Apr 1, 2016

விளம்பரம்

செமத்தியாக ஒரு ஆளிடம் திட்டு வாங்கிவிட்டேன். பெங்களூர் வந்ததிலிருந்தே இப்படித்தான். முக்கியமான சாலைகளில் மிகப்பெரிய விளம்பர பதாகைகளை வைத்துவிடுகிறார்கள். என்னைப் போன்ற இளசுகள் போகும் போதும் வரும் போதும் பார்க்கத்தான் செய்வார்கள். இதற்கெல்லாம் திட்டினால் எப்படி? பதினைந்து நாட்களுக்கு முன்பு இப்படித்தான் கரீனா கபூர் ஒரு தாடிக்காரனுடன் - அவன் பெயர் அவ்வளவு முக்கியமில்லை- உதட்டுடன் உதடு சேர்த்துக் கொண்டிருக்கும் விளம்பரத்தைப் பார்த்து வண்டியை ஓரம் கட்டியிருந்தேன். ஃபோன் பேசுவது போல பேசியபடியே வேடிக்கை பார்த்துவிட்டு ‘இந்த நாட்டில் கலாச்சாரம் கெட்டுப் போய்விட்டது. மீன் மார்க்கெட்டைவிடவும் மோசமாக நம் பண்பாடு நாறுகிறது’ என்று கத்தலாம் போலத்தான் தோன்றியது. ‘டேய் அதெல்லாம் நீ சொல்லக் கூடாது’ என்று மனசாட்சி மணியடித்துத் தொலைத்தது. கடவுளே அடுத்த ஒரு மாதத்திற்காவது இந்தப் பதாகை இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

சட்டுப்புட்டென்று தூக்கிவிடுகிறார்கள். விளம்பரங்கள் எல்லாம் நாள் கணக்குத்தானே. ஒரு வாரத்துக்கு இவ்வளவு, ஒரு மாதத்துக்கு அவ்வளவு என்று ஒரு தொகையைப் பேசிவிடுகிறார்கள். நாள் கணக்கு முடிந்தவுடன் தூக்கிவிடுகிறார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பாக ஏதோவொரு பீங்கான் நிறுவனத்தினர் எங்கள் பொருட்கள் வளைவு சுளிவானவை என்று எழுதி அதற்குத் தோதாக இலியானா படத்தைப் போட்டிருந்தார்கள். நம்மவர்களின் கற்பனைக்கு முன்னால் நாமெல்லாம் ஒன்றுமேயில்லை என்று நினைத்தபடியே முன்னால் சென்று கொண்டிருந்த தாத்தாவின் பைக்கில் மோதி அவரைக் கொல்லத் திரிந்தேன். நல்லவேளையாக ஒன்றிரண்டு நாளில் அந்தப் பதாகையைத் தூக்கிவிட்டார்கள். இலியானா போய்விட்டது உள்ளுக்குள் வருத்தமாக இருந்தாலும் கொலைக்கேஸ் விழாமல் தப்பித்ததாக ஆசுவாசம். 


இப்பொழுது காஜல் அகர்வால். 

சில மாதங்களாகவே சாயந்திரம் ஆனால் எம்.ஜி.சாலை, பிரிக்கேட் சாலை என்று ஒரு இடம் பாக்கி வைப்பதில்லை. மேலாளரிடம் ‘மாலை வெயில் மனிதனுக்கு நல்லது’ என்று சொல்லிவிட்டு கிளம்பி வந்துவிடுகிறேன். அலுவலகத்தை இந்த ஜோரான பகுதியில் வைத்துக் கொண்டு எந்நேரமும் கம்யூட்டரும் கையுமாக இருந்துவிட்டு ஐம்பது வயதில் அங்கலாய்ப்பு படக் கூடாதல்லவா? அதனால்தான். கண் இருக்கும் போதே சூரிய நமஸ்காரம். வெகுஜோராக நடக்கிறது. ஒரு நாள் இல்லையென்றால் இன்னொரு நாள் சந்தேகக் கேஸில் பிடித்து உள்ளே வைக்கப் போகிறார்கள். அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம். ‘எனக்கு ஐஜியைவே தெரியும்’ என்று சொல்லி மொத்து வாங்கிவிட்டு வரலாம் என்றிருக்கிறேன். அப்படிச் சுற்றிக் கொண்டிருக்கும் போதுதான் காஜல் அகர்வாலின் படம் கண்ணில் பட்டது. வழக்கம் போல ஃபோனை எடுத்துக் காதில் வைப்பது போல வைத்து வாகான இடமாகப் பார்த்து அமரலாம் என்றால் ஓரிடமில்லை. சரி நிழற்படமாவது எடுத்துக் கொள்ளலாம் என்று அங்குமிங்குமாகக் கோடு வாரிய போதுதான் அந்த ஆளிடம் திட்டு வாங்கினேன். அவனுக்கு என்ன வயிற்றெரிச்சலோ தெரியவில்லை. காஜல் அகர்வாலுக்காக வேணியிடமே திட்டு வாங்குவேன். இவனிடமெல்லாம் திட்ட வாங்கு மாட்டேனா?  

‘தள்ளி நில்லு கூபே’ என்றான். அவன் சொன்னவுடன் நகர்ந்தால் நமக்கு என்ன மரியாதை? இப்படியான சமயங்களில் என் மண்டைக்குள் நல்லபடியாக பொய் உதித்துவிடுகிறது. 

‘ஸாரி சார்..எங்க கம்பெனி விளம்பரம்தான்...ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிறேன்’ என்று சொன்னதை நம்பி விட்டான். நீங்களே பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். இதைக் கூட படமெடுக்கவில்லையென்றால் ஜென்மம் எடுத்து என்ன அர்த்தம்? அந்த விளக்கு வேறு ஒரு எழுத்தை மறைத்து மொத்த அர்த்தத்தையும் மாற்றித் தொலைத்திருக்கிறது.

இப்பொழுது புது ஃபோன் வாங்கியிருக்கிறேன். சுமாரான கேமிராவும் இருக்கிறது. அப்படியும் இப்படியுமாகத் திருப்பி வளைத்து நிழற்படத்தை எடுத்துவிட்டு ‘இதுக்கு போய் கூபேன்னு சொல்லிட்டீங்களே’ என்றேன். கூகை என்று தெரியாத்தனமாகக் கூட கன்னடக்காரனைத் திட்டிவிட்டால் கடுமையான சண்டைக்குத் தயாராகிக் கொள்ள வேண்டும். பிய்த்து எடுத்துவிடுவார்கள். நமக்குத் தெரிகிற கால்வாசி கன்னடத்தை வைத்துக் கொண்டு சண்டைக்கு போகவா முடியும்? எனது கேள்வியைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அவன் எங்கேயோ பார்த்தான். தோள்பட்டையைத் தூக்கியபடி அந்த இடத்தைத் தாண்டி வந்தேன். 

பெங்களூரில் விளம்பரப் பதாகைகளுக்கு ஏதேனும் தடை இருக்கிறதா என்று தெரியவில்லை. காதலர் தினத்துக்கு முன்பாக ‘இந்த கள்ளக்காதலை உங்கள் மனைவி ஏற்றுக் கொள்வார்..மேலும் விவரங்களுக்கு பிப்ரவரி 14 வரைக்கும் காத்திருக்கவும்’ என்று எழுதி வைத்திருந்தார்கள். நானும் எப்பொழுதுதான் அந்த தினம் வருமோ என்று காத்திருந்தேன். பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஒரு கட்டட விற்பனையாளர் விளம்பரம் என்று தெரிந்து நொந்து போனேன். அவன் கட்டி விற்கும் வீட்டை வாங்கினால் மனைவி ஏற்றுக் கொள்வாராம். இதில் என்ன காதலும் கள்ளக்காதலும் இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தகைய கவன ஈர்ப்பு விளம்பரங்கள் தவிர்த்து இலியானாவோ, கரீனாவோ அல்லது காஜலோ சாலையோரங்களை நிரப்புகிறார்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விளம்பரம். காத்ரீனா கைப்பின் ஸ்லைஸ் விளம்பரம். வெளிநாட்டில் வசிப்பவர்கள் கூகிளில் தேடிப் பார்க்கவும். ஒரு பாட்டிலை மேலே தூக்கிப் பிடித்து கரீனா குடிக்கும் போது உதட்டில் ஒற்றைத் துளி மட்டும் விழுந்திருக்கும். அதைப் பார்த்து எத்தனை பேர் விழுந்தார்களோ தெரியவில்லை. முன்பெல்லாம் அடிக்கடி பைக்கிலிருந்து விழுவேன். இப்பொழுது கண் உறுத்தல் தொந்தரவு வந்த பிறகு பாக்யராஜ் கண்ணாடி ஒன்றைப் போட்டு தூசு, குப்பை என்று எதுவும் வராமல் தடுத்துவிடுகிறேன். அதோடு சேர்த்து இந்தப் படங்களும் கண்களுக்குள் வருவதில்லை. அதனால் வண்டியிலிருந்து கீழே விழுந்து பல மாதங்கள் ஆகிவிட்டன.

இப்படியான விளம்பரங்களின் வழியாக கவனம் சிதறுகிறது என்பது உண்மைதான். ஆனால் பெங்களூர் மாதிரியான ஊரில் இருந்து கொண்டு இதை எதிர்த்தெல்லாம் எதுவும் எழுத முடியாது. ஊரா இது? சாலையில் இறங்கினால் ஐந்தரை அடி தேர்கள்தான். எவ்வளவு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது? பத்து வருடங்களிலேயே தாறுமாறாக உருமாறியிருக்கிறது. ஊரோடு ஒட்டி வாழ்ந்துவிட வேண்டும். ஆனால் பாருங்கள்- புரட்சியாளர் என்று பெயர் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வேறு ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று நினைக்கிறேன். இந்த செரியோ குளிர்பானம் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும். ஆமாம் என்றால் ‘அந்நிய குளிர்பானத்தை பகிஷ்கரிப்போம்’ என்று சொல்லியபடியே தினமும் ஒரு பாட்டில் குடிக்கலாம் என்று யோசிக்கிறேன்.

5 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

//என்னைப் போன்ற இளசுகள்// எதாவது எழுத்து பிழையாக இருக்கும் என் போக முடியவில்லை. ஏண்ணா இப்படி?

Unknown said...

என்னைப் போன்ற இளசுகள் ???

Vinoth Subramanian said...

Go for new actresses.

சேக்காளி said...

//என்னைப் போன்ற இளசுகள்//
ரியல் எஸ்டேட் காரனுக முகவரி மாறி ஒம்ம தலைய வந்து இது தானா அந்த கிரவுண்டு ன்னு பா(ர்)த்துட்டு போறானுகளாம். இதுல எளசுகளாம். அதுவும் என்னைப் போன்ற எளசுகளாம்.

சேக்காளி said...

//என்னைப் போன்ற இளசுகள்//
நகைச்சுவை பதிவாமாம்.சொல்றாப்டி.