Dec 17, 2015

களம்

கிராமத்தைத் தத்தெடுப்பது என்பது ஒப்பீட்டளவில் எளிமையான காரியமாகத் தெரிகிறது. சற்றே நேர்மையான ஒரு மனிதர் பஞ்சாயத்து தலைவராக உள்ள சிறிய கிராமம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் வேலை எளிதாகிவிடும். நாம் முப்பத்தைந்து லட்சம் கொடுத்தால் அரசாங்கம் முப்பத்தைந்து லட்சம் கொடுக்கிறது. எழுபது லட்சத்தை வைத்துக் கொண்டு கிராமத்தில் சில காரியங்களைச் செய்ய முடியும். ஆனால் அதில் ஒரு கேள்வி இருக்கிறது. நூறு குடும்பங்கள் உள்ள கிராமத்தில் அத்தனை பேரும் வசதியற்றவர்களாகத்தான் இருப்பார்களா? நாற்பது சதவீதம் வசதியானவர்களாக இருப்பார்கள். இன்னுமொரு முப்பத்தைந்து சதவீதம் கஷ்டப்படுவார்கள் ஆனால் எப்படியும் சமாளித்துவிடுகிறவர்களாக இருப்பார்கள். மீதமிருக்கும் பதினைந்து சதவீத மக்களில் ஐந்து சதவீத மக்கள்தான் எந்தவிதத்திலும் மேலே எழும்ப முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு உதவுவதுதானே உண்மையான உதவி? கிராமத்தை மேம்படுத்த அரசாங்கம் இருக்கிறது. பஞ்சாயத்து இருக்கிறது. நாம் கவனிக்க வேண்டியது அந்த ஐந்து சதவீத மக்களைத்தான். யாருமே கை நீட்டாத அவர்களுக்குத்தான் நாம் கை நீட்ட வேண்டும்.

சரிதான். அத்தகைய மனிதர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது? அதுதான் சிக்கலான காரியம். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பிடம் பேசினேன். எடுத்த உடனேயே எதிர்மறையாக பேசுகிறார்கள். அதெல்லாம் கஷ்டம் என்றார்கள். அவர்களிடம் சரியென்று சொல்லிவிட்டு இன்னொரு மனிதரிடம் பேசிய போது ‘வெளிநாட்டு பணம் வாங்குறீங்களா?’ ‘எவ்வளவு தொகை வசூல் ஆச்சு?’ என்றெல்லாம் கேட்டார்கள். சம்பந்தமேயில்லாத கேள்விகள். சரி, கேட்டுவிட்டுப் போகட்டும். யார் நல்லவர்கள் யார் நல்லவர்களாக நடிக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. அவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும்? அவர்கள் அனுபவத்திலிருந்து கூட இது சாத்தியமில்லாத காரியம் என்று சொல்லியிருக்கக் கூடும். ஆனால் முயற்சித்து பார்க்கலாம். 

தம்பிச்சோழன் ஒரு ஐடியா கொடுத்தார். 

அவரது ஐடியாவின் படி சோஷியாலஜி அல்லது சோஷிய வொர்க்ஸ் எனப்படுகிற சமூகம் சார்ந்த படிப்புகளைச் சொல்லித் தருகிற கல்லூரியில் சரியான பேராசியரைப் பிடித்தால் பாதி வேலை முடிந்த மாதிரிதான். ஆர்வமுள்ள இரண்டு மாணவர்களிடம் இதை ஒரு திட்டப்பணியாக(ப்ராஜக்ட்) கொடுத்துவிடலாம். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பத்து அல்லது பதினைந்து கிராமங்களில் ஆய்வு நடத்தி நூறு குடும்பங்களைத் தேர்ந்தெடுப்பதுதான் திட்டப்பணி. மழைக்கு முன்பாக எப்படி இருந்தார்கள்? மழை எப்படி அவர்களைச் சீரழித்திருக்கிறது? அவர்களது உடனடித் தேவை என்னவாக இருக்கிறது? உள்ளிட்ட முடிவுகளை ஆய்வுபூர்வமாக அவர்கள் பட்டியலிட்டுத் தர வேண்டும். வீடு புனரமைப்பதற்குத் தேவையான உதவியாக இருக்கலாம். கல்வி உதவித் தொகையாக இருக்கலாம். பழைய தொழிலை மீட்டெடுத்தல், மருத்துவ உதவி என என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்தக் களப்பணிக்குத் தேவையான செலவுகளை நாம் செய்துவிடலாம். பேராசிரியரின் முழுமையான வழிகாட்டலோடு தயாரிக்கப்பட்டு நமக்கு வழங்கப்படும் அறிக்கை நமக்கும் பயனுள்ளதாக இருக்கும் அந்த மாணவர்களுக்கு பயனுடையதாக இருக்கும். அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மனிதர்களை ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு தேவையான உதவிகளை வழங்கலாம்.

யோசிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. நடைமுறைச் சிக்கல்கள் என்னவெல்லாம் இருக்கின்றன என்று தெரியவில்லை. பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கண்டடைவது ஒருபக்கம் என்றால் கல்லூரியின் அனுமதி போன்றவை இன்னொரு பக்கம். ஆனால் இது பற்றிய உரையாடல்கள் ஆரம்பமாகியிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் இது ஒத்து வருமா என முடிவு செய்துவிடலாம். இப்படி ஆலோசனையில் இருக்கக் கூடிய திட்டங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து எழுத வேண்டியதில்லைதான். ஆனால் இப்படி எழுதும் போது நிறையப் பேர் ஆர்வமாக கருத்துச் சொல்கிறார்கள். இப்படி வரக் கூடிய கருத்துக்களில் நாற்பது சதவீத கருத்துக்களையாவது பரிசீலனை செய்ய முடிகிறது. இவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் போதுதான் புதுப் புதுத் திட்டங்கள் வடிவம் பெறுகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டது போல- இந்தச் செயல்கள் அத்தனையும் கற்றல்தான். ‘எனக்கு எல்லாமே தெரியும்’ என்று குருட்டுவாக்கில் நம்புவதற்கு நான் தயாராக இல்லை. நல்லது செய்வோம் என முடிவு செய்திருக்கிறோம். அதைத் தெளிவாக விவாதித்து பொறுமையாக முடிவு செய்வோம். 

நேற்று பதிவு எழுதும் போது அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.42,79,007 இருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். இன்று ரூ. 47,03,341 இருக்கிறது. பணம் வந்து கொண்டேதான் இருக்கிறது. மேற்சொன்ன கள ஆய்வு, யோசனைகள், திட்டமிடல் போன்றவற்றின் காரணமாக நிசப்தம் அறக்கட்டளையின் வழியாகச் செய்யப்படும் காரியங்கள் சற்று மெல்லத்தான் நடைபெறும். அதுதான் சாத்தியமும் கூட. ஆனால் நிச்சயமாக பயனாளிகளுக்கு நீண்டகாலத்தில் உதவுகிற செயல்பாடுகளாக இருக்கும். சற்று பொறுமையாகச் செய்வதில் யாருக்கேனும் எதிர்மறையான கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் தெரியப்படுத்தவும்.

களப்பணியில் கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு காரணமிருக்கிறது- அடுத்த தலைமுறையில் இரண்டு மாணவர்களை களமிறக்கினால் அந்த மாணவர்களுக்குத் தமிழக கிராமங்களின் உண்மையான முகம் தெரியும். அது அவர்களைப் புரட்டிப் போடுவதற்கான வாய்ப்பாகவும் அமையக் கூடும். ஆனால் மாணவர்கள்தான் செய்ய வேண்டும் என்றில்லை. விருப்பப்படுகிறவர்கள் தொடர்பு கொள்ளவும். ஆய்வு செய்யப் போகிறவர்களிடம் நேரடியாக பேச விரும்புகிறேன். கட்சி, சாதி, மதம், மொழி உள்ளிட்ட எந்தவிதமான மனச்சாய்வும் இல்லாதவர்களாக இருந்தால் நல்லது. முதலில் தொலைபேசியில் பேசலாம். இரண்டாம் கட்டமாக நேரில் சந்தித்து பேசுவோம். எல்லாமும் சரியாக அமையும்பட்சத்தில் அடுத்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம்.

vaamanikandan@gmail.com

8 எதிர் சப்தங்கள்:

பெரோஸ் said...

திரு. மணி அவர்களுக்கு,
கிராமம் தத்தெடுத்து, சரியான நபர்களை தேர்ந்தெடுக்க எளிய வழிமுறை என மனதில் தோன்றிய எண்ணங்கள்.
முதலில் குக்கிராமத்தை முடிவு செய்து .... அங்குள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் குடும்ப விவரம் கிடைத்தாலே தங்கள் 75% பணிகள் இலகுவாகிவிடும் (படிப்பவர்களில் 75% ஏழ்மை மாணவர்களே). பள்ளி அனுமதியுடன் மாணவர்களிடம் தங்கள் வீட்டில் மழையின் பாதிப்பு /பெற்றோரின் சிரமங்களை ஒரு தாளில் எழுதித்தருமாறு அரை மணிநேரம் ஒதுக்கி அதை வாங்கி பரிசீலித்தால் இன்னும் 20% தெளிவாகிவிடும். மீதி 5% பற்றி சிரமப்பட அவசியமில்லை. தங்கள் மனமும் கைகளும் தானாகவே நீளும் போது அதன்போக்கில் விட்டுவிடுங்கள்.

- தங்கள் நீண்டநாள் வாசகன்.
ஒரு நாள் விடாமல் படித்தாலும் இதுவரை கருத்து பதிந்ததில்லை (தங்கள் பெற்றோர் விபத்து அன்றைய ஆறுதல் தவிர).

தங்கள் பணிகள் என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்.

www.rasanai.blogspot.com said...

go ahead mani. giving importance to the 5% needy people is apt. thanks to tambhi chozhan's idea and for you too to have an acquaintance on the other day at his office. thought by feroz is also to be considered.

no need of urgency. HASTE IS WASTE ALWAYS. smart work and consistency always wins. let us take our own time so that it will be utilised properly to the under priviledged.

best wishes
anbudan
sundar g chennai

அன்பே சிவம் said...

இனி என் நாடு
மதத்தால் அல்ல...
'மணி'தத்தால்..
நிச்சயம் வெல்லும்.

எனும்
'நம்பிக்கை'
என்னுள் வெறும்
விதையாகவே இருந்தது.

இன்று
அது வளர்ந்து
வெளிப்படத் தொடங்கியுள்ளது.
இனி அதை யாராலும் கட்டுப்படுத்த
இயலாது.

மணிதர்களின் அறியாமையை
கண்டு அவர்களின் மேல் சவாரி செய்தவர்கள்
தங்கள் தவறுகளை உணருமுன்
உருட்டி தள்ளிவிட்டது.. மணிதத் தவறுகளால்
ஏற்படுத்தப்பட்ட வெள்ளம்.

ஆனால் பாவம் பலர்
இன்னும் தங்கள் தவறுகளை
உணர்வதாகத் தெரியவில்லை.?
நிவா'ரணம்' எனும் பெயரில் தங்களின்
'பாவங்களுக்கு' ''பரிகாரம் தேடிட முயல்கின்றனர்...

பாவம்
அவர்கள் செய்தது
பாவம் என்பதைக்கூட அறியாதவர்களாய்
இருக்கும் அவர்கள் நிலையை
இயற்கை மன்னிக்கட்டும்.

Dev said...

Dear Manikandan, wow... what a sensible and great idea. Every rupee is spent 3 times its worth if you could implement this idea successfully. Oru kodi van vanakkam sir.

- Deivam A.

Sasikumar said...

Mani, Did you meet Peter from CTC. The Belgium person who is doing garbage cleanup. This is the need of the hour and i am sure he got all the man power. Part of fund can be used for cleaning small places,creating garbage management plan in a village and educating the people.

”தளிர் சுரேஷ்” said...

உங்களுடைய களப்பணியும் திட்டமிடுதலும் வியக்க வைக்கின்றன.வாழ்த்துக்கள்!

மகேஸ் said...

ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை இயற்கை முறை விவசாயத்தை பரப்பும் வகையிலான களப்பயிற்சிகளுக்கு ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

Prathees R said...

Hi Sir, please check this FB group https://www.facebook.com/groups/TNFloods2016SchoolBooks/

They have done assessment and documented the Government Schools that were affected by flood. Hope this might be helpful to them as well.