Mar 11, 2016

நமக்கு எதுக்கு வம்பு?

கார்ட்டூனிஸ்ட் பாலா இணைய உலகில் வெகு பிரபலம். குமுதம் ரிப்போர்ட்டரின் கார்ட்டூனிஸ்ட். ஃபேஸ்புக்கில் மட்டும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை வைத்திருக்கிறார். எதிரிகள் என்று கணகெடுத்தால் எப்படியும் இரு மடங்காகவாவது இருக்கும். அதுவும் திமுகக்காரர்களிடம் அவரைப் பற்றி பேசிப் பார்க்க வேண்டுமே. காதில் புகைவிடுவார்கள். அத்தனை லோலாயம் பிடித்த ஆள். அவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். தலைப்பு - ‘நமக்கு எதுக்கு வம்பு?’. அவர் புத்தகத்தின் தலைப்பைச் சொன்னவுடன் சிரிப்பு வந்துவிட்டது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு ‘எனக்கு ஒண்ணும் தெரியாதப்பா’ என்று சொல்வது மாதிரிதான்.

பாலாவின் கார்ட்டூன்கள் சர்ச்சைக்குரியவை என்றும் ஒரு தலைபட்சமானவை என்றும் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் இப்படியான ஆளுமைகளுக்கான தேவை இருந்து கொண்டேயிருக்கிறது. இவர்கள்தான் சலனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சலனங்கள் அவசியமானவை என்று நம்புகிறேன். உரையாடல்களுக்கும் விவாதங்களுக்குமான தொடக்கப்புள்ளியாக இந்தச் சலனங்கள் இருக்கின்றன. 

பாலாவின் புத்தகத்தை யாவரும்.காம் பதிப்பகம் வெளியிடுகிறது. அவர்கள்தானே என்னுடைய முந்தைய இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டார்கள். அந்த அனுபவத்தில் ‘அவங்ககிட்டிருந்து ராயல்டி வராதுங்க...பரவாயில்லையா பாலா?’ என்றேன். 

‘அது பரவாயில்லீங்க’ என்று சொல்லிவிட்டார். பணக்கார எழுத்தாளர் போலிருக்கிறது. அவர்கள்தான் அப்படிச் சொல்வார்கள்.

‘அப்புறம் நீங்க மட்டும் எதுக்கு வருஷா வருஷம் அவங்ககிட்டயே கொடுக்கறீங்க?’ என்றார். கேட்கத்தானே செய்வார்? 

எத்தனை புத்தகம் விற்றிருக்கிறது என்கிற கணக்கைக் கூடச் சொல்லாத பதிப்பாளர்களுக்கிடையில் யாவரும்.காம் காரர்கள் விற்பனைக் கணக்கைத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்கள். அதுவும் பெரும்பாலும் ரன்னிங் கமெண்டரியாகத்தான் இருக்கும். புத்தக விற்பனை ஜோராக நடந்து கொண்டிருக்கும் சமயங்களில் பதிப்பாளர் ஜீவகரிகாலன் அழைத்து ‘இன்னைக்கு செம சேல்ஸூங்க...நாற்பத்தியேழே முக்கால் காப்பி வித்திருக்கு’ என்பார். அது என்ன நாற்பத்தேழ முக்கால் என்று குழம்ப வேண்டியதில்லை. நாற்பத்து எட்டுப் பேரில் ஒருவர் இருபது ரூபாய் கடன் வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்று அர்த்தம். அதை மல்லையா அல்லது வாராக்கடனில் சேர்த்து முக்கால் பிரதி விற்றது மாதிரி கணக்குச் சொல்வார். 

அதோடு நிறுத்திக் கொள்ள மாட்டார்.

‘ஒரு தாத்தா...நடக்கவே முடியலை...ஆனா உங்க புக்கைத் தேடிட்டு வந்தாருங்க’ என்றவுடன் காதில் தேனாறு பாயும். துடைத்துக் கொண்டு ‘அப்படியாங்க?’ என்று முடிப்பதற்குள் ‘ஒரு பொண்ணு வந்து உங்க நாவல் எப்போ வருதுன்னு கேட்டுட்டுப் போகுதுங்க..நயன்தாரா மாதிரியே இருந்துச்சு’ என்று கிளப்பிவிடுவார் பாருங்கள். அது பொய்யாகக் கூட இருக்கட்டுமே. காது இனிக்க இனிக்க பொய் சொல்வதைக் கேட்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது அல்லவா?. வீட்டில் இருந்தால் அலைபேசியை ஸ்பீக்கர் மோடில் போட்டுவிட்டு பேசலாம். 

‘வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் மணிகண்டன்’ என்று யாரோ அருகில் நின்று கத்துவது மாதிரிதான். அதற்காகத்தான் அவர்களிடம் ஒவ்வொரு வருடமும் புத்தகம் கொடுக்கிறேன் என்று உடைத்துச் சொல்ல முடியாது அல்லவா? ‘ரொம்ப நல்ல மனுஷங்க’ என்று சொல்லிவிட்டு ‘என்னை போய் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாரு’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன். 

நகைச்சுவை ஒரு பக்கம் இருக்கட்டும்- யாவரும்.காம் காரர்கள் உண்மையிலேயே வெள்ளந்திகள்தான். அதற்காகவே எவ்வளவு புத்தகங்களை எழுதினாலும் அவர்களிடம் கொடுக்கலாம். பாலாவின் புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார்கள். பாலா தன்னுடைய ஃபேஸ்புக்கில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவற்றிலிருந்து முப்பத்தைந்து கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக்கியிருக்கிறார்கள். சாதியம் குறித்தான கட்டுரைகள், சமூக அவலங்கள், தன்னனுபவக் கட்டுரைகள், அரசியல், குடி என சகலத்தையும் கலந்து எடுத்திருக்கிறார்கள். சுவாரசியமான புத்தகம். புத்தகம் குறித்து தனியாக எழுதிக் கொள்ளலாம். 

இப்பொழுது எதற்கு இந்தக் குறிப்பு என்றால் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நாளை சென்னையில் நடைபெறுகிறது. ஞாநி, மருத்துவர் ஷாலினி, தாமிரா, பால பாரதி எல்லாம் கலந்து கொள்கிறார்கள். ‘நீங்க வர்றீங்களா?’ என்றார்கள். நிகழ்ச்சிக்குத்தான் அழைக்கிறார்கள் என்று நினைத்து ‘ஒண்ணும் பிரச்சினையில்லைங்க..வர்றேன்’ என்று சொல்லிவிட்டேன். கருத்துரை என்று என்னுடைய பெயரையும் சேர்த்துவிட்டார்கள். நானெல்லாம் கருத்து சொல்லித்தான் மழை பெய்யப் போகிறது. வாய்ப்புக் கிடைத்தால் பாலாவையும், பதிப்பகங்களையும் ஒரு வாரு வாரிவிட்டுவிட்டு அமர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

கடலூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை வந்து சேர்ந்துவிடுகிறேன். எப்படியும் நிகழ்ச்சி முடிவதற்குள் வந்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அறக்கட்டளை சம்பந்தமாக இருவரைச் சந்தித்து காசோலை கொடுக்க வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் ஒரே வேலையாக முடித்துக் கொள்ளலாம். நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரில் என்னைத் தவிர மற்றவர்கள் நன்றாக பேசுகிறவர்கள். அவர்களை நம்பி நிகழ்ச்சிக்கு வாருங்கள். இவ்வளவு எழுதினாலும் இரவில் தூங்குவதற்கு கரிகாலன்தான் ஓரிடம் ஏற்பாடு செய்து தருவார். எல்லாக் கடுப்பையும் சேர்த்து தலை மீது கல்லைத் தாங்கி போட்டுவிடக் கூடாது என்ற வேண்டுதலிலேயே இந்த அழைப்பை முடிக்கிறேன்.


3 எதிர் சப்தங்கள்:

kailash said...

Hope you will go through his book before speaking about it . For your meeting Bala came without any preparation about your book and he spoke something irrelevant .

சேக்காளி said...

//வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் மணிகண்டன்’ என்று யாரோ அருகில் நின்று கத்துவது மாதிரிதான்//
இனிமேருந்து "யாரோ" ன்னெல்லாம் சொல்லக்கூடாது மணி. அந்த (யாரோ)எடத்துல "சேக்காளி" ன்னு தான் சொல்லணும்.

Anonymous said...

Hi Mani, Today you spoke non-sense. When they called you for speaking about Bala and his book, you should have prepared for it or else you should have not accepted. And during your speech in between you are saying I forgot what to speak. Better done repeat this again in any meetings.