Dec 8, 2015

ஆட்டோக்காரர்

நான்காம் வகுப்பிலிருந்து இலவச பேருந்தில் பயணிக்க ஆரம்பித்திருந்தோம். அதற்கு முன்பு வரை ஆட்டோதான். எங்கள் ஊரில் நிறையப் வீடுகளில் வாகன வசதி இல்லை. அப்படியே இருந்தாலும் டிவிஎஸ் 50 அல்லது லூனா போன்ற சிறு வண்டிகளை வைத்திருந்தார்கள். எங்கள் அப்பா ஒரு டிவிஎஸ் 50 வைத்திருந்தாலும் பெட்ரோலுக்கு செலவு செய்ய வேண்டுமே என்று மிதிவண்டியில் அலுவலகத்துக்கு சென்று வந்து கொண்டிருந்தார். 

ஊருக்குள் ஆட்டோக்கள் நிறைய ஓடினாலும் அத்தனை பேரையும் அம்மாவும் அப்பாவும் நம்பவில்லை. தொடர்ச்சியாக ஒரே ஆட்டோவில்தான் சென்று வந்தோம். அந்த ஆட்டோக்காரர் மீது மட்டும் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தது. ஆட்டோக்கார அண்ணன் ஒல்லியாக இருப்பார். உள்ளே வண்ணச் சட்டை,  அதன் மேலாக ஒரு காக்கிச் சட்டையை அணிந்திருப்பார். ஒவ்வொரு மாணவரும் இறங்கி வீட்டிற்குள் செல்லும் வரைக்கும் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை கவனித்துக் கொண்டிருப்பார். அக்கறை மிகுந்த மனிதர். ஒரு மாணவனுக்கு மாதம் எண்பத்தைந்து ரூபாய் என்றால் இத்தனை மாணவர்களுக்கு எவ்வளவு காசு சம்பாதிப்பார் என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. ‘ஆட்டோக்கார அண்ணன் செமப் பெரிய பணக்காரர்’ என்று எங்களுக்குள் சொல்லிக் கொள்வோம்.

கச்சேரிமேடு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு முன்பாகத்தான் ஆட்டோ நிறுத்தம் இருந்தது. எங்களைப் பள்ளியில் விட்டுவிட்டு- ஒவ்வொரு நாளும் காலையில் இரண்டு ட்ரிப்பும் மாலையில் இரண்டு ட்ரிப்பும் அடிப்பார்- வீட்டுக்குச் சென்றுவிடுவார். அன்றைய தினம் ஏதோவொரு பிரச்சினையின் காரணமாக பள்ளி சீக்கிரம் முடிந்துவிட்டது. ஆட்டோ நிறுத்தத்துக்கு நடந்து சென்றிருந்தோம். ஆட்டோக்கார அண்ணனைக் காணவில்லை. ஆட்டோ நின்றிருந்தது. இரண்டு மூன்று குழந்தைகள் வண்டியின் பின்னால் அமர்ந்திருக்க நான் ஓட்டுநரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு கியரை மாற்றிவிட்டேன். ஆட்டோ பள்ளத்தில் இறங்கத் தொடங்கியது. கைகால்கள் பதறுகின்றன. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் நகர்ந்தால் பிரதான சாலை. பின்னால் அமர்ந்திருந்தவர்கள் கத்தத் தொடங்கினார்கள். அருகாமையிலிருந்த யாரோ சிலர் ஓடி வந்து ஆட்டோவைப் பிடித்தார்கள். பிடித்தவர்களில் ஒரு மீசைக்காரர் எனக்கு ஒரு அறை கொடுத்தார். நினைவு தெரிந்த பிறகு வெளியாள் ஒருவர் கொடுக்கும் முதல் அடி அது. நெஞ்சுக்குள் குமுறிக் கொண்டு வருகிறது. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை. அழுது கொண்டிருந்தேன்.

‘போய் லாரிச் சக்கரத்துக்குள் விழுந்திருந்தா என்ன ஆகியிருக்கும்டா?’ என்றார். சட்னி ஆகியிருப்போம். ஆனால் பதிலைச் சொன்னால் இன்னொரு அறை விழும். ஆட்டோவை விட்டு கீழே இறங்கி பையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டேன். மீசைக்காரர் அங்கிருந்த ஒன்றிரண்டு பேரிடம் பேசிக் கொண்டிருந்தார். ‘இந்தக் காலத்து பொடிசுங்க செம வாலு’ என்கிற மாதிரியான டயலாக். பேச்சு மும்முரத்தில் அவர்கள் என்னை கவனிக்கவில்லை. அரைஞாண் கயிறைத் தூக்கி இடுப்பு ட்ரவுசரை இறுக்கிக் கொண்டு ‘போடா மீசைக்காரா’ என்று கத்திவிட்டு ஓடி வந்தது இன்னமும் ஞாபகமிருக்கிறது. சில அடிகள் மட்டும் துரத்தினார். அரசு மருத்துவமனை சாலையில் இருந்த சந்துகளுக்குள் முட்டி தப்பித்திருந்தேன்.

நான் ஓடிவிட்ட விவரம் கேள்விப்பட்டு ஆட்டோக்கார அண்ணன் தவித்துப் போய்விட்டதாகச் சொன்னார்கள். மணிக்கணக்காகத் தேடியிருக்கிறார். எங்கள் வீட்டுக்கு மூன்று கிலோமீட்டர் தூரம்தான். நடந்து சென்றுவிட்டேன். அதுவும் நேரடியாக வீட்டுக்குச் செல்லாமல் ஒரு கோவில் திண்ணையில் அமர்ந்து கொண்டேன். அதெல்லாம் அவருக்குத் தெரியாது. மற்ற குழந்தைகளை அவசர அவசரமாக விட்டுவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறார். அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் சென்றிருந்தார்கள். பூட்டியிருந்த வீட்டில் என்னைக் காணவில்லை. யாரிடமும் சொல்ல முடியாமல் அலைந்திருக்கிறார். கடைசியில் எப்படிக் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. கோவிலுக்கு வந்துவிட்டார். பையைத் திண்ணை மீது வைத்துவிட்டு ஒரு குருவிக் குஞ்சை பிடித்து வைத்திருந்தேன். அது என்ன குருவி என்று தெரியவில்லை. புதருக்குள் இருந்த கூட்டில் மூன்று குஞ்சுகள் இருந்தன. ஒன்றை மட்டும் எடுத்து வைத்திருந்தேன். அதன் வாய் ஓரமாக மஞ்சள் நிறமாக இருந்தது. அநேகமாக மைனாவாக இருந்திருக்கக் கூடும். ‘டேய் பாவம்டா’ என்று சொல்லி கூட்டில் விடச் சொன்னார். அரை மனதோடு விட்டுவிட்டுக் கிளம்பினோம்.

‘மீசைக்காரனுக்கும் எனக்கும் ஒரே சண்டை. ஓங்கி அறை விட்டுடேன்...உன்னை அடிச்சானா? அதான் கோபம் வந்துடுச்சு’ என்றார். எனக்கு அந்தச் சொற்கள் அதிபயங்கர சந்தோஷத்தைக் கொடுத்தன. மீசைக்காரனின் கன்னம் பழுத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

‘நிஜமாங்களாண்ணா?’ என்று இரண்டு மூன்று முறையாவது கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டேன். அவருக்கும் மீசைக்காரருக்கும் சண்டை எதுவும் வந்திருக்க வாய்ப்பேயில்லை. என்னைச் சமாதானப்படுத்துவதற்காக அப்படிச் சொல்லியிருக்கிறார்.

என்னை அழைத்துச் சென்று பப்ஸ் வாங்கிக் கொடுத்தார். ராஜா பிஸ்கெட் பேக்கரி அது. கடைக்கு முன்பாக இரண்டு நாற்காலிகளைப் போட்டு வைத்திருந்தார்கள். அமரச் சொல்லி சில அறிவுரைகளைச் சொல்லிவிட்டு வீட்டில் கொண்டு போய் விட்டார். அம்மாவும் அப்பாவும் வந்த பிறகு எதுவுமே நடக்காதது போலக் காட்டிக் கொண்டேன். ஆனால் அவர்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரிந்திருக்கிறது. சில வருடங்களுக்குப் பிறகு ‘அப்படிச் செஞ்சவன் தானே நீ?’ என்று அம்மா திட்டிய போதுதான் அவர்களுக்கும் விஷயம் தெரியும் என்பது புரிந்தது. எல்லாவற்றையும் வீட்டில் சொல்லிவிட்டு மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றாராம். அவர் எதற்கு மன்னிப்புக் கேட்டார் என்றுதான் இன்றுவரைக்கும் புரியவில்லை.

அடுத்த வருடத்திலிருந்து இலவசப் பேருந்தில் அனுப்பினார்கள். ஆட்டோவுக்கும் எனக்குமான தொடர்பு அறுபட்டுவிட்டது. அடுத்த சில வருடங்களுக்கு ஆட்டோக்கார அண்ணன் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். இரண்டாவது ஆட்டோ வாங்கி விட்டதாகவும், ஆட்டோக்களை விற்றுவிட்டு வேன் வாங்கிவிட்டதாகவும் சொன்னார்கள். அவரைப் பற்றி ஏதேனும் செய்திகளைக் கேள்விப்படுவதோடு சரி. எப்பொழுதாவது சாலையில் எதிர்படுவார். பேசிக் கொள்வோம்.

சில மனிதர்களைப் பற்றி எதிர்மறையான செய்திகளையே கேள்விப்பட்டுக் கொண்டிருப்போம். திடீரென்று உச்சாணியில் நிற்பார்கள். வேறு சில மனிதர்களைப் பற்றி நல்லவிதமான செய்திகளை மட்டுமே கேள்விப்படுவோம். அதலபாதாளத்தில் விழுந்திருப்பார்கள். எப்படி நிகழ்ந்தது என்பது யாருக்குமே புரியாது. இந்த உலகம் நடத்துகிற பகடையாட்டத்தின் முடிவுகளை யாராலும் கணித்துவிட முடிவதில்லை. அப்படிக் கணித்துவிட முடியாமல் இருப்பதில் இருக்கும் த்ரில்தான் நம்மை ஓடச் செய்கிறது. ஒவ்வொரு நாளும் வேகத்தை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறோம்.

கடந்த மாதம் ஊருக்குச் சென்றிருந்த போது ஆட்டோக்கார அண்ணனைப் பார்த்தேன். அதே ஒல்லியான உருவம். கன்னக்குழி பெரிதாகியிருந்தது. ஆடையில் வறுமை தெரிந்தது. 

‘எப்படி இருக்கிற? என்ன சம்பளம்?’ என்றெல்லாம் விசாரித்தார். யாராவது சம்பளத்தை விசாரிக்கும் போது சற்று பதறுவேன். பணம் கேட்டுவிடுவார்கள் என்கிற பயம். 

‘எதுவும் சரியில்லைப்பா...நிறைய ஏமாந்துட்டேன்’ என்றார். என்னாச்சு என்று கேட்க விரும்பினாலும் எதுவும் கேட்கவில்லை. அவருக்கும் எனக்கும் இருபது வயது வித்தியாசம் இருக்கக் கூடும். அந்த மனிதரை உடைத்துவிடக் கூடாது என்பதற்காகக் கேட்கவில்லை. பொதுவாக பேசிக் கொண்டிருந்தோம்.

‘வண்டி ஓட்டுறீங்களாண்ணா?’ என்றேன். 

‘எப்பவோ வித்துட்டேன்’

‘என்ன வேலை செய்யறீங்க?’ என்று கேட்டால் சங்கடப் படக் கூடும். அமைதியாக இருந்தேன்.

திடீரென்று ‘ஒரு டீ வாங்கித் தர்றியா? காலையில சாப்பிடாம வந்துட்டேன்’ என்றார். வருத்தமாக இருந்தது.  தலயை மட்டும் ஆட்டினேன். அவராகவே ஒரு தேங்காய் பன்னும் எடுத்துக் கொண்டார். உண்டுவிட்டு ‘அடுத்த தடவை ஊருக்கு வந்தா ஃபோன் செய்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். ஏதாவது பேசுவார் நினைத்தேன். எதுவுமே பேசவில்லை. பக்கத்தில் இருந்த கடைக்காரர் ‘பாவம்’ என்றார். எதற்காக பாவம் என்றார் என்பதன் அர்த்தம் எனக்குப் புரிந்திருந்தது.

2 எதிர் சப்தங்கள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பாவம்... சிலரின் நிலை!
இறைவனின் விளையாட்டுகளில் இதுவும்!

Anonymous said...

Hello Sir,

You are helping so many people for education and health.
You could have tried to arrange some loan for him or some guidance...
Felt really bad...