Sep 12, 2016

நன்றி

சனிக்கிழமையன்று இரண்டு பள்ளிகளில் நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்ட தொடுதிரையுடன் கூடிய மதி வகுப்பறை (Touch screen based smart class) திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வெள்ளிக்கிழமை மாலையிலேயே இரு பள்ளிகளுக்கும் சென்றிருந்தேன். ஒளி, ஒலியமைப்பு துல்லியமாக இருந்தது. இவ்வளவு தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தீபகன் அர்பணிப்போடு அமைத்துக் கொடுத்திருக்கிறார். பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பெரும்பாலான மென்பொருட்களையும் அவரே தரவிறக்கம் செய்து கொடுத்திருக்கிறார். அவருக்கு தனியாக நன்றி சொல்ல வேண்டும்.

(புனித திரேசாள் ஆரம்பப்பள்ளி)


வைரவிழா பள்ளியில் பள்ளியின் அறக்கட்டளைத் தலைவர் திரு.வெங்கடேஸ்வரன் திறந்து வைத்தார். திரேசாள் பள்ளியில் உதவி ஆட்சியர் மெர்சி ரம்யா திறந்து வைத்தார். பதினோரு மணிக்கு திரேசாள் பள்ளியில் பேசிக் கொண்டிருந்த மெர்சி ரம்யாவை வைரவிழா பள்ளி ஆசிரியர்களும் தங்கள் பள்ளிக்கு வருமாறு அழைத்தார்கள். அவரும் மறுப்பேதும் சொல்லாமல் வைரவிழா பள்ளியிலும் பேசினார். குழந்தைகளுக்கு ஏற்ப கதைகளைச் சொல்லி பேசினார். மாணவர்கள் அவர் பேசுவதை நுட்பமாக கவனித்தார்கள். அதைத்தான் எதிர்பார்த்திருந்தோம். குழந்தைகளுக்காக பேசுகிறவர்கள் தேவை இருந்து கொண்டேயிருக்கிறது. அதுவும் கிராமப்புற மாணவர்களிடம் உயரத்தில் இருக்கிறவர்கள் பேச வேண்டியிருக்கிறது. குழந்தைகளிடம் அவர்களுக்கான மொழியில் தங்களின் தொனியை மாற்றிப் பேசுகிற கலை ரம்யாவுக்குத் தெரிந்திருந்தது. 

திறப்புவிழா நிகழ்ச்சியெல்லாம் முடிந்து சனிக்கிழமை மதியம் ஓரளவு ஆசுவாசமாக இருந்தது. நிகழ்வுக்குப் பிறகு வைரவிழா ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களும் திரேசாள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகச் சொன்னார்கள். ‘இதை ஒரு முன்னோட்டமாகச் செய்கிறோம். உங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் தமிழகத்தின் பிற பள்ளிகளிலும் செயல்படுத்துகிற முயற்சிகளைச் செய்வோம்’ என்று சொன்ன போது மூன்றே மாதங்களில் கற்பித்தலில் நிறைய மாறுதல்களை உருவாக்கிவிட முடியும் என்றார்கள். உற்சாகத்தில் சொல்கிறார்களா அல்லது உண்மையாகவே சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது. 

ஆசிரியர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிய வகையில் சிறு தயக்கம் தெரிந்தது. ‘உபகரணங்களைப் பயன்படுத்துகிற போது அந்த உபகரணங்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ’ என்ற மெல்லிய பயத்தை வெளிப்படுத்தினார்கள். நல்லவேளையாக நேற்று கெளதீஸ்வரன் அழைத்தார். தனியார் பொறியியல் கல்லூரியொன்றில் விரிவுரையாளராக இருக்கிறார். தன்னால் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சியைக் கொடுக்க முடியும் என்றார். நல்லதாகப் போய்விட்டது. இன்று திரேசாள் பள்ளியில் தொடுதிரை வகுப்பறையைப் பயன்படுத்தும் முறைகளை விளக்கி அவர் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார். அத்தனை ஆசிரியர்களும் கலந்து கொள்கிறார்கள். 

‘நீங்க மேற்பார்வை மட்டும் செய்யுங்க..ஆசிரியர்களே இயக்கட்டும்’ என்று மட்டும் கெளதீசிடம் சொல்லியிருந்தேன். பயிற்சி அப்படித்தான் நடைபெறுவதாகக் குறுஞ்செய்தி வந்திருக்கிறது. இனி அத்தனை ஆசிரியர்களும் தொடுதிரை வகுப்பறையை இயக்கக் கூடும். கெளதீஸ்வரனுக்கு நேரமிருப்பின் வைரவிழா பள்ளியிலும் ஒரு நாள் பாடம் எடுக்கச் சொல்லிக் கேட்க வேண்டும். 

(வைரவிழா முதல் நிலைப்பள்ளி)

திறப்புவிழா நிகழ்வுக்கு மாணவர்களின் பெற்றோர்களும் வந்திருந்தார்கள். அவர்களுக்கும் சந்தோஷம். ‘இதெல்லாம் இங்கிலீஷ் ஸ்கூலில்தான் இருக்கும்ன்னு நினைச்சுட்டு இருந்தோம்’ என்றார்கள். அவர்களிடம் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்திருக்கிறேன். 

மூன்று மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தின் உட்பகுதிகளில் இயங்கும் அதே சமயம் துடிப்பான தலைமையாசிரியர்களைக் கொண்ட பள்ளிகளைக் கண்டறிந்து இரண்டு அல்லது மூன்று பள்ளிகளில் தொடுதிரையுடன் கூடிய மதி வகுப்பறைகளை அமைத்துக் கொடுக்கலாம் என்கிற திட்டமிருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல நிதி ஆதாரம் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளை மட்டுமே தேர்ந்தெடுக்கலாம்.

ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறோம். smart class என்பது குறைந்தபட்சமான விளைவுகளையாவது மாணவர்களுக்கு உருவாக்கிவிடும் என்று நம்பலாம். இந்தச் செயலுக்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி.

தொடர்ந்து செயல்படுவோம்.

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//‘இதெல்லாம் இங்கிலீஷ் ஸ்கூலில்தான் இருக்கும்ன்னு நினைச்சுட்டு இருந்தோம்’ என்றார்கள். அவர்களிடம் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்திருக்கிறேன்//
ஒமக்கு புன்னகை யா இருக்கலாம். ஆனா மத்தவங்களுக்கு அதுதான் நம்பிக்கை.
வாழ்த்துக்கள் மணி.

Muthu said...

அக்னியே எழுக :)

கொமுரு said...

அன்பு மணிகண்டன் ,
இதற்கு என்ன செலவாகும் ? எங்கள் ஊரில் எங்கள் சொந்த செலவில் அரசு ஆரம்ப பள்ளிக்கு அமைத்து கொடுக்கலாம் என்று எண்ணம். (திருசெங்கோடு அருகில் ). தயவு செய்து விபரங்களை kumarasamy33@gmail.com க்கு மெயில் அனுப்பவும் . தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .

குமாரசாமி