Nov 13, 2015

கனெக்‌ஷனும் கம்யூனிகேஷனும்

‘கனெக்‌ஷனுக்கும் கம்யூனிகேஷனுக்கும் வித்தியாசமிருக்குய்யா...சின்ன வித்தியாசமில்லை....பெரிய வித்தியாசம்’ என்று சாலமன் பாப்பையாவின் தொனியில் ஒருவர் உரக்கக் கத்திக் கொண்டிருந்தார். பெங்களூரில் நடைபெற்றுக் கொண்டிருந்த கருத்தரங்கு அது. இந்த ஊரில் இப்படித்தான். அடிக்கடி கருத்தரங்குகளை நடத்துகிறார்கள். குடும்ப வாழ்வு ஏன் கசந்து போகிறது? கணவன் மனைவி ஏன் நாயும் குரங்குமாக மாறிவிடுகிறார்கள் என்று அவ்வப்போது நான்கைந்து பேர்கள் கூடி புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார்கள். அப்படியான ஒரு கண்டுபிடிப்பின் போதுதான் கனெக்‌ஷன் - கம்யூனிகேஷன் விவகாரம் வந்து விழுந்தது. அவர் மனநல மருத்துவர். எதை எதையோ பேசிக் கொண்டிருந்தவர் ‘எனக்கு வர்றதுல முக்காவாசி டைவர்ஸ் கேஸூகதான் அப்பு’ என்று சலித்துக் கொண்டார். விவாகரத்து என்றால் நேரடியாக வழக்கறிஞர்களிடம்தானே செல்வார்கள் என்ற நினைப்பில் ‘அதுக்கு ஏன் உங்ககிட்ட வர்றாங்க?’ என்று பார்வையாளர் ஒருவர் கேட்டதற்கு முறைத்துப் பார்த்துவிட்டு ‘கடைசி கட்ட முயற்சியாக வருகிறார்கள்’ என்று பதிலளித்தார். 

தமக்கிடையே சிக்கல் இருக்கிறது என்று கணவனுக்கும் தெரிகிறது; மனைவிக்கும் தெரிகிறது. அந்தச் சிக்கலை அவிழ்த்துவிட முடியும் என்றும் இருவருமே நம்புகிறார்கள். ஆனால் வழிவகைகள்தான் தெரிவதில்லை. சமாதானம் ஆகிவிடலாம் என்று ஆசுவாசமாக அமர்ந்து பேசினாலும் கூட பிரச்சினை பெரிதாகி இன்னமும் சிக்கலைக் கூட்டிவிடுகிறது. அதனால்தான் கடைசி கட்ட முயற்சியாக மனநல மருத்துவர்களை நாடுகிறார்கள். இருவருக்கும் நல்ல நேரமாக இருந்தால் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் ஒன்பது கிரகங்களின் அதிபதிகளும் குப்புறப்படுத்துவிடுகிறார்கள் என்பதால் தேங்காய் உடைவது போல உடைந்து ஒருவர் இந்தத் திசையிலும் இன்னொருவர் எதிர்திசையிலும் கிளம்பிவிடுகிறார்கள்.

அது என்ன கனெக்‌ஷனுக்கும் கம்யூனிகேஷனுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம்?

வெறும் தகவல்களைக் கடத்துவது கம்யூனிகேஷன். கனெக்‌ஷன் அதைவிட ஒரு படி மேல். தகவல் மட்டுமில்லாமல்- அன்பு, கோபம், சந்தோஷம், துக்கம் என்கிற உணர்ச்சிகளோடு இன்னொருவருடன் மனநிலையோடு இணைவது. முதல் சமாச்சாரத்திற்கு- அதாவது கம்யூனிகேஷனுக்கு சமூக வலைத்தளங்கள் போதும். ஆனால் சம்சாரத்துடன் பேசுவதற்கும் கூட செல்போனை நம்புவதுதான் தூக்கியடித்துவிடுகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்றவை நாம் சொல்ல விரும்புகிற தகவல்களைக் மற்றவர்களுக்குக் கடத்திவிடும். நம் உணர்ச்சிகளோடு அதிக சம்பந்தம் இல்லாத மனிதர்களுடன் உரையாடுவதற்கு இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ‘உடம்பைப் பார்த்துக்குங்க’ என்பதோடு முடிந்துவிடுகிற உறவுகள் அவை. ஆனால் கணவனும் மனைவியும் இன்னபிற நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் அப்படியன்று. தவித்துப் போய்விடுவார்கள். அவர்களிடமும் செல்போன் வழியாகவேதான் பேச வேண்டுமா?

கம்யூனிகேஷனில் இல்லாத ஒன்று ஆனால் கனெக்‌ஷனில் இருக்கக் கூடியது என்னவென்று கேட்டால் ‘நம்பிக்கை’ என்று சொல்லலாம். Trust. அதைப் பற்றித்தான் அந்த மனநல மருத்துவர் பேசிக் கொண்டிருந்தார். உறவுகளுக்கிடையே நம்பிக்கை மிக முக்கியம். அந்த நம்பிக்கை கண்களோடு கண்கள் பார்த்துப் பேசும் போதுதான் வலுப்பெறும். வெறும் செல்பேசி தகவல் பரிமாற்றங்களால் எல்லாக்காரியங்களையும் முடித்துவிடலாம் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையை முதலில் அடித்து நொறுக்குங்கள் என்றார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 

அவன் ஒரு ஐடி வாலா. எப்படியும் லட்சத்தைத் தொடக் கூடிய சம்பளம். தமது சொந்த ஊரிலேயே பெண்ணொருத்தியைப் பார்த்து திருமணம் செய்து கொஞ்ச நாட்கள் அமெரிக்காவிலிருந்துவிட்டு பணம் கட்டுக்கட்டாகச் சேர்ந்தவுடன் ஹைதராபாத்தில் நல்ல பங்களா ஒன்றை விலைக்கு வாங்கி குடியேறிவிட்டார்கள். இவ்வளவு காலத்தில் ஒரு குழந்தை பிறந்திருக்க வேண்டுமல்லவா? ம்ஹூம். வேண்டாம் என்று சொல்லிவிட்டாளாம். கணவனும் விட்டுவிட்டான். அம்மா விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார். ‘வருஷக்கணக்காச்சே...புழு பூச்சி இருக்கா?...யாராச்சும் டாக்டரை பார்க்கலாம்ல’ என்று அழுத்தம் கொடுக்கவும் இவன் அம்மா சொல்வதற்கு தலையாட்டுவதா வீட்டுக்காரிக்குத் தலையாட்டுவதா என்று தெரியாமல் மண்டை காய்ந்திருக்கிறான். ‘ஆபிஸ்ல மேனேஜர் சாவடிக்கிறான்...இங்கே வந்தால் வீட்டில் சாவடிக்கிறார்கள்’ என்று நொந்து நூடுல்ஸ் ஆனவன் கடைசியில் ‘உனக்கு என்னதாண்டி பிரச்சினை’ என்று மனைவியிடம் கேட்டிருக்கிறான்.

அதுவரையில் புகைவிட்டுக் கொண்டிருந்த எரிமலை வெடித்துச் சிதறி வீட்டின் வரவேற்பறை, படுக்கயறை என்று ஓரிடம் பாக்கியில்லாமல் கருக்கியிருக்கிறது. ‘என்னையவே கேள்வி கேட்குறியா?’ என்றவள் நீயும் வேண்டாம் உன் சங்காத்தமும் வேண்டாம் என்று தலையைச் சிலுப்பிவிட்டு கிளம்பிவிட்டாள். எங்கே போகிறாள் என்பதெல்லாம் தெரியவில்லை. அவளும் வேலைக்குப் போகிறவள்தான். நல்ல சம்பளம். யாரையும் நம்பியிருக்க வேண்டியதில்லை. பெட்டியைக் கட்டிவிட்டாள். ‘இது என்ன வம்பா இருக்கு?’ என்று அவளது அலுவலகத்து வாசலில் தினமும் தேவுடு காக்கத் தொடங்கியிருக்கிறான். அவள் கண்ணில்படுவதேயில்லை. அப்புறம்தான் தெரிந்திருக்கிறது. இன்னொருவனுடன் காரில் ஏறி கறுப்புக்கண்ணாடியை ஏற்றிவிட்டு இவன் கண்களிலிருந்து தப்பித்திருக்கிறாள். 

அவளுக்கு மின்னஞ்சல் அனுப்பி, வாட்ஸப்பில் கேள்விகளை அனுப்பி எழுத்துக்கள் தேய்ந்ததுதான் மிச்சம். ‘சரி தொலையட்டும். விவாகரத்து வாங்கிக்கலாம்’ என்று செய்தி அனுப்பி வைத்திருக்கிறான். அதற்கு மட்டும் பதில் வந்திருக்கிறது. ‘அடியேய்...இதுக்குத்தான் காத்திருந்தியா?’ என்று நினைத்தவன் எப்படியோ வளைத்து கெஞ்சிக் கூத்தாடி மனநல மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கிறான். சாலமன் பாப்பையா மாதிரி கத்திக் கொண்டிருக்கிறார் அல்லவா? அதே மருத்துவரிடம்தான். அவள் வைத்த மிகப்பெரிய குற்றச்சாட்டு ‘இவனுக்கு நான் பொண்டாட்டியா இந்த செல்போன் பொண்டாட்டியான்னே தெரியல...எப்போ பாரு அதையே ஒளிச்சு ஒளிச்சு மெசேஜ் அனுப்பிட்டு இருக்கிறான்’ என்றாளாம். அது வரை தவறு முழுவதும் அவளிடம்தான் என்று நம்பிக் கொண்டிருந்த மருத்துவருக்கு சந்தேகம் தட்டியிருக்கிறது. இவன் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறார். தவறு தன்பக்கத்திலும் இருக்கிறது என்பதை அவன் அது வரை உணர்ந்திருக்கவே இல்லை. இரண்டு பேரும் அமர்ந்து பேசியிருந்தால் பிரச்சினையை எப்பொழுதோ தீர்த்திருக்கலாம். ஆனால் வெள்ளம் கரை மீறிவிட்டது. பூதாகரமாகி நிற்கிறது.

நடுவில் வேறொருவன் வந்துவிட்டான் அல்லவா? அவன் இவளோடு வேலை செய்பவன். அலுவலகத்தில் மதிய உணவுக்குச் செல்லும் போதும் டீ குடிக்கப் போகும் போதும் அவனிடம் ‘வீட்டுக்காரன் மோசம்..சரியில்லை’ என்று புலம்பியிருக்கிறாள். ‘உனக்குத் தோள் கொடுக்க நானிருக்கிறேன் தோழி’ என்று ப்ராகட் போட்டுவிட்டான். இந்த இடத்தில்தான் ஒன்றை கவனிக்க வேண்டும். கணவன் மனைவியோடு பேசியதைவிடவும் நடுவில் புகுந்தவன் அவளோடு அதிக நேரம் பேசியிருக்கிறான். இந்த பேச்சு அவன் மீது நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. கணவனின் இடத்தை அவன் பிடித்துவிட்டான். ஏதாவது வாய்ப்பு கிடைக்கட்டும் என்று காத்திருந்தவள் கணவன் ‘உனக்கு என்னதான் பிரச்சினை’ என்று கேட்கவும் பெரிய குண்டாந்தடியாக எடுத்து உறவை அடித்து நொறுக்கிவிட்டாள்.

‘அவங்களை சேர்த்து வெச்சீங்களா?’ என்று கூட்டத்திலிருந்த ஒருவர் மருத்துவர் கேட்டார். 

‘அது எப்படிங்க முடியும்?’ என்று திருப்பிக் கேட்டு வாயடைக்கச் செய்துவிட்டார். ‘அது தலைக்கு மேல போற வெள்ளம். ஜாண் போகுதா முழம் போகுதான்னெல்லாம் தெரியல. முடியாம விட்டுட்டேன்’ என்றவர் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறினார். 

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது செல்பேசியை அணைத்து வைத்துவிடச் சொன்னார். அலுவலகத்தில் அணைத்து வைத்தேன். மாலையில் வண்டியோட்டும் போது அணைத்து வைத்தேன் என்கிற சால்ஜாப்பு எல்லாம் வேலைக்கு ஆகாது. வீட்டில் இருக்கும் போது அணைத்து வைக்க வேண்டும். அதுவும் சைலண்ட் மோடில் போட்டு வைக்கிறேன் என்பதும் கதைக்கு உதவாது. அப்படி போட்டு வைத்தால் நினைப்பு முழுவதும் அந்தக் கருமாந்திரத்தின் மீதேதான் இருக்கும். மொத்தமாக அணைத்து வைத்துவிட வேண்டும். 

‘என்னை இப்படிச் சொல்லிட்டீங்க..நான் எவ்வளவு பிஸி தெரியுமா? இருபத்து நாலு மணி நேரமே பத்த மாட்டேங்குது....’ என்று யாராவது கண்டிப்பாகச் சொல்லக் கூடும். அது சரிதான். இந்தக் காலத்தில் யார்தான் பிஸி இல்லை? தெருநாய் கூட பிஸியாகத்தான் இருக்கிறது. மூச்சிரைக்க ஓடிக் கொண்டேயிருக்கிறது. நமக்கு ஒவ்வொரு மணி நேரமும் முக்கியம்தான். அவசரச் செய்தி ஏதாவது வரக் கூடும். தொழில் சம்பந்தமாக யாராவது அழைக்கக் கூடும். இருந்து விட்டுப் போகட்டும். யோசித்துப் பார்த்தால் எவ்வளவு அவசர காரியமாக இருந்தாலும் நிச்சயமாக ஒரு மணி நேரம் காத்திருக்க முடியும். காத்திருக்கட்டும். குடும்பம், குழந்தையைவிடவா மற்றவையெல்லாம் முக்கியம்? 

டிவி, தொலைபேசி, செய்தித்தாள் என்று எதுவுமில்லாமல் ஒரு மணி நேரம் வேறு எதைப் பற்றியும் சிந்தனையில்லாமல் குடும்பத்தைப் பற்றி மட்டும் நினைத்து அவர்களோடு மட்டும் பேச வேண்டும். ஒரு மாதம் கடைபிடித்தால் கூட வித்தியாசத்தை உணரலாம். இருபத்து நான்கு மணி நேரத்தில் நமக்கு ஏதாவதொன்று என்றால் பரிதவித்துப் போகிறவர்களுக்காக வெறும் ஒரு மணி நேரத்தைத்தான் ஒதுக்கச் சொல்கிறார்கள். அதைக் கூட செய்ய மாட்டோமோ என்ன?

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய கைகளுக்குள் ஆர்.டி.எக்ஸ் தொடரின் ஒரு கட்டுரை)

2 எதிர் சப்தங்கள்:

சுதா சுப்பிரமணியம் said...

Nice one...

suresh p said...

Excellent message. I need one suggestion from u sir. I completed B.E but working in not related to engineering. So I am always get depressed so I get angry with my family members. I alread cross 31 years. But I Am not satisfied with my current position. What can I do. Please reply my my email id gpsureshmail33@gmail.com