Jan 29, 2016

டிசம்பர் 2015

டிசம்பர்-ஜனவரி மாதத்திற்கான நிசப்தம் அறக்கட்டளையின் பணப்பரிமாற்ற விவரங்கள் இவை.

வழக்கம் போல முக்கால்வாசி நன்கொடையாளர்கள் விவரம் எதுவும் அனுப்பிவைக்கவில்லை. PAN எண் மற்றும் முகவரி அனுப்பியவர்களுக்கு வார இறுதியில் ரசீது அனுப்பி வைத்துவிடுகிறேன்.

வரிசை எண் 30 ல் குமுதம் பப்ளிகேஷனின் பெயரில் இருக்கும் தொகை, குமுதம் ரிப்போர்ட்டரில் நான் எழுதிய ‘கைகளுக்குள் ஆர்.டி.எக்ஸ்’ என்ற தொடருக்கான பணம். எழுத்து வழியாக வரக் கூடிய எந்தப் பணத்தையும் சொந்தக் காரியங்களுக்கு பயன்படுத்தவதில்லை என்பதால் அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

பயனாளிகள் விவரம்:

வரிசை எண் 3: நவீந்திரன் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன். நல்ல மதிப்பெண் பெற்று இந்த வருடம் பி.எஸ்.ஜி கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அவனது தந்தை கோவிலில் பறை அடிக்கிறவர். வருமானத்திற்கு வேறு வழிகள் எதுவுமில்லாத குடும்பம். நவீனின் விடுதிக் கட்டணமாக முப்பத்தைந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. கல்லூரியில் வரைவோலையாகத்தான் (டிடி) ஏற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லியிருந்தார்கள். வரைவோலை வழங்கப்பட்டிருக்கிறது.

வரிசை எண் 20: கிருஷ்ணா என்கிற குழந்தையின் மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூபாய் இரண்டாயிரம்.

வரிசை எண் 21: கொங்கர்பாளையம் என்ற கிராமப்பள்ளியின் தலைமையாசிரியர் அந்தப் பள்ளியின் குழந்தைகளை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வருவதற்காக வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய்.

வரிசை எண் 36: கடலூர் அருகில் இருக்கும் பெரிய காட்டுப்பாளையம் என்கிற கிராமம் மழை வெள்ளத்தில் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. அந்தக் கிராமத்தில் வாழும் மக்களில் பத்துக் குடும்பத்தினர் தங்களுக்கு முந்திரி உடைக்கும் எந்திரம் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள். சுத்தியல் கொண்டு உடைத்தால் ஒரு நாள் வருமானம் நூறு ரூபாய் என்கிற அளவில் இருக்கும். இந்த எந்திரம் கிட்டத்தட்ட முந்நூற்றைம்பது ரூபாய் அளவுக்கான முந்திரியை உடைத்துக் கொடுக்கும் என்பதால் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்த எந்திரங்கள் வாங்கித் தரப்படுகிறது. ஒரு எந்திரம் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய். பத்து எந்திரங்கள் வாங்குவதற்கான முன்பணம் நாற்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. 

வரிசை எண் 39: பாரதி உதவி இயக்குநர். அம்மா அப்பா யாருமில்லை. நண்பர்களுடன் சென்னையில் தங்கியிருந்து சினிமாவுக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய் வெடித்து நினைவிழந்துவிட்டார். நண்பர்களும் உதவி இயக்குநர்கள்- டீக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்ளும் உதவி இயக்குநர்கள்-  ஆரம்பத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். செலவுக்கான தொகை இல்லாமல் தவிப்பதாக கோரிக்கை வந்தது. விசாரித்த பிறகு பாரதியின் நண்பர்களின் சுமையைக் குறைக்கும் விதமாக முப்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 

இவை தவிர கடலூர் நிவாரணத்திற்கான அடுத்த கட்டமாக பின்வரும் காசோலைகள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன-

1) முந்திரி உடைக்கும் எந்திரம் வாங்கியதன் மீதத் தொகை ரூ.35000 (காசோலை எண்: 93) Periya Andavar Lathe Works என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கிறது. 

2) நாற்பத்து மூன்று குடும்பங்களுக்கு ஆடு வாங்குவதற்கான முன்பணம் ரூ.150000 ( காசோலை எண்: 95) Royal Biz Technilogies என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 கிலோ எடையுள்ளா ஆட்டுக்குட்டிகள் (ஒரு ஜோடி) வழங்கப்படவிருக்கிறது.

3) 12 பெண்கள் தையல் எந்திரங்கள் (12*8500= 1,02,000) கேட்டிருக்கிறார்கள். ஒருவர் உணவு விடுதி அமைப்பதற்கான செட் கேட்டிருக்கிறார் (ரூ.15,000).  இரண்டும் சேர்த்து ரூ.1,17,000 (காசோலை எண்: 96) Anandkumar Agencies என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கிறது.

4. 28 குடும்பங்களுக்கு மாடு தேவைப்படுகிறது. மாடு வாங்குவதற்கான முன்பணம் ரூ.150000 (காசோலை எண்: 97) Kumaraguru என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கிறது. குமரகுரு மாட்டு வியாபாரி. அவர்தான் மாடுகள் வாங்கித் தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார். 

5. சில இளைஞர்கள் சேர்ந்து Drilling machine, Cutting machine மற்றும் Welding machine ஆகியவற்றைக் கொண்டு சொந்தத் தொழில் தொடங்குகிறார்கள். இதுவரை இவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் தினக்கூலியாகச் சென்று வந்தவர்கள். இந்த உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 46300 (காசோலை எண்: 98) Mano Agencies என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கிறது.

6.  ஒரு மகளிர் சுய உதவிக்குழு, ஒரு கடை மற்றும் ஒரு பள்ளிக்கு என மூன்று கணினிகள் (இரண்டு சாதாரண மாடல்கள், ஒன்று Corei3) வாங்குவதற்கு ரூ. 60000 (காசோலை எண்: 99) Virtual Galaxy என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கிறது. 


இதற்கு முந்தைய பரிமாற்ற விவரங்களை இணைப்பில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

அறக்கட்டளையின் செயல்பாடுகள், நிதி விவகாரங்கள் உள்ளிட்ட எந்தவிதமான கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பினும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் vaamanikandan@gmail.com.

1 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Pls. advice other document requirement for people who doesn't have Pan Card.