Sep 8, 2016

மறுபதிப்பு

சில நாட்களுக்கு முன்பாக பிரகாஷ் தொடர்பு கொண்டிருந்தார். பிரகாஷ் ராஜமாணிக்கம். மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வசிக்கிறார். நாமக்கல் பக்கம் சொந்த ஊர். புதிய வீடு கட்டியிருக்கிறார்.  புதுமனை புகுவிழா. விழாவுக்குத்தான் அழைக்கிறார் என்று நினைத்தால் மூன்றாம் நதி நூற்றைம்பது பிரதிகள் வேண்டும் என்றார். ஆச்சரியமாக இருந்தது. ‘நல்லா யோசிச்சுட்டீங்களா?’ என்ற போது தீர்க்கமாக யோசித்துவிட்டதாகச் சொன்னார். விருந்துக்கு வருகிறவர்களுக்கு ஆளுக்கு ஒரு பிரதி தருவதற்காகக் கேட்டிருக்கிறார். அவர்கள் மீது ஜென்மப் பகை இருக்கும் போலிருக்கிறது. பழி தீர்ப்பதற்காகக் கொடுக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். 

பிரகாஷூக்கு நன்றி. பிரதிகளை வாங்கியவர்கள், வாசித்தவர்கள், விமர்சனங்கள் அனுப்பியவர்கள் என அத்தனை பேருக்கும் நன்றி. 

பதிப்பாளருக்கு ஏக சந்தோஷம். அச்சிட்ட அத்தனை பிரதிகளும் விற்றாகிவிட்டது. பதிப்பாளரிடம் பிரதிகள் இல்லை. லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பனும் காலி. இனி அச்சிட்டால் அது நான்காம் பதிப்பு. மசால் தோசை 38 ரூபாயும் தீர்ந்துவிட்டது. இரண்டாம் பதிப்புக்குத் தயார். இப்பொழுது மூன்றாம் நதியும் இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. மூன்று புத்தகங்களின் மறுபதிப்புகளையும் விரைவில் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவரை விடவும் எனக்கு சந்தோஷம். ஒவ்வொரு புத்தகம் வெளிவரும் போதும் ‘வித்துடுமா’ என்று சந்தேகம் வராமல் இருந்ததில்லை. ஆனானப்பட்ட ரஜினிக்கே படம் ஓடுமா என்று கவாத்து வாங்குகிறது. திரையரங்குகளை மொத்தமாக அமுக்கி ‘வெற்றி வெற்றி’ என்று அறிவிக்கிறார்கள். நமக்கு பயம் வராமல் இருக்குமா? விற்காவிட்டால் ஒன்றும் குறைந்துவிடாதுதான். ஆனால் ‘அடுத்த புக்குக்கு வேற பதிப்பாளரை பார்த்துக்குங்க’ என்று சொல்லிவிடுவார்களோ என்ற குழப்பம்தான். அப்படிச் சொல்லிவிட்டால் இப்படியொரு இனாவானா பதிப்பாளருக்கு எங்கே போவது? 

அடுத்த நாவலை எழுதச் சொல்லியிருக்கிறார். ஆரம்பித்திருக்கிறேன். வெள்ளாஞ்செட்டி என்று நாவலுக்குத் தலைப்பு. வெள்ளாஞ்செட்டி என்பது ஒருவரின் பெயர். எங்கள் வீட்டில் குடியிருக்கிறார். வெளியூர்வாசி. முப்பதாண்டுகளுக்கு முன்பாக குடி வந்தவர் அக்கம்பக்கத்து ஜமீன்களில் எல்லாம் வேலை செய்திருக்கிறார். அவரிடம் ஊர்ப்பட்ட கதைகள் இருக்கின்றன அவரிடம். அவரிடம் பேசிப் பேசி சேகரித்து வைத்திருக்கிறேன். அப்படியே கதையாக மாற்றாமல் வேறு சில நகாசு வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. சமீபமாக உள்ளூரில் என்னை கவனிக்கிறார்கள் என்பதால் பாத்திரங்களின் பெயர்களை எல்லாம் மாற்றித்தான் எழுத வேண்டும். இல்லையென்றால் வாயை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். தோராயமான வடிவம் ஒன்று மண்டைக்குள் உருண்டு கொண்டிருக்கிறது. பிடித்து எழுதிவிட்டால் போதும். 

இணையத்தில் எழுதினாலும் கூட புத்தகமாக வெளிவருவதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது. நம் எழுத்துக்கு கவனமும் மரியாதையும் இருக்கிறதா என்பதை புத்தகமாக்கமும் அதன் விற்பனையும்தான் சுட்டிக்காட்டுகின்றன. விற்பனையின் வேகம், எண்ணிக்கை போன்றவற்றைப் பற்றி கவனம் கொள்வது ‘பாப்புலிஸத்தில்’ சேர்த்தி என்பார்கள். எழுதுகிறவன் விற்பனை குறித்து கவனம் கொள்ளக் கூடாது என்றெல்லாம் பேசுவார்கள். என்னைப் பொறுத்தவரையில் அப்படியெல்லாம் எதுவுமில்லை. புத்தகத்தை வாங்குகிறார்கள் என்றால் நாம் எழுதுவதை மதிக்கிறார்கள் என்று அர்த்தம். இன்றைக்கு ஆயிரம் பிரதிகள் விற்றால் நாளைக்கு இரண்டாயிரம் பிரதிகள் விற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு எதுவுமில்லை. அப்படியொரு ஆசையை உள்ளூர வைத்துக் கொண்டு வெளியில் நடிப்பதுதான் தேவையில்லாத வேலை.

எழுத்து, பதிப்பு, விற்பனை, எழுத்தாளன் என்பதெல்லாம் ஒன்றுக்குள் ஒன்றுதான். 

இன்றைக்கு நிறையப் பேர் வாசிக்கிறார்கள். பல தளங்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். சுவாரஸியமாக இருந்தால் வாசிக்கிறார்கள். வாசிப்பின் வழியாக எதையாவது தெரிந்து கொள்ள முடியுமா என்று தேடுகிறவர்களும் அதிகம். என்றைக்கும் இல்லாததையும் விட இன்றைக்கு புத்தக விற்பனை கொடி கட்டுகிறது என்பதுதான் உண்மை. ஆனால் இன்றும் கல்கியும், சாண்டில்யனும், சுஜாதாவும்தான் டாப் செல்லர்கள். 

யோசிக்க நிறைய இருக்கிறது. முன்பு இருந்ததைவிடவும் எழுத்தாளர்களின் பெயர் மிக எளிதில் சமூகத்தில் பரிச்சயமாகிவிடுகிறது. ஆயினும் விற்பனை என்று வந்துவிட்டால் நொண்டியடிக்கிறது. எந்தப் பதிப்பாளரும் இதை மறுக்கப் போவதில்லை. என்ன காரணம் என்றால் நிறைய காரணங்களை அடுக்கக் கூடும். இன்றைக்கு அச்சு ஊடகங்களில் எழுத்தாளர்களுக்கான இடம் அருகியிருக்கிறது. பிற எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. அவரவருக்கு தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்வதில்தான் மொத்த கவனமும் இருக்கிறது. தாம் மட்டுமே எழுத்தாளன் என்ற மனநிலையிலேயே முக்கால்வாசிப் பேர் இருக்கிறார்கள். ஒரு எழுத்தாளன் இன்னொரு புத்தகத்தை நேர்மையாக அறிமுகப்படுத்தி எழுதினால் பத்து பேராவது வாங்குவார்கள். இருபது எழுத்தாளர்கள் ஒரு புத்தகத்தைப் பற்றி பேசினாலே விற்பனை அதகளப்படும். அத்தனை புத்தகங்களைப் பற்றியும் பேச முடியாதுதான். ஆனால் முக்கியமான புத்தகங்கள் குறித்தாவது பேசலாம் அல்லவா? எங்கே பேசுகிறார்கள்?!

புத்தகங்கள் பற்றிய சில தரவுகளைத் தேடிக் கொண்டிருந்தேன். அமெரிக்காவில் அச்சிடப்பட்ட புத்தகங்களில் வெறும் 2%தான் ஐந்தாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்கின்றனவாம். அங்கேயும் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமானாலும் விற்பனையின் எண்ணிக்கை சரிந்து கொண்டுதான் இருக்கிறதாம். கிட்டத்தட்ட எல்லா பக்கமும் இப்படித்தான் போலிருக்கிறது. நாம் மட்டும்தான் விற்பனையான புத்தகங்களை மட்டும் தொங்கிக் கொண்டு ‘அய்யகோ ஹாரிபாட்டர் அளவுக்கு தமிழ்நாட்டில் எந்தப் புத்தகமும் விற்கலையே’ என்று பேசிக் கொண்டிருக்கிறோமோ என்று குழப்பமாக இருக்கிறது.

சரி, இருக்கட்டும்.

எப்படியோ விற்றுவிடுகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படியே இருக்கட்டும். எதற்கு குழப்பமெல்லாம்?!

4 எதிர் சப்தங்கள்:

விஜயன் said...

நல்ல விசயம்.புதுமனை புகுவிழாக்கு புத்தகங்கள்...

Thangavel Manickam said...

வாம உங்களின் மூன்றாம் நதி புத்தகத்தை என்னால் படிக்கவே முடியவில்லை. முதல் பக்கத்தைப் படித்ததும் முடிவு இப்படித்தான் செல்லும் என்று எளிதில் யூகித்து விட்டேன். உங்களின் எழுத்து ஒரு விதமான சோக போதையை உருவாக்குகிறது. மாற்றிக் கொள்ளுங்கள். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் கொண்டாட்டமானது. அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. வாழ்க்கையை வெகு எளிதாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடும் எதார்த்தப் போக்கில் வாழ்பவர்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க எந்த எழுத்தாளர்களும் விரும்புவதில்லை. ஆனால் வெளியிருந்து பார்த்து, தன்னைச் சுற்றி நடக்கும் ஒரு சில சம்பவங்களை வைத்துக் கொண்டு எழுத்தினை புனைந்து விடுகிறார்கள். இது சுத்த அபத்தம். அந்த அபத்தத்தின் விளைவே மூன்றாம் நதி எனத் தோன்றுகிறது. வேறு வழியில்லை. அருவி போல கொட்டும் உங்கள் எழுத்து வேறு வகை உச்சத்தைத் தொட வேண்டுமென்று தான் எழுதுகிறேன். உங்கள் புத்தகத்தை விமர்சிப்பதால் கவனம் கிடைக்கும் என்று நினைப்பவனல்ல. அந்தக் கவனங்கள் எனக்கு எந்த வித நன்மையையும் செய்து விடப்போவதில்லை என்பது உண்மை. ஆகவே வாம---

சேக்காளி said...

//லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பனும் காலி. இனி அச்சிட்டால் அது நான்காம் பதிப்பு. மசால் தோசை 38 ரூபாயும் தீர்ந்துவிட்டது. இரண்டாம் பதிப்புக்குத் தயார். இப்பொழுது மூன்றாம் நதியும் இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. மூன்று புத்தகங்களின் மறுபதிப்புகளையும் விரைவில் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார்.//
யோவ்!!!!!!!!!என்னய்யா சொல்லுத.பொய்யி கிய்யி புளுகலியே.

Anonymous said...

புது வீட்டுக்கு போனா கவித புத்தகமா? சில்லறை இல்லன்னு பிஸ்கட் பாக்கட்ட கொடுத்த மாதிரி, எங்க இனிமே கவித புத்தகங்கள் கொடுத்திடுவாங்களோன்னு பயமா இருக்கு...(விளையாட்டுக்குத்தான்)