Jan 13, 2016

பர்தேசி

பதினோராம் வகுப்பில் சேர்ந்த போது எங்கள் ஊரில் கர்ணன் வாத்தியார் ட்யூஷன் அதிபயங்கரமான புகழடைந்திருந்தது. உயிரியியல் வாத்தியார் அவர். வீட்டில் ‘என்னை எப்படியும் டாக்டராக்கிவிடுவது’ என்று முடிவு செய்திருந்தார்கள். அதனால் அவரிடம்தான் ட்யூஷன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். எனக்கு கணக்கு மட்டும்தான் பிணக்கு என்றில்லை. உயிரியலும் அப்படித்தான். புத்தகம் வந்தவுடன் இனப்பெருக்கம் என்ற பாடத்தை மட்டும் ஒரு முறை படித்துவிட்டு ‘ஒண்ணுமே இல்லையே’ என்று ஓரமாக வைக்கும் அளவுக்குத்தான் ஆர்வம். இதை அம்மாவிடமும் அப்பாவிடமும் சொல்லவா முடியும்? கர்ணன் கொடூரமாக அடிப்பார் என்று சொல்லியிருந்தார்கள். கர்ண கொடூரம். மூன்றாம் வகுப்பிலிருந்தே வாத்தியார்களிடம் அடி வாங்கி உடல் பழக்கப்பட்டுக் கிடந்தது என்பதால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எல்லாவற்றையும் விட வாழ்க்கையிலேயே முதன் முறையாக பெண்களோடு சேர்ந்து படிக்கும் தனிப்பயிற்சி வகுப்பு. வேறென்ன வேண்டும்? அதீத உற்சாகம்தான். அலட்டல்தான். அக்கப்போர்தான்.

காலை ஐந்து மணிக்கு வகுப்பு ஆரம்பித்துவிடும். எழுந்து குளித்து கோயமுத்தூர் மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கி தினமும் கோபியிலிருந்து பேருந்தில் கல்லூரிக்குச் சென்று வர வேண்டும் என்று சாமியைக் கும்பிட்டுவிட்டு மிதிவண்டியை எடுத்தேன். அன்றைய தினம் என்னைவிடவும் அம்மா பக்திப்பூர்வமாக இருந்தார். அவர்தான் அப்படி சாமி கும்பிடச் சொன்னார்.  அதிகாலையில் வெறும் காபியைக் குடித்துவிட்டுச் சென்றால் பையனுக்கு பசிக்கும் என்பதால் பழைய சோறைக் கரைத்து வைத்திருந்தார். அதுதான் வயிற்றுக்குள் ‘கிண்’ என்று கிடக்கும். இப்படியான பராக்கிரம முஸ்தீபுகளுடன் எப்படியும் ஸ்டெதஸ்கோப்பை தோளில் போட்டுவிடலாம் என்றுதான் மிதிவண்டியைக் கிளப்பினேன். பதினாறு வயதினேலே பட டாக்டர் எல்லாம் மனதுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார்.

முதல் நாள் வகுப்பு. ஆண்கள் பகுதியில் வகுப்புத் தோழர்கள் இருந்தார்கள். அவர்களை யார் பார்த்தார்கள்? பெண்கள் பகுதியில் பழனியம்மாள் பள்ளி பெண்கள்தான் அதிகம். உள்ளுக்குள் மனம் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. முதல் வரிசையில் இடம் பிடித்து அமர்ந்திருந்தேன். கர்ணன் வாத்தியார் வகுப்பை எடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே கேள்வியை ஆரம்பித்துவிட்டார். முதல் கேள்வியே எனக்குத்தான். ‘உணவுக் குடல் எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது?’ என்றார். ஜூஜூபி கேள்வி. வாயில் ஆரம்பித்து- முடிகிற இடத்தை பச்சையாகச் சொன்னால் நாகரிகமாக இருக்காது என்பதால்- உணவுக்குடலில் முடிகிறது என்றேன். என்னுடைய பதில் தவறு. அந்தக் கேள்வி அடுத்தடுத்த மாணவர்களுக்குச் சென்றது. சரியான பதிலை யாராவது சொல்லும் வரை நின்று கொண்டேயிருக்க வேண்டும். வரிசையாக எழுந்து நின்றார்கள். ஒரு பெண் வாயில் ஆரம்பித்து குதத்தில் முடிகிறது என்றாள். அந்த பதில் இன்னமும் ஞாபகமும் இருக்கிறது. அவளைப் பாராட்டினார். சரியான பதில் சொல்லிவிட்டாள் என்பதால் வாத்தியார் சொல்வதற்கு முன்பாகவே அமர்ந்துவிட்டேன். அவரது விதிப்படி அவளைத் தவிர மற்றவர்கள் நிற்க வேண்டுமாம். கர்ணனின் முதலாம் விதி.

‘பர்தேசி...பர்தேசி...உன்னால நிக்க முடியாதாடா? தூக்கி வீசிடுவேன்...பர்தேசி... எந்திரிச்சு நில்லுடா’ என்றார். தூக்கி வீசுகிற உருவத்தில் அவர் இருந்தார். கில்லிக் குச்சியின் உருவத்தில் நான் இருந்தேன். வீசினாலும் வீசிவிடுவார். தலையைக் குனிந்தபடி எழுந்து நின்றேன்.

‘கோயமுத்தூர் காலேஜ் இல்லாட்டியும் போச்சாது...திருநெல்வேலியிலாவது ஒரு ஸீட் வாங்கிரோணும்’ என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். அதற்கும் விடமாட்டார் போலிருந்தது.

அடுத்தடுத்த கேள்விக்கணைகள் வந்து விழுந்து கொண்டேயிருந்தன. அடுத்த கேள்வி தாவரவியலில் என்னவோ. பதில் தெரியவில்லை. இப்படியே இரண்டு மூன்று கேள்விகள். ஒன்றுக்கும் பதில் சொல்லவில்லை. ‘நீ பின்னாடி போய் உட்கார்டா...’ என்றார். அவ்வளவுதான் நம்முடைய பவிசு. அமர்ந்து கொண்டேன். அதன் பிறகு அவர் சொன்னதெல்லாம் மண்டையிலேயே ஏறவில்லை. முதல் நாளிலேயே பெண்கள் என்னை முட்டாள் என்று நினைத்திருப்பார்கள். ‘பாடமே நடத்தாம கேள்வி கேட்டா நீயெல்லாம் என்னய்யா வாத்தியாரு’ என்று கறுவிக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்த நாட்களும் இப்படித்தான் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. எப்படியோ ஒரு வழியாக ‘இவன் தேற மாட்டான்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இப்படி முடிவு செய்யப்பட்டவர்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்துக் கட்டுவார் என்று சொல்லியிருந்தார்கள். பெரியதாக எந்த சூட்சமும் இல்லை. கண்டபடி திட்டி முரட்டுத்தனமாகக் குத்தினால் வகுப்புக்குச் செல்வதற்கு எப்படி மனம் வரும்? அதுவும் பெண்கள் முன்பாக.

அப்படித்தான் நடந்தது. 

முதல் வார இறுதியில் தேர்வு வைத்தார். ஐந்து மணிக்கு எழுந்து உயிரியல் வகுப்பு. ஏழு முதல் எட்டு வரை கணிதம். பிறகு பள்ளி. மாலை எட்டு மணி வரைக்கும் இயற்பியல் மற்றும் வேதியியல். மனசாட்சியே இல்லாமல் மண்டைக்குள் திணித்துக் கொண்டிருந்தார்கள். இதில் ஒவ்வொரு பாடத்திலும் வாரந்திரத் தேர்வுகள். அதோடு விடுகிறார்களா? வாங்குகிற மதிப்பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். இப்பொழுதும் கூட பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களை நினைத்தால் நெஞ்சு கரைகிறது. பாவப்பட்ட ஜென்மங்கள். இந்த லட்சணத்தில்தான் உயிரியல் தேர்வு. ஒரு மண்ணும் தெரியவில்லை. ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் எதையாவது எழுதி வண்ண வண்ண எழுதுகோல்களால் வர்ணம் தீட்டி வைத்தால் மதிப்பெண் வந்துவிடும் என்று பத்தாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். நானும் விதவிதமாகக் கதை எழுதி நீலம், சிவப்பு, பச்சை வர்ணங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு எப்படியும் திங்கட்கிழமைதான் திருத்தித் தருவார் என்ற நம்பிக்கையில் அமர்ந்திருந்தேன். ஆனால் சனிபகவான் சனிக்கிழமையேதான் மண்டை மீது ஏறி ஆடுவார் என்று முடிவு செய்து வைத்திருந்தார் போலிருக்கிறது. ‘அடுத்த பர்தேசி...மணிகண்டன்...எந்திரிச்சு வாடா’ என்று அழைத்து அருகில் நிறுத்தி நான் எழுதிய பதில்களைப் படித்துக் காட்ட ஆரம்பித்துவிட்டார். மானம் போனது. இப்படியெல்லாம் வாத்தியார் விடைத்தாள் திருத்துவார் என்று கனவா கண்டேன்? 

அமீபாவின் உருவம்தான் முதல் கேள்வி. அமீபாவுக்கு உருவமே இருக்காது என்பது பிறகுதான் தெரியும். ஆனால் பதிலில் ‘சதுரமாகவும் இருக்கலாம். செவ்வகமாகவும் இருக்கலாம். வட்டமாகவும் இருக்கலாம்’ என்று எழுதி வைத்திருந்தேன். ‘ஏண்டா உங்கப்பன் சம்பாதிச்சு காசு கட்டி படிக்க வெச்சா இப்படித்தான் படிப்பியாடா?’ என்றார். எந்தப் பெண்ணாவது சிரிக்கிறாளா என்று குனிந்தபடியே நோட்டம் விட்டேன். கிட்டத்தட்ட அத்தனை பெண்களும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பதிலுக்கும் ‘1.34’ ‘2.17’ ‘0’ என்று கேள்விப்படாத மதிப்பெண்களாக வழங்கிக் கொண்டிருந்தார். என்னதான் முக்கினாலும் நூற்றுக்கு பதினேழைத் தாண்டவில்லை. அடிக்க கையைத் தூக்கினார். நான் உட்கார வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு ஓடி வந்துவிட்டேன். நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும்- டெஸ்க் மீதாக திடுதிடுவென்று ஓடி வந்து நெஞ்சு மீது கால் வைத்தார். விஜயகாந்தை கொஞ்சம் கலராகப் பார்ப்பது போல இருந்தது.  ‘யோவ் என்னய்யா நினைச்சுக்கிட்ட?’ என்று வாய் வரைக்கும் வார்த்தை வந்துவிட்டது. பேசினால் இன்னொரு உதை விழுந்துவிடும் போலிருந்தது. கொஞ்ச நேரம் பொறுத்தால் எப்படியும் கம்பெனி சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையிருந்தது. பொய்க்கவில்லை. நான்கைந்து பர்தேசிகளையும் மூன்று நான்கு தறுதலைகளையும் சேர்த்து வெளியில் அனுப்பினார்.

சைக்கிள் ஸ்டேண்டுக்கு வந்த பிறகு ‘அடுத்து என்னடா பண்ணுறது?’ என்று ஒரு தறுதலை கேட்டான். 

‘படிச்சு டாக்டர் ஆகுறதுக்கு பதிலா படிக்காமலேயே இஞ்சினியரிங் சேர்ந்துடலாம் விடுறா’ என்றேன்.  கிட்டத்தட்ட அத்தனை பேரும் அப்படித்தான் இஞ்சினியர் ஆனோம்.

இப்பொழுதெல்லாம் கோபிக்குச் செல்லும் போது பால் வாங்குவதற்காக நடந்து வரும் கர்ணன் வாத்தியாரை அடிக்கடி  பார்க்கிறேன். ‘கோபி ஜி.ஹெச்ல உக்காந்திருக்க வேண்டியவனை பெங்களூர் துரத்தி விட்டுட்டீங்களே’ என்று மனதுக்குள் நினைத்துக் கொள்கிறேன். ‘நல்ல வேளைடா உன்னைத் துரத்தி விட்டேன்...இல்லைன்னா ஜி.ஹெச்ல உக்காந்து போஸ்ட் எடுதிட்டு இருந்திருப்ப’ என்று அவர் நினைத்துக் கொள்ளக் கூடும்.

7 எதிர் சப்தங்கள்:

shrkalidoss said...

Wow.. Very nice narration.. Laughed like anything.. You are Rocking Mr.Mani!

சேக்காளி said...

//‘கோயமுத்தூர் காலேஜ் இல்லாட்டியும் போச்சாது...திருநெல்வேலியிலாவது ஒரு ஸீட் வாங்கிரோணும்’//
கர்ணன் வாத்தியார் வாழ்க வாழ்க.

sonaramji said...

மிக அருமை் எனக்கென்னவோ நானே எழுதுவது போல் உள்ளது.

ADMIN said...

அருமை...மீண்டும் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டது "பர்தேசி" கட்டுரை. நல்லதொரு அனுபவ கட்டுரை...வாசிக்க வாசிக்க சுகானுபவம்.

Unknown said...

அருமை இது என்னுடய முதல் பின்னுட்டாம் இப்போ தான் தமிழ் டைப் செய்ய பழகி வருகிறேன்.

Vinoth Subramanian said...

Amiba matter super!

Anonymous said...

ஹா ஹா எனக்கும் கர்ணன் வாத்தியாரோட முகம் பல வருடம் கழிச்சு ஞாபகம் வந்துருக்கு . Thanks for making Me to Remember those days .
நானும் அதே பழனியம்மாள் பள்ளிக்கூடம் தானுங்க :)