அன்புள்ள வா.ம. அண்ணனுக்கு,
கோபியில் சரவணன் வெல்வதற்கான தங்களின் முன்னெடுப்பை கவனித்து வருகிறேன். கட்சிகள் தாண்டி இவ்வாறு வேட்பாளரை மையப்படுத்தி ஒரு விவாதத்தை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி. எவ்வாறாகினும் வேட்பாளர்கள் குறித்தும் இனி கட்சிகள் யோசித்தாக வேண்டும் என்கிற அழுத்தத்தை கொஞ்சம் ஏற்படுத்திவிட்டாலே வெற்றிதான்.
கட்சி அரசியல் பேசியது போதும், வேட்பாளர்கள் குறித்தே நமது தேர்வு முக்கியமாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாயிற்று. பிரச்னை என்னவென்றால் வேட்பாளர்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கு ஊடகங்கள் ஒருதுளி கூட உதவுவதில்லை. அங்கு எப்போதும் கட்சி அரசியலே விவாதிக்கப்படுகிறது. அதிகபட்சம் வேட்பாளரின் பெயர், அவரது செல்வாக்கு- இதற்குமேல் செல்வதில்லை.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு வேட்பாளர்களின் குற்ற பின்ணனி உட்பட முழு விபரங்களைத் தேர்தல் ஆணையம் பதிவேற்றிவிடும் என சிலர் சொன்னதை நம்பியிருந்தேன். ஒருவாரமாக தேடிப் பார்க்கிறேன், பெயர் பட்டியலைத் தவிர எந்த தளத்திலும் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
எங்கள் பெருந்துறை தொகுதியில் நானறிந்த சிறிய வட்டத்திற்குள் விசாரித்ததில் பிரதான வேட்பாளர்கள் தவிர பிறரைப் பற்றி பொதுவாக யாருக்கும் தெரிவதில்லை.
அதிமுக சார்பில் அமைச்சராக இருக்கும் தோப்பு வெங்கடாச்சலத்திற்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் பல கோடி சேர்த்துவிட்டார் என்பது தொகுதிவாசிகள் அனைவரும் பேசிக் கொள்வது. மேலும் மணிமலைகரடு என்ற மலையில் சட்டவிரோதமாக மணல் அள்ளி, மலையையே மொட்டையடித்துவிட்டார் என்பது விவரமறிந்தவர்கள் சொல்வது.
இருப்பினும் பெருந்துறையை பொறுத்தவரை இந்த ஐந்தாண்டுகளில் உட்கட்டமைப்பு மேம்படுத்தபட்டுள்ளதாக ஒரு பொதுவான பிம்பம் உள்ளது. பிரதான சாலைகள் விரிவாக்கம், இரண்டு முக்கிய இடங்களில் சுழல் சாலைகள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி போன்றவை தொகுதியில் நடந்த பணிகளில் கவனத்தை ஈர்த்துள்ளவை. நேற்று ஒரு கல்லூரி மாணவனிடம் பேசிய போது சொன்னது "அவரு அடிக்றத அடிக்கட்டும்.., முழுசா அடிக்காம நமக்கு கொஞ்சமாச்சும் செய்றவந்தான் வேணும்". ஊழலின் மீது இம்மாதிரி சகிப்புத்தன்மையை ஏற்படுத்துவது துளியும் ஏற்கதக்கதல்ல என்றே நினைக்கிறேன். எனவே கண்டிப்பாக தோப்பை நிராகரிக்கிறேன்.
திமுக சார்பில் நிற்பது கே.பி.சாமி. இவர் என்.கே.கே.பி ராஜாவின் பினாமி என்று திமுகவினரே ஒப்புக் கொள்கின்றனர். கடந்த திமுக ஆட்சியில் என்கேகேபி நில அபகரிப்பு வழக்கில் சிக்கி கட்சியை விட்டே நீக்கியதெல்லாம் ஊரறிந்த கதை. அந்த வழக்கில் கே.பி.சாமிக்கும் முக்கிய பங்கு இருப்பதாக வாசித்தேன். எனவே கே.பி. சாமிக்கும் வாக்களிப்பதாக இல்லை.
மூன்றாவதாக தமாகாவின் சார்பில் சண்முகம் என்பவர் நிற்கிறார். இவரைப் பற்றி நான் முயற்சித்தவரையில் ஒன்றும் தெரிந்தகொள்ள இயலவில்லை.
இதற்கடுத்து நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் லோகநாதன் நான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரைப் பற்றி சில விவரங்கள் தெரியும். கங்கா மேல்நிலைப் பள்ளி அருகே மளிகைக் கடை வைத்திருக்கிறார். ஓரளவு வசதியிருந்தும் தனது மகனை அரசு பள்ளியில் படிக்க வைக்கிறார். எனக்குத் தெரிந்து அவரது அரசியல் நடவடிக்கை என்பது தனது கடையில் பிரபாகரன் படத்தை மாட்டி வைத்திருப்பது மட்டும்தான். மேலும் நாம் தமிழர் முன்வைக்கும் அரசியலில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லாததால் (இது வேட்பாளர் குறித்த விவாதம் என்பதால், கட்சி அரசியலை இங்கு விரிவாக பேசவில்லை) அக்கட்சி வேட்பாளரை பொருட்படுத்த வேண்டுமா என்கிற சந்தேகம் உள்ளது.
தங்களுக்கு அண்மை தொகுதி என்பதால், பெருந்துறை வேட்பாளர்கள் குறித்து ஏதேனும் விபரம் தெரிந்தால் அனுப்பி வைக்கவும். எப்படி பார்த்தாலும் யாருக்கு வாக்களிக்க வேண்டாம் என்பது மட்டுமே இப்போதைக்கு எனக்கு தெளிவாக இருக்கிறது. மற்றபடி பிற வேட்பாளர்கள் குறித்து சிறு தகவலேனும் கிடைத்துவிடுமா என முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
அன்புடன்,
பாரி.
அன்புள்ள பாரி,
பெருந்துறையில் மட்டுமில்லை- பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்களின் முழுமையான பட்டியலை எடுக்க முடியவில்லை. தேர்தல் கமிஷனின் தளத்தில் 'நூறு சதவீதம் வாக்களிப்போம்' என்கிற அளவில்தான் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்களே தவிர ஒவ்வொரு தொகுதியிலும் நிற்கும் வேட்பாளர்களின் பட்டியல், அவர்களின் வேட்பு மனு விவரங்கள் என்ற எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை என்னுடைய போதாமையாக இருக்கக் கூடும். தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தை பார்ப்பதற்கே கடுப்பாக இருக்கிறது. சூர்யாவும் அஸ்வினும் பேசுகிற சலனப்படங்களைப் பதிவேற்றி தங்களது தளத்தை நிரப்பி வைத்திருக்கிறார்கள். அவர்கள் பேசினால் மக்கள் வாக்களித்துவிடுவார்கள் என்பது எவ்வளவு பெரிய மூட நம்பிக்கை?
Contact Details of Election Officials, List of Electoral Registration Officers என்கிற முக்கியமான பக்கங்கள் கூட தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் வேலை செய்யவில்லை. வேட்பாளர்களின் பட்டியல், அவர்களது சொத்து விவரங்கள், வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் மீதான வழக்கு விவரங்கள் போன்றவற்றை தளத்தில் ஏற்றி வைத்திருந்தால் போதும்- ஆர்வமுள்ளவர்கள் எடுத்து வாட்ஸப்பிலும், ஃபேஸ்புக்கிலும் பரவச் செய்துவிடுவார்கள். இதைக் கூட தேர்தல் ஆணையத்தால் சரியாகச் செய்ய முடியவில்லை என்று புரிந்து கொள்ளும் போது சலிப்பாக இருக்கிறது.
அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் என்பனவற்றைத் தாண்டி சமூக ஊடகங்கள் இந்தத் தேர்தலில் கணிசமான பங்களிப்பைச் செய்யத் தொடங்கியிருக்கின்றன. விவரங்கள் பொதுவெளியில் இருந்தால் போதும். அவை பரவ வேண்டிய இடத்துக்கு பரவிவிடும். மக்களுக்குத் தேர்தல் பற்றிய முழுமையான விவரங்களைக் கொடுப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை. அத்தகைய முழுமையான விவரங்கள்தான் உண்மையான தேர்தல் விழிப்புணர்வாக இருக்குமே தவிர நடிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் வைத்து பொம்மலாட்டம் காட்டுவதில்லை.
அடுத்தடுத்த தேர்தல்களிலாவது தேர்தல் ஆணையம் இணையத்துகென்று ஒரு தனி அதிகாரியை நியமித்து வேட்பு மனுத்தாக்கல் முடிந்தவுடன் விவரங்களை இணையத்தில் ஏற்றும்படியான வேலையைச் செய்ய வேண்டும். இருக்கிற விவரங்களை எளிமையாகத் தேடி எடுக்கும்படி தளத்தின் வடிவமைப்பு இருத்தல் வேண்டும். ‘இவர்கள்தான் உங்கள் வேட்பாளர்கள். இவைதான் அவர்களைப் பற்றிய விவரங்கள்’ என்று முழுமையாகக் கொடுத்துவிட்டால் போதும். சிறந்த வேட்பாளருக்கான பரப்புரையை அந்தந்த பகுதியின் இளைஞர்கள் மேற்கொள்வார்கள். மக்கள் முடிவெடுப்பார்கள். இதை வேண்டுகோளாக முன்வைப்போம்.
பெருந்துறையைப் பொறுத்தவரையிலும் நீங்கள் விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டுவிட்டீர்கள்.
கோபி, அந்தியூர், ஈரோடு தொகுதிகளுடன் ஒப்பிடும் போது அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தொகுதிக்கு ஓரளவுக்கு நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார் என்கிற பேச்சு நிலவுகிறது. 2014 ஆம் ஆண்டில் ஈரோடு மாவட்டத்துக்கு வந்த வறட்சி நிவாரண நிதியான 25 கோடி ரூபாயில் பதினெட்டு கோடி ரூபாய் பெருந்துறைக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. கோபித் தொகுதிக்கு 93 ஆயிரம் ரூபாய்தான் வந்து சேர்ந்தது. கோபியில் பிரச்சாரம் செய்யும் திமுக-காங்கிரஸ் வேட்பாளர்களும் கூட ‘பெருந்துறையில் அதெல்லாம் நடந்திருக்கிறது. பவானிசாகரில் இதெல்லாம் நடந்திருக்கிறது’ என்று சுட்டிக்காட்டித்தான் பிரச்சாரம் செய்கிறார்கள்.
என்றாலும் கூட, தோப்பு வெங்கடாச்சலம் தனது தொகுதி முழுக்கவும் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். கோகோ-கோலா நிறுவனத்துக்கு அனுமதியளித்தது, கெய்ல் பைப்லைன் செல்லும் பாதை பெருந்துறை தொகுதியில் அமைந்திருப்பது என கடும் அதிருப்தி நிலவுவதாகச் சொல்கிறார்கள். இந்த வாரத்தில் மட்டும் இரண்டு மூன்று இடங்களில் மக்கள் துரத்தியடித்திருக்கிறார்கள். பெரிய வேட்டுவபாளையம் போன்ற பகுதிகளில் முற்றுகையிட்டுருக்கிறார்கள்.
திமுகவின் வேட்பாளர் சாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி என்ற பேச்சு அவருக்கான பெரும் பலவீனம். அவர் தோற்கும்பட்சத்தில் இந்தக் குற்றச்சாட்டுதான் முக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள்.
பெருந்துறை தொகுதியில் மட்டுமில்லாமல் எந்தத் தொகுதியிலுமே சுயேட்சை வேட்பாளர்களின் விவரங்களைப் பெற முடியவில்லை என்பது பெரும் துரதிர்ஷ்டம். அதனால் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள், வெளியாட்கள் ஆகியோரால் வேட்பாளர் பற்றிய எந்த பகுப்பாய்வையும் செய்ய முடிவதில்லை. உள்ளூர் நண்பர்களிடம் விசாரியுங்கள். கட்சிச் சார்பற்றவர்களிடம் பேசிப் பாருங்கள். விவாதத்தின் வழியாக மட்டுமே நல்ல வேட்பாளரை அடையாளம் கண்டடைய முடியும். இன்னமும் ஒரு வாரம் அவகாசம் இருக்கிறது. வாக்கை வீணடிக்க வேண்டாம். சற்றே மெனக்கெட்டு விவரங்களைக் கண்டறியுங்கள். சரியான விவரங்கள் கிடைப்பின் எழுதுங்கள். பொதுவெளியில் எழுதலாம்.
நன்றி.
குறிப்பு: வேட்புமனு விவரங்களை பின்வரும் இணைப்பில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இணைப்பைக் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.
குறிப்பு: வேட்புமனு விவரங்களை பின்வரும் இணைப்பில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இணைப்பைக் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.
4 எதிர் சப்தங்கள்:
Check the candidates' affidavits
http://tnnominations.azurewebsites.net/webform
Arapor Iyakkam has compiled data of candidates contetsing last week end , hopefully they should publish the details . Please check their page for more details . They have asked for volunteers 2 weeks back to comiple data of candidates through out tamilnadu
Thoguthi vaari vetpaalar pattiyal erkenave therthal aanaiyathaal pathivetra pattullathu
Http://104.211.231.134/acwithcandidate/
http://myneta.info/tamilnadu2016/
You can analyze here
Post a Comment