Sep 16, 2016

அக்னிக்குஞ்சுகள்

விக்னேஷ் இறந்துவிட்டான். திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ் பாண்டியன். இரண்டு நாட்களுக்கு இந்தப் பெயரைப் பேசுவார்கள். முத்துக்குமார் எரிந்து கருகிய போதும் இப்படித்தான் பேசினார்கள். செங்கொடி தீக்கு தன்னை இரையாக்கிய போதும் இதே மாதிரிதான் பேசினார்கள். இதற்கும் முன்பு எத்தனையோ பேர் எரிந்து வீணாகப் போனார்கள். மண்டல் கமிஷன் போராட்டத்திலிருந்து, தன் தலைவனை கட்சியை விட்டு நீக்குகிறார்கள் என்பது வரை எத்தனையோ காரணங்களுக்காக இளைஞர்களை தீ காவு கொண்ட மண் இது. முத்துக்குமார் ஞாபகத்தில் இருக்கிறான். செங்கொடி நினைவில் இருக்கிறாள். அதற்கு முன்பாகச் செத்துப் போன எத்தனை பேர்களை வரலாறு நினைவில் வைத்திருக்கிறது? ஒவ்வொரு சாவும் இந்தச் சமூகத்துக்கு வழங்கிய நியாயம் என்று ஏதாவது இருக்கிறதா? வெந்து கிடக்கும் கறியைத் தின்று வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளைத்தாண்டி இந்தச் சாவுகளினால் சமூகத்துக்கு பத்துப் பைசா பிரயோஜனம் உண்டா? இனி காலகாலத்துக்கும் செத்துப் போனவனின் குடும்பம் வெம்பிக் கிடக்கும். பெற்றவர்கள் இனி வேறொரு மனிதனின் தயவை எதிர்பார்த்துதான் காலம் கடத்துவார்கள். தம் குடும்பத்தை அநாதையாக விட்டுவிட்டுப் போகிறார்கள் செத்துப் போகிறவர்கள்.

பால்யம் வடியாத முகம் கொண்ட இளைஞனெல்லாம் வெறி கொண்டு பேசியபடியே கொளுத்திக் கொள்வது பரிதாபமாக இருக்கிறது. அக்னிக்குஞ்சொன்று கண்டு அதை ஆங்கோர் காட்டினில் பொந்திடை வைத்தால் காடு வெந்து தணியும் என்று பாரதி எழுதியது தன்னைத்தானே கொளுத்திக் கொள்கிற அக்னிக்குஞ்சுகளைச் சுட்டிக்காட்டியில்லை. இந்த இளைஞர்கள் அப்படித்தான் தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். தாம் கருகிப் போனால் மொத்தச் சமூகத்திற்கும் விடிவுகாலம் பிறந்துவிடும் என்று நம்புகிறார்கள். இத்தகைய நம்பிக்கை வெற்றுக் கூடு. பெரும்பான்மைச் சமூகத்தை இல்லை- அதன் குறைந்தபட்ச கவனத்தைக் கூட நம் பக்கம் திருப்பிவிட முடியாது என்பதுதான் துக்ககரமான நிதர்சனம். செய்தித்தாள்களில் மூன்று அல்லது நான்காம் பக்கத்தில் கால்பக்கம் செய்தி வெளியிடுவார்கள். ஒரு சில தொலைக்காட்சிகளில் போகிற போக்கில் ஒற்றை வரியில் வாசித்துவிட்டுச் செல்வார்கள். ‘அறிவுகெட்டவன்’ என்று சாமானியன் சாதாராணமாகச் சொல்லிவிட்டுக் கடந்து செல்வான். கொளுத்திக் கொள்கிற அக்னிக்குஞ்சுகள் எந்தக் காலத்திலும் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என்பதை எப்பொழுது புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. முத்துக்குமார் தனது உடலை ஆயுதமாக்கச் சொல்லிவிட்டுச் செத்தான். என்ன செய்தார்கள்? அவசர அவசரமாக எடுத்துப் புதைத்து மண் மேட்டின் மீது நீரைத் தெளித்து புல் முளைக்கச் செய்தார்கள். இதுதான் நடக்கும். எந்த இளைஞனின் உயிரும் இதையெல்லாம் திசை மாற்றிவிட முடியும் என்பதெல்லாம் நிறைவேறாக் கனவுகள்தான்.

நாம் தமிழர் இயக்க ஊர்வலத்தில் விக்னேஷ் கொளுத்திக் கொண்டான் என்பதற்காகச் சீமானை வசைபாட வேண்டிய அவசியமில்லை. அவர் அவனைக் கொளுத்திக் கொள்ளச் சொல்லவில்லை. ஆனால் சீமானுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அவரை இளங்கூட்டம் நம்புகிறது. பதினைந்து முதல் இருபத்தைந்து வயது வரையிலான நிறைய இளைஞர்கள் அவரைப் பின் தொடர்கிறார்கள். இந்தப் பருவத்தில் உசுப்பேற்றப்படும் இளைஞர்கள் எதைச் செய்யவும் தயாராகிறார்கள். இவர்களின் வேகத்தை மட்டுப்படுத்தி பண்பட்டவர்களாகவும் அறிவை ஆயுதமாக்குகிறவர்களாகவும் திசை மாற்ற வேண்டிய பெருங்கடமையை அவர் தலையில்தான் இறக்க வேண்டியிருக்கிறது. 

அரசியல் இயக்கங்கள் என்று இல்லை- பொதுவாகவே சமீபகாலத்தில் இளைஞர்களிடம் கண்மூடித்தனமான வேகத்தை உணர முடிகிறது. சாதியக் குழுமங்களில் இயங்குகிறவர்கள், இனம், மொழி, மதம் என்ற ஏதேனுமொரு சித்தாந்தத்தோடு தங்களை இணைத்துக் கொண்டு இயங்குகிறவர்களில் பெரும்பாலானவர்கள் உணர்ச்சிப்பூர்வமான வேகத்தோடுதான் செயல்படுகிறார்கள். சற்றே பயமாகவும் இருக்கிறது. இனம், மொழி, சாதி, அரசியல் என்றே எதுவும் இருக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லவில்லை. அப்படி இல்லாமல் போவதற்குமான வாய்ப்பும் இல்லை. அவை இருந்து கொண்டுதான் இருக்கும். இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் எதிர்தரப்பின் மீது வன்மம் கக்காத மனிதர்களை உருவாக்க வேண்டிய பெருங்கடமை அதனதன் தலைவர்களுக்குத்தான் இருக்கிறது.

சில சாதிய மாநாடுகள், அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் கூடல்கள், மதக் கூட்டங்களின் சலனப்படங்களையெல்லாம் பார்க்கும் போது திக்கென்றிருக்கிறது. தங்களின் சித்தாந்தங்களைத் தூக்கிப்பிடிப்பதைவிடவும் எதிர்தரப்பைத் தாக்க வேண்டும் என்பதைத்தான் திரும்பத் திரும்ப உருவேற்றுகிறார்கள். தம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமானால் எதிர்த்தரப்பை அழித்தே தீர வேண்டும் என்கிறார்கள். இதுவொரு வகையிலான மிருகக்குணம். புலி தான் வாழும் இடத்தில் வேறொரு புலியை அனுமதிப்பதில்லை. தெருநாய் கூட தனது தெருவுக்குள் இன்னொரு நாய் வருவதை அனுமதிப்பதில்லை. இதே உணர்வை மனிதர்களுக்குள்ளும் விதைப்பதாக இருந்தால் நம்மையெல்லாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? நாகரிகம், படித்தவர்கள் என்றெல்லாம் போலியாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டியதில்லை அல்லவா? 

உணர்ச்சிகளைத் தூண்டி எதையும் சாதித்துவிட முடியாது என்று உறுதியாக நம்பலாம். ஆயுதங்கள் நிரம்பி வழியும் இந்தக் காலகட்டத்தில் எவ்வளவு பெரிய ஆயுதத்தை நாம் ஏந்தினாலும் அதற்கு இணையான அல்லது அதைவிடவும் வீரியமிக்க ஆயுதத்தை எதிரியால் தூக்கிவிட முடியும். அறிவாயுதம் ஏந்துவோம் என்பது இந்தக் கட்டத்தில்தான் முக்கியமானதாகிறது. ஒரு பிரச்சினையின் ஆழ அகலங்களைப் புரிந்து கொண்டு அதை தர்க்க ரீதியாக விவாதிக்கும் கூட்டம் உருவாக்கப்பட வேண்டும். உணர்ச்சி பொங்கச் செயல்படுகிற இளைஞர்கள் எந்தக் காலத்திலும் வலுவான சமூகத்தை உருவாக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை. தாலிபான்களும், ஐஎஸ் தீவிரவாதிகளும் ‘எதிரிகளை அழிப்போம்’ என்கிற அதிதீவிர வன்மத்தோடு செயல்படுகிற காலத்தில் சலசலப்புகளை உண்டாக்கலாமே தவிர அவர்கள் எந்தக்காலத்திலும் தங்களது லட்சியத்தை அடையவே முடியாது. 

தமிழக இளைஞர்களை மேற்சொன்ன தீவிரவாதிகளுடன் ஒப்பிடுவதாக அர்த்தமில்லை- ஆனால் பிரச்சினையின் அடிநாதத்தைப் பற்றி அறிவுப்பூர்வமாக விவாதித்துத் தமது உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுக்கிறவன்தான் தான் சார்ந்திருக்கும் சமூகத்தை வலுமிக்கதாக மாற்றுகிறான்.

தம்மை எரித்துக் கொள்ளும் இளைஞர்களின் மீது மரியாதை இல்லாமல் இல்லை. ஆனால் அவர்களது குடும்பம், அவர்களின் கனவுகள் போன்றவற்றையெல்லாம் நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது. எந்தப் பெரிய பலனுமில்லாமல் நகரங்களின் கருஞ்சாலையில் கருகிப் போகிற இந்த இளைஞர்களோடு சேர்த்து தலைமுறைக் கனவுகளும் தம்மைக் கொளுத்திக் கொள்கின்றன. இவர்களது வீரமும் உணர்ச்சியும் வேறொரு வகையில்தான் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டுமே தவிர கரிக்கட்டையாக்கப்படக் கூடாது.

அறிவை ஆயுதமாக ஏந்துவோம் என்கிற பேச்சு திரும்பத் திரும்ப நினைவூட்டப்படட்டும். ஒரு பிரச்சினையின் அடிநாதத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ளும் போது இத்தகைய உணர்ச்சி மிக்க முடிவுகளை மேற்கொள்ளமாட்டார்கள். அத்தனை பிரச்சினைகளையும் தர்க்க ரீதியாக அணுகி அறிவார்ந்த தீர்ப்புகளை முன்னெடுக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்குகிறவன்தான் உண்மையான தலைவனாக இருக்க முடியும். சீமான் மாதிரியானவர்கள் அத்தகைய தலைவர்களாக உருவாக வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

விக்னேஷுக்கு மனப்பூர்வமான அஞ்சலிகள். அவரது குடும்பத்திற்கு ஆன்மபலம் கிடைக்கட்டும்.

7 எதிர் சப்தங்கள்:

BalajiMurugan said...

### தம்மை எரித்துக் கொள்ளும் இளைஞர்களின் மீது மரியாதை இல்லாமல் இல்லை. ### இது போன்ற மரியாதைக்காகவும் தற்கொலைகள் நடைபெறுகின்றன... பெரும்பாலான கூட்டங்களில் செங்கொடி படமும், முத்துகுமார் படமும் இருக்கும்... அத்தியாகத்தை உச்சி முகர்ந்து கொக்கரிப்பார்கள்... வருத்தப்டவேண்டிய ஒன்றுதான்...மனம் வலிக்கிறது... ஆனாலும் உதாசினப்படுத்தினால் தான் அரசியல் தற்கொலைகள் குறையும். உச்சி முகர்ந்தால் எந்த காலத்திலேயும் குறையாது...

sonaramji said...

மிகவும் அருமையான பதிவு

சேக்காளி said...

// ‘அறிவுகெட்டவன்’ என்று சாமானியன் சாதாராணமாகச் சொல்லிவிட்டுக் கடந்து செல்வான்.//
(கசப்பான)உண்மை அது தானே.

vijayan said...

தமிழ் சமூகத்திற்கு திராவிட இயக்கங்கள் கொடுத்த கொடை,நான் பார்த்த வரையில் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்திலிருந்து இது தொடர்கிறது.ஆனால் செத்தவன் எல்லாம் தொண்டனே ,குறைந்த பட்சம் ஒரு வட்ட செயலாளர் அளவில் கூட எவனும் செத்ததில்லை.vijayan,kn.

Paramasivam said...

//அறிவு கெட்டவன் என சாமானியன் சொல்லி விட்டு செல்வான்// இந்த உலகில் 99 சதவீத மக்கள் சாமாநியங்கள் தான், நான் உள்பட. இது தான் உண்மை. என் செய்வது? ஆயினும், நீங்கள் கூறுவது போல் தலைவர்களுக்கு தான் மிகப் பெரும் பொறுப்பு. இவர்களை தடம் மாறாது நல்ல ஆக்க பூர்வ வழியில் நடாத்தி செல்வது தான். தவறு நேராது , தார்மீக பொறுப்பு உள்ள அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் .

Vaa.Manikandan said...

@Punith Bala, மரியாதை என்பது வீரவணக்கம், செவ்வணக்கம் மாதிரியான மரியாதை இல்லை. மனிதாபிமான அடிப்படையிலான மரியாதை. செங்கொடியின் படத்தையும், முத்துக்குமாரின் படத்தையும் அத்தனை இயக்கங்களும் பயன்படுத்துவதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

Karthik.vk said...

மிக நல்ல பதிவு அண்ணா..நான் இளங்கலை படிக்கிற போது உணர்ச்சிவசப் பட்டு எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தேன்...அதையெல்லாம் மாற்ற சிறந்த வழியாக புத்தக வாசிப்பினை கருதி படித்தேன்..சுராவின் சில புத்தகங்கள் மனதை ஆழ்ந்து பக்குவப் படுத்தும் நோக்கம் கொண்டவை...வாசிப்பு நம்மை பண்படுத்தும்..உணர்ச்சிவசப் படும் இதயத்தில் சில உண்மையான விதைகளை விதைக்கும்...