Oct 12, 2015

வாபி சாபி

ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு கணக்கு வாத்தியார் இருந்தார். ராமசாமி வாத்தியார். வாய்ப்பாடு சரியாகச் சொல்லவில்லையென்றால் அடித்து நொறுக்கிவிடுவார் அதைத் தவிர அவரிடம் வேறு எந்த லோலாயத்தை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ‘எல்லாத்துலேயும் ஒழுக்கமா இருக்கணும்ன்னா நீங்க பொறந்திருக்கவே வேண்டியதில்லை’ என்பது அவர் சித்தாந்தம். ‘நம்ம அம்மா அப்பன் எதுலயோ ஒழுக்கமில்லாமல் ஏமாந்ததுலதான் நாம பாதிப்பேரு பொறந்திருக்கோம்’ என்று அவர் சொன்ன போது ‘கிளுகிளு’வென சிரித்தது ஞாபகமிருக்கிறது. இதே வசனத்தை வெகு நாட்களுக்கு கெளரி சங்கர் சொல்லிக் கொண்டே திரிந்தான். ராமசாமி வாத்தியார் தனது வகுப்பில் மாணவர்களைப் பேச விட்டுவிடுவார். விளையாடிக் கொண்டிருந்தால் கண்டுகொள்ளமாட்டார். அவரை நக்கலடித்தாலும் பிரச்சினையில்லை. எழுத்து கோணல் மாணலாக இருந்தாலும் மிரட்ட மாட்டார். ஏன் இப்படி விட்டுவைக்கிறார் என்று புரிந்தததேயில்லை. ஆனால் அதுவும் ஒரு சித்தாந்தம். ஒழுக்கமின்மையும் ஒரு அழகு என்பது அவர் கொள்கை. இதற்கு டெக்னிக்கல் பெயர் இருக்கிறது என்று இதுவரைக்கும் தெரியாது. wabi-sabi.

நாம் எவையெல்லாம் நிரந்தரமானதில்லை என்றும், கச்சிதமாக இல்லையென்றும், முழுமை பெறாமல் இருக்கிறது என்றும் நினைக்கிறோமோ அவற்றில் எல்லாம் ஒருவித அழகு இருக்கிறது என்பதுதான் வாபி-சாபி. ஜப்பானியக் கலை. விமானப் பயணத்தில் அமெரிக்க ஆர்க்டிடெக்ட் ஒருவர் இதைப் பற்றி பேசினார். நாங்கள் வீடு கட்டும் போது ஒழுங்கற்ற அமைப்பில் இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன்- அதற்காகத் தாறுமாறாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஒரு பக்கம் ஜன்னல் இருந்தால் அதற்கு நேர் கோட்டில்தான் இன்னொரு ஜன்னல் இருக்க வேண்டும் என்றில்லாமல் அதைவிட மேலாகவோ அல்லது கீழாகவோ இருக்கும்படியான அமைப்பு. அப்படியான நவீன வீடுகள் சிலவற்றை படம் எடுத்தும் வைத்திருந்தேன். அதற்கு எங்கள் ஆர்க்கிடெக்ட் ஒத்துக் கொள்ளவில்லை. கர்நாடகாவின் விதான் சவுதாவை உதாரணமாகக் காட்டினார். கர்நாடக சட்டப்பேரவைக்கு விதான் சவுதா என்று பெயர். அந்தக் கட்டிடத்தின் நட்ட நடுப்புள்ளியில் மேலிருந்து கீழாக ஒரு கோட்டை வரைந்தால் கோட்டுக்கு இடது பக்கம் எப்படி இருக்கிறதோ அதற்கு அச்சு அசலாக வலது பக்கம் இருக்கும்.

‘நீங்க மாடர்ன்னு நினைக்கிறது இன்னைக்கு நல்லா இருக்கும். ஆனா பத்து வருஷத்துக்கு அப்புறம் அசிங்கமா தெரியலாம் ஆனால் பாரம்பரியம் அப்படியில்லை. சிமெட்ரிக்கா வீடு கட்டினா எத்தனை வருஷமானாலும் அந்த அமைப்பு ஈர்ப்பாவே இருக்கும்....விதான் சவுதா உதாரணம்’ என்று சொல்லி மனதை மாற்றிவிட்டார். பெங்களூரில் எத்தனை வருடங்கள் இருக்கப் போகிறோம் என்று தெரியாது. ஒருவேளை வீட்டை விற்பதாக இருந்தால் நம்மால் விலை வராமல் போய்விடக் கூடாது என்று பயந்துவிட்டேன். ஆர்க்கிடெக்ட் சொன்னதற்கு தலையாட்டியிருக்க வேண்டியதில்லை என்று இந்த அமெரிக்கக்காரர் சொன்ன பிறகுதான் தோன்றுகிறது. இந்த அமெரிக்கரின் வேலையே அதுதான் - வாபி சாபி ஆர்க்கிடெக்ட். 

‘என்ன செய்வீங்க?’ என்றதற்கு ‘கலைத்துப் போடுவேன்’ என்றார். 

வீடுகளிலும் அலுவலகங்களிலும் வழக்கத்திற்கு மாறாக கலைத்துப் போட்டும் உடைந்த பொருட்களை வைத்தும் அழகியலை உருவாக்குகிறார். சில படங்களையும் காட்டினார். வெகு சுவாரஸியமாக இருந்தன. ‘எவையெல்லாம் அழகு’ என்பது கூட நம்முடைய மனதைப் பொறுத்த விஷயம்தானே? காலங்காலமாக சில வரைமுறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். அந்த வரைமுறைகளுக்கு அடங்குவனவற்றை அழகு என்கிறோம். மற்றவையெல்லாம் அசிங்கம் என்று முடிவு செய்துவிடுகிறோம். இதுதான் Mindset. இதைத் தாண்டி யோசிப்பதற்கு- ‘அட இது கூட அழகாகத்தானே இருக்கிறது’ என்று மாற்றுப் பார்வையை உருவாக்கிக் கொள்வதற்கு இத்தகையை மனிதர்களுடனான உரையாடல் அவசியமானவையாக இருக்கின்றன. இந்த மன மாறுதல் உடனடியாக வந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால் மெதுவாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.


வாபி சாபியின் வரலாறு ஜப்பானில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்குகிறது. அந்தக் காலத்தில் ஜப்பானில் டீ குடிப்பது என்பது கெளரவமான செயல். அதற்கென நிறைய ஒழுங்குமுறைகள் இருந்திருக்கின்றன. அந்த ஒழுங்குமுறையிலிருந்து விலகி வேறு கோப்பைகளை அறிமுகப்படுத்திய ஷிக்கோ என்கிற டீ மாஸ்டரிலிருந்து வாபி சாபி தொடங்குகிறது. அதற்குப் பிறகு டீ மாஸ்டர்களும் ஜென் தத்துவவாதிகளும் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்கள். வாபி சாபியைக் கலை என்பதையும் தாண்டி வேறு விதமாக பார்க்க முடியும். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவத்தை இதிலிருந்து பெற முடியும் என்கிறார்கள்.

கருப்பு அசிங்கம். பற்கள் வரிசையாக இல்லாமல் இருந்தால் அசிங்கம். மூக்கு விடைத்துக் கொண்டிருந்தால் அசிங்கம்- இப்படி சக மனிதனை வெறுப்பதற்கும் கூட இப்படி நம் மனதில் ஏற்றப்பட்டிருக்கும் ஒழுங்குக்கும், அழகுக்குமான வரையறைகள் துணைபுரிகின்றன. அந்த அழகின் வரைமுறைக்குள் வராதவற்றையெல்லாம் நம்மையுமறியாமல் வெறுக்கத் தொடங்கிவிடுகிறோம் அல்லது நிராகரிக்கத் தொடங்கிவிடுகிறோம். மனோவியல் சார்ந்து இதுவொரு முக்கியமான பிரச்சினை. வெறும் தோற்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி இந்த உலகில் ஏதேனுமொன்றை நம்மால் வெறுக்க முடிகிறது? ஏன் தோற்றத்தின் அடிப்படையில் ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுக்கிறோம்? அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிக்கையொன்றில் மணமகள் தேவை என்று ஒரு தமிழர் விளம்பரம் கொடுத்திருந்தார். நூறு கிலோவுக்கும் அதிகமான எடை இருக்கிறாராம். நாற்பத்தெட்டு வயதாகிறது. ஆனால் முப்பத்தைந்து வயதில் அழகான பெண் வேண்டும் எனக் கோரியிருந்தார். அவரைக் குறையாகச் சொல்லவில்லை. ஆனால் தான் எப்படியிருந்தாலும் பரவாயில்லை ஆனால் தனக்கு ‘இத்தகைய விதிகளுக்கு உட்பட்டுத்தான் வேண்டும்’ என்று கேட்பதில் எவ்வளவு பெரிய முரண் இருக்கிறது?

வாபி- சாபி குறித்து புரிந்து கொள்ள ஒரு ஆங்கில புத்தகமிருக்கிறது. Wabi- Sabi for Artists, Designers, Poets & Philosophers. எழுபது பக்கங்கள்தான். ஆர்க்கிடெக்ட்தான் கொடுத்தார். ஒரு மணி நேரத்தில் படித்து விடக் கூடிய எளிமையான ஆங்கிலத்தில் இருந்தது.  ‘சுவாரஸியமாக இருந்தது’ என்று நன்றி சொல்லித் திருப்பிக் கொடுத்தேன்.

‘நான் அழகு இல்லை’ என்று நினைப்பதால்தான் உலகம் முழுக்கவும் பில்லியன் டாலரில் அழகு சாதனத் தொழில் நடந்து கொண்டிருக்கிறது. நம் குழந்தை ஒழுங்கில்லை என்று நினைப்பதால்தான் நமக்கும் மன அழுத்தம்; குழந்தைக்கும் மன அழுத்தம். இங்கு எதையுமே பர்பெக்ட் என்று சொல்ல முடியாது. சவரம் செய்து கொள்ளும் ப்ளேடின் கதுமையில் பர்பெக்‌ஷன் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அதில் இருக்கும் சிறு சிறு வளைவுகளையும் துளைகளையும் மைக்ரோஸ்கோப்பில் வைத்துப் பார்த்தால் தெரியும். எல்லாமே அப்படித்தான். ஒழுங்கு, நேர்த்தி என்பதெல்லாமே கூட நம்முடைய கற்பனைதான். எல்லாவற்றிலும் ஒழுங்கையும் நேர்த்தியையும் எதிர்பார்ப்பது ஒருவகையில் மனோவியாதி. இருக்கிறதை இருக்கிற மாதிரி ரசிச்சு பழகுங்க. முடிஞ்சா கலைச்சுப் போட்டு ரசிச்சு பாருங்க. அதில் ஒரு திருப்தியும் அமைதியும் கிடைக்கும்’ என்றார். உடனடியாக அவருக்கு பதில் சொல்ல முடியவில்லை. சாத்தியமா என்றும் தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது முயற்சித்துப் பார்க்கலாம் என்று சொன்னதற்கு சிரித்தார். ‘உங்களுக்கு அதுதான் வேலை. ரசிப்பீங்க. என் வேலையில் இதையெல்லாம் முயற்சித்துப் பார்த்தால் வீட்டுக்கு அனுப்பிடுவாங்களே’ என்றேன். அதற்கு மேலும் சிரித்தார். விமானம் டென்வரை அடைந்திருந்தது. கை கொடுத்துவிட்டு எழுந்து கொண்டேன்.

4 எதிர் சப்தங்கள்:

Uma said...

வாபி-சாபி பேரென்னவோ நல்லாத்தான் இருக்குது. கணவர் வேலைக்குப் போனபின் முயற்சித்துப் பார்க்கலாம். வீட்டுக்கு அவர் வரும்போது கலைத்து அழகு பார்த்துக்கொண்டிருந்தால்....ம்ஹூம்..ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை.

Unknown said...

Super topic!! I like the variety in your posts..

Rajan Chinnaswamy said...

ஜப்பானில் ட்சுனசபுரோ மாக்கி குச்சி என்பவா் 1914 ல் சோக்கா காக்காய்(soka Gakkai) எனும் படைப்பாக்கப் பள்ளியை துவக்கினாா். குழந்தைகளை மகிழ்ச்சியாய் வைத்திருப்பதே பள்ளியின் நோக்கம். குழந்தைகளின் குறும்புத்தனத்தை வளா்த்தெடுப்பது பிரதான அம்சம். உங்கள் ராமசாமி வாத்தியாா் சோக்கா காக்காயை அந்தக் காலத்திலேயே பயன்படுத்சி இருக்கிறாா். வாபி ஸாபி மாதிாி சோக்கா காக்காய், நல்லா இருக்கில்ல.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எடுத்த பொருளை அதே இடத்தில வக்கறதில்ல என்று மனைவியிடம் திட்டு வாங்காத ஆண்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகமே. இந்தக் கட்டுரையை வீட்டு அம்மணிகள் ஒத்துக்கிட்டால் சந்தோஷம்