Aug 2, 2016

மூன்றாம் நதி- இரு விமர்சனங்கள்

மூன்றாம் நதி பல விடயங்களை மனதில் தோற்றுவித்தது. நாவலின் தொடக்கத்தில் கதை சரியாக மனதினுள் செல்லவில்லை. நான்-லீனியராக போகிறது என்ற உணர்ந்த போது தான் சட்டென்று வேகம் எடுத்தது.

பவானியை விட நாவலின் அடிநாதமாக தண்ணீர் பிரச்சனையே என் மனதில் நின்றது. காரணம் பவானி போன்ற பெண்ணை இதுவரை கண்டிராததாகவும் இருக்கலாம் அல்லது அலுவலகம் செல்லும் 30-40 நிமிடங்களில் குறைந்தது 7-8 தண்ணீர் வண்டிகளை பார்ப்பதாகவும் இருக்கலாம். தண்ணீர் வண்டிகளையும் அதன் தேவைகளையும் இன்னம் 20-30 பக்கங்கள் எழுதியிருக்கலாம். ஏனென்றால் தங்களுக்கே தெரிந்திருக்கும், இங்கு நிலைமை அப்படி. 

90களில் பெங்களூருவை விட்டு வெளியேறியவர்கள் (வெளிநாடு சென்றோ, இல்லை வேற வேற ஊர்களுக்கு சென்றோ), இப்பொழுது திரும்பினால் நிச்சயம் கண்ணீர் வடிப்பார்கள். எனக்குத் தெரிந்தே கடந்த 6 வருடங்களில் நிறைய மாற்றங்கள். அவுட்டர் ரிங் ரோடு மிக சுத்தமாக துடைத்து எறியப்பட்டுள்ளது. பல மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அநேக ஏரிகள் அழிக்கப்பட்டுவிட்டன. ஏரியை சுற்றி அப்பார்ட்மெண்ட் கட்டுபவர்களுக்கு, அதை விற்று விட்டால் கவலை விட்டது. எல்லா அசுத்தங்களையும் ஏரியில் விட்டுவிடலாம். 

அதே போல் தண்ணீர் பற்றிய கவலை யாருக்குமே இல்லை. உ.தா. நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்குப் பக்கத்தில் தரைத்தளம் மட்டும் அமைக்கப்பட்ட ஒரு வீடு உள்ளது. அதில் ஒரு வங்காளி குடும்பம் இருக்கிறது. அந்த வீட்டின் பெண்ணிற்கு எப்பொழுதும் துணி துவைப்பது மட்டும் தான் வேலை. இத்தனைக்கும் அந்த குடும்பத்தில் கணவன், மனைவி, பள்ளி செல்லும் ஒரு குழந்தை, 2/3 வயதில் இன்னொரு குழந்தை என மொத்தமே 4 பேர் மட்டுமே. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் அவர்கள் வீட்டில் போர் இல்லை ஆதலால் டிராக்டருடன் இணைக்கப்பட்டுள்ள தண்ணி வண்டியில் இருந்து தான் தண்ணீர் வாங்குகிறார்கள். அத்தனையும் வீணாக செலவு செய்யப்படுகிறது.

யாருமே தண்ணீரின் மதிப்பை உணருவதில்லை. விளம்பரங்களில் வருவது போல நீரை திறந்து விட்டுவிட்டு கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டோ, இல்லை பேசிக்கொண்டோ இருக்கிறார்கள். கையில் கைகழுவும் திரவங்களை வைத்து தேய்த்துக் கொண்டிருப்பதிலேயே அரை லிட்டர் தண்ணீர் ஓடி விடும். மேற்கத்திய கழிவறைகளை பற்றி கேட்கவே வேண்டாம். வேலைக்கு சேர்ந்த புதிதில் சிறுநீர் கழிக்கும் போது என் நண்பன் சொன்னது - "இதுல ஓடுற தண்ணிய சேர்த்தாலே நம்மூர் ல விவசாயம் பண்ணிடலாம் போல". சுத்தம் செய்ய நீர் தேவை தான். ஆனால் சுத்தம் என்ற பெயரில் தேவைக்கதிகமாக நீரை செலவு செய்கின்றோம். இது எல்லா அலுவலகங்களிலும், மால்களிலும் மிக சுலபமாக காணக் கிடைக்கும் காட்சிகள். இந்த எல்லா இடங்களிலும் நீரை தண்ணீர் வண்டிகளின் மூலமாகவே பெறுகிறார்கள்.

இந்த உலகத்தில் மற்ற விலங்குகளை விட நன்கு அறிவு பெற்ற மனிதன் தான், தன் சுயநலத்திற்காக இந்த உலகை அழித்துக் கொண்டிருக்கின்றான். மற்ற எந்த விலங்கும் இதை செய்வதில்லை; இத்துணை வேகத்திலும் செய்வதில்லை. காசு, பணம் மட்டுமே இந்த உலகத்தில் பேசு பொருளாக உள்ளது. விலங்குகள் செல்லும் பாதையில் உல்லாச விடுதிகளை கட்டிவிட்டு, கட்ட அனுமதியளித்துவிட்டு விலங்குகளின் நலனையும் பாதுகாப்பையும் பற்றி பேசும் லட்சணத்தில் இருக்கிறது. 

நமக்கு அடுத்து வரும் (நாம் இறந்த பிறகு) தலைமுறையினர், கண்டிப்பாக நம்மை சபிப்பார்கள். வளர்ச்சி என்னும் அரக்கனுக்காக நம் பாட்டன் முப்பாட்டன் சேர்த்து வைத்திருந்த நீர் தேக்கும் வழிமுறைகள், விவசாய அறிவு, இடம், நிம்மதி என அனைத்தையும் இழந்தோம். அவரவர்களுக்கு சுத்தமான நீரும், கண்ணுக்கெதிர் தெரியும் சுகாதாரமும் கிடைக்கின்ற வரை எந்த அரசியல்வாதியும், எந்த அரசாங்கமும் இந்த கண்டு கொள்ளவும் போவதில்லை; இதற்கு வேண்டியவற்றை செய்யவும் போவதில்லை.

மனிதன் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டான். இது தங்கள் கதையிலும் தொடர்கிறது. பால்காரரையும், பவானியின் கணவனையும் கொலை செய்து விட்டு மீண்டும் அவர்கள் தண்ணீர் விற்பனையை தொடருவார்கள். நாவலை படித்து முடித்த பிறகு நீரைப் புழங்க மனது வரவில்லை. எப்பொழுதுமே நான் குறைவாகத்தான் நீரை உபயோகிப்பேன். இப்பொழுது மூன்றாம் நதி மேலும் தலையில் சம்மட்டியால் அடிக்கிறது. சமீபத்திய ஆய்வு சொன்னது போல் "Bengaluru will be an unliveable, dead city in 5 years".

நாவலுக்கு மிக்க நன்றி அண்ணா.

கனிவுடன்,
கனி.
                                                             ***

விடுமுறையில் வந்த போது கிடைத்த மூன்றாம் நதி நாவலை ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன்.

நாவலின் தொடக்கம் பவானியின் கை நடுக்கத்தில் ஆரம்பித்து முடிவில் கண்ணாடியில் முகம் பார்த்து  கொள்ளும் போது அக்கா வா என்பதோடு முடிகிறது.

பெங்களூர் நகர் வளர்கிறது. எளிய மக்களின் வாழ்வை அதிகாரம் படைத்தவர்கள் தொடர்ந்து இரக்கமே இல்லாமல் அழித்து அதன் ஆக்டோபஸ் கரங்களை விரித்து ரெட்டி அம்மாசி மூலம் குடிசையாகவும் பின்பு அப்பார்ட்மெண்ட் ஆனதும் பால்காரர் லிங்கப்பா வழியாக தண்ணீர் விற்பனை செய்வதோடு பிறகு அதுவே பேராசையாகும் போது அவர்கள் இருவரையும் காவு வாங்கிக் கொள்கிறது.

அம்மாசியின் அருக்கானியின் மகளான பவானி தாயை நகருக்கு வந்ததும் இழந்தும் பிறகு மாற்றந்தாய் உமாவிடம் கொடுமையுற்று பணக்கார அருணிடம் காதல் வயப்பட்டு அவன் உதாசீனம் செய்யும் போது அதுப்பொய்  நடக்காது தன் குடும்ப சூழ்நிலை படிக்க இயலாது என்பதை உணர்ந்து வெளியேறி தானாக ஒரு வேலையும் தேடிக்கொண்டு பால்காரர் மூலமாக லிங்கப்பாவை மணம் புரிந்து கர்ப்பிணியானவள் காலத்தால் அவனை இழந்து மீண்டும் நிர்கதியாகிறாள்.

இனி அவள் கதி எதார்த்தம் நெஞ்சில் அறைகிறது. நாவல் நன்றாக வந்திருக்கிறது.

வழக்கமாக கட்டுரையில் நீங்கள் பயன்படுத்தும் மொழிநடை, அழுத்தமான காட்சியோ பாத்திரங்களின் உருவ அமைப்போ வாய்ப்பு இருந்தும் விவரிக்கப்படவில்லை என்பதைக் குறைகளாகச் சொல்வேன்.

ஒரு நேர்கோடாக சொல்லாமல் சஸ்பென்ஸ் திரில்லர் போல் முயற்சித்து உள்ளிர்கள். ஆனால் சொல்ல வந்ததை வாசகனுக்கு உணர்த்துவதில் வெற்றியடைந்து விட்டிர்கள்

நல்ல கதை. இனி பவானி என்ற பெயர் கேட்டால் உங்கள் கதை ஞாபகம் வரும்.

தி.வேல்முருகன்

0 எதிர் சப்தங்கள்: