Oct 21, 2015

சுடர்

எழுதத் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் எழுதி வைத்திருக்கும் கவிதைகளை யாரிடமாவது காட்டிவிட வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் யாரிடம் காட்டுவது? மைலாப்பூரில் சுஜாதா வீட்டிற்குச் சென்றிருந்த போது மனிதர் கையிலேயே தொடவில்லை. ‘விகடன் குமுதத்துக்கு அனுப்பி வைப்பா...நான் பார்த்துக்கிறேன்’ என்றார். தொங்கிய முகத்துடன் வீடு திரும்பியிருந்தேன். சிற்றிதழ்கள் எதுவும் எனக்கு அறிமுகமாகியிருக்காத காலம் அது. சுஜாதாவைத் தவிர கவிதைகளைப் பற்றி எழுதக் கூடிய எழுத்தாளர்கள் யாரையும் தெரியாது. அந்தச்ச் சமயத்தில்தான் மனுஷ்ய புத்திரன் வெங்கட் சாமிநாதன் என்ற பெயரை உச்சரித்தார். தமிழில் முக்கியமான விமர்சகர் என்றார். அன்றிரவே அதுவரை எழுதி வைத்திருந்த கவிதைகளையெல்லாம் தொகுத்து மின்னஞ்சலில் வெ.சாவுக்கு அனுப்பி வைத்திருந்தேன். சுமார் முப்பது கவிதைகள் இருக்கும். அடுத்த நாள் ஒரு பதில் அனுப்பியிருந்தார்.


‘உங்கள் கவிதைகள் பற்றி என் அபிப்ராயத்தைக் கேட்டது மகிழ்ச்சியைத் தருகிறது. நான் பதில் தந்ததும் உங்கள் எதிர்வினை என்ன ஆகுமோ தெரியாது. பெரும்பாலும் தமிழ் எழுத்தாளர்கள் பாலாபிஷேகத்தைத் தான் எதிர்பார்க்கிறார்கள். அது கிடைக்காவிட்டால் ஜன்ம விரோதிகளாகிவிடுகிறார்கள். போகட்டும்’ என்று ஆரம்பித்து இரண்டு பத்திகள் எழுதியிருந்தார். அந்த வரிகளை இப்பொழுது நினைத்தாலும் தொண்டை வறண்டுவிடுகிறது.  கவிதைகள் என்று நினைத்து நான் அனுப்பி வைத்திருந்தவனற்றை கிழித்து எறிந்திருந்தார். கவிதையில் எவையெல்லாம் துருத்தல் எவையெல்லாம் புரட்டல் எவையெல்லாம் அவசியமற்ற திணிப்புகள் என்று நீண்டிருந்தது அந்தக் கடிதம். அப்படியொரு முரட்டுத்தனமான தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. முதன் முறையாக அரியர் வைக்கும் போது மனதுக்குள் ஒரு சேர உருவாகக் கூடிய வெற்றிடமும் பாரமும் உண்டாகியிருந்தது. 

இனி இந்த மனிதருடன் எந்தக் காலத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சங்கல்பம் எடுத்திருந்தேன். 

தொடர்ச்சியாக புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்த பிறகு வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளுடன் பரிச்சயம் உண்டானது. கிட்டத்தட்ட கலை இலக்கியத்தின் அத்தனை வடிவங்களிலும் அவருடைய விமர்சனக் குரல் பதிவாகியிருந்தது. கலையும் இலக்கியமும் வெற்றுக் கோஷமாக இருக்கக் கூடாது என்பதை வெ.சா தனது எழுத்துக்களின் வழியாக தொடர்ந்து வலியுறுத்துவதாக புரிந்து கொண்டேன். அறுபதுகளுக்குப் பிறகு மார்க்ஸிய மற்றும் திராவிட சித்தாந்தம் வலுப்பெற்றிருந்த காலகட்டத்தில் வெ.சாவின் விமர்சனம் முக்கியமானதாக இருந்திருக்கக் கூடும். கடும் எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கக் கூடும். ஆனால் எந்தவிதமான தயவு தாட்சண்யமுமில்லாமல் தனது விமர்சனக் கத்தியை வீசிக் கொண்டேயிருந்திருக்கிறார் என்பதை அவரது எழுத்துக்களின் வழியாக புரிந்து கொள்ள முடிகிறது. படைப்பைவிடவும் வெ.சா படைப்பாளி சார்ந்துதான் விமர்சனத்தை முன் வைக்கிறார் என்ற ரீதியிலான தாக்குதல்கள் இருந்தாலும் தமிழின் விமர்சனப் போக்கில் வெ.சா தனக்கென்று தனியான பாணியை உருவாக்கியிருந்தார். தமிழில் முக்கியமான கலை இலக்கிய விமர்சகர்களின் பெயர்களை பட்டியலிட்டால் முதல் சில பெயர்களுள் வெங்கட் சாமிநாதன் என்ற பெயரும் இருக்கும். 

அவரது பாலையும் வாழையும் என்ற கட்டுரைகளின் தொகுப்பும் பிரமிளின் கண்ணாடியுள்ளிருந்து என்ற கவிதைத் தொகுப்புக்கு வெ.சா எழுதியிருந்த முன்னுரையும் அவரைப் பற்றிய முழுமையான பிம்பத்தை உருவாக்கியிருந்தது. ‘இந்த மனுஷனுக்கு நம் கவிதைகளை அனுப்பி வைத்தால் பூஜை நடத்தாமல் இருப்பாரா?’ என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு கவிதைகளை மற்றவர்களுக்கு மின்னஞ்சல்களில் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தாலும் வெங்கட் சாமிநாதனுக்கு மின்னஞ்சல் எதையும் அனுப்பாமல் கவனமாகத்தான் இருந்தேன். ஆனால் 2007 ஆம் ஆண்டு என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளியான போது மிகுந்த உற்சாகமடைந்திருந்தேன். சுஜாதா வெளியிட்டிருந்தார் என்பதால் எப்படியும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்றுவிடும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் புத்தகக் கண்காட்சியில் யாரும் சீந்தவேயில்லை. புத்தகத்தை நிறையப் பேருக்கு அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்கிற ஆசையில் மின்னஞ்சல் குழுமங்களுக்கும், எனது மின்னஞ்சலில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மின்னஞ்சல்களுக்கும் ‘புத்தகத்தை சுஜாதா வெளியிட நடிகை ரோகிணி பெற்றுக் கொண்டார்’ என்று பெருமை பொங்க நிழற்படத்தையும் சேர்த்து அனுப்பி வைத்திருந்தேன். அந்த மின்னஞ்சலில் வெ.சாவின் மின்னஞ்சல் முகவரியும் சேர்ந்திருக்கிறது என்பதைக் கவனிக்காமல் ஏமாந்திருந்தேன். சிக்கிக் கொண்டேன். 

பின்வருமாறு பதில் அனுப்பியிருந்தார்-

என்னவோ தெரிந்த பெயராக, எப்போதோ கேட்ட பெயராக நிழலாடுகிறது. எனக்கு முன்னால் எழுதியிருக்கிறீர்களா? ஒரு வேளை சில மாதங்கள் முன்னால் எனக்கு சில கவிதைகளை அனுப்பி அபிப்ராயம் கேட்டது நீங்களாக இருக்குமோ?  இருப்பினும், மனுஷ்யபுத்திரனும், சுஜாதாவும் ரோகிணியும் தோளுரசும் ஒருவர் என்னை ஏன் நாடுகிறார் என்ற ஐயமும் தலை காட்டுகிறது. 

நான் என்னென்னவோ நானாக நினைத்துக்கொண்டு அலை கழித்துக்கொள்கிறேன் என்று தோன்றுகிறது. உங்கள் கவிதைப் புத்தகம் சுஜாதா, ரோஹினி கரஸ்பரிசம் பெற்றது தங்கள் பாக்கியம். - வெ.சா.

இந்த மின்னஞ்சலுக்கு எந்த பதிலும் அனுப்பாமல் அமைதியாக இருந்துவிட்டேன். அவர் உயரம் வேறு; இலக்கியம் குறித்தான அவர் புரிதல் என்னவென்று தெளிவாக உணர்ந்திருந்தேன்.

வெங்கட் சாமிநாதன் மாதிரியான விமர்சகர்கள் காலத்தின் தேவை. அவர்கள் உருவாக்கும் கருத்தியல்வாதங்களும் எதிர்வினைகளும் விவாதங்களும் மொழிக்கும் கலைக்கும் தொடர்ந்து வளமூட்டுபவை. இந்த உரையாடல்கள்தான் கலை இலக்கியவெளியை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துகின்றன. வெங்கட் சாமிநாதன் தனது எழுத்துப் பயணத்தை விமர்சனத்திலிருந்துதான் தொடங்கினார். அவர் ஜம்முவில் வசித்த போது சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிக்கைக்கு தனது மாற்றுக்கருத்துக்களை கடிதமாக எழுதியனுப்ப அவை பிரசுரிக்கப்பட்டு அதன் பிறகு செல்லப்பாவின் வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். அதன் பிறகு தனது கடைசி காலம் வரைக்கும் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டேயிருந்தார். அவருடைய சமீபத்திய எழுத்துக்களை சொல்வனம் இணைய இதழில் வாசிக்கலாம். 

பெங்களூரூவுக்கு நான் மாற்றலாகி வந்த சில வருடங்களுக்குப் பிறகு வெங்கட் சாமிநாதனும் பெங்களூரில் தனது மகன் வீட்டில் வசிக்கிறார் என்று தெரிந்து கொண்டு சந்திக்கச் சென்றிருந்தேன். ஹெப்பாலில் அவருடைய மகனின் வீடு இருந்தது. அலைபேசியில் அழைத்து முகவரியைக் கேட்ட போது ‘வீட்டில் யாருமில்ல...காபி கூட கஷ்டம்...பரவால்ல வாங்கோ’ என்றார். அப்பொழுது பிடிஎம் லேஅவுட்டில் தங்கியிருந்தேன். அவரைச் சந்திக்கச் சென்ற போது தமிழின் மூத்த எழுத்தாளரைச் சந்திக்கச் செல்கிற ஆசை மட்டும்தான் இருந்தது. வேறு எந்த எண்ணமுமில்லை. கவிதை எழுதுவேன் என்றோ புத்தகம் வெளியாகியிருக்கிறது என்றோ எதையும் சொல்லவில்லை. சொல்லும் தைரியமும் இல்லை. அவருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை. ‘இவ்வளவு தூரம் வந்தீங்களா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய எழுத்தில் இருந்த கடுமையில் துளியைக் கூட நேரில் பார்க்க முடியவில்லை. அவரது மருமகள் வெப்பக்குடுவையில் ஊற்றி வைத்துச் சென்றிருந்த காபியில் முக்கால்வாசியை ஊற்றிக் கொடுத்துவிட்டு ‘இந்தக் கிழவனைப் பார்க்க வந்ததற்கு நன்றி’ என்றார். சிரிப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. 

க.நா.சுப்பிரமணியம் குறித்துத்தான் நிறையப் பேசினார். அவர் மீது வெ.சாவுக்கு அபரிமிதமான மரியாதை இருந்தது. ‘சி.சு.செல்லப்பாவும், க.நா.சுவும் இல்லைன்னா நான் எழுதியிருப்பேனான்னு தெரியாது’ என்றவர் என்னுடைய முக்கால்வாசி காபியைக் குடித்து முடிக்கும் வரைக்கும் தனது கால்வாசி காபியை வைத்துக் கொண்டு குடிப்பதாக ‘பாவ்லா’ செய்து கொண்டிருந்தார். 

வெ.சாவுடனான தனிப்பட்ட பேச்சும் கூட நகைச்சுவையாகவும் நக்கலாகவும்தான் இருந்தது. ‘என்னை வெளிநாட்டு உளவாளின்னு கூட சொன்னாங்க...தெரியுமோ?’ என்றார். ‘யாருக்கு உளவாளியா இருந்தீங்க?’ என்றேன். சிரித்துக் கொண்டே ‘அமெரிக்காவுக்கு இருந்தேனாம்’ என்றார். வெங்கட் சாமிநாதன் வெகு காலம் டெல்லியில் வசித்ததும் அவரது தீவிரமான விமர்சனங்களும் அப்படியொரு பெயரை உருவாக்கியிருக்கக் கூடும். ‘என்கிட்டயே வந்து அமெரிக்காவுக்கு விசா வேணும்ன்னு கேட்ட பயலுக இருக்காங்க’ என்றார். 

இப்படித்தான் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இது நடந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு வெ.சாவை நான் பார்க்கச் சென்றதில்லை. ஆனால் பெங்களூரில் வசிக்கும் ஜடாயு போன்றவர்கள் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்கள். அண்ணாகண்ணன் போன்றவர்களும் அவருடன் அவ்வப்போது அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். 

நேற்று மாலை வெங்கட் சாமிநாதனின் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனையின் ஐசியூவில் இருப்பதாகவும் மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. அலுவலகத்தில் ஓரிரு முறை அவரை நினைத்துக் கொண்டேன். இன்று(அக்டோபர் 21, 2015) காலை மூன்றரை மணியளவில் மாரடைப்பின் காரணமாக வெ.சாவின் உயிர் பிரிந்துவிட்டதாக மற்றொரு மின்னஞ்சல் வந்திருந்தது. பெங்களூரின் ஹெப்பால் மைதானத்தில் பனிரெண்டு மணியளவில் உடலடக்கம் நடைபெறுகிறது. பெங்களூரில் இருந்திருந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருக்க முடியும். ஒரு மூத்த எழுத்தாளருக்குச் செய்யும் சிறு மரியாதையாக இருந்திருக்கும். இப்பொழுது சாத்தியமில்லை. குளிரும் தனிமையும் நிறைந்த இந்த இரவில் அவரைப் பற்றிய நினைவுகளை எழுதி சிறு நினைவஞ்சலியாக வெ.சாவுக்கு வணக்கங்களுடன் சமர்ப்பிக்கிறேன்.

2 எதிர் சப்தங்கள்:

Vinoth Subramanian said...

Let his soul rest in peace...

சேக்காளி said...

எளிமையான வலிமையான நினைவஞ்சலி.
//என்னுடைய முக்கால்வாசி காபியைக் குடித்து முடிக்கும் வரைக்கும் தனது கால்வாசி காபியை வைத்துக் கொண்டு குடிப்பதாக ‘பாவ்லா’ செய்து கொண்டிருந்தார்//
அத்தனை கறாரான விமர்சகர் கூட ஒரு எளிமையான மனிதனாகவே இருந்த்திருக்கிறார்.