நேற்று மதியத்திற்கும் மேலாக ராஜாஜி நகர், மைசூரு ரோடு உள்ளிட்ட இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இன்று காலை நிலவரப்படி மாகடி சாலை, விஜயநகர், சந்திரா லே-அவுட், யஸ்வந்த்புரா, பீனியா, ராஜாஜி நகர், நந்தினி லே-அவுட் உட்பட பதினாறு காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. காலை பதினோரு மணி வரைக்கும் குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. நேற்றைய இரவிலும் நகரம் அமைதியாகவே இருந்திருக்கிறது.
நேற்றிரவு அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது போது நேரலை தமிழ் செய்திக்காக ஒரு தொலைக்காட்சியிலிருந்து அழைத்தார்கள். எம்.ஜி.ரோட்டில் ஆரம்பித்து கோரமங்களா, ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட், மங்கமன்பாளையா, பொம்மனஹள்ளி வழியாக வீட்டிற்கு வந்தேன் என்றும் இந்தப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அசம்பாவிதம் எதுவும் தென்படவில்லை எனவும் வட பெங்களூரில் கலவரங்கள் நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருவதாகச் செய்திகள் வருகின்றன என்று சொல்லிக் கொண்டிருந்த போதே இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள். எழுத்தாளர் சொக்கனுக்கும் இதே அனுபவம்தான். அவர் பிடிஎம் லே-அவுட், சில்க் போர்ட் போன்ற பகுதிகளில் பிரச்சினை இல்லை என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது. தன்னைப் பேசவே அனுமதிக்கவில்லை என்றார்.
ஊடகங்கள் காரஞ்சாரமான செய்திகளைத்தான் விரும்புகின்றன.
தமிழனுக்கும் கன்னடத்தவனுக்கும் பிரச்சினையென்று வரும் போது பெங்களூர்வாசிகளைவிடவும் அதிகம் பாதிக்கப்படப் போவது சாம்ராஜ்நகரிலும், குண்டுலுபேட்டிலும், நரசிங்கபுரத்திலும் என தமிழக கர்நாடக எல்லை முழுக்கவும் ஐந்து ஏக்கரும் பத்து ஏக்கருமாக குத்தகைக்கு இடம் பிடித்து வேளாண்மை செய்து கொண்டிருக்கும் தமிழர்கள்தான். பெங்களூரு மட்டுமே கர்நாடகா இல்லை. பெங்களூரில் வீட்டைப் பூட்டிக் கொண்டு இருந்து கொள்ளலாம். ஒரு மாதம் வேலைக்கு விடுப்பு எடுத்தாலும் கூட எதுவும் ஆகிவிடாது. ஆனால் மேற்சொன்ன பகுதிகளில் இதெல்லாம் சாத்தியமில்லை. விவசாய பூமிகளை அழிப்பதும், டிராக்டர்களை அடித்து நொறுக்குவதும், தமிழ் விவசாயிகளின் கால்நடைகளை நாசம் செய்வதும் நிகழ்ந்தால் அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் கரைந்து போய்விடும். தமிழகத்தில் அதிகபட்சமாக ஐந்து சதவீத கன்னடர்கள் வாழக் கூடும். ஆனால் கர்நாடகத்தில் வாழக் கூடிய தமிழர்களின் எண்ணிக்கை சதவீதத்தில் மிக அதிகம். அவர்களையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு ஊடகங்கள் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
நேற்றிலிருந்து கருந்தேள் ராஜேஷ், சொக்கன், சிவராம் உள்ளிட்ட பெங்களூர் நண்பர்களின் ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்த்த போது அவர்கள் சொல்வதையெல்லாம் வெளியில் இருப்பவர்கள் யாரும் நம்புவதாகவே தெரியவில்லை. எனக்கும் இதே அனுபவம்தான். இதே ஊரில் வாழ்கிறவர்கள் சொல்வதைவிடவும் ஊடகங்கள் சொல்வதைத்தான் மனம் நம்புகிறது. இவர்கள் பெங்களூருவின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கிறவர்கள். சொக்கன் இத்தகையவர்களிடம் விவாதிக்க முடியாது என்று தான் எழுதியவற்றையெல்லாம் அழித்துவிட்டார். கருந்தேள் ராஜேஷ் இன்றைக்கும் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
‘கே.பி.என் பேருந்துகளை எரித்தது உண்மையில்லையா?’ ‘தமிழ் வண்டிகளை கன்னட வெறியர்கள் தாக்கியது உண்மையில்லையா?’ ‘தமிழ் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிக்கப்பட்டது உண்மையில்லையா?’ என்று கேட்டால் இதையெல்லாம் யாரும் மறுக்கவில்லை. நடந்திருக்கின்றன. மறுத்து யாரைக் காப்பாற்றப் போகிறோம்? எச்சரிக்கையாக இருக்க வேண்டியதில்லை என்றும் யாரும் சொல்லவுமில்லை. ஆனால் ஊடகங்களில் இங்கேயிருக்கும் நிலைமையைவிடவும் அதீதமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது.
நன்றாகத் தெரிந்தவர்கள் கூட ‘பொறுப்பில்லாமல் எழுதாதீர்கள்’ என்றும் ‘சப்பைக் கட்டு கட்டாதீர்கள்’ என்றும் சொல்லும் போதுதான் வேதனையாக இருக்கிறது. பிரச்சினைகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆனாலும் பதற்றப்படாமல் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வதுதான் பொறுப்பானதாக இருக்க முடியுமே தவிர, ‘இங்கே எங்களை எல்லாம் கொல்லுகிறார்கள்; அங்கே நீங்கள் கன்னடத்தவர்களை அடித்து நொறுக்குங்கள்’ என்று வெளியூர்க்காரர்களை உசுப்பேற்றுவது பொறுப்பாக இருக்காது.
பெங்களூருவில் பதற்றம் இருக்கிறது. வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த பெங்களூருவிலும் இப்படி நடக்கவில்லை என்பதுதான் உண்மை. அலுவலங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறையளிக்கப்பட்டிருக்கின்றன. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அசாதாரண அமைதி நிலவுகிறது.
தமிழக வாகன ஓட்டிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் லாரி ஓட்டுநர்கள். ஆனால் வீடுகளில் வசிப்பவர்கள் மீதும் பணியாளர்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் இல்லை. டயர்களை எரித்து நடத்தப்பட்ட போராட்டங்களைக் கூட வாட்ஸப்பில் வாகனத்தை எரித்ததாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட். அங்கே டயர்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வாட்ஸப்பில் தமிழக வண்டி எரிக்கப்பட்டதாகச் செய்தி வந்திருக்கிறது.
நேற்றிரவு பத்தரை மணிக்கு பெங்களூரில் வாழும் தமிழ் செய்தியாளர் ஒருவரிடம் பேசிய போது ‘மத்தியானம் வரைக்கும் ராமேஸ்வரத்தில் கன்னடத்துக்காரர் தாக்கப்படுவதைத்தான் திரும்பத் திரும்ப ஒளிபரப்பினாங்க...கவனிச்சீங்களா?’ என்றார். அலுவலகத்தில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை. வெறியேற்றியிருக்கிறார்கள். மதியத்திற்கு மேலாக பிரச்சினைகள் ஆரம்பித்திருக்கின்றன. இன்று காலையிலிருந்து கவனித்ததில் நேற்று பெங்களூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டை திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ‘பூர்விகா மொபல் நிறுவனத்தை உடைத்தார்கள்’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஹிண்ட் கொடுக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்து அணைத்துவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டேன்.
அதே ஊடக நண்பரிடம் ‘நாளைக்கு நிலைமை சகஜமாகிடுமா?’ என்று கேட்ட போது ‘சந்தேகம்தான்’ என்றார். நல்லவேளையாக நேற்றைய தினத்தைவிடவும் இன்றைய தினம் பரவாயில்லை. அலுவலகத்தில் மிகக் குறைவானவர்களே வந்திருக்கிறார்கள். நகரப் பேருந்துகள் ஒன்றிரண்டு மட்டும் ஓடிக் கொண்டிருக்கின்றன. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சில மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், ஒன்றிரண்டு உணவு விடுதிகள் செயல்படுகின்றன. ஆட்டோக்கள், மகிழ்வுந்துகள், இருசக்கர வாகனங்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன. திரும்பவும் சொல்கிறேன். இது ஓசூர் பிரதான சாலை, எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மதியம் பனிரெண்டு மணியளவிலான நிலவரம். ‘தெருவுக்குள் சுற்றிப்பார்த்துவிட்டு வந்து நகரமே நல்லா இருக்குன்னு எழுதுறியா?’ என்று நக்கலாகக் கேட்டவர்களுக்காக மேற்சொன்ன இடங்களைத் தெளிவாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட பதினேழு கிலோமீட்டர் தூரம் இதுதான் நிலவரம். வட பெங்களூரில் நிலவரம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.
இந்தக் கலவரத்தில் அரசியல் கட்சிகள் பின்னணியில் இருக்கின்றன; சில இயக்கங்கள் வலு சேர்க்கின்றன, அவர்கள்தான் இதையெல்லாம் ஒருங்கிணைக்கிறார்கள் என்றெல்லாம் நிறையத் தியரிகள் வந்து கொண்டேயிருக்கின்றன. எதை நம்புவது எதை விடுவது என்று தெரியவில்லை. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒன்று- யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நானெல்லாம் வக்காலத்து வாங்கி எழுதி எதுவும் நடக்கப் போவதில்லை. முடிந்தளவுக்காவது பதற்றத்தைக் குறைக்கலாம் என்றுதான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். அதேசமயம் பதற்றத்தைக் குறைக்க விரும்புகிறேன் என்பதற்காக எதையும் இட்டுக்கட்டியும் சொல்லவில்லை. இடங்கள் நேரம் குறித்துத் தெளிவாக எழுதியிருந்தேன். எழுதியிருக்கிறேன். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி தமிழனை அடி வாங்கி வைக்க விரும்புகிறவனாகவும் நான் இல்லை. என்னை நம்பலாம்.
ஒன்றை மட்டும் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும். Be safe. அதே சமயம் Be very very responsible and dont believe everything and everyone.
நன்றி.
8 எதிர் சப்தங்கள்:
ஜி..
முழுமையாக உங்க கருத்தோடு ஒத்துப்போகிறேன். வர வர இந்த சோஷியல் மீடியா மீது வெறுப்புதான் வருது.
எத சொன்னாலும் பாதி பேர் நம்புறானுக, மிதி பேர் ட்ரோல் பண்றங்க .. கரெண்ட் இஸ்ஸு பத்தி போஸ்ட் போடடாதான் போராளின்னு நம்புறாங்க.. ஒரு பிரபலம் சுதீப்ப பிடிக்கும் அதனால பொங்காதாம்.. இன்னொன்னு ரஜினியையும் விசாலையும் ஒரண்டைக்கு இழுக்குது.
எல்லோருக்கும் சமூக பொறுப்பு இருக்கு, சுய சிந்தனையும் இருக்கு. ஆனா, ஒரு நம்பிக்கைக்குரிய ஒருவர் சொல்லும் போது சுய சிந்தனையை மீறி அவர் கருத்துக்களை ஆமோதிக்கும் மனநிலை ஒரு எளிய வாசகனுக்கோ, நண்பருக்கோ வரக்கூடுமில்லையா.?
அட்றாஸிட்டி பண்ணும் சில பதிவர்களின், பிரபலங்களின் மூளை சலவை செய்யும் பதிவுகளின் உண்மைத்தன்மை அறியாமல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது எவ்வளவு பெரிய குரூரத்தையும் விஷமத்தையும் வளக்குது தெரியுமா.
இந்த முகநூலின் பதட்டமான சூழலை தவிர்க்க பாசிட்டிவ் பதிவுகளும் வேணும், உங்க பதிவுகளை நிறைய பேர் படிக்கிறோம், உள்ளதை உண்மையை தொடர்ந்து எழுதுங்க, வசைகளையும் எள்ளல்களையும் புறந்தள்ளிவிட்டு தொடருங்க.
சட்டத்தையும் சத்தியத்தையும் நம்புவோம். பாவம் தமிழனாச்சே.!
‘மத்தியானம் வரைக்கும் ராமேஸ்வரத்தில் கன்னடத்துக்காரர் தாக்கப்படுவதைத்தான் திரும்பத் திரும்ப ஒளிபரப்பினாங்க...கவனிச்சீங்களா?’ - உண்மை.
மதியம் வரை அல்ல , சாயந்திர நேரத்திலும் அப்படிதான் காண்பித்தார்கள். குறிப்பாக ஒரு டிவி கர்னாடகாவிற்கு எப்பொழுதுமே இப்படிதான் அநீதி இழைக்கிறார்கள் என்று பேசுகிறார்கள்.இராமேஸ்வரத்தில் ஒரு கன்னடத்தவர் தாக்க பட்டதால் தான் இப்பொழுது இவ்வளவு பிரச்சினை நடக்கிறது என்று செய்தி வாசிக்கிறார்கள், அதை மட்டும் திரும்ப திரும்ப காட்டினார்கள். சாயந்திர நேரத்திற்கு மேல் அதே சேனல் நாங்கள் வன்முறையை ஆதரிக்கவில்லை தூண்டவில்லை என்று இடைசெருகல் போட்டார்கள். கன்னடத்தவர்கள் (படித்தவர்களும்) காவிரி உற்பத்தி ஆவது குடகில் என்வே காவேரி கர்னாடகாவிற்கு தான் சொந்தம் என்று பேசுகிறார்கள். சுப்ரீம் கோர்ட்ட்டிற்கு தண்ணீர் திறக்க சொல்ல உரிமையில்லை என்று டிவி விவாத்தில் ஒருவர் சொன்னதை உண்மை என்று படித்தவர்களும் நம்புவது வேடிக்கையகவும் வேதனையாகவும் இருக்கிறது. முன்பெல்லாம் கிரீஷ் கர்னாட் போன்றவர்கள் தண்ணீர் திறப்பது நம் தார்மீக கடமை என் பேசி பார்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது அப்படி பட்டவர்களின் பேச்சுகளை ஒளிபரப்புவதில்லை. எறியும் தீயில் நெய் ஊற்றும் வேளையை தான் பெரும்பாலான் சேனல்கள் செய்து கொண்டிருக்கின்றன.
இங்கே இவர்களுக்கு அரசியல் தான் முக்கியம்.
பிரச்சனையின் யதார்த்தத்தை உணர வேண்டும்...அங்கங்கே சிறு பிரச்னைகள் நடந்தாலும் இந்த ஊடகங்கள் திரும்ப திரும்ப காண்பிப்பது போல் ஒன்றும் நடக்கவில்லை என்பதே உண்மை...
காவேரி அரசியலை வைத்து பிழைப்பை ஓட்ட வேண்டுமென்பது தமிழக, கர்நாடக அரசியல் கட்சிகளின் நிலை...உச்ச நீதி மன்றம் சொல்லி விட்டதற்காக தண்ணீரையும் திறந்து விட்டு இந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் கட்டுக்குள் வைத்திருந்தால் அடுத்த தேர்தலில் மட்டுமல்ல அடுத்த ஜென்மத்திலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாது...
இப்பவே கர்நாடக மந்திரிகள் பெங்களுருவில் நடக்கும் பிரச்னைகள் தமிழகத்தில் நடக்கும் பிரச்சனையின் எதிர்விளைவே என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்...தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடகத்திலும் ஒட்டுமொத்தமாக எல்லா நியூஸ் சேனல்களையும் கட் செய்துவிட்டால் போதும்...எல்லாம் சரியாகிவிடும்....
ஊர் பற்றி எரிந்தால் ஊடகத்துக்குக்கொண்டாட்டம்.
ஆனால் அதையே அப்படியே நம்பி நாம் ஏன் கொதிக்கவேண்டும் ? அந்தளவுக்கு மூளை மழுங்கினவர்களா நாம் ?
ஒரு லாரி ஓட்டுநரை ஜட்டியோடு அடிப்பதை காட்டிணார்கள்.ஒரு முதியவரை தமிழ் பேச சொல்லி அடித்தார்கள். இதெலல்லாம் அங்கொன்றும் இங்ஞொன்றுமொக இருக்கலாம். ஆனால் பெங்களூரு வாழ் தமிழர்கள் மத்தியயில் பெரும் பீதியை கிளப்பியிருக்கிது. இப்பிடி கலவரம் வரும் என்று தெரிந்தும் அதை தடுக்க தவறிய அரசு தானே இதற்கு பொறுப்பு?
ஹெலோ மணி ஸர், "நன்றாகத் தெரிந்தவர்கள் கூட ‘பொறுப்பில்லாமல் எழுதாதீர்கள்’ என்றும் ‘சப்பைக் கட்டு கட்டாதீர்கள்’ "..
விவாதத்திற்கு நன்றிகள் பல.
I am against any type of identity politics. This one is linguistic.
போதுமான அளவு புள்ளிவிவரங்கள் கொடுத்தாகி விட்டது. யார் சரி என்று உச்ச நீதி மன்றம் சொல்லிவிட்டது. நீங்களோ அல்லது ராஜேஷொ முகணூலில் எழுதி ஒன்றை நடத்தவோ, தடுக்கவோமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் (அவரின் தமிழ் படவிமர்சனங்களை தவிர்த்து). நம்ம அலை வரிசை ஏறக்குறைய ஒத்து போவதால் தான் நான் இணைப்பில் உள்ளேன். நீங்கள் எழுதிய எல்லாமே சரிதான். ஆனால் இங்குள்ள தமிழர்களை காப்பாற்றுவதற்காக நான் மிகுந்த முனைப்புடன் இருக்கிறேன் எனபாதெல்லாம் ஒ.கெ.
என்னுடய கேள்வி. இன்று பஸ். நாளை பஸ்சொடு. என்ன செய்வீர்கள். நான் எப் பி இல் போட்டாதால் என் உறவு தமிழ் மக்கள் தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார்கள் என்பதெல்லாம் நான் கனவில் கூட நினபபதில்லை. எனக்கு வேண்டியதெல்லாம் இது மாதிரி ஒரு கலவரம் மீண்டும் நடக்க கூடாது. இழந்த எல்லா சொத்துகளுக்கும் , இழபீடு வேண்டும்.
நான் 98-ல் இருந்து இங்கு இருக்கிறேன். இவளவு பெரிய கலவரம் நடந்ததே இல்லை. உங்களுடாய நல்ல எண்ணம் நமக்கு பாதகமாக போக கூடாது. உங்கள் எல்லாரையும் விட எனக்கு இங்கே இருந்தாக வேண்டும். அதுவும் பீஸ் ஃபுல்-ஆக். நான் இந்த ஊரில் தான் க்ஷ்க்ஷ கோடிகள் கொட்டி பிஸ்நெஸ் செய்கிறேன். என்னை போல் 1000 கணக்கில் இங்கு உள்ளோம். ஊரில் உள்ள சொத்தெல்லாம் விற்று, ஊரில் உள்ளோறிடம் கடன் வாங்கி இங்கு கொட்டியுள்ளோம். நான் புகுந்த வீடு மருமகள் மாதிரி எல்லா வற்றையும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று சட்டம் இல்லை. அதே மாதிரி யாரும் நாம் பொண்ணு கொடுத்து விட்டோம் என்று பொறுத்து கொள்ளவும் தேவை இல்லை. சட்டம் உள்ளது. அது பார்த்து கொள்ளட்டும். நாம் உள்ளதை சொன்னால்என்ன தவறு. போராடடததான் வேண்டும்.
நாம் ஒன்றும் இன்வேஸ்த் கர்நாடக என்று இறைஞ்ச சொல்லவில்லயெ. பணத்தை கொட்டி வந்தவுடன் என் பிஸ்நெஸ்ஐ உடைத்தால் பார்த்து கொண்டு இருக்கவேண்டுமா. அண்ணல் அஹிம்சா வழியில் போராடிக் கொண்டுதான் இருந்தார். அடி வாங்கி கொண்டு இல்லை. இந்த இழபிற்கு கர்நாடகம் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆயுததாள் இல்லை. அறிவால் சாதிப்போம்.
- Dev
People should realize that Mob Violence is dangerous , an individual wont have power or strength where as when he is part of group he gets power quickly and attacks anything on his way . They wont verify facts or wont think , their intention is to do something . When they watch TV or when they hear something on road they get pumped up and attack whoever comes based on the instruction they have . We should not fuel the fire , let us ensure safety for ourselves and others . No one is going to give award for anyone . Some Vetti Boys telling He is attackign i wont keep quiet lets attack them . In reality those who pump up others will never jump into the field , they just spread hatred and venom to others and relax at home . Ignore these morons , if you are angry plant two trees thats the only thing you can do easily with out earning the hate of anyone , after 10 years some unknown hearts will wish you.
P Kathir Velu(Erode Kathir)
September 12 at 4:34pm ·
கர்நாடக கலவரத்தில் ”அப்படியெல்லாம் கலவரமொன்றுமில்லை... நாங்க எல்லாம் நல்லாத்தான் இருக்கோம்...!” என்பது போல் சில நிலைச்செய்திகள் பார்க்க நேர்கிறது. காலம்காலமாய் அங்கு வசிப்பவர்களுக்கு, வீடுகளுக்குள் பாதுகாப்பாய் இருப்பவர்களுக்கு, ஒருவகையில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இங்கிருந்து தமிழக எண்களோடு பயணிக்கும் வாகனங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை அவர்களுக்குத் தெரிந்திருக்குமா? கார்கள் சாலைகளில் கரப்பான்பூச்சிகள் போல் கவிழ்த்துப் போடப்பட்டிருக்கும் விபரீதம் கலங்கடிக்கிறது.
TN28 பதிவு எண் லாரி ஒன்று தீயில் எரிந்து கொண்டிருக்கும் படத்தைப் பார்த்துவிட்டு சங்ககிரியில் இருக்கும் உறவினரை அழைத்தேன். தம் லாரியோடு பெங்களூரிலிருந்து மாண்டியாவிற்கு பாரம் ஏற்றிச் சென்ற மூன்று லாரிகளின் கண்ணாடிகள் மற்றும் விளக்குகள் உட்பட உடைக்க முடிந்த எல்லாப் பொருட்களும் அடித்து உடைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். ஓட்டுனர்கள் உயிர் பிழைக்க தப்பி ஓடிவிட்ட நிலையில், காவல் துறையினர் லாரிகளைக் கைப்பற்றி காவல் நிலையத்தில் வைத்துள்ளதாகச் சொன்னார்.
இந்தக் கலவரம் ஒருவகையில் உணர்வேற்றப்பட்டு காத்திருந்து நிகழ்த்தப்படுவதாகவும் தோன்றுகிறது. இங்கிருந்து பயணிக்கும் தமிழர்கள், வாகனங்கள் மற்றும் கன்னடம் பேசத் தெரியாதவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
Post a Comment