Jan 20, 2016

படிப்பினை

நேற்று மாலை அலுவலகத்துக்கு முன்பாக நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது யாரோ இரண்டு பேர் ஒரு துண்டுச்சீட்டைக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அற்புத சுவிசேஷக் கூட்டத்திற்கான அழைப்புச் சீட்டு. சில நாட்களுக்கு முன்பாக இதே மாதிரி ஒரு வயது முதிர்ந்தவர் அல்சூரில் தாம் ஒரு சமூகக் கூடம் நடத்துவதாகவும் அந்தக் கூடத்திற்கு வந்து பார்க்க வேண்டுமெனக் கோரினார். வீட்டு மொட்டை மாடியில் அவர் நடத்தும் பிரார்த்தனைக் கூடத்தின் பெயர் சமூகக் கூடம். இவை பற்றியெல்லாம் எனக்கு பெரிய புகார்கள் எதுவுமில்லை. அவர்கள் அழைக்கிறார்கள். விருப்பமிருந்தால் போகலாம் இல்லையென்றால் ஒரு புன்னகையோடு கடந்து விடலாம். ஆனால் எல்லாவற்றையும் தாண்டிச் செல்ல முடிவதில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு குடும்பம் பற்றி எழுத வேண்டியிருந்தது. நொந்து கிடக்கும் குடும்பம். வழக்கமாக இத்தகைய குடும்பங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது மின்னஞ்சல் வழியாகவும் ஃபேஸ்புக் வழியாகவும் அத்தகைய குடும்பங்களின் தொடர்பு முகவரியைக் கேட்பார்கள். உதவுவதற்காகக் கேட்கிறார்கள் என்று கொடுத்துவிடுவதுண்டு. அப்படி வாங்கிய யாரோ ஒரு நபர் சர்ச்சுக்கு அழைத்துச் செல்கிறேன், கடவுளிடம் பேசலாம் என்று அக்கப்போர் செய்திருக்கிறார். என்னிடம் பேசிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். அவர்கள் பாவம். மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்பது இரண்டொரு நாட்களுக்கு முன்பாகத்தான் தெரிய வந்தது. அப்படிப் பேசியவர்களைக் கண்டுபிடித்து திட்டுவது பெரிய காரியமில்லை. அதைச் செய்யப் போவதுமில்லை. ஆனால் ஏன் அடிப்படையான புரிதல் கூட இல்லாமல் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று வருத்தமாக இருக்கிறது. 

இனி யாராவது நல்லதொரு எண்ணத்தில் பயனாளிகளின் தொடர்பு முகவரி கேட்டாலும் கூட ஆயிரத்தெட்டு முறை யோசிக்க வேண்டியிருக்கும். இனி மொட்டையாக ‘அவர்களின் தொடர்பு முகவரியைக் கொடுங்கள்’ என்று கேட்டால் என்னிடமிருந்து பதில் வராது. என்ன தேவைக்காக இந்த விவரங்கள் தேவைப்படுகின்றன என்று தெளிவாகச் சொன்னால் மட்டுமே வாயைத் திறக்க முடிவு செய்திருக்கிறேன். இப்படி யோசிப்பது உண்மையிலேயே நிதியுதவியோ அல்லது வேறு உதவியோ செய்ய விரும்புகிறவர்களுக்கு ஒரு தடையாக இருக்கக் கூடும். 

தொலைபேசியில் இந்த விவரத்தைச் சொன்ன அந்த மனிதருக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியவில்லை. ‘அப்படியெல்லாம் யார்கிட்டவும் பேசலை’ என்ற போது ‘அப்படித்தான் சொன்னாங்க’ என்றார்.

கடவுள், மதம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். அடிப்படையில் மனசாட்சி இருக்க வேண்டும். 

கடவுளிடம் அழைத்துச் செல்வது என்பது பாதிக்கப்பட்ட மனிதர்களுக்குச் செய்யும் நன்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். என்னிடம் பேசிவிட்டதாக எதற்காகப் பொய் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. ‘அவன் சொன்னதைச் செய்யவில்லையென்றால் உதவி வராதோ என்னவோ’ என்கிற மனநிலைக்குக் அந்தப் பரிதாபத்திற்குரியவர்களைக் கொண்டு போய் நிறுத்துவதைக் காட்டிலும் வேறு ஏதாவது பெரிய பாவச் செயல் இருக்க முடியுமா? அயோக்கியத்தனம் இது. சகல திசைகளிலிருந்தும் நசுக்கப்பட்டுக் கிடப்பவன் ஏதாவதொரு பற்றுக் கோல் கிடைக்காதா என்று பார்த்துக் கொண்டிருக்கும் போது அவனிடம் மதங்களையும் கடவுளரையும் இறக்கி வைப்பதைப் போன்ற கேவலமான செயல் எதுவும் இருக்க முடியாது. 

உதவி பெறுகிறவர்கள் தாங்கள் கீழே இருப்பதாக எந்தக் கணத்திலும் நினைத்துவிடக் கூடாது என விரும்புகிறேன். அந்த விருப்பம் எப்படியாவது சிதைந்து கொண்டேதான் இருக்கிறது. 

கடவுள் மீதோ குறிப்பிட்ட மதத்தின் மீதோவெல்லாம் எனக்கு எந்த வன்மமும் இல்லை. தனிப்பட்ட மனிதர்கள்தான் சங்கடத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு சங்கடம். எல்லாவற்றையும் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். வேறு என்ன செய்வது?

                                                                     ***
ஜூலை’2015 லிருந்து டிசம்பர் 28 ஆம் தேதி வரைக்கும் நன்கொடை அனுப்பியவர்களின் பட்டியலில் யாருடைய முகவரி மற்றும் PAN அட்டை விவரங்கள் இருந்தனவோ அவர்களுக்கெல்லாம் ரசீது அனுப்பியாகிவிட்டது. மிகக் குறைவானவர்கள்தான் இந்த விவரங்களை அனுப்பியிருக்கிறார்கள். தொண்ணூறுக்கும் குறைவான எண்ணிக்கை. மீதமெல்லாம் அனானிமஸ் நன்கொடைதான். வருமான வரித்துறையிடம் தண்டம் அழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை அனுப்பாமல் இருந்தால் அனுப்பி வைக்கவும். முகவரி மற்றும் PAN அட்டை விவரங்களை அனுப்பி வைத்திருந்தும் ரசீது வந்து சேரவில்லையென்றால் ஒரு மின்னஞ்சல் அனுப்பி வையுங்கள். தவறுதலாக விட்டுப் போயிருக்கும் வாய்ப்பிருக்கிறது. உடனடியாக அனுப்பி வைத்துவிடுகிறேன்.

7 எதிர் சப்தங்கள்:

Jaikumar said...

Please keep a scroller or one line request at the top of the blog for PAN and address atleast for a week.


I have asked my friends (by whatsapp) to share their details whoever domated. You could ask the readers of blog also to do so. By that way many people will share their details

ADMIN said...

விபரம் கேட்பவர்கள் முடிந்தளவுக்கு உதவ வேண்டுமோ தவிர, இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது. கடவுள், மதம் சார்ந்த விடயங்களைவிட, உதவி தேவைப்படுபவர்களுக்கு தற்போதைய தேவை என்னவோ அதைக் கேட்டறிந்து செய்யலாம். அதுதான் முறையானதும் கூட..

Anonymous said...

//"கடவுளிடம் அழைத்துச் செல்வது என்பது பாதிக்கப்பட்ட மனிதர்களுக்குச் செய்யும் நன்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். என்னிடம் பேசிவிட்டதாக எதற்காகப் பொய் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. ‘அவன் சொன்னதைச் செய்யவில்லையென்றால் உதவி வராதோ என்னவோ’ என்கிற மனநிலைக்குக் அந்தப் பரிதாபத்திற்குரியவர்களைக் கொண்டு போய் நிறுத்துவதைக் காட்டிலும் வேறு ஏதாவது பெரிய பாவச் செயல் இருக்க முடியுமா? அயோக்கியத்தனம் இது. சகல திசைகளிலிருந்தும் நசுக்கப்பட்டுக் கிடப்பவன் ஏதாவதொரு பற்றுக் கோல் கிடைக்காதா என்று பார்த்துக் கொண்டிருக்கும் போது அவனிடம் மதங்களையும் கடவுளரையும் இறக்கி வைப்பதைப் போன்ற கேவலமான செயல் எதுவும் இருக்க முடியாது.

உதவி பெறுகிறவர்கள் தாங்கள் கீழே இருப்பதாக எந்தக் கணத்திலும் நினைத்துவிடக் கூடாது என விரும்புகிறேன். அந்த விருப்பம் எப்படியாவது சிதைந்து கொண்டேதான் இருக்கிறது.

கடவுள் மீதோ குறிப்பிட்ட மதத்தின் மீதோவெல்லாம் எனக்கு எந்த வன்மமும் இல்லை. தனிப்பட்ட மனிதர்கள்தான் சங்கடத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு சங்கடம். எல்லாவற்றையும் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். வேறு என்ன செய்வது?"//
You have written what exactly I also feel like. Nice to see people have similar thoughts and feelings.
--V.Raghunathan (raghulallihari@gmail.com)

Unknown said...

நிம்மதியா ஒரு நல்லது செய்யக்கூட முடியாது போல. ப்ளாக் எல்லாம் படிச்சிட்டு இப்படி பன்றான்ன்ன அவன் என்னனு சொல்ல.


God and Devil are in the same boat....

Siva said...

Very bad of that person who does this religion brain wash work

Unknown said...

I felt Anonymouses always gives more impact in both good and bad. Extremists. Please dont hesitate giving details rather we can ask the beneficiary to avoid people who uses your name.

பெரோஸ் said...

பான் கார்டு இல்லாதவங்க முகவரி மட்டும் அனுப்பலாமா? வேறு ஐடி (ஆதார், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட்) வேணுமா?