வெட்டிவிட்டு இப்போ மழை பெய்யல அது இதுனு பொலம்பறவங்கள பார்த்து ஒண்ணே ஒன்னு தான் சொல்ல தோணுது ..வெக்காளி சாவுங்கடா ...என்று மிக கடினமா திட்ட தோணுகிறது ....

சூர்யா said...

இந்த கதையை கேட்டால் நொந்து விடுவீர்கள்..

பள்ளி பருவத்தில் என் மாமா வீட்டில் ஆசையாக ஒரு மாஞ்செடி நட்டு வளர்த்து வந்தேன். நட்டு வளர்கையிலேயே அதில் காய்க்கும் பழங்களை வீதியில் போவோர் வருவோர் எல்லாம் பறித்து சாப்பிட்டு மகிழட்டும் என்று நினைப்பேன். கல்லூரிக்கு சென்றபின்பும் அடிக்கடி அங்கே சென்று அந்த மரத்தின் வளர்ச்சியை பார்த்து உள்ளூர மகிழ்ச்சி கொள்வேன். அதில் எப்போது பூப்பிடிக்கும், காய் பிடிக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இந்நிலையில் என் மாமா தொழில் காரணமாக அந்த வீட்டை சிறிதுகாலம் வாடகைக்கு விட்டு விட்டு வேறோர் வீட்டிற்கு சென்று விட்டார். அந்த சமயம் அந்த மரத்தில் பூத்து, காய்த்திருக்கிறது அதை வாடகைக்கு இருப்பவர் பறித்து சாப்பிட்டு இருக்கிறார். இதை ஒரு பெரிய விஷயமாக என் மாமாவின் அண்டை வீட்டார் போட்டு கொடுத்து விட்டார்கள், விஷயத்தை கேள்விப்பட்ட என் பாட்டி பாத்திரகாளியாய் மாறி அருவாளை எடுத்துக்கொண்டு போய் அந்த மரத்தை வேரோடு வெட்டி விட்டார். இனி திரும்பவும் முளைக்க இயலாதவாறும் செய்து விட்டார், ஆனால் மரத்தை வெட்டிய அடுத்த மூன்று மாதங்களில் திரும்பவும் சொந்த வீட்டிற்கே வேலை மாற்றலாகி திரும்பி விட்டனர். அந்த மரத்தை வெட்டியதை கேள்வி பட்டவுடன் என் பாட்டியை பயங்கரமாக திட்டி விட்டேன், நிறைய நாள் புலம்பி இருக்கிறேன் ஆனால் இன்றுவரை என் வீட்டில் அனைவரும் என்னை தான் இளக்காரமாக பார்க்கிறார்கள் ஒரு மரத்தை வெட்டுனதுக்கு ஏன் இவ்ளோ புலம்புறான் என்பார்கள். ஊர் மொத்தமும் சுயநலம், நடுவில் பொதுநலம் பேசும் நாம், நிர்வாண ஊரில் கோவணம் கட்டும் கோமாளி.

சுதா சுப்பிரமணியம் said...

வணக்கம் மணிகண்டன்.

இந்த அனைத்து மரங்களையும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் பார்த்தேன். எல்லா நட்சத்திரத்திர்க்கான மரங்களும் அங்கே இருக்கின்றது. கீழே இருப்பது அவர்களுடைய இணைய முகவரி. உதவுவார்களா தெரியாது கேட்டுப் பார்க்கலாம்.

http://www.universalpeacefoundation.com/

நன்றி
சுதா.

Haridass kannikandath said...

வணக்கம்,காரைக்குடியில் சிவக்குமார் என்பவர் அனைத்து மரங்களையும் வைத்திருக்கிறார்.தொடர்பு எண்
98430 80275