Nov 2, 2015

சென்சார் சென்சார் சென்சார்

பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் மெக்டொனால்ட்ஸ் கடை இருக்கிறது. நல்ல லேண்ட்மார்க் அது. அந்த இடத்தைச் சொன்னால் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். கோடு போட்ட மாதிரி நேரான சாலை. இன்று காலையில் வரும் போது ஒரு விபத்து கண்ணில்பட்டது. காக்கிச் சட்டை பேண்ட்டில் ஒரு இளைஞன் மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தான். அரதப்பழசான மிதிவண்டி அது. ஏதோ நிறுவனத்தில் அலுவலகப் பணியாளராக இருப்பான் போலிருக்கிறது. அவன் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த ஸ்பெண்டர் வண்டிக்காரன் மோதினான். குறைந்தபட்சம் எண்பது கிலோமீட்டர் வேகத்தில் அவன் வந்திருக்கக் கூடும். பையன் தெறித்து விழுந்தான். மோதிய பைக்காரனும் திருகிக் கொண்டுதான் விழுந்தான். பைக்காரன் சற்று முரட்டு ஆள். இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். ஆனால் உள்ளூர் ரவுடியிசம் செய்யும் விடலைகளிடம் ஒரு முரட்டுத்தனம் இருக்குமல்லவா? அப்படியொரு முரட்டுத்தனம். அவனுடைய ஜீன்ஸ் பேண்ட் கிழிந்திருந்தது. கை முட்டியில் சிராய்ப்பு.  சைக்கிள் பையனுக்கும் அடிதான். நெற்றியில் காயம்.

அவர்கள் கீழே விழவும் நான் எனது வண்டியை நிறுத்தவும் சரியாக இருந்தது. அதற்குள் நான்கைந்து பேர்கள் அந்த இடத்தில் சேர்ந்துவிட்டார்கள். எழுந்து வந்த பைக்காரன் சைக்கிள் பையனை வெறியெடுத்தவனைப் போல அடிக்க ஆரம்பித்துவிட்டான். கழுத்தைப் பிடித்து இழுத்ததில் சைக்கிள் பையனின் பின்னங்கழுத்தில் ஆழமான கீறல் விழுந்திருந்தது. முகத்தில் அறைவதும் தலையைத் தட்டுவதும் வயிற்றில் குத்துவதுமாக ஐந்து நிமிடங்களுக்கு அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. முடியவில்லை என்பதைவிடவும் நம்மையும் அடித்துவிடக் கூடும் என்கிற பயம். காவல் துறையை அழைக்க வேண்டுமா? அல்லது வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா என்று பெருங்குழப்பம்.

நல்லவேளையாக ஒரு ஆள் பைக்கில் இருந்து இறங்கினார். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ‘சார் பைக்காரன் மேலதான் தப்பு’ என்று மட்டும் சொன்னேன். அதிர்ஷ்டவசமாக அவர் கன்னடத்துக்காரர். குறுக்கே புகுந்து கேள்விகேட்டார். பஞ்சாயத்துக்காரரை அவன் பேசவே விடவில்லை. ‘நின்னு நன்னு சம்பந்தம் இல்லா’ என்றான். திரும்பத் திரும்ப அதையே சொன்னான். ஆனால் அடிப்பதை நிறுத்தியிருந்தான். யாரையோ தொலைபேசியில் அழைத்து ‘மச்சா எங்கடா இருக்க? கிளம்பி வா’ என்றான். அடப்பாவி தமிழன். இங்கே அப்படியானவர்கள் நிறைய இருக்கிறார்கள். பெங்களூர் தினத்தந்தியில் வரும் கொலைச் செய்திகளில் கைதாகும் முக்கால்வாசிக்காரர்கள் தமிழர்கள்தான்.

அவன் தமிழன் என்று தெரிந்த பிறகு கொஞ்சம் தைரியம் வந்து ‘அவர் ஓரமாத்தானே வந்தாரு?’ என்றேன். 

எதுவுமே யோசிக்காமல் ‘நீ மூடுறியா?’ என்றான். 

என் விரலை மூக்குக்கு நேராகக் காட்டி அவன் சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டு அமைதியாக நின்று கொண்டேன். பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்தது. ‘ட்ரீட்மெண்டுக்கு கூட்டிட்டு போ’ என்றான் அந்த சைக்கிள்காரனை. அந்தப் பையன் ஏற்கனவே பரிதாபத்தில் முழித்துக் கொண்டிருந்தான். பைக்காரன் செலவு வேறு வைப்பான் போலிருக்கிறது.  பஞ்சாயத்துக்காரர் ‘முதலில் எப்.ஐ.ஆர் போடலாம்’ என்றார். அது நல்ல ஐடியா. இப்படியான போக்கற்றவர்களிடம் எந்த ஆவணமும் சரியாக இருக்காது என்கிற நம்பிக்கைதான். தலைக்கவசம் கூட அணிந்திருக்கவில்லை. பின்வாங்கினான். 

பஞ்சாயத்துக்காரரிடம் ‘உனக்கு என்ன பிரச்சினை? நீ கிளம்பு’ என்றான்.

பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருந்தவருக்கு கோபம் வந்துவிட்டது. ‘நடு ரோட்ல நீ ஒருத்தனை அடிப்ப..நாங்க வேடிக்கை பார்க்கணுமா?’ என்றார். பைக்காரன் ஆக்ரோஷமாகப் பேசத் தொடங்கினான். பிரச்சினை பெரிதாகும் போலத் தெரிந்தது. அந்தச் சமயத்தில் அவன் ஃபோனில் அழைத்திருந்த மச்சான் வந்து சேர்ந்தான். அவனும் துள்ளுவான் என்றுதான் தோன்றியது. துள்ளவில்லை. விசாரித்துவிட்டு பைக்காரனை அடக்கும் ரீதியில் பேசினான். ‘உன்னைப் போய் கூப்பிட்டேன் பாரு’ என்கிற ரீதியில் பைக்காரன் மச்சானை முறைத்துக் கொண்டு நின்றான். ஓரளவு சூழல் அமைதிக்கு வந்தது. சைக்கிள்காரப் பையன் தனது சைக்கிளை எடுத்து வளைவுகளை நீக்க முயற்சி செய்தான். பஞ்சாயத்துக்காரர் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினார். பைக்காரன் அந்தப் பக்கமாகச் சென்றான். எல்லாம் முடிந்துவிட்டது போலிருக்கிறது என சைக்கிள்காரனிடம் ‘நீ ஒரு அடி விட்டிருக்கலாம்ல’ என்றான். அவன் கோபமாகப் பார்த்தானா பரிதாபமாக பார்த்தானா என்று தெரியவில்லை. ‘நீ ஒரு அடி விட்டிருக்கலாம்ல’ என்று அவன் என்னைக் கேட்டது போல இருந்தது. ம்ம்க்கும். இதற்கு மேல் அங்கே நிற்க வேண்டியதில்லை எனத் தோன்றியது. 

சைத்தான் யு டர்ன் அடித்து திரும்ப வந்தது. வடிவேலு பம்முவதைப் போல பம்மினேன். ஒருவேளை நம்மை அடிப்பானோ என்று பயந்தபடியே பஞ்சாயத்துக்காரரின் தலை தெரிகிறதா என்று பார்த்தேன். அவர் கிளம்பியிருந்தார். ‘ட்ரீட்மெண்டுக்கு கூட்டிட்டு போ’ என்றான். சைக்கிள்காரப் பையனிடம்தான். இப்பொழுது அவன் திருந்தியிருப்பான் என்கிற நம்பிக்கையில் ‘அவரோட சைக்கிளைப் பார்த்தாவே தெரியலையா.....பாவமா இருக்கு’ என்றுதான் சொன்னேன். 

‘ங்கொம்ம்மா..நீ அடி வாங்கிக்காத..வந்து என்னோடத புடிச்சு...(சென்சார் சென்சார் சென்சார் சென்சார் சென்சார்...எக்ஸெட்ரா..எக்ஸெட்ரா..சென்சார் சென்சார் சென்சார்’ 

திங்கட்கிழமை அதுவமாக இவனிடம் அர்ச்சனை வாங்க வேண்டும் என்று தலையில் எழுதியிருக்கிறது. சமாளிக்க வேண்டுமல்லவா? ஃபோனை எடுத்தேன். 

‘என்னடா கம்ப்ளெய்ண்ட் பண்ணுறியா? சாவடிச்சுடுவேன்’ என்றான். 

‘நான் ஒண்ணும் பண்ணல...’ என்று சொல்லிவிட்டு ஃபோன் திரையை வெறித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் சைக்கிள்காரனை அடிக்கத் தொடங்கியிருந்தான். என்ன பேசினாலும் அடி எனக்கு விழும். நூறை அழைத்துச் சொல்லிவிடலாம். ஆனால் அவனுக்குத் தெரியாமல் அந்தப் பக்கமாகச் சென்று அழைக்க வேண்டும் என்று அவசர அவசரமாக வண்டி எண்ணை குறித்துக் கொண்டு நகர்ந்தேன். KA 51 ED 3000. ஃபேன்ஸி எண். நூறை அழைத்தால் என்னவெல்லாம் கேட்பார்களோ-

அதற்குள் ஒரு கார் வந்து நின்றது. ஆவ்டி. ஒரு ஆள் இறங்கினார். என்னைவிட சோப்லாங்கிதான். என்னைவிட சோப்லாங்கி என்று அவமானப்படுத்த முடியாது- என் அளவுக்கு சோப்லாங்கி என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கையில் பெரிய ப்ரேஸ்லெட்டும் கழுத்தில் பத்து பவுன் சங்கிலியும் இருந்தது. என்னிடம் அரைஞாண் கயிறு கூட இல்லை. கடந்த முறை ப்ரான்ஸ் கடற்கரையில் அரைஞாண் கயிறோடு சுற்றும் போது ஒரே வெட்கமாக போய்விட்டது. இந்த முறை அமெரிக்காவில் அப்படியொரு அசந்தர்ப்பம் வந்துவிடக் கூடாது என்பதற்காக கழட்டி வைத்துவிட்டுச் சென்றிருந்தேன். இப்பொழுது அதுவா முக்கியம்?

ஆவ்டி கார் வந்தது அல்லவா? இறங்கியவர் ‘ஏனாயித்து?’ என்றார். ‘சார் நீங்க கடைசி வரைக்கும் போய்டக் கூடாது’ என்று மனதில் நினைத்துக் கொண்டு ‘இவர்ர்ர்ர்ர்ர் - மரியாதையை சற்று சேர்த்துக் கொடுத்துவிடலாம்- பைக்கில் வந்து இடித்து கீழே தள்ளிவிட்டு ஆளையும் அடிக்கிறார்’ என்றேன். பைக்காரன் முறைத்தான். ‘அவுதா?’ என்று சுற்றிலும் இரண்டு பேரிடம் கேட்டார். அவர்கள் ஆமாம் போட்டார்கள். என்ன நினைத்தாரோ தெரியவில்லை- ஒரே அறைதான். அவனை அடித்ததில் எனக்கு காதுக்குள் ங்கொய்ய் என்றது. அவன் சுதாரிப்பதற்குள் இன்னொரு அறை. சோலி முடிந்துவிட்டது. பைக்காரனுக்கு பேச்சே வரவில்லை. என்னவோ சொல்ல முயற்சித்தான் இன்னொரு அடி விட்டார். ‘கிளம்புடா’ என்றார். சொன்னபேச்சைத் தட்டாமல் கிளம்பிச் சென்றுவிட்டான்.

ஆச்சரியமாக இருந்தது. உடல்வாகு என்பதெல்லாம் பிரச்சினையே இல்லை. அந்த கெத்து வேண்டும். பயமில்லாத கெத்து. கண்ணில் துளி பயத்தைக் காட்டாமல் குரலில் முரட்டுத்தனத்தைக் காட்டினால் போதும். இந்த தைரியம் எல்லோருக்கும் சாத்தியமில்லை. சிலருக்கு மட்டுமே வாய்க்கும். எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது. பைக்கில் வரும் போது கற்பனைக்கு மட்டும் அளவில்லை. ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து பெங்களூர் மாதிரியான ஊருக்குள் புகுந்து இப்படி ரவுடிகளையெல்லாம் துவம்சம் செய்வது மாதிரி கற்பனைக் குதிரை ஓடிக் கொண்டிருந்தது. ‘அதுக்கெல்லாம் வயசு ஆகிடுச்சு...போய் வேலையைப் பாருடா’ என்று அசிரீரி ஒலித்தது. அசிரீரி என்றால் அவன் சொன்ன கெட்டவார்த்தைகள்தான் - சென்சார் சென்சார் சென்சார் சென்சார் சென்சார்.

8 எதிர் சப்தங்கள்:

RG said...

முதல்ல இப்படி வெளிப்படையா எழுதறத்துக்கு ஒரு தைரியம் வேணும் பாஸ். அது உங்களுக்கு இருக்கு.

ராஜ கணேஷ்

Unknown said...

"அந்த கெத்து வேண்டும்...!"

சேக்காளி said...

யாஸிர் அசனப்பா. said...

sema

”தளிர் சுரேஷ்” said...

அந்த கெத்து எல்லோருக்கும் வருவதில்லைதான்! உள்ளூர் என்றால் எனக்கு கொஞ்சம் வரும்!

Vinoth Subramanian said...

True sir. We are all inwardly courageous outwardly timid, which is not our mistake. When you see such personality next time, you should be the first one to hit...

Anonymous said...

https://www.youtube.com/watch?v=us0HtiPQLUU

Intha padamum ithai thaan solluthu Mani!

pradeep

Karthik.vk said...

அருமை