Feb 26, 2016

அடுத்த படி- பிப்ரவரி 2015

கடலூரில் அடுத்த கட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி மார்ச் 12 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கிறது. அது பற்றிய விவரங்களைச் சொல்வதற்கு முன்பாக- ஜனவரி முப்பது முதல் பிப்ரவரி இருபத்து நான்கு தேதி வரையிலுமான நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவு விவரம் இது.



வரிசை எண் 6: திரு. மாசிலாமணியின் கண் அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட ரூபாய் நான்காயிரத்து ஐநூறு (காசோலை எண்: 90)

வரிசை எண்: 17: குழந்தை கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் மாதாந்திர உதவித் தொகையான ரூபாய் இரண்டாயிரம்.

இவை தவிர்த்து பிற அனைத்து காசோலைகளும் கடலூர் வெள்ள நிவாரண உதவிக்காக வழங்கப்பட்டவை. முழுமையான விவரங்கள் இணைப்பில் இருக்கின்றன. 

இன்றைய தேதியில் வங்கிக் கணக்கில் நாற்பத்தியேழு லட்ச ரூபாய் இருக்கிறது. (ரூ. 47,73,333.39). 

இவை தவிர கிட்டத்தட்ட பதினேழு லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கான காசோலைகள் எழுதி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இவை கடலூரின் அடுத்த கட்ட நிவாரணப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவிருக்கிறது. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் மிகவும் சிரத்தையுடன் வடிகட்டப்பட்ட விண்ணப்பங்களுக்கான உதவிகள் இவை. இவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களை வைத்து பயனாளிகளால் தொழில் தொடங்கவும் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளவும் முடியும் என்று உறுதியாக நம்பும்பட்சத்தில் மட்டுமே அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டது.

பதினேழு லட்சம் ரூபாய்க்கான பொருட்களின் விவரங்கள் இவை-
  • இட்லி கடை வைப்பதற்காக இருபத்தைந்து பெண்மணிகளுக்கு மண்ணெணெய் அடுப்பு (16x16 அளவு) வாங்குவதற்காக கடலூர் Ravi radios and cooker Home என்ற பெயரில் ஐம்பத்தைந்தாயிரத்திற்கு காசோலை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
  • இருபத்தைந்து இட்லி குக்கர்களும் ஏழு இஸ்திரி பெட்டிகளும் RMS Pathira Maaligai என்ற நிறுவனத்தில் ரூ.74,130 க்கு வாங்கப்படவிருக்கிறது.
  • மாவு அரைக்கும் எந்திரங்கள் பனிரெண்டு பேருக்கு வழங்கப்படவிருக்கிறது. அதற்காக Anandkumar TV centre என்ற நிறுவனத்திற்கு ரூ.39,600க்கு காசோலை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
  • அரசு பள்ளிகளுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் சேர்ந்து ஏழு கணினிகள் Virtual Galaxy என்ற பெயரில் ரூபாய் 1,19,000 க்கு காசோலை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
  • நூற்றைம்பது தையல் எந்திரங்கள் (இரண்டு வகையான எந்திரங்கள்) வாங்குவதற்காக Anandkumar Agencies என்ற பெயரில் ரூ.9,05,000 க்கு வழங்கப்படவிருக்கிறது.
  • கடலூர் Mano Agencies நிறுவனத்தின் வழியாக விவசாயத்தில் பயன்படும் Sprayer, துளையிடும் எந்திரங்கள், அரைவை எந்திரங்கள், வெட்டு எந்திரங்கள், வெல்டிங் எந்திரங்கள் உட்பட மொத்தம் 103 எந்திரங்கள் ரூ.5,42,825 க்கு வாங்கப்படவிருக்கிறது.
மொத்தம் ரூ.1735555 (பதினேழு லட்சத்து முப்பத்தைந்தாயிரத்து ஐநூற்று ஐம்பத்தைந்து ரூபாய்).

கடந்த முறை கடலூர் மன்னம்பாடி பள்ளிக்கு வழங்கிய கணினி அவர்கள் பள்ளியில் நிறுவப்பட்டுவிட்டது. பள்ளி ஆசிரியர் திரு. ரத்தினபுகழேந்தி எழுதிய மின்னஞ்சலும் நிழற்படமும் இங்கே-

அன்பு நண்பர் மணிகண்டன் அவர்களுக்கு,

நெகிழ்ந்த நன்றிகளோடு புகழேந்தி.

இன்றுதான் பள்ளியில் கணினியை நிறுவினோம். அதற்கான UPS, மேசை, நாற்காலி, ஒலிப்பெருக்கி ஆகியவற்றை வாங்க காலதாமதம் ஆகிவிட்டது. 

எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் ,தலைமை ஆசிரியர் அனைவருக்கும் மகிழ்ச்சி. முதலில் யாரும் நான் சொன்னதை நம்பவில்லை. யாரென பார்க்காமலே உதவிடும் மனிதர்களும் உள்ளனரா? என வியந்தனர். என் கோரிக்கையை ஏற்று இப்படி உடனடியாக உதவுவீர்கள் என நானும் எதிர்பார்க்கவில்லை. 

மன்னம்பாடி ஒரு விசித்திர சிற்றூர். போர் போட்டால் நீர் கிடைக்காது. தப்பித்தவறி கிடைத்தாலும் சுத்தமான நீராக இருக்காது. ஏரிப்பாசனத்தை மட்டுமே நம்பிதான் விவசாயம் என்பதால் கடந்த 3 ஆண்டுகளாக முட்புதர்கள் மண்டிய விளை நிலங்கள். இந்த ஆண்டு மழையால் நெல் விளைந்துள்ளது. அதனால் வேலை வாய்ப்பு தேடி கோயம்பேடு, திருச்சி ஆகிய மார்க்கெட்டுகளில் மூட்டை தூக்குவதும், கேரளாவில் செங்கல் சூளையில் கல் அறுப்பதும் எம் மாணவர்களின் பெற்றோர்களின் வேலை. சில நேரங்களில் மாணவர்கள் சிலரும் பெற்றோருடன் சென்றுவிடுவதும் உண்டு.குடிசை வீடுகளை மாடி வீடாக்கும் முந்தைய அரசின் திட்டத்தில் வீடு கட்டத் தொடங்கி அதற்காக வாங்கிய கடனை அடைக்க நிரந்தரமாக செங்கல் சூளைகளில் மாட்டிக்கொண்டவர்களும் உண்டு. இப்படிப்பட்ட குடும்பச்சூழலில் உள்ள மாணவர்கள் கல்வியை ஒரு பொருட்டாக எண்ணாத நிலையில் உள்ளனர். தற்போதுள்ள ஆசிரியர் குழு அற்பணிப்பு ஊனர்வோடு பணியாற்றி மாணவர்களுக்கு கல்வியின்பால் ஈடுபட்டை ஏற்படுத்தி வருகிறோம்.

பள்ளியில் ஆண்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு நீங்கள் வர இயலுமா? வந்தால் எமது மாணவர்களுக்கு ஊக்கமாக அமையும். இப்படி நாமும் பிறருக்கு உதவிட வேண்டும் என்ற மனிதாபிமான உணர்வைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன். தேதி முடிவானதும் தெரிவிக்கிறேன். உங்கள் வசதி எப்படி என்று குறிப்பிடுங்கள்.

நண்பர் சக்தி சரவணன் அவர்கள் மிகவும் நல்ல பொருள்களை வாங்கியுள்ளார். மென்பொருளும் சிறப்பாக உள்ளது.

பள்ளியின் சார்பில் தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் நன்றிகள்.



அன்புடன்
புகழ்.

அடுத்த கட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கடலூர் டவுன்ஹாலில் மார்ச் 12 ஆம் தேதியன்று நடைபெறுகிறது. பயனாளிகளின் எண்ணிக்கையும் பொருட்களும் அதிகம் என்பதால் அவர்களின் இடங்களுக்கு கொண்டு சேர்ப்பது எளிய காரியமில்லை. அதனால் அரங்கம் ஒன்றைத் தயார் செய்து அங்கேயே வைத்துக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.பயனாளிகளின் பட்டியல் தயாரிப்பு, பொருட்களை வாங்கிச் சேர்த்தல், நிகழ்வு அரங்கத்துக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் வழக்கம் போல கடலூர் நண்பர்கள் சக்தி சரவணன் தலைமையில் செய்து கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சி குறித்தான முழுமையான விவரங்களை விரைவில் எழுதுகிறேன். அக்கம் பக்கத்து மாவட்டத்துக்காரர்கள் அன்றைய தினத்தில் கடலூர் வர முடியும் என்கிற சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். நிசப்தம் அறக்கட்டளை ஆரம்பித்த பிறகு நடைபெறும் மிகப்பெரிய உதவி வழங்கும் நிகழ்ச்சி இது. அத்தனை பேரின் உதவியும் இல்லாமல் இது சாத்தியமில்லை. அதனால் வர முடிந்தவர்கள் நிச்சயம் கலந்து கொள்ளவும். 

கணக்கு விவரம், உதவிப் பொருட்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருப்பின் கேட்கவும்.

அன்பும், நன்றியும்.

0 எதிர் சப்தங்கள்: