Mar 22, 2016

என்ன செய்ய முடியும்?

இவ்வளவு நாட்களாக எங்கள் அலுவலகம் எம்.ஜி.சாலைக்குப் பின்புறமாக இருந்தது. யார் கேட்டாலும் பந்தாவாக இருக்கட்டும் என்று ‘எம்.ஜி.ரோடுதான்’ என்று சொல்லிவிடுவேன். இதில் என்ன பந்தா என்று கேட்கிறவர்கள் எளிதாகக் கேட்டுவிடலாம். இங்கு வந்து பார்த்த பிறகுதான் புரிந்து கொள்ள முடியும்.

சென்னை எல்லாம் ஒரு ஊராய்யா? வெயிலும் ஒற்றை ரோஜாவோ குண்டுமல்லியோ மலராத பாலைவனமாகிப் போன சாலைகளும்- பெங்களூர் பெங்களூர்தான். சுஜாதா சொன்ன மாதிரி பெண்களூர். புது அலுவலகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் இருப்பதேயில்லை. பொசுக்கு பொசுக்கென்று வெளியே வந்துவிடுகிறேன். வெளியில் தமிழ்நாட்டுக்காரர் ஒருவர் கடலை விற்கிறார். பொட்டலம் பத்து ரூபாய். ‘அவ்வஞ்சு ரூவாய்க்கு கொடுத்தீங்கன்னா ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவை கூட வாங்குவேன்’ என்று சொல்லி ரெகுலர் வாடிக்கையளாராக ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். புது இடத்துக்குச் சென்றால் சூழலை நமக்கு ஏற்ப மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடலைக் கடை. ஒரு கொய்யாக் கடை. ஒரு டீக்கடை -இது போதும். 

அடுத்ததாக மெஸ். வீட்டில் சாம்பார் செய்யும் போதெல்லாம் வேண்டுமென்றே சாப்பாட்டை மறந்து வைத்துவிட்டு வந்துவிடுவேன். வழக்கமாக இரண்டு மணிக்கு உள்துறை அமைச்சரிடமிருந்து அழைப்பு வரும். 

‘சாப்பிட்டீங்களா?’

‘ஓ...’ 

‘என்ன கொண்டு வந்தீங்க?’ எனக்கு முன்னாலேயே கிளம்பிப் போய்விடுவதால் அந்த விவரம் வேணிக்குத் தெரியாது.

‘மறந்துட்டு வந்துட்டேன்’- சாம்பார் என்றால் மறந்துவிடுவான் என்கிற புரிதலுக்கு வந்துவிட்டதால் பெரிய பிரச்சினை இருப்பதில்லை.

‘என்ன சாப்பிட்டீங்க?’

‘சிக்கன் பிரியாணி’

‘பூண்டை திங்கிறேன்...ஜாகிங் போறேன்னு கண்டதையும் பண்ணிட்டு தினமும் சிக்கன் பிரியாணி தின்னுக்க வேண்டியது’

பழைய அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு கடையைப் பிடித்து வைத்திருந்தேன். அரைத் தட்டு பிரியாணி அறுபது ரூபாய். ஒரேயொரு துண்டு கறியை சோற்றுக்குள் ஒளித்து வைத்திருப்பார்கள். கையை விட்டுது துழாவு துழாவென்று துழாவி கண்டுபிடித்துவிடுவேன். அப்பா ஒரு தெருநாயை வளர்க்கிறார். ஜிம்மி. பழைய சோறு, பழைய ரசம் என்று எதை ஊற்றினாலும் தின்றுவிடும். ஆனால் திடீரென்று ஒரு சமயத்தில் எதையும் தின்னாது. பிறகு ஒற்றை எலும்புத் துண்டைப் போட்ட பிறகுதான் வழக்கத்துக்கு வந்து சேரும். தவறாமல் ஒவ்வொரு வாரமும் இந்தக் கதை நடக்கும். வேணி என்னை ஜிம்மியோடு ஒப்பிட்டுக் கொள்வாள். அந்த ஜிம்மிக்கு வாரம் ஒரு முறைதான் எலும்பு வாசம் தேவை. எனக்கு அவ்வப்போது தேவை. ஆனால் என்னதான் தின்று என்ன செய்வது? ஐம்பத்தேழே முக்கால் கிலோவைத் தாண்ட முடிவதில்லை. நெஞ்சம் முழுவதும் வஞ்சம். சதையே பிடிப்பதில்லை.

எம்.ஜி.சாலையிலிருந்து பிரிகேட் சாலைக்குச் செல்லும் வழியெங்கும் தேடிப் பார்த்துவிட்டேன். அநியாயம் - ஒரு பிரியாணி நூற்று எண்பது ரூபாய் சொல்கிறார்கள். முழுக் கோழியைப் பிடித்து உள்ளே அமுக்கி வைத்தாலும் கூட அவ்வளவுதான் விலை வரும். கடை வாடகையை எல்லாம் நம் பிரியாணி மீது கட்டுகிறார்கள். கடந்த சில நாட்களாக ஏதாவதொரு கடையைக் கண்டுபிடித்து உள்ளே நுழைய வேண்டியது. கையைக் கழுவிக் கொண்டு அமர்ந்த பிறகு விலைப்பட்டியலைக் கொண்டு வந்து நீட்டுவார்கள். பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருக்கும். ஐடி கார்ட் எல்லாம் போட்டுக் கொண்டு விலையைப் பார்த்துவிட்டு எழுந்து சென்றால் சப்தமில்லாமல் துப்பி அனுப்பிவிடுவார்கள். 

பந்தாவாக முகத்தை வைத்துக் கொண்டு ‘ராகி முத்தே இல்வா?’ என்பேன். ராகிக் களியின் கன்னடப் பெயர். கிட்டத்தட்ட அரிசி உணவுக்கு இணையாக இங்கே களியை உண்கிறார்கள். அதனால் கேவலமெல்லாம் இல்லை. ‘இல்ல சார்’ என்ற பதில்தான் வரும். ‘பேடா’ என்று சொல்லிவிட்டு அடுத்த கடை. இப்படியே கடை தேடும் படலம் ஓடிக் கொண்டிருக்கிறது. சாப்பிடச் செல்கிறேன் பேர்வழி என்று அரை மணி நேரம் எடுக்கலாம் ஒரு மணி நேரம் சமாளிக்கலாம். அறுபது ரூபாய் பிரியாணியை இரண்டு மணி நேரமாகத் தேடிக் கொண்டிருந்தால் மேலாளர் ஒத்துக் கொள்வாரா? இவ்வளவு காசு கொடுத்துத் தின்றால் உடலில் ஒட்டாது என்பதால் கிடைப்பதை விழுங்கிவிட்டு வந்துவிடுகிறேன். அதுவொன்றுதான் எம்.ஜி.சாலையின் பெருந்துக்கம்.

ஒரு மலையாளப் பெண்மணி இதே சாலையில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறார். சற்றேறக்குறைய அறுபது வயது இருக்கக் கூடும். தலை முடி திரித்திரியாக சுருண்டிருக்கிறது. தோளில் ஒரு மூட்டையைச் சுமந்து கொண்டு கையில் ஒரு குச்சியை வைத்திருக்கிறார்.

கடலைக்கடைக்காரர் ‘அந்தம்மா பேப்பர் படிக்கிறதை கவனிங்க’ என்றார். ஏதோ கன்னடச் செய்தித்தாளை விரித்து மலையாளத்தில் வாசித்துக் கொண்டிருந்தார். பாவமாக இருந்தது. 

‘இங்கதான் இருப்பாங்களா?’ என்றேன்.

‘எப்பவாச்சும் வரும்’ என்றார்.

மனம் சமநிலையிழந்து கால் போன போக்கில் நடந்து கொண்டிருக்கிறார். குடும்பத்தைவிட்டுத் தவறி வந்திருக்கக் கூடும் அல்லது குடும்பம் விரட்டியடித்திருக்கக் கூடும். ஏதோ மலையாளச் செய்தியை மனதில் குதப்பியபடி தனது பாதையை மறந்துவிட்டு தெருநாய்களை விரட்டுவதற்காக ஒற்றைக் குச்சியை வைத்துக் கொண்டு அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். பார்த்த போது முறைத்தார்.   தலையைக் குனிந்து கொண்டேன்.

கடலைக் கடைக்காரரிடம் ‘அந்தம்மாகிட்ட பேசுவீங்களா?’ என்றேன்.

‘எதுக்கு தம்பி?’ என்றார் அதிர்ச்சியடைந்தவராக. 

அந்தப் பெண் எங்களை வேகமாக கடந்து கொண்டிருந்தார். பெங்களூரின் தெருக்களிலும் சாலைகளிலும் இத்தகைய பெண்களைச் சாதாரணமாகக் கடந்து விட முடிவதில்லை. ஒரு காலத்தில் அவர்களுக்கும் குடும்பம் இருந்திருக்கும். இப்பொழுதும் கூட அவர்களைச் சார்ந்தவர்கள் எங்கேயாவது இருக்கக் கூடும். திசை தவறிப் போன பறவைகளைப் போன்ற இந்தப் பெண்மணிகளை ஏதாவதொரு சமயத்தில் அவர்களது குடும்பம் தேடியிருக்கக் கூடும். பிறகு சலித்துப் போய் ‘இறந்து போய்விட்டார்’ என்று சமாதானம் அடைந்திருப்பார்கள். ஆனால் அமைதியடையாத ஆன்மாவைப் போல இந்த பெருநகரத்தின் திகில் நிறைந்த இரவுகளில் பயந்தும் ஒடுங்கியும் வேட்டை நாய்களிடம் தப்பித்தும் சிக்கியும் சின்னாபின்னமாகியும் எதிர்ப்படும் ஒவ்வொரு மனிதனையும் முறைத்துக் கொண்டிருக்கும் இந்தப் பெண்களின் நிலை நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று நினைக்கும் போது பகீரென்றாகிவிடுகிறது.

‘நாம ஏதாச்சும் பண்ண முடியாதா?’ என்றேன்.

‘என்ன பண்ணுவீங்க?’ என்றார்.

தெளிவான பதில் என்னிடமில்லை. அவரை இன்னுமொரு முறை பார்த்தால் போதும். அவருக்காக எதையாவது செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. அப்படியொரு நல்ல காரியத்தைச் செய்தால் பகிர்ந்து கொள்கிறேன். நாம் ஒவ்வொருவரும் செய்யக் கூடிய ஆகச் சிறந்த நல்ல காரியம் உண்டென்றால் அதுவாகத்தான் இருக்க முடியும்.

1 எதிர் சப்தங்கள்:

ADMIN said...

உண்மைதான். அதுபோன்றவர்களுக்கு கண்டிப்பாக குடும்பம் என்று ஒன்று இருந்திருக்கும். அவர்களின் மனநிலை சமநிலை இழக்க காரணமாக அந்த குடும்பமே கூட இருந்திருக்க கூடும். அல்லது வேறு கால சூழலாக கூட இருக்கலாம். நான் கூட சில நேரங்களில் இதுபற்றி சிந்தித்துண்டு. நாம் ஏதும் செய்ய முடியாதா என்று.... ஆனால் அது வெறும் சிந்திப்போடு நின்று போகும். நிறைய பேரின் மனநிலை கூட அப்படிதான். உதவ முடியாதா என்ற உள்ளக் குமறலோடு நின்றுவிடும். நீங்கள் செயல்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்த்துகள் !