Oct 1, 2015

குறுக்கும் நெடுக்கும்

டென்வரில் ப்ராட்வே என்ற இடத்துக்குச் சென்று வரச் சொன்னார்கள். சற்று பழைமையான இடம். தொடரூர்தியிலிருந்து இறங்கிய போது இரவு கவிந்திருந்தது. குறுக்கும் நெடுக்கமாக நிறைய வீதிகளைக் கடந்திருந்தேன். துல்லியமாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டிருந்த நகர்புறத்தின் ஆள் நடமாட்டமேயில்லாத தெருக்களில் வாகனங்கள் மட்டும் விரைந்து கொண்டிருந்தன. வீடுகளுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன என்றாலும் வெளியில் ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கட்டத்தில் பயம் உண்டாகியிருந்தது. யாராவது வந்து மிரட்டினால் கூட எந்த வீட்டிற்குள்ளும் நுழைய முடியும் என்று தெரியவில்லை. ஒரு காவலர் வந்தார். மணி இரவு பதினொன்றைத் தாண்டியிருந்தது. ஏதாவது விசாரிப்பார் என்று நினைத்த போது சிரித்தபடியே கையைக் காட்டிவிட்டுச் சென்றார். இதற்கு மேல் இருக்க வேண்டாம் என்று ரயில் நிலையத்தை நோக்கித் திரும்பியிருந்தேன். ரயில் நிலையம் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. சொற்பமான ஆட்கள் நின்றிருந்தார்கள்.

புன்னகைத்தபடியே அருகில் வந்த ஒரு பெண்மணி ஸ்பானிஷில் ஏதோ கேட்டார். உதவி கேட்பது போலத்தான் தெரிந்தது.

ஹோட்டல் ரிஸப்ஷனிஸ்ட் சில நாட்களுக்கு முன்பாகவே எச்சரித்திருந்தார். யாராவது பிச்சை கேட்டால் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் நடந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் அந்த எச்சரிக்கை. இருந்தாலும் அந்த ஸ்பானிஷ் பெண்மணியிடம் பேசிப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. ‘ஸ்பானிஷ் தெரியாது. இங்கிலீஷ்’ என்றேன். ‘ஸ்பானிஷ் தெரியாதா’ என்று கேட்டுவிட்டு முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டார். அமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாத ஆட்கள் கூட இருப்பார்கள் என்பதும் இங்கும் பிச்சையெடுக்கிறார்கள் என்பதும் ஆச்சரியமான செய்திகள். தொடரூர்தி வரத் தாமதமாகிக் கொண்டேயிருந்தது. இடைப்பட்ட நேரத்தில் தென் அமெரிக்க ஆள் வந்து சேர்ந்தான். கோதுமை நிறத்தில் கறுத்த முடியுடன் இந்திய சாயலுடைய மனிதன். அந்தப் பெண்மணியும் ஆணும் ஏதோ பேசிக் கொண்டார்கள். சில வினாடிகளில் அந்த ஆண் என்னை நோக்கி வந்தான். 

நடுங்கித்தான் போனேன். அருகில் வந்தவன் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினான். சிரித்தபடியே ‘ஹாய்’ என்றுதான் அவன் ஆரம்பித்தான் என்றாலும் என்னுடைய உதடுகள் வறண்டு போயிருந்தன. பற்களைக் காட்டாமல் புன்னகைத்தேன். தொடரூர்தி வந்துவிட வேண்டும் என கடவுள்களை வேண்டிக் கொண்டிருந்தேன். எந்தக் கடவுளும் செவி சாய்க்கவில்லை. ‘அந்தப் பெண்மணி மெக்ஸிகோ திரும்புவதற்கு பணம் தேவைப்படுகிறது’ என்றான். 

‘நானே கம்பெனி ட்ரிப்ல வந்திருக்கேன்’ என்றேன். 

இப்பொழுது அந்தப் பெண்மணியும் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ‘குறைந்தபட்ச உதவி போதும்’ என்றார்கள்.

குறைந்தபட்சம் என்றால் எவ்வளவு என்று தெரியவில்லை. இது ஒரு சூட்சமமான உதவி கோரல். ‘உங்களால முடிஞ்சதைக் கொடுங்க’ என்பது மாதிரிதான். ‘எவ்வளவு?’ என்று சத்தம் வெளியில் வராமல் கேட்டேன். அவன் நட்புப்பூர்வமான தொனியில் மீண்டும் ‘எவ்வளவு முடியுமோ அவ்வளவு’ என்றான். ஐந்து டாலர்களைக் கொடுத்துவிடலாம் என்று துழாவினேன். பத்து டாலர் நோட்டாகத்தான் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ‘மன்னிக்கவும்...என்னிடம் சில்லரை இல்லை’ என்று சொல்லவும் தொடரூர்தி வந்து சேரவும் சரியாக இருந்தது. கடவுளை வணங்கிவிட்டு ஒரு பெட்டியில் ஏறவும் அவர்களும் அதே பெட்டியில் ஏறினார்கள். பெட்டி வெறிச்சோடிக் கிடந்தது. யாரோ ஒரு முதியவர் மட்டும் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்தார். அவர் இறங்கிவிடக் கூடாது என்ற பதற்றத்திலேயே செல்போனை நோண்டத் தொடங்கியிருந்தேன். அந்த ஸ்பானிஷ்காரர்களின் முகத்தைத் நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்க வேறு வழி தெரியவில்லை.

அசோகமித்திரன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகக் கேக் வெட்டும் நிழற்படத்தை டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இந்த மாதத்துடன் அசோகமித்திரனுக்கு எண்பத்து நான்கு வயது நிறைவடைகிறது. 

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பாக அசோகமித்திரனும் மறைந்த எழுத்தாளர் எஸ்.வி.ராமகிருஷ்ணனும் ஹைதராபாத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது மூன்றாவது குட்டித் தலையாக என்னுடைய தலை இருந்தது. எஸ்.வி.ஆர் சோமபானம் அருந்துவார். தான் அளவாகக் குடிக்கிறேன் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதற்கு அவர் பயன்படுத்தும் சொல் அது. அளவாகக் குடித்துவிட்டு மிதமான போதையில் அறிவுப்பூர்வமாக பேசிக் கொண்டிருப்பார். அவர் பேசும் போது காது கொடுத்தால் போதும். நிறைய விஷயங்கள் வந்து விழும். அவரும் அசோகமித்திரனும் கிட்டத்தட்ட ஒத்த வயதுக் காரர்கள். அ.மி சற்று சீனியர். 

அசோகமித்திரனின் இளம்பருவம் ஹைதராபாத்தில் கரைந்தது. பதினெட்டாவது அட்சக் கோடு நாவலை வாசித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். எஸ்.வி.ஆரின் இளம்பருவம் தாராபுரத்தில் கரைந்தது. அந்தக் காலத்தில் ப்ளேக் நோயும் காலராவும் வந்து கொத்துக் கொத்தாக ஆட்கள் விழுந்ததிலிருந்து அசோகமித்திரன் ஜெமினி ஸ்டுடியோவில் பணி புரிந்தது வரைக்கும் நிறைய பேசிக் கொண்டிருந்தார்கள். பேசுவது யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் சுவாரஸியம் என்ற ஒரு விஷயத்தில் இவர்கள் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் மிஞ்சுவர். அசோகமித்திரன் இளம் வயதில் தன்னைச் சூழ்ந்திருந்த வறுமை குடும்பத்தை நடத்த சிரமப்பட்டதையெல்லாம் சிரிக்க வைத்தபடியே சொன்னால் எஸ்.வி.ஆர் அதற்கு அப்படியே எதிர்திசையில் தனது செல்வாக்கான குடும்பச் சூழல், சென்னைக்கு படிக்கச் சென்றது, கல்லூரியில் செய்த அழிச்சாட்டியங்கள் என்பதையெல்லாம் சிரிக்க வைத்தபடியே சொல்வார். 

அசோகமித்திரனின் ஒரு கதை இருக்கிறது. தன்னுடைய குழந்தை படுக்கையில் சிறுநீர் கழித்துக் கொண்டேயிருக்கிறது என்று மருத்துவர், மசூதியில் கயிறு கட்டுமிடம் என்று தீர்வு தேடி அலைவார்கள். ஆனால் படுக்கை நனைவது மட்டும் நிற்கவே நிற்காது. கதை நாயகனின் மச்சினனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறும். மனைவியையும் குழந்தையையும் பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே ரயிலேற்றி அனுப்பி வைத்துவிடுவான். குழந்தையைப் பிரிந்து இருப்பது வருத்தமாக இருந்தாலும் இனி பதினைந்து நாட்களுக்கு தூக்கத்தில் வேட்டியை மாற்ற வேண்டும் என்ற கவலையில்லை என்று நினைப்பான். ஆனாலும் அன்றைய தினம் படுக்கை நனைந்திருப்பதாகக் கதை முடியும்.

‘அந்தக் கதையின் நாயகன் நீங்கதானே’ என்று எஸ்.வி.ஆர் சிரித்தார். அசோகமித்திரனும் சிரித்து வைத்தார். எனக்குத்தான் வியர்த்துப் போனது. எம்.டெக் படிக்கும் போது கூட ஒன்றிரண்டு முறை படுக்கையில் சிறுநீர் கழித்திருக்கிறேன். படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக ஹைதராபாத் சென்ற பிறகும் கூட இரவில் பாயை நனைத்துவிட்டு அறைத்தோழருக்குத் தெரியாமல் மொட்டைமாடியில் காயப்போட்டிருந்தேன். ‘நம்ம விவகாரம் தெரிந்துதான் இரண்டு பேரும் கலாய்க்கிறார்களோ’ என்று பம்மிக் கொண்டிருந்தேன். 

அசோகமித்திரன் கிளம்பிய பிறகு ‘மிக எளிமையான எழுத்தில் வாழ்வியலின் உச்சங்களைத் தொடும் அசோகமித்திரனை தமிழில் எந்தவிதத்திலும் நிராகரித்துவிட முடியாது’ என்று எஸ்.வி.ஆர் என்னிடம் சொன்னபோது அசோகமித்திரனின் எழுத்துக்களை நான் வாசித்திருக்கவில்லை. அதன்பிறகு வாசிக்கத் தொடங்கிய பிறகு அசோகமித்திரனை எந்தத் தயக்கமுமில்லாமல் மிகச் சிறந்த எழுத்தாளர் என்று மனம் கொண்டாடத் தொடங்கியிருந்தது. அலட்டல் இல்லாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறார். தாம் எழுதுவதை விடவும் அதிகமாகக் கூச்சலிடும் எழுத்தாளர்களுக்கிடையில் தன் எழுத்தால் மட்டுமே தனது இடத்தை ஸ்திரப்படுத்திக் கொண்ட அற்புதமான மனிதர் அவர். அந்த நிழற்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது எதிரில் இருப்பவர்களைத் தாண்டியும் துளி கண்ணீர் கசிந்துவிட்டது. மனதுக்கு மிக நெருக்கமான கலைஞன் தனது தள்ளாத முதுமையிலும் காட்டும் புன்னகையில் இருக்கும் ஆனந்தத்துக்கான கண்ணீர் அது. 

இப்பொழுது எதிராளிகளின் ஞாபகம் வந்தது. தொடரூர்தி சப்தமேயில்லாமல் டென்வர் நகரை வடக்கு தெற்காகக் கிழித்துக் கொண்டிருந்தது. அந்தத் தென்னமெரிக்கர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளவில்லை. அந்த முதியவர் இன்னமும் செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தார். இனி இரண்டு நிறுத்தங்கள்தான். பிரச்சினை எதுவுமிருக்காது என்ற நம்பிக்கை வந்திருந்தது. அரோப்பா நிறுத்தம் வந்தவுடன் இருவரும் இருக்கையிலிருந்து எழுந்தார்கள். அவர்களைப் பார்த்துவிடக் கூடாது என்று முகத்தை கவனமாக வேறு பக்கம் திருப்பியிருந்தேன். அந்த ஆள் சைகை காட்டுவதற்கு எத்தனிப்பதாகத் தோன்றியது. இருந்தபோதும் முகம் கொடுக்கவில்லை. இந்த அரோப்பா சாலை பற்றி நிறையக் கதைகளைச் சொல்கிறார்கள். கொலராடோ மாகாணத்தில் துப்பாக்கி மிகச் சுலபமாகக் கிடைக்கிறது. சமீபத்தில் கூட இரண்டு பேர்களுக்கிடையில் துப்பாக்கிச் சண்டை நடந்து அக்கம்பக்கத்திலிருந்த நான்கைந்து பேர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டார்களாம். பகல் நேரத்தில் ஒரு முறையாவது அரோப்பா சாலையைச் சுற்ற வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். ரயிலின் தானியங்கிக் கதவுகள் மூடியவுடன் வண்டி வேகம் எடுத்தது. ஜன்னலுக்கு வெளியில் நின்றிருந்த அந்த ஆணையும் பெண்ணையும் பார்க்க விரும்பினேன். அவர்கள் பார்த்தால் சைகை காட்ட வேண்டும் என நினைத்திருந்தேன். அவர்கள் திரும்பிக் கூட பார்க்காமல் எதிர்த்திசையில் நடக்கத் தொடங்கியிருந்தார்கள்.

3 எதிர் சப்தங்கள்:

Manoj Prabhakar said...

அந்த பெண்மணி பேசியது ஸ்பானிஷ்தானா ?? ஒருவேளை அவர்கள் வேறு ஏதோ மொழியில் பேச, நீங்கள் ஸ்பானிஷ் தெரியாது என்று சொல்லவே, சிக்கிட்டான்டா சென்ட்ராயன் என்று வம்பிழுத்திருக்கக் கூடும்...:P

Manoj Prabhakar said...

அந்த பெண்மணி பேசியது ஸ்பானிஷ்தானா ?? ஒருவேளை அவர்கள் வேறு ஏதோ மொழியில் பேச, நீங்கள் ஸ்பானிஷ் தெரியாது என்று சொல்லவே, சிக்கிட்டான்டா சென்ட்ராயன் என்று வம்பிழுத்திருக்கக் கூடும்...:P

gopinath said...

எம்.டெக் படிக்கும் போது கூட ஒன்றிரண்டு முறை படுக்கையில் சிறுநீர் கழித்திருக்கிறேன். படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக ஹைதராபாத் சென்ற பிறகும் கூட இரவில் பாயை நனைத்துவிட்டு அறைத்தோழருக்குத் தெரியாமல் மொட்டைமாடியில் காயப்போட்டிருந்தேன்.// unga nermai enakku pidichirukku sir