Dec 21, 2015

உலராத ஈரம்

டிசம்பர் மூன்றாம் தேதியன்று நிசப்தம் அறக்கட்டளையின் கணக்குக்கு முப்பதாயிரம் ரூபாய் வந்தது. பணத்தை அனுப்பி வைத்த ஆனந்த் ‘வெள்ள நிவாரணத்துக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்றார். அதுவரைக்கும் அப்படியொரு எண்ணமே இல்லை. நிசப்தம் அறக்கட்டளையின் வழியாக தனிமனிதர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த உதவிகளையும் பள்ளிகளுக்கு சிறு உதவிகளையும் செய்து வந்திருக்கிறோம். அவையெல்லாம் சிறு சிறு காரியங்கள். வெள்ள நிவாரணம் என்பது பெரும் பொறுப்பு. தூக்கித் தோளில் போட்ட பிறகு சுமை தாங்காமல் இறக்கி வைக்க முடியாது என்கிற தயக்கம் இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் ‘ஏதாவது செய்யச் சொல்லி’ அடுத்தடுத்து சில நண்பர்கள் வற்புறுத்தினார்கள். அதன் பிறகு அதிகம் யோசிக்கவில்லை. அறக்கட்டளை சார்பில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபடப் போகிறோம் என்று நிசப்தம்.காம் தளத்தில் அறிவித்தவுடன் பணம் குவியத் தொடங்கியது. எதிர்பார்க்காத வேகத்தில் பணம் வந்து கொண்டிருந்தது. பணம் இனி பிரச்சினையாகவே இருக்காது என்று புரிந்து கொள்ள வெகு நேரம் ஆகவில்லை.

வெள்ளம் பெருக்கெடுத்து தகவல் தொடர்பு சென்னையிலும் கடலூரிலும் துண்டிக்கப்பட்டிருந்த சமயத்திலும் கூட அந்த ஊர்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது சமூக ஊடகங்களில் தொடர்ந்து எழுதப்பட்டு விவாதிக்கப்பட்டன. அது நிவாரணப் பணிகளுக்கான திட்டமிடலுக்கு வெகுவாக உதவியது. அந்தத் தருணத்தில் தமிழகமே உணர்ச்சி வசப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல மூலைகளிலிருந்து நிவாரணப் பொருட்கள் நிரப்பட்ட வண்டிகள் சாரை சாரையாக சென்னையையும் கடலூரையும் நோக்கி விரைய ஆரம்பித்திருந்தன. இரவோடு இரவாக சமைத்து அள்ளி எடுத்துச் சென்றார்கள். அதே சமயத்தில் உணவுப்பொட்டலங்கள் நிறைய வீணடிக்கப்படுவதாகவும் செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. சில இடங்களில் தேவைக்கு அதிகமாக வழங்கப்படுவதாகவும் சில இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டுகொள்ளவே ஆட்கள் இல்லை என்பதும் வருத்தமூட்டும் செய்தியாக இருந்தது. இந்தச் செய்திகள் இரண்டு விஷயங்களில் உறுதியான முடிவெடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பது முதல் விஷயம். சென்னையிலும் கடலூரிலும் குறிப்பிட்ட எந்தப் பகுதியைத் தேர்ந்தெடுப்பது என்பது இரண்டாவது விஷயம்.

வெள்ளம் பாதிக்கப்பட்டவுடன் மக்களின் உடனடித் தேவை என்பது சப்பாத்தியாகவோ அல்லது புளியோதரையாகவோ இருக்கலாம். அவற்றைக் கொண்டு வந்து தருவற்கு ஏகப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பத்து நாட்களுக்குப் பிறகு இந்த மக்களுக்கு என்ன தேவையாக இருக்கும் என்பதை யோசித்து அதை அறக்கட்டளையின் சார்பாக முதற்கட்ட உதவியாக வழங்குவதென முடிவு செய்தோம். மழை ஓரளவுக்கு நின்றுவிட்டால் நிவாரண முகாம்களிலிருந்து தங்களது குடிசைகளுக்குச் செல்லும் மக்களுக்கு மளிகைச் சாமான்கள்தான் மிக அவசியமானதாக இருக்கும். அதனால் ஒரு மூட்டையில் அரிசி, பருப்பு, கோதுமை மாவு, சர்க்கரை, புளியில் ஆரம்பித்து சோப்பு, ஷாம்பு, சானிடரி நாப்கின் வரை முப்பது பொருட்களை நிரப்பிக் கொடுத்தால் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரைக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள். ஓரளவு இயல்பு நிலை திரும்பிய பிறகு அந்த மக்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கும் வரையில் இந்தப் பொருட்கள் உபயோகமானதாக இருக்கும். முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் எவை என்பது கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுவிட்டது.

நிவாரணப் பணிகளைப் பற்றி ஃபேஸ்புக்கிலும் வலைப்பதிவிலும் விவாதிக்க ஆரம்பித்த பிறகு சென்னையை மட்டும் கவனித்துவிட்டு கடலூரை விட்டுவிடக் கூடாது என்று ஏகப்பட்ட நண்பர்கள் வலியுறுத்தினார்கள். அவர்களின் வலியுறுத்தல் அர்த்தம் பொதிந்ததுதான். கடலூரில் நிறைய கிராமங்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன. பல ஊர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று சேர்ந்திருக்கவில்லை. அதனால் அறக்கட்டளையின் நிவாரணப் பணிக்கான பட்டியலில் கடலூரும் சேர்ந்து கொண்டது. இரண்டு ஊர்களுக்கும் நிவாரணப் பொருட்களை வழங்குவதாக இருப்பின் இரண்டு ஊர்களுக்கும் பொதுவான ஓர் ஊரில் பொருட்களை வாங்கி மூட்டை கட்டினால் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தோதாக இருக்கும் என்பதால் அச்சிறுபாக்கத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் அந்த ஊரைச் சார்ந்த ஜெயராஜ் பொருட்களை மூட்டை கட்டும் செயலை ஒருங்கிணைக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். பத்து லட்ச ரூபாய்க்கு பொருட்களை வாங்கி அவற்றைப் பிரித்து ஆயிரம் தனித்தனி மூட்டைகளாகக் கட்டுவது சாதாரணக் காரியமில்லை. ஆனால் இரண்டே நாட்களில் முடித்தார்கள். அசாத்தியமான வேகம் அது.

அப்பொழுதுதான் நிவாரணப் பணிகள் குறித்தான நிறைய எதிர்மறையான செய்திகள் வரத் தொடங்கின. அரசியல் கட்சியினர் பொருட்களை வழியிலேயே மறிப்பதாக வந்த செய்திகள் கலங்கச் செய்தது. பிணங்களைக் கொத்தும் கழுகுகள் நினைவுக்கு வந்து போயின. அவர்கள் கொடுக்கச் சொல்லும் இடங்களில்தான் விநியோகம் செய்ய வேண்டும் என மிரட்டுவதாகச் சொன்னார்கள். ஆனால் அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது. உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தங்களது ஒற்றை ரூபாயும் இல்லாதவர்களுக்குத்தான் செல்லும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அல்லவா அனுப்பியிருப்பார்கள்? சக தமிழன் வியர்வையையும் குருதியையும் சிந்திச் சம்பாதித்த பணத்தை இந்தக் கழுகுகள் காட்டும் இடத்தில் இரைத்துவிட்டு வருவதாக இருந்தால் இவ்வளவு சிரமப்பட்டிருக்கவே வேண்டியதில்லை.

திட்டமிடலின் வழியாகவே இவர்களை வெல்ல முடியும் எனத் தோன்றியது. அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டது. முதலில் கடலூரில் விநியோகம் செய்துவிட முடிவு செய்தோம். சென்னையைவிடவும் கடலூருக்கு பொருட்களைக் கொண்டு செல்வதுதான் சிரமமான காரியம் என்று சொல்லியிருந்தார்கள். அதனால்தான் அந்த முடிவு. முந்தின நாளே ஜெயராஜூம் நண்பர்களும் அச்சிறுபாக்கத்திலிருந்து மகிழ்வுந்தில் ஒரு முறை பயணித்து பாதையை முடிவு செய்தார்கள். மரக்காணம் பாண்டிச்சேரி வழியாக கடலூருக்குள் நுழைந்துவிட்டால் பெரிய பிரச்சினை இல்லை என்ற முடிவு எட்டப்பட்டது. அதன்படியே அடுத்த நாள் காலையில் லாரியில் நிவாரணப் பொருட்களை நிரப்பி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த பாதையிலேயே பயணித்தோம். பாண்டிச்சேரி வரைக்கும் எந்தப் பிரச்சினையுமில்லை. நிசப்தம் வாசகர்கள் ஆங்காங்கே இணைந்து கொண்டார்கள். பாண்டிச்சேரியில் காத்திருந்த இரண்டு கான்ஸ்டபிள்களும் வண்டியில் ஏறிக் கொண்டார்கள். இனி வண்டி மஞ்சள்குழியை அடைந்துவிடும் என்ற நம்பிக்கை வந்திருந்தது. மஞ்சள்குழி என்ற கிராமத்தைத்தான் பொருட்களை விநியோகம் செய்வதற்காக முடிவு செய்து வைத்திருந்தோம். 

விரும்பியபடியே எந்தத் தொந்தரவுமில்லாமல் வண்டி பி.முட்லூரை அடைந்தது. அதற்கடுத்த கிராமம்தான் மஞ்சள்குழி. வழியில் எந்த இடத்திலும் அரசியல்வாதிகள் யாரும் பிரச்சினை செய்யவில்லை. ஆனால் அந்த நிம்மதியை அடித்து நொறுக்கும் விதமாக போலீஸ் இன்ஸ்பெக்டர்தான் பிரச்சினை செய்தார். பி.முட்லூரில் அமர்ந்திருந்த ஆய்வாளர் தனக்கு அறுபது பொட்டலம் வேண்டும் என்றார். ஒரு பொட்டலம் ஆயிரம் ரூபாய். சர்வசாதாரணமாக அறுபதாயிரம் ரூபாயைக் கேட்கிறார். ‘அதெல்லாம் முடியாது சார்’ என்றேன். அவர் குறுக்கு மறுக்காகப் பேசினார். கொஞ்ச நேரத்துக்கு முன்பாகத்தான் அந்த இடத்தில் சாலை மறியல் நடந்ததாகவும் போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசி பிரச்சினையை முடித்து வைத்திருப்பதாகவும் அவர்களுக்குக் கொடுப்பதற்காகத்தான் கேட்பதாகவும் சொன்னார். போராட்டம் நடத்தியவர்கள் வசதியானவர்களாகக் கூட இருக்கக் கூடும். போராட்டம் நடத்தினார்கள் என்பதற்காக எதைப் பற்றியும் யோசிக்காமல் அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டியதில்லை என்று தோன்றியது.

‘எஸ்பி கிட்ட பேசறேன்’ என்றேன். தன்னுடைய செல்போனிலேயே அழைத்துத் தருவதாகச் சொன்னார். அநேகமாக நான் பொய் சொல்வதாக அவர் கருதியிருக்கக் கூடும். உண்மையிலேயே மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் கூட சர்வசாதாரணமாகப் பேச முடிந்தது. கிட்டத்தட்ட ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கடலூருக்குச் செல்லவிருக்கிறது என்ற செய்தி பரவிய போதே பெங்களூர் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அழைத்திருந்தார்கள். அவர்களின் மூலமாக நிறைய உயர் அதிகாரிகள் தொடர்பில் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். ஆய்வாளர் பிரச்சினை செய்தவுடன் அந்த அதிகாரிகளில் ஒருவரிடம் தகவலைச் சொன்னேன். மின்னல் வேகத்தில் தகவல்கள் பறந்தன. இன்ஸ்பெக்டரை யாரோ அழைத்துப் பேசினார்கள். ஆய்வாளர் எங்களிடம் ‘உங்க பொருளே வேண்டாம் கிளம்புங்க’ என்றார். அத்தனையும் ஐந்து நிமிடங்களில் நடந்து முடிந்தது. 

வண்டி மஞ்சள்குழி கிராமத்தை அடைந்தது. கிராமம் சிதைந்து சின்னாபின்னமாகியிருந்தது. மழையின் கோரத் தாண்டவம் திகிலூட்டுவதாக இருந்தது. யாருடைய முகத்தையும் நேரடியாகப் பார்த்துப் பேசுகிற தெம்பு இல்லை. கிட்டத்தட்ட அத்தனை பேரும் உடைந்து போயிருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணப் பொருட்கள் அடங்கிய ஒரு மூட்டையை வழங்கினோம். யாரும் அதிகமாக பேசிக் கொள்ளவில்லை. அந்த அமைதி ஏனோ மனதை பிசைந்து கொண்டேயிருக்கிறது. ஒரே விஷயத்தை மட்டும் தன்னார்வலர்கள் அந்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். ‘தயவு செஞ்சு ஓட்டை பணத்துக்காக விக்காதீங்க’ என்றார்கள். அந்த மக்களுக்கு அது புரிந்தது. ஒரு செய்தியை அழுத்தமாகச் சொன்ன நிம்மதி எங்களுக்கு.

கடலூரின் அழுத்தம் நெஞ்சாங்கூட்டுக்குள் அழுத்திக் கொண்டேயிருக்க மறுநாள் சென்னையில் வழங்குவதற்கான மூட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டுக் கிளம்பினோம். சென்னையில் அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. ஆனால் மக்கள் ஆளாய் பறந்தார்கள். வியாசர்பாடியில் வண்டியை நிறுத்திய போதே மக்கள் சூழ்ந்து கொண்டார்கள். அதை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. நல்லவேளையாக வருவாய் கோட்ட அலுவலர் வந்திருந்தார். அவர் வந்திருந்ததால் காவல்துறையினரும் வந்திருந்தார்கள். பிரச்சினையில் முக்கால்வாசி குறைந்துவிட்டது. மக்களை வரிசையில் நிறுத்தி வரச் செய்தார்கள். எல்லோருக்கும் முன்பே டோக்கன் கொடுத்திருந்தோம். மூன்று மணி நேரத்தில் கொண்டு வந்திருந்த ஐநூறு மூட்டைகளையும் மூன்று வெவ்வேறு இடங்களில் கொடுத்து முடித்திருந்தோம். 

மழையின் வெறியெடுத்த ஆட்டத்தின் முன்பாக இந்த நிவாரணப் பணி பெரிய காரியமேயில்லை. சென்னையிலும் கடலூரிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் சூழலில் நிசப்தம் செய்த உதவி என்பது மிக மிகச் சிறியது. ஆனால் அதைத் திட்டமிட்டு நிறைவேற்றியிருக்கிறோம். ஆயிரம் குடும்பங்களில் தற்காலிகமாக சிறு நிம்மதியைக் கொண்டு வந்திருக்கிறோம் என்கிற நினைப்பு நெகிழச் செய்கிறது. அறக்கட்டளை சார்பாக அருமையான அணி அமைந்திருந்தது. நிதி கொடுத்ததிலிருந்து, பொருட்களை வாங்கிப் பொட்டலம் கட்டுவது, விநியோகம் செய்வது வரை என அத்தனை செயல்பாடுகளிலும் தன்னார்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள். அந்த ஆர்வமும் பங்களிப்பும்தான் இந்தக் காரியத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் வந்து சேர்ந்த தொகை,  செய்யப்பட்டிருக்கும் செலவு உள்ளிட்ட தகவல்கள் துல்லியமாக நிசப்தம்.காம் தளத்தில் பதிவு செய்யப்பட்டன. இப்படி வரவு செலவை வெளிப்படையாக அறிவிப்பது மேலும் மேலும் நல்ல இதயங்களை அறக்கட்டளையை நோக்கி நெருங்கச் செய்திருக்கிறது.

இதோடு நிற்கப் போவதில்லை. மழை பெய்து முடித்த பத்து நாட்களில் நிசப்தம் அறக்கட்டளைக்கு கிட்டத்தட்ட நாற்பது மூன்று லட்சம் நிதி வந்திருக்கிறது. மொத்தத் தொகையில் வெறும் எட்டரை லட்சத்தைத்தான் முதற்கட்டமாக பயன்படுத்தியிருக்கிறோம். இரண்டாம் மூன்றாம் கட்ட நிவாரணப் பணிகளாக நிறையத் திட்டங்கள் இருக்கின்றன. அவை குறித்த ஆலோசனைகளை ஏற்கனவே தொடங்கியிருக்கிறோம். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட நீண்ட காலத் தேவைகளை பூர்த்தி செய்வனவாக அடுத்தடுத்த கட்டங்கள் இருக்கும். நிறைய வேலைகள் இருக்கின்றனதான். ஆனால் அழுத்தமான நம்பிக்கையும் இருக்கிறது. முதற்கட்டப் பணிகள் கொடுத்திருக்கும் நம்பிக்கை அது.


(ஜனனம் இதழில் வெள்ள நிவாரண உதவிகள் குறித்தான கட்டுரை ஒன்றைக் கேட்டிருந்தார்கள். பிரசுரமான கட்டுரையின் முழு வடிவம்)

6 எதிர் சப்தங்கள்:

Uma said...

Great Manikandan. பரிணாம வளர்ச்சி என்பது இத்தனை விரைவில் நடக்கும் என்பதை சாத்தியப்பபடுத்தி உள்ளீர்கள். நிசப்தத்தின் வாசகியின் வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

வாழ்த்துகள்! பாராட்டுகள்! மணிகண்டன்! இது நல்ல முயற்சி என்று மட்டும் சொல்வதற்கில்லை. வெற்றிதான். நிச்சயமாக இன்னும் பல நிசப்தத்தால் செய்ய முடியும். வாழ்த்துகள்.

கீதா: ‘தயவு செஞ்சு ஓட்டை பணத்துக்காக விக்காதீங்க’ நல்ல விஷயத்தைச் சொல்லி வந்திருக்கின்றீர்கள். இதை நானும் பலரிடமும் சொல்லிவருகின்றேன். நேற்று கோட்டூர்புரத்திலும் கூடச் சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.

வாழ்த்துகள். பாராட்டுகள்! மணிகண்டன் அண்ட் நிசப்தம்!

சேக்காளி said...

//ஜெயராஜ் பொருட்களை மூட்டை கட்டும் செயலை ஒருங்கிணைக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். பத்து லட்ச ரூபாய்க்கு பொருட்களை வாங்கி அவற்றைப் பிரித்து ஆயிரம் தனித்தனி மூட்டைகளாகக் கட்டுவது சாதாரணக் காரியமில்லை. ஆனால் இரண்டே நாட்களில் முடித்தார்கள்//
ஜெயராஜ் குழுவிற்கு வாழ்த்துக்கள்.

சேக்காளி said...

//திட்டமிட்டு நிறைவேற்றியிருக்கிறோம்//
வெள்ளம் நிவாரணம் தவிர்த்து பார்த்தாலும் இன்றைய தேவை இதுவாகத்தானிருக்கிறது. அடுத்த கட்டத்திற்கு நகர வாழ்த்துக்கள்.
உங்களைப் போன்ற விக்கிரமாதித்யர்களால் முடியும்.

சேக்காளி said...

//‘எஸ்பி கிட்ட பேசறேன்’ என்றேன். தன்னுடைய செல்போனிலேயே அழைத்துத் தருவதாகச் சொன்னார். அநேகமாக நான் பொய் சொல்வதாக அவர் கருதியிருக்கக் கூடும்....
இன்ஸ்பெக்டரை யாரோ அழைத்துப் பேசினார்கள். ஆய்வாளர் எங்களிடம் ‘உங்க பொருளே வேண்டாம் கிளம்புங்க’ என்றார்.//
"யாருகிட்ட" ன்னு சட்டையை கழற்றி சுழற்றியதாக (கங்குலி மாதிரி) கேள்விப்பட்டேனே?
நெசந்தானா?

”தளிர் சுரேஷ்” said...

இப்படி ஒரு சோகம் நிகழ்கையில் அதிலும் கொள்ளையடிக்கும் சில மனிதர்களை என்ன செய்வது? நிசப்தம் அறக்கட்டளையின் பணிகள் தொடரவாழ்த்துக்கள்!