Jan 18, 2016

இருள் சூழ் வனம்

ஒவ்வொரு சாதியாக மாநாடு நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். தேர்தல் வருகிறது. பேரம் நடத்தியாக வேண்டும். ஸீட் வாங்குவது கடினம் என்றாலும் பெட்டி வாங்கலாம். தனது சாதியைக் காட்டி பெருங்கட்சிகளிடம் துண்டை விரிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அஞ்சும் பத்தும் வாங்கிக் கொண்டு அடுத்த தேர்தல் வரைக்கும் அமைதியாகிவிடலாம். அதற்காக வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம் என பகுதி பகுதியாகச் சென்று கெத்து காட்டுகிறார்கள். கூட்டம் சேர்க்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு கூட்டம் சேர்க்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு சில்லரை சேரும்.

எந்தச் சாதிக்கட்சித் தலைவன் தனது சாதியின் நலனுக்காகப் போராடுகிறான்? மருமகனுக்கு சர்க்கரை ஆலைக்கான அனுமதி வாங்குவது, மகனுக்கு புதிய கல்லூரிக்கான அனுமதி வாங்குவதும்தான் அதிகபட்ச போராட்டம். இத்தகைய தலைவர்களை நம்பித்தான் பெருங்கூட்டம் பின்னால் செல்கிறது. இப்படிச் சேரும் கூட்டம் கலைந்துவிடாமல் இருப்பதற்காக சாதிய உணர்வுகளைத் தூண்டிவிடுகிறார்கள். தூண்டிவிடப்படட் சாதியை உணர்வு அணைந்துவிடாமல் ஊதிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தமது இனத்தின் ரத்தத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான காரியங்கள் என்று கூசாமல் புளுகுகிறார்கள். பிற சாதிகளிடமிருந்து வரும் அபாயங்களைத் தடுப்பதற்காக தாங்கள் இயக்கம் கண்டிருப்பதாக நம்பச் செய்கிறார்கள். அத்தனை தூண்டல்களிலும் சுயநலம்தான் பிரதானமாக இருக்கிறது. இந்த அடிப்படையைத்தான் பலரும் புரிந்து கொள்வதில்லை. ‘அப்படி சுயநலமாக இருந்துவிட்டுப் போகட்டும். அவர் இல்லையென்றால் எங்கள் சாதி நாறிப் போய்விடும்’ என்று உறுதியாக நம்புகிறார்கள்.

படிக்காதவர்களும் பாமரர்களும் மட்டுமில்லை- படித்தவர்கள் கூட இதை இம்மி பிசகாமல் ஒப்பிக்கிறார்கள். ‘சாதியக் கட்சித் தலைவர்களை நம்ப வேண்டியதில்லை’ என்று சொன்னால்   ‘வந்துட்டாருய்யா முற்போக்கு’ என்கிறார்கள். முற்போக்கு பிற்போக்கு என்றெல்லாம் இல்லை. ஆனால் இதுவொரு ஆபத்தான போக்கு. அதைத்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சாதிக்காரனிடம் இருக்கும் அதே கத்திதான் அடுத்த சாதிக்காரனிடமும் இருக்கிறது.  இருவரும் மாற்றி மாற்றி தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது வேண்டுமானாலும் இன்னொரு சாதியின் கழுத்தை பதம் பார்க்கக் கூடும். 

‘சாதியை ஒழிப்போம்’ என்றெல்லாம் சொல்லவில்லை. அது அவ்வளவு எளிதானதுமில்லை; சாத்தியப்படக் கூடியதும் இல்லை. இங்கு சாதிய உணர்வு இரண்டறக் கலந்து கிடக்கிறது. ‘நீங்க என்ன வகுப்பு?’ என்று நாற்பது வருடங்களுக்கு முன்பு நேரடியாகக் கேட்டார்கள். பெயருக்குப் பின்னால் தொற்றி நின்ற செட்டியார், கவுண்டர், தேவர், நாயுடு, முதலியார் என்பதையெல்லாம் வைத்து சாதியைக் கண்டறிந்தார்கள். தலித் சாதிகளுக்கென தனித்த பெயர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கழுத்தில் மஞ்சள் நூல் அணிந்திருந்தால் ஒரு சாதி, கருகு மணி அணிந்திருந்தால் இன்னொரு சாதி என்று வகைப்படுத்தினார்கள். இத்தகைய வெளிப்படையான சாதிய அடையாளங்களும் கண்டறிதலும் குறைந்திருந்தாலும் சாதிய உணர்வு குறைந்துவிட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது.

‘அவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்குங்க...அவன் ரத்தம் அப்படி’ என்று அடுத்தவனின் சாதியைக் கண்டுபிடித்து நாசூக்காக அறிவுரை சொல்வது பன்னாட்டு நிறுவனங்களிலும் உண்டு. ‘இவனை எல்லாம் இங்க உட்கார வெச்சா இப்படித்தான் பண்ணுவான்’ என்று ஜீனைக் கண்டுபிடித்தல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய சாதிய உணர்வுகளை முற்றிலுமாக அழித்துவிடுகிற பக்குவம் நமக்கு வந்துவிட்டதாகவெல்லாம் நம்ப வேண்டியதில்லை. இருந்து கொண்டுதான் இருக்கிறது. ‘இவன் நம்ம ஆளு’ என்று பொதுவெளியில் இயல்பாகச் சொல்கிறார்கள். இதில் அந்தச் சாதிக்காரன்தான் சாதியைத் தூக்கிப் பிடிக்கிறான்; இந்தச் சாதிக்காரன்தான் தமது சாதியைக் கொண்டாடுகிறான் என்றெல்லாம் வகைமைப்படுத்த வேண்டியதில்லை- எல்லாச் சாதிக்காரனும் இப்படித்தான் அல்லது பெரும்பாலானவர்கள் அப்படித்தான். 

இருந்துவிட்டுப் போகட்டும். காலம் மாறும் போது கொஞ்சம் கொஞ்சமாக மங்கி மறையக் கூடும். ஆனால் அதுதான் சாதிய உணர்வாளர்களைப் பதறச் செய்கிறது. ஏதாவதொரு விதத்தில் பற்ற வைக்க விரும்புகிறார்கள். போலியான சாதித் தலைவர்கள் இயக்கம், போராட்டம், சாதிப் பாதுகாப்பு என்று வரிசையாக படம் காட்டுகிறார்கள். தலித் சாதியக் கட்சிகளை நோக்கி கை நீட்டினால் ‘எங்களுடைய உரிமைகளைக் கோருவதற்கு ஓர் இயக்கம் தேவை’ என்கிறார்கள்.  சரியான வாதம் என்று நம்பி மேல்சாதி இயக்கங்களை நோக்கி கையை நீட்டினால் ‘தலித் இயக்கங்களால் விடப்படும் அச்சுறுத்தல்களைத் தடுக்க எங்களுக்கு ஓர் இயக்கம் தேவை’ என்கிறார்கள். தங்களுடைய அதிகாரம் பறிக்கப்படுகிற சூழலை நினைத்து உள்ளூர பதறுகிறார்கள். ஆள் மாற்றி ஆள் குற்றம் சாட்டுகிறார்கள். எப்படியும் விடமாட்டார்கள் என்பது உறுதி.

கிராமம், நகரம் என சகல இடங்களிலும் வேர்விட்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவொரு சிக்கலான பிரச்னை. சாதிய அரசியலும் வாக்கு அரசியலும் பின்னியிருக்கின்றன. இரண்டையும் தனித்தனியாக எதிர்வரும் காலத்தில் பிரிக்க முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எந்தவொரு தொகுதியிலும் அந்தந்தத் தொகுதியின் பெரும்பான்மை சாதியிலிருந்துதான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பெரும்பாலும் அவர்கள்தான் வெல்கிறார்கள். உள்ளூர் பிரச்சினைகளில் சாதியம் முக்கியத்துவம் பெறுகிறது. ‘நம்ம சாதிக்காரனைப் பகைத்துக் கொள்ள முடியாது’ என்கிற மனநிலையிலேயே ஒரு பக்கச் சாய்வாக செயல்படுகிறார்கள். இன்னொரு சாதி நசுக்கப்படும் போது அந்தச் சாதியில் புகைச்சல் கிளம்புகிறது

அதிகாரத்தை நோக்கி சாதிய வெறியாளர்கள் நகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள் அல்லது அதிகாரத்தை அடைவதற்கு சாதிதான் படிக்கட்டு என்று நம்புகிறார்கள். இத்தகைய சூழலில் தீர்வு என்று எதை முன் வைக்க முடியும்? சாதியத் தலைவர்களை அரசியல் கட்சிகள் ஊட்டி வளர்க்கின்றன. அந்த சாதியத் தலைவர்கள் மிதப்போடு நடமாடுகிறார்கள். கல்லூரிகளிலும் அரசு அலுவலகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் கூட சாதி உயிர் குடிக்கிறது. அடிப்படையான புரிதல் கூட இல்லாமல் இட ஒதுக்கீடு முறை விமர்சிக்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டு முறையில் உள்ள குறைகளை நிவர்த்திக்கவும்,  சலுகைகள் பரவலாக்குவதற்கும் அரசுகள் முயற்சிப்பதேயில்லை. அரசாங்கமும் அதிகார வர்க்கமும் நினைத்தால் மட்டுமே இந்தத் நெருப்பை கட்டுக்குள் வைக்க முடியும். சாதியச் சிக்கல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்க்க இயலும். சாதி சம்பந்தமாக எதில் கை வைத்தாலும் தங்களின் வாக்குக்கு வைத்துக் கொள்ளும் வேட்டு என்று பயப்படுகிறார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்னவாகும்? 

மேல் மட்ட வர்க்கம் இப்படியிருக்க கீழேயிருப்பவர்களின் எதிர்காலத்தை நினைத்தால் சற்றே நடுக்கமாக இருக்கிறது. கடலூர் மாதிரியான ஊர்களில் சுற்றும் போது நடுங்கவும் செய்கிறது. கடலூர் மட்டுமில்லை- தர்மபுரி மாதிரியான வடக்கு மாவட்டங்களிலும் சரி, ஈரோடு, நாமக்கல் மாதிரியான மேற்கு மாவட்டங்களிலும் சரி; தெற்கு மாவட்டங்களிலும் சரி. அத்தனை பக்கங்களிலும் புகைச்சல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ‘நான் இந்தச் சாதிச் சிங்கம்’ என்று சட்டைப் பொத்தான்களை பிய்த்துவிட்டுக் கொண்டு சொல்கிறார்கள். ‘எங்களுக்குக் கொடுத்துவிட்டு அடுத்த சாதிக்காரனுக்கு கொடுங்க’ என்கிறார்கள். இவர்கள் சொல்லுகிற தொனியும் வேகமும் நாம் எந்தவொரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகின்றன. முட்புதர்கள் மண்டிக்கிடக்கும் இருள் சூழ் வனத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம். 

4 எதிர் சப்தங்கள்:

நெய்தல் மதி said...

உண்மைதான். நாம் சாதியை விட்டுவிட நினைத்தாலும் அது நம்மை விடுவதாக தெரியவில்லை. ஏதாவது ஒரு வகையில் சாதி நம்முடன் ஒட்டிக்கொள்ளவே செய்கிறது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பதமாக விசாரிக்கிறார்கள் நீ என்ன சாதி என்று? சாதியை கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில் கிடைச்சான்... ஒரே ஒரு கேள்விதான் கேட்பேன்...ஏன்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையா?

infantalosius said...

இப்போது புதிய சொற்களைக் கண்டடைந்து விட்டோம், சமுதாயம்/ சமூகம் என்று.

ADMIN said...

கட்டுரையின் ஒவ்வொரு வரியும் தற்போதைய நிலையை அப்பட்டமாக படம் பிடித்துக் காடுகிறது. சென்னை, கடலூர் வெள்ளம் போல இயற்கை சீற்றங்கள் மட்டுமே மனிதனுக்கு பாடம் கற்பிக்கும்.! சில நாட்களில் மீண்டும் சாதி பாகுபாடுகள் தலைத்தூக்கும்..! கேடு கெட்ட மனிதர்கள்.. வெறென்ன சொல்ல...!

சேக்காளி said...

உழைத்து தான் உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை பரவலாக்க வேண்டும்.
அந்த உழைப்பு அதன் பின் ஏற்படும் களைப்பு நிறைய கெட்ட சிந்தனைகள்(சாதிய உணர்வு உட்பட) உருவாவதை தடுக்கும்.அப்புறம் ஆதரவு குறையும் தீய சக்திகள் தானாகவே மறையும்.