Feb 5, 2016

ஒட்டுண்ணிகள்

‘நாற்பத்தைந்தாயிரம் கொடுத்தேன்...ஒரு வருஷம் ஆச்சு...இன்னும் வரலை...என்ன செய்யலாம்?’ என்றார் அந்த மனிதர். பதிப்பாளரிடம் தனது கவிதைத் தொகுப்பை புத்தகமாகக் கொண்டு வருவதற்காக பணம் கொடுத்திருக்கிறார். சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் கொண்டு வந்துவிடுவதாக பதிப்பாளர் சொன்னாராம். இப்பொழுது கேட்டால் ‘புத்தகக் கண்காட்சிதான் தள்ளிப் போய்டுச்சே..ஏன் பறக்கறீங்க?’ என்று கேட்கிறாராம். என்ன செய்ய முடியும்?  ஓன்றும் செய்ய முடியாது.

இப்படியான கதைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. பதிப்பாளர் என்ற போர்வையில் வருடாவருடம் லட்சக்கணக்கில் மூட்டை கட்டுகிறவர்கள் பெருகிக் கிடக்கிறார்கள். நூறு பக்கங்களுடைய ஒரு புத்தகத்தை முந்நூறு பிரதிகள் அச்சடிக்க அதிகபட்சம் பதினைந்தாயிரம் செலவாகும். ஐநூறு பிரதிகள் என்றால் கூடுதலாக இரண்டு அல்லது மூன்றாயிரம் ரூபாய். அதற்கு மேல் அவசியமேயில்லை. ஆனால் சினிமா படம் எடுக்கிறேன் என்று தோட்டங்காடுகளை விற்று பணத்தை மஞ்சள் பையில் போட்டு எடுத்து வந்த அந்தக் கால சினிமா தயாரிப்பாளர்களைப் போல கேப்மாரி பதிப்பாளர்களிடம் ஐம்பதாயிரம் ஒரு லட்சம் என்று சகட்டுமேனிக்குக் கொடுத்துவிட்டு ‘அவன் ஏமாத்திட்டான்...காசைத் திருடிட்டான்’ என்றால் என்ன பிரயோஜனம்? கொடுப்பதற்கு முன்பாக புத்தி வேண்டும். நான்கைந்து பேர்களையாவது விசாரித்திருக்க வேண்டும். புத்தகமாக்க எவ்வளவு செலவு பிடிக்கும்? ஏன் இவ்வளவு பெரிய தொகையைக் கேட்கிறார்கள் என்று ஆராய வேண்டும். ம்ஹூம். கேட்டவுடனே பணத்தைக் கொடுத்துவிட வேண்டியதுதான்.

வீட்டில் வேலை செய்யும் கட்டிட வேலை செய்பவரிடம் பேரம் பேசுவார்கள். தச்சரிடம் பேரம் பேசுவார்கள். ஆனால் பதிப்பாளரிடம் பேரம் பேச மாட்டார்கள். ‘புத்தகம் என்பது அறிவு சார்ந்த விஷயம்...எப்படி பேரம் பேசுவது?’ என்று சங்கோஜப்பட்டு அறிவுகெட்டதனமாக கேட்ட தொகையைக் கொடுக்கிறார்கள். அதுவும் அயலகத்தில் வாழும் தமிழர்கள் என்றால் இந்தப் பதிப்பாளர்களுக்கு லட்டு தின்பது மாதிரிதான். வழித்துக் கட்டிவிடுகிறார்கள்.

திருமணத்தில் தாம்பூலப் பைகளில் போட்டுக் கொடுப்பதற்கு என்றோ அல்லது அப்பா எழுதிய கடைசி எழுத்துக்கள்- அவருடைய நினைவாக இருக்கட்டும் என்றோ நினைத்து புத்தகமாக்க விரும்பினால் இத்தகைய பதிப்பாளர்களை அணுகி பணம் கொடுத்து பதிப்பித்துக் கொள்ளலாம். ஆனால் புத்தகம் வெளியிட்டு எழுத்தாளர் ஆக வேண்டும் என்று நினைத்தால் இது சரியான பாதை இல்லை. ஒரேயொரு புத்தகத்தோடு காணாமல் போனவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் தெரியும்- அதிக காலம் வேண்டாம். கி.பி 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகாக ஒற்றைப் புத்தகத்துக்குப் பிறகு அமைதியானவர்களைக் கணக்கெடுத்துப் பார்க்கலாம். பல நூறு பேர்களாவது தேறுவார்கள். இதில் தொண்ணூறு சதவீதம் பேர் ஒட்டுண்ணி பதிப்பாளர்களிடம் காசு கொடுத்து புத்தகம் போட்டவர்களாக இருப்பார்கள். 

ஆத்ம திருப்திக்காக பதிப்பகத் தொழிலை நடத்துகிறேன் என்று சொல்லிக் கொண்டு வெறும் வணிக நோக்கத்தோடு புத்தகங்களைப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறவர்களைத் திரும்பிய பக்கமெல்லாம் பார்க்க முடிகிறது. வணிக நோக்கம் தவறில்லை. எல்லோரும் பிழைத்துத்தானே ஆக வேண்டும்? ஆனால் அவர்களிடம் ஏமாந்து போகிற மேற்சொன்ன இளைஞர்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. எழுத வேண்டும் என்கிற ஆசையில் எழுதுகிறார்கள். எப்படியாவது புத்தகம் போட்டுவிடலாம் என்று இத்தகைய திருட்டு பதிப்பாளர்களிடம் காசு கொடுக்கிறார்கள். வாங்குகிற காசுக்கு உடனடியாக வேலையை முடித்துக் கொடுப்பார்களா என்றால் அதுவும் இருக்காது. இன்றைக்கு வந்துவிடும், நாளைக்கு வந்துவிடும், ப்ரிண்டர் எல்லாம் பிஸியா இருக்காங்க என்று ஏதாவதொரு பொல்லித் தனமான சொல்லி இழுத்தடிப்பார்கள். இத்தகைய வெறுப்பிலும் கசங்குதலிலும்தான் முக்கால்வாசிப்பேர் இந்த சங்காத்தமே வேண்டாம் என்று அமைதியாகிவிடுகிறார்கள்.

காசு கொடுத்துத் திக்கித் திணறி வெளிவரும் ஒவ்வொரு புத்தகமும் ஒரு எழுத்தாளனைக் கொன்றுவிட்டுத்தான் வெளிவருகிறது. 

அதனால் அவசரப்பட வேண்டியதில்லை. 

புத்தகம் வெளிவந்தால் எழுத்தாளர் ஆகிவிடலாம் என்று நினைத்துக் கண்டவன் வயிறு வளர்க்க நம்முடைய சம்பளப் பணத்தை அழ வேண்டியதில்லை. எழுதுவது உண்மையிலேயே விருப்பமாக இருப்பின் புத்தகமாகக் கொண்டு வருவதற்கு முன் நம்முடைய பெயரைக் குறைந்தபட்சமாகவாவது பொதுவெளியில் பரிச்சயம் ஆக்கிவிட வேண்டும். இதழ்களுக்கு அனுப்பி வைத்து அவை பிரசுரம் ஆவதுதான் முதல் வழி. நம்மை ஓரளவு கவனிக்கிறார்கள் என்று தெரிந்த பிறகு பதிப்பாளர்களை அணுகுவதுதான் சரியான வழிமுறை. இதழ்களுக்குத்தான் அனுப்ப வேண்டும் என்பதில்லை. வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இணையம் உள்ளிட்ட கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு ஒன்றிரண்டு வருடங்களாவது பிடிக்கும். இந்த இடைவெளியில் புத்தகம் பதிப்பிப்பது எப்படியென்றும், அதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவற்றையும் தெரிந்து கொள்ள முடியுயும். அதன் பிறகு இப்படி பெருந்தொகைகளைக் கொடுத்து ஏமாற வேண்டியதில்லை.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அப்பனோ, கணவனோ அல்லது சுயமாகவோ சம்பாதித்த பணத்தை எடுத்து வந்து பதிப்பாளர் என்ற பெயரில் ஏமாற்றி வாழும் சேற்றுப் புழுக்களிடம் இறைத்துப் புத்தகமாக்கி என்ன செய்யப் போகிறோம்? எழுத நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றைப் பிரசுரம் செய்ய அதைவிடவும் நிறைய வாய்ப்புகள் உருவாகிவிட்டன. ஆகவே பொறுத்திருக்கலாம். 

இப்பொழுதெல்லாம் பதிப்பகம் என்பது மிகச் சிறந்த ‘சைடு பிஸினஸ்’.சரியான தொடர்புகள் இருந்தால் நறுக்கென்று ஒரு தொகையைப் பார்த்துவிட முடியும். காசு வாங்கும் வரைக்கும் தேனொழுகத்தான் பேசுவார்கள். நம்பிக் கொடுத்துவிட்டு பிறகு புலம்பினால் புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். 

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//இப்பொழுதெல்லாம் பதிப்பகம் என்பது மிகச் சிறந்த ‘சைடு பிஸினஸ்’.சரியான தொடர்புகள் இருந்தால் நறுக்கென்று ஒரு தொகையைப் பார்த்துவிட முடியும்//
அடிக்கிற மாதிரி அடிக்கேன்.நீ அழுற மா(தி)ரி அழுங்கற மாதிரி கொஞ்ச நஞ்சம் எழுதணுங்கற ஆசையிருக்கறவங்களை பதிப்பாளரா மாத்த மொயற்சிக்கறா மாதிரி தோணுது எழுத்தாளரே.

SIV said...

//ஏமாற்றி வாழும் சேற்றுப் புழுக்களிடம்//
//ஒட்டுண்ணி பதிப்பாளர்களிடம்//

அண்ணே, இயற்கை மற்றும் உயிர் சுழற்சியின் அங்கங்களான ஒட்டுண்ணிகள், சேற்றுப் புழுக்களை ஏன் இவர்களுடன் ஒப்பீடு செய்கிறீர்கள்? அவை என்ன குற்றம் செய்தன?