Nov 17, 2015

எலிக்கு விரித்த வலை

‘ஃபேஸ்புக் எவ்வளவு மாத்தியிருக்கு தெரியுமா? ஒரு நாட்டோட அரசியலையே புரட்டி போட்டு விடுகிறது. மிகப்பெரிய ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. வாட்ஸப்புக்கு மட்டும் என்ன குறைச்சல்? வேலை தருகிறேன் என்று அரபு தேசத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர் ஒருவர் தான் ஒட்டகம் மேய்ப்பதைப் படம் பிடித்து அனுப்பி அது வைரலாகி அரசாங்கமே தலையிட்டிருக்கிறது. இதெல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பு சாத்தியமேயில்லை...இப்போ ஜஸ்ட் லைக் தட்’ என்று ஒரு நண்பர் பேசிக் கொண்டிருந்தார். அமெரிக்க வாழ் நண்பர். ஒரு மாத காலம் அலுவல் நிமித்தமாக அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்துக்கு என்னை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த ஊரின் ரொட்டியும் ஜாமும் வாய்க்கு சலித்திருந்த நேரத்தில் வீட்டிற்கு அழைத்திருந்தார். அப்பொழுதுதான் இந்தப் பேச்சு ஓடியது. 

இல்லையென்று மறுக்க முடியுமா? தொழில்நுட்பமும் அதன் நீட்சியான இணையமும், ஸ்மார்ட் ஃபோனும், ஃபேஸ்புக்கும், வாட்ஸப்பும் ஏகப்பட்ட உதவிகளைச் செய்கின்றனதான். வயதான தனது அம்மாவைக் காணவில்லை என்று படத்துடன் செய்தி வெளியிட்ட ஏழாவது நாளில் எங்கிருந்தோ ஒருவர் தனது அம்மாவைப் பற்றிய தகவலைக் கொடுத்துவிட்டதாக புளகாங்கிதத்துடன் நன்றி அறிவிப்பைச் செய்த நண்பரைத் தெரியும். அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கும் குழந்தைக்கு ரத்தம் தேவையென்று சமூக ஊடகத்தளத்தில் கோரிக்கை வைத்த அடுத்த ஒரு மணி நேரத்தில் வரிசைகட்டி ஆட்கள் காத்திருந்தார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லாம் நன்மைதான். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு அளவு முறை இருக்கிறது அல்லவா? தேன் இனிக்கிறது என்பதற்காக அதையே தண்ணீராகக் குடிக்க முடியுமா?

அந்த அமெரிக்க நண்பரின் மனைவி மனநல மருத்துவர். இதே ஊரில் ஒரு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இரவு உணவு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அரட்டையில் அவரும் கலந்து கொண்டார். அவர் சொன்ன ஒரு கதை அதிர்ச்சி நிறைந்தது. இதே ஊரில் வெகுநாட்களாக இருந்து அமெரிக்கக் குடியுரிமை வாங்கிக் கொண்ட இந்தியர் ஒருவரின் கதை. சத்ய நாராயணன். திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. திருமணம் செய்து கொண்டு வந்த பெண்ணுக்கு அவ்வளவாக படிப்பு இல்லை. வீட்டிலேயே இருந்திருக்கிறாள். தனக்கு பொழுது போவதில்லை என்று புலம்புகிறாள் என்பதற்காக ஒரு கணினியை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதோடு இணையமும் சேர்ந்திருக்கிறது. அதன் பிறகு நிறைய தொடர்புகள் வளர்ந்திருக்கின்றன. கள்ளக்காதல் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நல்லவிதமான நட்புகள்தான். ஆனால் வேறு விதமான பிரச்சினை ஒன்றை உண்டாகியிருக்கிறது.

நாட்கள் நகர நகர தொடர்ந்து இணையத்திலேயே இருக்கத் தொடங்கியிருக்கிறாள். கிட்டத்தட்ட போதை மாதிரிதான். அதிகப்படியான இணையப் பயன்பாடு அவளைக் கட்டிப் போட்டிருக்கிறது. எந்நேரமும் சாட்டிங், வீடியோ பார்த்தல் என்று ஏதோவொரு வகையில் இணையத்திலேயே இருக்க வேண்டும் என்கிற மாதிரியான மனநிலை. வீட்டில் யார் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தனது அறையை விட்டு வெளியே வருவதில்லை. அவளுண்டு அவளது கணினியுண்டு என சூரியனைக் கூட பார்க்காமல் இப்படியே நேரத்தை ஓட்டிக் கொண்டிருக்கவும் இவள் எந்நேரமும் இணையத்திலேயே குடியிருக்கிறாள் என்று சத்யா திட்டியிருக்கிறார். அதற்கும் இணையத்திலேயே தீர்வைத் தேடியிருக்கிறாள். தனது கணவர் வசைபாடுவதாக இணைய வழி நண்பர்கள் யாரிடமெல்லாமோ அறிவுரை கோரவும் யாரோ ஒரு போனாம்போக்கி ‘விவாகரத்து வாங்கிவிடு’ என்று சொன்னதைக் கேட்டுக் கொண்டவள் வழக்கறிஞர்களைத் தேடத் தொடங்யிருக்கிறாள். அந்தத் தேடல் கூட இணையத்திலேயேதான் நடந்திருக்கிறது. இவள் ஒரு பக்கம் வழக்கறிஞரைத் தேடவும், சத்யா ஒரு பக்கம் புலம்பவும் சண்டை நாளுக்கு நாள் அதிகமாகி சத்யாவுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. கடைசியில் யாரோ ஒருவர் பரிந்துரை செய்ததன் பேரில் இந்த மருத்துவரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். இப்பொழுதுதான் சிகிச்சையின் ஆரம்பகட்டம். ஆரம்பித்திருக்கிறார்கள்.‘குழந்தை என்ன ஆச்சு?’ என்றேன். குழந்தையையும் அவள் அதிகமாகக் கண்டு கொள்ளாமல் விடவும் சத்யாவின் பெற்றோர்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

தமிழக கிராமத்திலிருந்து விமானம் ஏறிய சாதாரண பெண் தான். குழந்தை, குடும்பம், கணவன் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு எப்படி இவளால் இணையத்தைக் கட்டிக் கொண்டு அழ முடிந்தது என்பது சிக்கலான கேள்வியெல்லாம் இல்லை. இப்பொழுதெல்லாம் ஏகப்பட்ட பேருக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவிலிருந்துதான் உதாரணத்தைக் காட்ட வேண்டும் என்பதில்லை. எப்பொழுதும் செல்போனை நோண்டியபடி நமக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவருக்குக் கூட இருக்கலாம். நமக்கே கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும்? சற்று விவரமானவர்கள் புரிந்து கொண்டு மனநல ஆலோசகர்களை நாடி பிரச்சினையின் வீரியத்தை ஓரளவு குறைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் இணையத்தைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான மக்களில் பெரும்பாலானவர்களுக்கு இணையம் உண்டாக்கும் எதிர்மறையான விளைவுகளை பற்றிய புரிதல் இருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடிவதில்லை. ‘இவள் சரியில்லை. அவன் சரியில்லை’ என்று குருட்டுவாக்கில்தான் சண்டைப் போடத் தொடங்குகிறார்கள்.

இணைய உலகம் என்பது மிகப்பெரிய பொறி. நமக்கு விருப்பமான வஸ்து ஒன்றை உள்ளே வைத்திருப்பதாகக் காட்டி நம்மைச் சுற்றி பெரிய வலையைக் கட்டி வைத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத வலை அது. ஃபேஸ்புக், ட்விட்டர் இன்னபிற வலைத்தளங்கள் என்று ஒவ்வொரு அடியாக வைத்து உள்ளே சென்று நமக்கே தெரியாமல் உள்ளே சிக்கிக் கொள்கிறோம். சமூக வலைத்தள நிறுவனங்களில் பெரும்பாலானவை மனநல ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு பிரிவை பணிக்கு வைத்திருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. இவர்களுடைய வேலையே மனோவியல் சார்ந்த ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துவதுதான். தமது தளத்துக்குள் வரும் ஒவ்வொரு மனிதனும் எந்த மாதிரியான தளங்களைத் தேடுகிறான், எந்த மாதிரியான கருத்துக்களை விரும்புகிறான், அவன் பார்க்கும் வீடியோக்கள் எத்தகையவை என்பனவற்றையெல்லாம் அக்குவேறு ஆணி வேறாக அலசி நாம் எதில் லயித்துப் போவோமோ அதைத் தேடித் தேடியெடுத்து நமக்கு விருந்து வைப்பார்கள். அப்படித்தான் ப்ரோகிராம் எழுதுகிறார்கள். எழுதிய ப்ரோகிராமைத் தொடர்ந்து மாற்றுகிறார்கள்.

ஃபேஸ்புக், கூகிள் போன்ற தளங்கள் ஒவ்வொரு வாரமும் ஏதாவது புதுப் புது விஷயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. இப்படியான அறிமுகங்களின் வழியாக மணிக்கணக்கில் அந்தத் தளங்களை வெறித்துக் கொண்டேயிருக்க வைக்கின்றன. தங்களுடைய இணையதளத்துக்குள் ஒரு முறை வந்தவனைத் திரும்பத் திரும்ப வரவழைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். அப்படி அவனை இழுத்துக் கட்டிப்போடுவதற்கான சூட்சம வேலைகளைத்தான் இத்தகைய நிறுவனத்தின் மனோவியல் ஆராய்ச்சியாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு தனிமனிதன் எதை விரும்புகிறான் என்பது மட்டுமில்லாமல் தமிழகத்தில் அதிகமானவர்களை எது கவர்கிறது, இந்திய அளவில் எதையெல்லாம் மக்கள் விரும்புகிறார்கள் என்று பிராந்திய அளவிலும் மாநில அளவிலும் தேச அளவிலும் வகை வாரியாகப் பிரித்து விவரங்களைக் குவிக்கிறார்கள். ஒரு தனிமனிதன் அல்லது சமூகத்தின் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்து கொண்டு அவனையும் அந்தச் சமூகத்தையும் அதற்கேற்ப குறி வைக்கிறார்கள்.

ஒரு வகையில் இதுவொரு psychological war என்று விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். நமக்கு என்ன பிடிக்கும் என்பதைத் தெரிந்து அதன் வழியாக நம்மை சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக்குவதைவிடவும் வேறு என்ன எதிர்மறை விளைவு இருக்கக் கூடும்? அடிமையாக்கப்பட்ட மனிதன் தனது வேலை, குடும்பம் என்பதையெல்லாம் விட்டுவிட்டு இதிலேயே தவம் கிடக்கத் தொடங்குகிறான். மாணவர்கள் படிப்பை கோட்டைவிடுகிறார்கள். எதிர்காலத்தை கேள்விக்குறிக்குள்ளாக்குகிறார்கள். நிறுவனங்களின் உற்பத்தித் திறன் குறையத் தொடங்குகிறது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் இதை தனிமனிதன் மற்றும் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் மனோவியல் போர் என்கிறார்கள். இனி காலம் இப்படித்தான் இருக்கும். நம்மை அடிமையாக்குவதற்கென ஆயிரக்கணக்கான மனோவியல் வல்லுநர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்த்துத்தான் நாம் ஜெயிக்க வேண்டியிருக்கிறது. ஜெயித்துவிட்டால் தப்பித்துவிடலாம். இல்லையென்றால் அடிமைச் சங்கிலிதான்.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடரின் ஒரு கட்டுரை)

3 எதிர் சப்தங்கள்:

thiru said...

//சமூக வலைத்தள நிறுவனங்களில் பெரும்பாலானவை மனநல ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு பிரிவை பணிக்கு வைத்திருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? //
ஏனுங் மணி நம்ம Site-க்கு இப்பிடி ஏதாவது குழு இருக்குதுங்களா ??

Vaa.Manikandan said...

நூற்றியெட்டு பேர் அடங்கிய குழு வேலை செய்கிறது..ஆனால் ரிசல்ட்தான் ஒண்ணையும் காணோம் :)

Jaypon , Canada said...

ஜெயித்துவிட்டால் தப்பித்துவிடலாம்.///அதுதான் எப்புடின்னு போட்டா தேவுல . குடும்பம் நல்ல சோறு தின்னு நாளாச்சு .