Dec 26, 2015

பூதம்

ஒரு நண்பர் இருக்கிறார். அபராஜித் என்று பெயர். பெங்களூர் பிடிஎம் லே-அவுட்டில் குடியிருந்த போது அறிமுகம். ஐடி நிறுவனமொன்றில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினை. பெரும் பிரச்சினை. எந்நேரமும் செல்போன் பாண்டியாகத்தான் வலம் வருவார். டீ குடிக்கப் போனாலும் சரி; டாய்லெட்டுக்கு போனாலும் சரி. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சிரித்தபடியே இருப்பார். எதிர்ப்பக்கத்தில் கடலை வறுபடுகிறது என்று அர்த்தம். கடந்த வருடம் அலுவலகத்தில் நடைபெறும் வருடாந்திர மதிப்பீட்டில் மேலாளர் கூட குத்திக் காட்டிவிட்டாதாகச் சொன்னார். ‘எப்போ பார்த்தாலும் செல்போனுடனே இருந்தால் எப்படி வேலை செய்வீங்க?’ என்று கேட்டும்விட்டார். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டார். 

அலுவலகத்தில் யாராவது கேட்டால் எதையாவது சொல்லி வாயை அடைத்துவிடலாம். ஆனால் வீட்டில்? அபராஜிதைக் கட்டியவள் உச்சி முடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஒரு இழுப்பு இழுத்திருக்கிறார். கணவனுக்கு எச்சரிக்கைகள் விடுத்தவர் இந்த மனிதனின் அழிச்சாட்டியம் தாங்காமல் நீதிமன்றத்தின் படியேறிவிட்டார். எத்தனையோ விநோத வழக்குகளைச் சந்தித்திருக்கும் நீதிமன்றத்துக்கு இதெல்லாம் விசித்திர வழக்கே இல்லை. இந்தக் காலத்தில் பொழுது சாய்ந்து பொழுது விடிந்தால் இப்படித்தான் ஏகப்பட்ட பேர்கள் படியேறுகிறார்கள்.  பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என முடிவு செய்த நீதிமன்றம் ஆறு மாதம் கால அவகாசம் கொடுத்திருக்கிறது. அதற்குள் இரண்டு பேருக்கும் மனம் மாறினால் சேர்ந்து வாழலாம். இல்லையென்றால் கத்தரித்து விட்டுவிடுவார்கள். 

இந்த நீதிமன்ற விவகாரம் புழுதி கிளப்பியவுடன் அபராஜித் முதல் இரண்டு மூன்று மாதங்களுக்கு மண்டையை உருட்டிக் கொண்டிருந்தார். திருந்திவிடுவார் போலத்தான் தெரிந்தது. அவருடைய மனைவி என் மனைவிக்கு நல்ல பழக்கம். சந்தோஷமாக இருப்பதாகச் செய்தி அனுப்பியிருந்தார். ஆனால் வெகு விரைவிலேயே முருங்கை மரம் ஏறிவிட்டார். வழக்கம் போலவே மீண்டும் தலையைக் குனிந்தபடி சிரிக்க ஆரம்பித்துவிட்டார். கிட்டத்தட்ட அடிமை வாழ்க்கை. செல்போன் அவரை அடிமையாக்கி வைத்திருக்கிறது. விவாகரத்து கிடைத்தால் அவருக்கு பிரச்சினையில்லை. இவள் போனால் இன்னொருத்தி கிடைக்கக் கூடும். மனைவிக்கும் பிரச்சினை இருக்காது. குழந்தைகளை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. ஒரு குழந்தைக்கு ஆறு வயது. இன்னொரு குழந்தைக்கு நான்கு வயது. ஒவ்வொரு நாளும் அவர்களைப் பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதும், மாலையில் திரும்ப அழைத்து வருவதுமாக சரியாகத்தான் இருந்தார். அவரையுமறியாமல் செல்போன் அவரைக் குழிக்குள் தள்ளியிருக்கிறது. இனி அம்மாவும் அப்பாவும் வெவ்வேறு திசைகளில் இருக்க குழந்தைகளின் வாழ்க்கை ஒரு பெரிய ரோலர் கோஸ்டர் பயணத்தை எதிர் கொள்ளப் போகிறது.

இளந்தலைமுறையினர் எல்லோருமே செல்போன்களால் சீரழிகிறார்கள் என்று சொல்லவில்லை. செல்போன்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்தான். செல்போனை மட்டும் வைத்துக் கொண்டே பிஸினஸ் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியவர்கள் இருக்கிறார்கள். மிக நெருக்கடியான சமயங்களில் ஆபந்பாந்தவனாக செல்போன்கள் மாறியிருக்கின்றன. சென்னை வெள்ளம் உதாரணம். இப்படியொரு பெரும் லிஸ்ட் போடலாம். ஆனால் இப்படி நல்லபக்கம் என்றிருந்தால் கெட்ட பக்கம் என்றும் இருக்கும் அல்லவா? செல்போனிலும் அதுதான் பிரச்சினை. ஒரு பக்கம் நல்லதையெல்லாம் பட்டியலிட்டு இன்னொரு பக்கம் கெட்டதையெல்லாம் பட்டியலிட்டால் கெட்டவைகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன.

செல்போன்கள் குடும்ப உறவுகளில் உண்டாக்கும் சிக்கல்கள் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். குடும்ப உறவுகளில், தனிமனித வாழ்வில், அலுவலகங்களில் என சகல திசைகளிலும் செல்போன் கபடி ஆடிக் கொண்டிருக்கிறது. சில ஆராய்ச்சி முடிவுகளை இணையத்தில் தேடி எடுத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய மனைவி அல்லது கணவனிடம் பகிர்ந்து கொள்ளக் கூடிய அந்தரங்க விவகாரங்களைவிடவும் பிறரிடம்தான் அதிகமான அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்கிறார்கள். எங்கேயோ இருப்பவர்களிடம் தங்களது சலனங்களுக்கான வடிகால்களைத் தேடுகிறார்கள். முந்தைய தலைமுறையினருக்கு இதற்கான வாய்ப்புகள் வெகு குறைவாக இருந்தன என்பது ஒரு காரணமாக இருக்கலாம். எவனாவது ஒன்றரைக் கண்ணில் பார்த்தால் கூட விவகாரத்தை பஞ்சாயத்தில் ஏற்றிவிடுவார்கள். இப்பொழுது அப்படியில்லை. விரும்புகிற ஆணுக்கும் பெண்ணுக்கும் கமுக்கமாக ஒரு செய்தியை அனுப்பிவிட்டு செய்தி அனுப்பிய சுவடேயில்லாமல் செல்போனிலிருந்து அழித்து சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இந்த மாதிரியான வசதிகள்தான் மனிதன் மீது இந்த சமூகம் போட்டு வைத்திருந்த கடிவாளத்தை தளர்த்திவிட்டு தறிகெட்டு ஓடச் செய்கிறது.

அபராஜிதைப் போலவே இன்னொரு மனிதனைப் பற்றியும் சொல்ல வேண்டும். ஸ்ரீவத்சவா. அபராஜித்தைவிடவும் இவன் ஒரு படி மேலே என்று கூடச் சொல்லலாம். செய்தித்தாள்களின் வழியாகத்தான் தெரியும். ஸ்ரீவத்சவா வாட்டசாட்டமான ஆள். முப்பதை நெருங்கும் வயது. இன்னமும் திருமணம் ஆகவில்லை. வீட்டைச் சுற்றிலும் நல்ல பெயர். ‘அவனுண்டு அவன் வேலையுண்டு’ என இருப்பதாக நம்பிக்கையைச் சம்பாதித்திருந்தான். அப்பேற்பட்ட நல்லவனுக்கு ஒரு விபத்து நிகழ்ந்துவிட்டது. பைக்கில் சென்று கொண்டிருந்தவனை லாரி தூக்கி வீசி குப்புற விழுந்துவிட்டான். யாரோ ஒரு மனிதர் ஸ்ரீயை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவனது செல்போனை எடுத்து வீட்டு எண்ணை அழைத்திருக்கிறார். அதோடு விட்டிருக்கலாம். கையை வைத்துக் கொண்டு சும்மாயிராமல் ஸ்ரீவத்சவாவிற்கு வந்திருந்த ஆறேழு குறுஞ்செய்திகளுக்கு ‘இவர் மருத்துவமனையில் இருக்கிறார்...அவருடைய செல்போன் என் வசமிருக்கிறது...உங்களுக்குத் இவரைத் தெரியும் என்றால் மருத்துவமனைக்கு வரவும்’ என்று பதில் அனுப்பியிருக்கிறார்.  சோலி சுத்தம். திமுதிமுவென்று பெண்கள் வந்துவிட்டார்கள். அத்தனை பேரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டிருக்கிறார்கள். ‘நான் ஸ்ரீவத்சாவின் காதலி. அவருக்கு என்ன ஆனது?’என்று. ஸ்ரீயை மருத்துவமனையில் சேர்த்தவர் நொந்து போயிருக்கிறார். ஒரேயொரு காதலியையும் மனைவியையும் வைத்துக் கொண்டு இந்த நாட்டில் ஆளாளுக்கு அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஏழெட்டுப் பேரை ஒரே சமயத்தில் ஒருவன் சமாளித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அதிர்ச்சியடையத்தானே செய்வார்?

மருத்துவமனைக்கு வந்த பிறகுதான் அந்தப் பெண்களுக்கும் விவகாரம் தெரிந்திருக்கிறது. உள்ளூர் காவல்நிலையத்தில் சில காதலிகள் புகார் அளித்திருக்கிறார்கள். ஏற்கனவே திருமணமான சில காதலிகள் ‘அவர் எனக்கு காதலர் இல்லைங்க...சும்மா ஃப்ரெண்ட் மாதிரி..பார்த்துட்டு போலாம்ன்னு வந்தோம்’ என்று முக்காடு போட்டு முகத்தை மறைத்தபடி கிளம்பியிருக்கிறார்கள். ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் என்று பழைய டயலாக்கை அடிக்கலாம். ஆனால் எப்படி இவர்களால் இவ்வளவு நைச்சியமாக ஏமாற்ற முடிகிறது என்று பார்க்க வேண்டும். ஒரே விடைதான். டெக்னாலஜி. தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சாத்தியமாக்கியிருக்கிறது.

ஒருவரை நேரிலேயே பார்க்காமல் அவர்களோடு தொடர்பு கொண்டு வளர்க்கப்படும் உறவுக்கு வெர்ச்சுவல் உறவு என்று பெயர். இண்டர்நெட், செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாகவே ஊட்டி வளர்க்கப்படும் இத்தகைய உறவானது கருவிகளை மனிதர்களுடன் உணர்வுப்பூர்வமாக பிணைக்கின்றன. ‘அவகிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்குமா?’ ‘இவன் பதில் அனுப்பியிருப்பானா?’ என்று மனம் அலைபாய்ந்து கொண்டேயிருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரத்தில் உறங்குவதற்கு முன்பு சில வினாடிகள் வரைக்கும் மனிதன் செல்போனோடுதான் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கிறான். விடிந்தவுடனும் மனம் செல்போனைத்தான் தேடுகிறது. மனிதனின் ஆறாம் விரலாக மாறிவிட்ட செல்போன்கள் தனிமனித, சமூக, குடும்ப உறவுகளில் உருவாக்கிக் கொண்டிருக்கும் தாக்கங்களை அணுக்கமாக புரிந்து கொண்டு அதற்கேற்ப சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் அவசரத் தேவையாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதெல்லாம் சக மனிதர்களிடம் உரையாடுவதைவிடவும் செல்போன் திரைகளுடன் உரையாடுவதைத்தான் மனம் விரும்புகிறது. பக்கத்தில் யார் இருந்தாலும் கண்டு கொள்ளாமல் செல்போனுடன் நம் கண்களைப் பொருத்திக் கொள்கிறோம். அப்படி என்னதான் செல்போனில் இருக்கிறது? 

ஸ்ரீவத்சவாவின் மீதான புகார்கள் உறுதிப்படுத்தப்படுமாயின் அவன் கைது செய்யப்படலாம். அபராஜித் இன்னமும் சில மாதங்களில் விவகாரத்து பெற்றுவிடலாம். ஒரு மனிதனின் கைதாலும் இன்னொரு விவாகத்தின் ரத்தாலும் எல்லாம் முடிந்துவிடப் போவதில்லை. இவையெல்லாம் சில சாம்பிள்கள். நம்மைச் சுற்றிலும் குப்பையென நிரம்பிக் கொண்டிருக்கும் நவீன காலத்தின் குழப்பங்களிலிருந்து ஒரு சில சாம்பிள்கள்தான் இவை. 

சக மனிதர்களுடனான நேரடிப் பேச்சு வார்த்தைகள் குறையும் போது ஒருவனுடைய குணநலன்கள் பெரிதும் மாறுபாடடைகின்றன என்பது நிதர்சனம். இதுவரைக்கும் தொழில்நுட்பம் என்பது மனிதனுக்கு உதவக் கூடிய ஒரு அம்சமாக மட்டும்தான் இருந்தது. பைக்கும் காரும் விமானமும் தூரத்தைக் குறைத்துக் கொடுத்தன. நேரத்தை மிச்சப்படுத்தின. மின்சாரமும் தொலைக்காட்சியும் வானொலியும் மனித வாழ்வில் கூடுதல் செளகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தன என்கிற அளவில் அவற்றுக்கான முக்கியத்துவம் முடிந்துவிடுகிறது. ஆனால் செல்போன் அப்படியில்லை. அவை மனிதர்களுடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பை(emotional bonding)உருவாக்குகின்றன. ஒரு மனிதனிடமிருந்து செல்போனை இரண்டு மணி நேரங்களுக்கு பறித்து வைத்தால் அவன் பதறத் தொடங்குகிற சூழலுக்கு வந்துவிட்டோம். மனைவியைக் காணவில்லை என்றாலும் கூட வராத பதற்றம் இது. தொழில்நுட்பக் கருவியொன்றுடன் உருவாகும் இத்தகைய உணர்வுப்பூர்வமான பிணைப்பு எதிர்மறையான சிக்கல்களைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். 

செல்போன்கள் என்பவை வெறும் கருவிகள்தான் என்பதையும் அவற்றை தேவைக்கு மீறி நெஞ்சுக்கு அருகில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என்பதையும் திரும்பத் திரும்ப நமக்குள்ளாகச் சொல்லிக் கொள்வதும் அதைச் செயல்படுத்துவதும் அடுத்த தலைமுறைக்கும் இதைச் சொல்லித் தருவதும் மிக அவசியமான தேவையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடர்)

6 எதிர் சப்தங்கள்:

NDM Gopal Krishnan said...

அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒரு பதிவு, சிந்தனையை தூண்டிய உங்களின் சேவைக்கு நன்றி. இது ஆண்கள் பெண்கள் என வித்தியாசமில்லாமல் அனைவரையும் தாக்கும் மன நோய் இது. ஒரு சமயம் எனது மனைவிக்கு அதிர்ச் வைத்தியம் செய்யவேண்டியதாக போனது. அவருக்கு தொலைபேசியில் நீண்ட நீரம் பேசிட விருப்பம் (இதுவும் ஒரு மன நோய்- பேசவேண்டியதை சுருக்கமாக தெளிவாக சொல்லத்தெரியாத நோய்) வெகு நேரம் எனக்கு தொடர்பு கிடைக்காததால் கடுப்பான நான் "சாலை விபத்தில் படுகாயம் அடைந்துவிட்டதாக் உதவி தேவை" என ஒரு S.M.S குறுஞ்செய்தி அனுப்பினேன். சிறிது நேரத்தில் மனைவி பதறி அடித்துக்கொண்டு எனது தொலைபேசியில் அழைக்க, நானும் சற்று நிதானமாக தொலைபேசி இணைப்பை தந்து பேச முற்ப்பட்டேன். பிறகு விவரம் தெரிந்ததும் அன்று இரவு வீட்டில் எனக்கு "பூகம்ப பூசை"....... எனது அதிர்ச்சி வைத்தியம் பலனளித்தாலும் நாள் பட நாள் பட கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. இப்போதெல்லாம் புலி வருது கதைபோல, நிஜமாகிவிடாமல் பார்த்துக்கொள்!!! என எச்சரிக்கை மட்டுமே செய்யமுடிகிறது. இந்த நோய்க்கு எளிமையான ஒரு வழி உண்டா? அது எங்கு இருக்கிறது?........ அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி. உத்திராகண்ட் மாநில திட்டப்பணி மனையிலிருந்து.

shrkalidoss said...

Hope the names are fake and they concerned should not feel offended. Or Mr.Mani got the permission to publish their names.

சேக்காளி said...

//ஒரேயொரு காதலியையும் மனைவியையும் வைத்துக் கொண்டு//
என்னாதிது?

Avargal Unmaigal said...

மிக நல்லதொரு கட்டுரை. செல்போனுக்கு அடிமையாகத ஒருவரில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மிக சந்தோஷம் ஐபோன் 6 உடன் அன்லிமிட் டேட்டா & போன் வசடி இருந்தாலும் மாதட்தில் நான் போனில் பேசுவது மொத்தம் 30 நிமிடங்களை கூட தாண்டாது அதுமட்டுமல்ல எனது போன் போஸ்வோர்ட் & பேஸ்புக் பாஸ்வோர்ட் எல்லாம் எனது மனைவிக்கும் குழந்தைக்கும் தெரியும் எனது மனதை போலவே இவைகளும் எப்பொழுதும் ஒப்பனாகவே இருக்கும்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இடியட் பாக்ஸ் = டெலிவிஷன்
சாத்தான் குட்டி அல்லது
சாத்தான் கருவி = செல்போன்
என்று சொல்லலாம்...

Gurunathan said...

ஒரேயொரு காதலியையும் மனைவியையும் வைத்துக் கொண்டு இந்த நாட்டில் ஆளாளுக்கு அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஏழெட்டுப் பேரை ஒரே சமயத்தில் ஒருவன் சமாளித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அதிர்ச்சியடையத்தானே செய்வார்? // haa haa :)