May 31, 2016

இலக்கியச் சான்றிதழ்

சமீபத்தில் ஓர் இளைஞரைச் சந்திக்க நேர்ந்தது. என்னைவிடவும் பனிரெண்டு அல்லது பதின்மூன்று வயது இளையவர். கொஞ்ச காலமாக எழுதிக் கொண்டிருக்கிறார். ஒரு தொகுப்பும் வெளி வந்துவிட்டது. சென்னையில் ஒரு கூட்டத்தில் சந்தித்த போது ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவர் ஒரு வகையிலான புலம்பலை வெளிப்படுத்தினார். தன்னை யாருமே மதிப்பதில்லை என்கிற குரலில் பேசினார். இது சகஜமான எண்ணம்தான். ஆரம்பத்தில் எல்லோருக்குமே இருக்கக் கூடியது. அதுவும் இரைச்சல் மிகுந்த நம்முடைய காலத்தில் எழுத வருகிற யாருக்குமே சட்டென்று தோன்றிவிடும். 

ஆரம்பகட்டத்தில் என்றில்லை- எந்தக் காலத்திலுமே நமக்கு இரண்டு விஷயங்களில் தெளிவு கிடைத்துவிட்டால் போதுமானது. 

முதலாவது விஷயம் - எழுத்துக்கான அங்கீகாரம் என்பது எந்தக் காலத்திலும் முழுமையான நிறைவைத் தராது. இன்றைக்கு நான்கு பேர் எழுத்தைப் பற்றி பேசினால் அடுத்த நாள் பத்து பேர் பேச வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கும். அதனால் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவே வேண்டியதில்லை. 

இரண்டாவதுதான் மிக முக்கியமானது- நம்முடைய எழுத்துக்கு எந்த எழுத்தாளனிடமும் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியமில்லை. எப்படி ஒரு அரசியல்வாதி சக அரசியல்வாதியை வளர விடமாட்டானோ, எப்படி ஒரு சினிமாக்காரன் சக சினிமாக்காரனை மேலே வர விடமாட்டானோ, அதே போல்தான் எழுதுகிறவனும். அதே போல் என்பது சற்று வலிமை குறைந்த சொல். குழி பறிக்கும் விவகாரத்தில் அரசியல்வாதி, சினிமாக்காரனைவிடவும் மோசமானவன் எழுத்தாளன். அரசியல்வாதியால் சம்பாதிக்க முடிகிறது. சினிமாக்காரனுக்கு புகழ் கிடைக்கிறது. இந்த எழுத்தாளனுக்கு இரண்டுமே கிடைப்பதில்லை. அந்த மனக்குறை எவன் வந்தாலும் தட்டி வீசச் சொல்லும். அப்படித்தான் இருக்கிறார்கள்.

இலக்கியவாதிகள் என்று தன்னைத்தானே சொல்லிக் கொண்டு ‘அவனுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமேயில்லை’ ‘இவன்தான் இலக்கியத்தைத் தூக்கிப் பிடிக்க வந்தவன்’ என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பவர்களில் தொண்ணூற்று எட்டு சதவீதம் பேர்கள் ஒரு கோப்பை சாராயத்துக்காகவும், அதிகாரத்தின் எச்சிலுக்காகவும், இரண்டாயிரம் ரூபாய் செலவு பணத்துக்காகவும் சான்றிதழ் எழுதித் தரக் கூடிய போலி மனிதர்கள். இவர்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க வேண்டியதில்லை.  

தட்டிவிடுதலில் இருந்து தப்பிக்கவும், பாராட்டுகளை எதிர்பார்த்தும் இளம் எழுத்தாளர்கள் தங்களையும் அறியாமல் ஏதாவதொரு குழுவோடு ஒன்றிவிடுகிறார்கள். இலக்கியத்தில் நிறையக் குழுக்கள் உண்டு. ஊர் சார்ந்த குழுக்கள், சாதி சார்ந்த குழுக்கள், பத்திரிக்கை சார்ந்த குழுக்கள் என்று திட்டுத் திட்டாகத் திரிகிறார்கள். அந்தந்த ஊர்க்காரனை மட்டுமே அந்தக் குழுவினர் தூக்கிப் பிடிப்பார்கள். அந்தந்த சாதிக்காரனை மட்டுமே அந்தச் சாதிக் குழுவினர் பாராட்டுவார்கள். தாம் சார்ந்திருக்கும் பத்திரிக்கையில் எழுதுகிறவனை மட்டுமே அந்தப் பத்திரிக்கைக் குழுவினர் கொண்டாடுவார்கள். இதெல்லாம் கச்சடாவான அரசியல். எழுத்துச் சூழலை நாசமாக்குகிற மனநிலை. இதிலிருந்தெல்லாம் விடுபட்டு நிற்பதுதான் எழுதுகிற, புதிதாக வருகிற எந்தவொரு இளைஞனுக்கும் ஆரோக்கியமானது. 

புதிதாக எழுத வருகிறவர்கள் எந்தக் குழுவிலும் தம்மைப் பிணைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி இணைத்துக் கொண்டால் அரசியல் செய்ய வேண்டியிருக்கும். நம் குழுவைச் சார்ந்தவனை பாராட்டுவது பற்றியும் அடுத்தவனை விமர்சிப்பது பற்றியும் மனம் குதப்பிக் கொண்டேயிருக்கும். பிறகு வாசிப்பதும் எழுதுவதும் தானாகக் குறையத் தொடங்கும். எழுத்தும் வாசிப்பும் குறையும் போது வெறும் வஞ்சகமும் பொறாமையும்தான் தலை தூக்கும். அடுத்தவர்கள் நம்மைத் தாண்டிச் செல்லும் போது தள்ளி நின்று தூற்றுவதை மட்டும்தான் செய்ய முடியும். அதுதான் பெரும்பாலான இலக்கியச் சண்டைகளின் அடிநாதம். 

இப்படி சில குழுக்கள் என்றால் சமூக ஊடகங்களில் ‘உனக்கு கவிதை சொல்லித் தருகிறேன்’ என்று கிளம்புகிற கூட்டமும் உண்டு. தங்களை ஏதோ உலக இலக்கியத்தைக் கரைத்துக் குடித்த அதிமேதாவிகளாக நினைத்துக் கொண்டு கவிதையின் மூன்றாவது வரியில் இரண்டாவது சொல் துருத்திக் கொண்டிருக்கிறது என்று பேச ஆரம்பித்து எங்கெங்கோ பேச்சை இழுத்துச் செல்கிற பேரிளம் கவிஞர்களும், எழுத்தாளர்களும் நிறைந்து கிடக்கிறார்கள். 

இத்தகைய குழுக்களையும், டுமாங்கோலி வாத்தியார்களையும் நம்பினால் எந்தக் காலத்திலும் எழுத்தில் நமக்கான இடத்தை அடையவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.  தங்களை அத்தாட்சியாக நினைத்துக் கொண்டு கதை விட்டுக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கொஞ்ச காலத்தில் காணாமல் போய்விடுவார்கள். நம்மையும் காணாமல் போகச் செய்துவிடுவார்கள். குடிப்பதும், காமம் கொப்புளிக்கப் பேசுவதும், புகைப்பதும், அதிகார மையங்களாக உருவாவதும், பணம் சம்பாதிக்கும் வழிகளைத் தேடுவதும்தான் இன்றைய இலக்கிய பிதாமகன்களின் லட்சியம், வேட்கை எல்லாமும். இவர்களிடம் போய் சான்றிதழ் கேட்டால் இதில் ஏதாவதொன்றை நம்மிடமிருந்து எதிர்பார்க்கத்தான் செய்வார்கள்.

இங்கே வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எந்தப் பத்திரிக்கையும் நம் எழுத்துக்களை பிரசுரம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் நம்மால் பல்லாயிரக்கணக்கானவர்களிடம் நம் எழுத்தைக் கொண்டு சேர்க்க முடியும். எந்த இலக்கியவாதியும் நம்மை பாராட்ட வேண்டியதில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான வாசகர்களை அடைய முடியும். உலகம் மிக விரிந்து கிடக்கிறது. நமக்குப் பிடித்ததை எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். அது நமக்கான சந்தோஷத்தைத் தரும். அவர்கள் பாராட்டுகிறார்களா, இவர்கள் அலட்சியம் செய்கிறார்களா என்பது பற்றியெல்லாம் யோசிக்கவே வேண்டியதில்லை. இங்கே யாருக்கும் கொம்பு இல்லை. நமக்கும் கொம்பு இல்லை என்கிற மனநிலை இருந்தால் போதுமானது. எழுதிக் கொண்டேயிருக்கும் போது அது யாருக்காவது பிடித்து நம்மைப் பின் தொடர்வார்கள். அவர்கள் நம்மிடம் பேசுவார்கள். அது நம்மைத் தொடர்ந்து எழுதச் செய்யும். அதுதான் நமக்கான எழுத்தை வடிவமைக்கும். அப்படியொரு மனநிலைக்கு வந்த பிறகு ஓடிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான்.

நாம் எழுதுவது இலக்கியமா? குப்பையா என்பதையெல்லாம் காலம் தீர்மானிக்கட்டும். வாசகன் தீர்மானிக்கட்டும். எழுத ஆரம்பித்தவுடனே பாலாபிஷேகம் செய்யமாட்டார்கள். பேனர் அடிக்க மாட்டார்கள். ரத்தினக் கம்பளம் விரிக்க மாட்டார்கள். ஆனால் தொடர்ந்து எழுதும் போது அதற்கான இடம் நிச்சயமாக உருவாகும். அதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டால் போதுமானது. இதையெல்லாம் அறிவுரையாகச் சொல்லுகிற தகுதி எனக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் கொஞசம் அனுபவமிருக்கிறது. அவர் பாராட்டமாட்டாரா? இவர் பாராட்டமாட்டாரா என்று எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் இந்தச் சான்றிதழ்களும் பாராட்டுகளும் அவசியமற்றவை என்று உணர்ந்திருக்கிறேன். அவற்றை எந்தவிதத்திலும் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என புரிந்திருக்கிறேன். அதை எனக்குப் பின்னால் எழுத வருகிற இளைஞர்களுக்காக பதிவு செய்து வைக்கிறேன்.

11 எதிர் சப்தங்கள்:

harish sangameshwaran said...

முதலில் எல்லாம் நானும் இப்படி பினாத்திக் கொண்டிருப்பேன். எழுதுவதை யாரும் படிப்பதில்லை, பேஸ்புக்கில் லைக்கு வருவதில்லை என்று. ஒரு கட்டத்துக்கு மேல் , சொந்த திருப்திக்காக எழுத ஆரம்பித்து விட்டேன். இதில் ஒரு வசதி. நம்மகுத் தோன்றுவதை தோன்றும் போது எழுதலாம். வலிந்து வரவழைக்க வேண்டியதில்லை. அதே மாதிரி அங்கீகாரம் கிடைத்தாலும் முகத்தை திருப்பிக் கொண்டு நெஞ்சை விடைத்துக் கொண்டு போவதில்லை. ஏற்றுக் கொள்வது என்றிருக்கிறேன்.

மனசுக்கு நிறைவாய் இருக்கிறது எழுத்து இப்போது

Mani Velusamy said...

//குடிப்பதும்,
காமம் கொப்புளிக்கப் பேசுவதும்,
புகைப்பதும்,
அதிகார மையங்களாக உருவாவதும்,
பணம் சம்பாதிக்கும் வழிகளைத் தேடுவதும்//

சொல்லுங்க, ஒவ்வொண்ணும் ஒவ்வொருத்தரை குறிக்குதுன்னு தெரியுது.. அப்படியே பேரோட சொல்லிட்டிங்கண்ணா, மனசுக்கு இலகுவா இருக்கும்.. :)

Murugan R.D. said...

இன்றைய எழுத்துலகம் எளிதானது, ஈஸியாக குறைந்தபட்சம் ஒரு பத்திலிருந்து நூறு பேராவது நம் படைப்புகளை படிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது சமூக வலைதளங்கால், எழுதுவது என்பது நம் மனதிலிருந்து இயல்பாக தோன்றும் விசயத்தை அல்லது கற்பனையை பதிவு செய்வதே, பாராட்டு எதிர்பார்ப்பது எல்லோருக்கும் உண்டான மனநிலைதான் என்றாலும் அது கிடைக்காதபோது வருத்தம் கொள்வது தேவையில்லாத ஒன்று, பாராட்டுக்கும் அங்கீகாரத்துக்கும் மனம் செவி சாய்க்க ஆரம்பித்தால் அப்புறம் அதற்காகவே குண்டக்கமண்டக்க எதையாவது எழுதி பரபரப்பாக வேண்டும் என்ற சீப் பப்ளிசிட்டியில் இறங்கிடகூடிய அபாயம் உண்டு, அப்படி நேர்ந்தால் நல்ல படைப்பாளி என்பதையும் மீறி நிறையபேரின் முகசுளிப்புக்கு ஆளாகவேண்டும், இந்த கேட்டகிரியில் சாரு, ஞாநி. ஜெயமோகன் இன்ன பிற பிற எழுத்தாளர்கள் தான் பல இலக்கியவாதிகளாக உலவிகொண்டிருக்கின்றனர், இவர்களை அடையாளம் தெரிந்த அதே அளவிற்கு அவர்கள் மேல் அவமரியாதையும் ஆயிரக்கணக்கான வாசர்களுக்கு உண்டு, தேவையா இப்படிப்பட்ட பப்ளிசிட்டி, சுஜாதா போன்றவர்கள் கொடிகட்டி பறந்தகாலம் வேறு அவர் ஆளுமை வேறு, என்னைப்போன்ற புத்தக்கபபழு வாசர்கள் இலக்கியம், நாவல், கவிதை என்றால் தெரித்துஓடுவோம், ஆனாலும் என்னைப்பொறுத்தவரை ஜெயமோகன் போன்றவர்களைக்காட்டிலும் பப்ளிசிட்டிக்காக உளறிக்கொட்டாத மேலான்மை பொன்னுசாமி. சுந்தரராமசாமி, ராஜநாராயணன் போன்ற படைபபாளிகள் மரியாதைக்குரியவர்களாகவே வாசகர் மனதில் உலாவருகின்றனர்,

இளம் வயது இதைபுரிந்து கொள்வது கடினம்தான், நாளாகநாளாக மனம் பக்குவப்படும், அவரைப்போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொன்ன அறிவுரை 100 சதவீதம் பொருத்தமானவையே,

சேக்காளி said...

//குடிப்பதும், காமம் கொப்புளிக்கப் பேசுவதும், புகைப்பதும், அதிகார மையங்களாக உருவாவதும், பணம் சம்பாதிக்கும் வழிகளைத் தேடுவதும்தான் இன்றைய இலக்கிய பிதாமகன்களின்//
உலகமே இப்படித்தானே (அல்லது இதன் பின்னால் தானே) இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இலக்கிய பிதாமகன்களை மட்டும் குறை கூறி என்ன ஆகப் போகிறது?

venkat said...

அன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு, ஓரளவுக்கு நிரம்பிய குடம்தான், வெற்று புகழுக்கு ஏங்காது. எழுத ஆரம்பித்த நிலையில், விமர்சனங்கள் பாராட்டோ, இகழ்ச்சியோ, நிச்சயம் எழுத்தை பாதிக்கவே செய்யும். சிறு குழந்தையின் தள்ளாடும் நடை போல. பின் முதிர்ச்சி வந்த பின், நாம் எழுத வந்தது, புகழுக்காக மட்டும் அல்ல, என்கிற நிலை வரும்பொழுது, எழுத்து, நாளடைவில் சீர் படும். அது பல்வேறு தரப்பட்ட மனிதர்களுக்கு போய் சேருகிறது. அந்த பல்வேறு மனிதர்களில், நம் ஸ்டைலை ரசிப்பவர்கள் மட்டுமே, நீண்ட நெடிய காலங்களுக்கு நம்மோடு பிரயாணிப்பவர்கள். மற்றவர்கள், சந்தையில் வேறு ஏதோ ஒரு புதிய பொருள் வந்ததும், மலருக்கு, மலர் தாண்டும் வண்டினம். சிலர் காலம் முழுமைக்கும் உங்களுடன் சுகிப்பவர்கள். உதாரணத்திற்கு, திரு. பாலகுமாரன் எழுத்தினை சொல்லலாம். இப்போது புதியதாய் படிப்பவர்கள், எத்தனை பேருக்கு, அவர் ஆதர்ச எழுத்தாளர் என்று தெரியாது. ஏற்கனவே அவருடன் ஊறிப்போனவர்களால் மட்டுமே, தொடர முடியும். மீண்டும் அவரிடம் இருந்து "இரும்புக் குதிரைகள்" கிடைக்காது. இப்போது "இரும்புக் குதிரைகள்" வந்தாலும், காலத்திற்கேற்றவாறு இருக்காது. எனவே, என் கருத்து, நல்ல இலக்கியம் என்பது, நபரைப் பொறுத்ததே தவிர, அந்த படைப்பைப் பொறுத்தது அல்ல. உங்கள் எழுத்துக்களும், சமூக உணர்வும் ஒன்று பட்டிருப்பதனால், நீங்கள் எதிலும் முரண்படவில்லை. நீங்கள் என்ன எழுதினாலும், அதில் உள்ள இலக்கிய அந்தஸ்தை ஏற்றுக் கொள்வதுதான், ஒரு வாசகனின் உணர்வாக இருக்கும் என்று தோன்றுகிறது. வெங்கட் ஓசூர்

”தளிர் சுரேஷ்” said...

வளரும் எழுத்தாளர்களுக்கு சிறப்பான அறிவுரை!

ராம்பிரசாத் said...


இந்த தலைப்பில் என்னை எழுதச்சொன்னால் என்ன எழுதியிருப்பேனோ அதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள் தோழர் வா. ம. கட்டுரையின் ஒவ்வொரு வரிக்கும் உடன்படுகிறேன்.

நட்புடன்,
ராம்
http://ramprasathkavithaigal.blogspot.com/

ராம்பிரசாத் said...


ஒரு ஆளுமை மிகுந்த முன்னணி எழுத்தாளனுக்கும் கூட பல எளிமையான சிந்தனா போக்குகள் புரியாமல் இருந்து நான் அவதானித்திருக்கிறேன்.. அதே நேரம், யார் என்றே தெரியாத, அடையாளமே இல்லாத , ஒரு லைக்கு கூட வாங்காத ஒரு எழுத்தாளன் புரிந்து கொள்ள கடினமான சிந்தனா போக்குகள் கொண்டிருப்பதையும் அதன் மூலம் உலகத்தரத்தில் இயங்கியும் நான் அவதானிக்கிறேன்.

அடையாளப்படுவது தான் நோக்கமென்றால் குழு மனப்பான்மை தான் வழி என்றாவதில் ஆச்சர்யமொன்றும் இல்லை. ஆனால், சரியான பயனுள்ள, கற்றதை கைவிட்டு புதிதாக கற்றலுக்கான‌ கருத்து தானே நோக்கமாக இருக்கவேண்டும்? தமிழ் சூழல் இந்த கோணத்தில் இயங்குவது போல் தெரியவில்லைதான்.

ஆனால் பொது மக்கள் அடையாள பின்னணியில் மட்டுமே தான் யார் எழுத்தை வாசிக்க வேண்டுமென தேர்வு செய்கிறார்கள். அதனால் தான் அடையாளத்தை அடைத்தால் நோக்கமாகிவிடுகிறது. அடையாளப்படுபவன் வெற்றியாளன் என்கிற கற்பிதமே காரணம்.

நட்புடன்,
ராம்
http://ramprasathkavithaigal.blogspot.com/

viswa said...

உண்மையான ரசிகர்கள் பாராட்டாமல் ரசிக்கிறார்கள் என்ற சுஜாதாவின் கருத்தை உட்கொண்டு தங்கள் எழுத்துப்பணியை தொடருங்கள்

ABELIA said...

ரொம்ப சிம்பிளா சொல்லிட்டீங்க..!
யாரிடமும், எதையும் எதிர்பார்க்காதே
உன்னோட வழியில
போய்ட்டே இருன்னு...!

Dev said...

கல்வெட்டு ரெடி. பக்கத்திலே நாற்காலியும் போட்டாச்சு. மக்களே நீங்களும் உங்க சந்ததியும் படிச்சி மண்டையில பதியுங்கப்பா. என்ன மணி சார், பதிவு சுருக்கம் சரியா ?

பாலகுமாரன் அவர்களின் ஆரமபகால வாசகன் நான். அவரின் ஒரு பாக்கெட் நாவல் கதையில் ஒரு கணவன் மனைவி. கணவன் அடிபட்டோ அல்லது நோயினாலோ சாக கிடப்பான். மனைவி மருந்து வாங்க ரோட்டில் நடக்கும் போது விபத்தில் கோரமாக இறந்துவிடுவாள் . எப்போதும் போல பாலா குறுக்கிட்டு இருப்பார்..இது என்கதை. இதை இப்படித்தான் முடிப்பேன். என்ன எவண்டா கேள்வி கேட்பது .

- நீங்க சொல்வதில் இருந்து எனக்கு இப்போ புரியுது. Under ஸ்ட்ரெஸ் அப்படி எழுதிட்டார்-நு. ஆனா ஒரு வாசகனா எனக்கு பிடிகல, புரியல. நான் படிகரத நிறுத்திட்டேன். But call me for a meet if ever you organise a discussion on Bala.

Such a popular writer during those times was under pressure means, I can imagine for others. But we read not only for time pass.. I read to know, to understand, to find solutions, to enjoy the depth of the language, the style of the writing and so many more.

When 'writing' is a career and his/her bread and butter, I think the principles of business and politics have to be applied. It is upto the reader to accept or not.

-Dev