Sep 18, 2015

இசையும் மெய்ப்பொருளும்

கவிதை என்பது மிகத் தீவிரமானது என்றும் அது அழுவாச்சி நிறைந்ததாகவும் இருந்தால்தான் மரியாதை என்றெல்லாம் நினைத்துக் கொண்டு கண்களைக் கூர்மையாக்கி உதடுகளை இறுக்கியபடி நிழற்படத்துக்கு போஸ் கொடுப்பதுதான் கவிஞனின் லட்சணம் என்ற நினைப்பில் பெருங்கூட்டம் அலையும் போது ஒற்றை ஆள் மொத்தக் கூட்டத்திலும் புகுந்து குறுக்கும் நெடுக்குமாக ஓடி சலனத்தை உருவாக்கிவிட்டுவிடுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பாக முகுந்த் நாகராஜன் அந்த வேலையைச் செய்தார். அதன் பிறகு இசை. இதைச் சொல்வதனால் முகுந்த் நாகராஜனையும் இசையையும் ஒப்பிடுவதாக என்று அர்த்தமில்லை. ஆனால் தீவிரமான தளமான கவிதைக்குள் மொழியை வைத்துக் கொண்டு எவ்வளவு வலுவான பிரச்சினைகளையும் மிக எளிமையாக வாசகனுக்குள் கொண்டு சேர்த்துவிடலாம் என்பதற்கான உதாரணங்களாக இவர்களைச் சுட்டிக் காட்ட முடியும்.


இலக்கிய உலகில் இசை என்ற பெயரில் பரவலான கவனம் பெற்றிருக்கும் சத்தியமூர்த்தியின் சொந்த ஊர் கோயமுத்தூர். அவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘காற்று கோதும் வண்ணத்துப் பூச்சி’யை வாசித்ததில்லை. அதன் பிறகு 2008 ஆம் ஆண்டில் வெளியான ‘உறுமீன்களற்ற நதி’ கவனம் பெற்றது. கவிதை என்பது எப்பொழுது உர்ர்ரென இருக்க வேண்டியதில்லை என்பதை இசையின் கவிதைகள் தன் போக்கில் சொல்லின. யாரோ நம்முடைய தோளைத் தட்டிப் பேசுவது போலவும், மலைச்சாலையில் சன்னலோரம் புத்தகம் வாசித்துக் கொண்டே பயணிப்பது போன்ற உணர்வையும் கூட கவிதை வாசிப்பு உருவாக்க முடியும் என்பதை இசையின் கவிதைகள் உணரச் செய்தன.

தூக்கத்திலிருந்த ராசா
தேவி! உன் கார்குழலின் வனப்பினேலே....
என ஏதோ முனகத் துவங்க
யோவ் மூடிட்டு படுய்யா 
என அதட்டினாள் தேவி 

‘ராசா வேசம் கட்டும் கூத்துக் கலைஞன்: சில குறிப்புகள்’ என்ற கவிதையின் முதல் குறிப்பு இது. 

 டாக்டர் பீஸுக்கு கடன் வாங்கிக்கொண்டு
ஆஸ்துமா பிணித்த மனைவியோடு
மேட்டு நிலத்தில் எழுந்து நின்று
சைக்கிள் மிதிக்கையில்
அரண்மனை வைத்தியர் எதிரே வருகிறார். 

அதே கவிதையில் நான்காம் குறிப்பு இது. கூத்துக் கலைஞனின் வலியையும் அவனது வாழ்க்கையும் எவ்வளவு எள்ளலான தொனியில் மிக எளிமையாகச் சொல்கிறார்? இதுதான் இசையின் பலம். பல்சர் பைக்கையும், குத்துப்பாட்டின் அனுபூதி நிலையையும், ஒரு சராசரியின் துக்கங்களையும் காதலையும் கொண்டாட்டத்தையும் கவிதையில் கொண்டுவரும் இசை contemporary poet. சமகாலத்தின் ஆழமான பிரச்சினைகளையும் தனிமனித உணர்ச்சிகளையும் துள்ளலுடன் வெளிப்படுத்தும் கவிஞன். எல்லாவற்றையும் புலம்பலாகவும் கண்ணீராகவுமே சொல்ல வேண்டியதில்லை என்பதை தனது கவிதைகளின் வழியாக நிரூபித்தார். கவிதையில் துள்ளலுக்கும் நகையாடலுக்கும் மிகப்பெரிய இடமிருக்கிறது என்பதை புன்னகையோடு காட்டியவர்.

இசையின் மூன்றாவது தொகுப்பான ‘சிவாஜிகணேசனின் முத்தங்கள்’ பெரும் கவனத்தைப் பெற்றது. இந்தத் தொகுப்பின் கவிதைகள் அதகளமானவை. 

பிழையாக எழுதப்பட்ட
ஒரு வரியை
அழித்துக் கொண்டிருக்கிறான் இச்சிறுவன்
அதை அருகிலிருந்து பார்த்தபடியிருந்தவன்
தம்பி, இதுபோல்
14.3.2001 ஐ அழிக்க முடியுமா
என்று கேட்டான்.
இது இங்க் ரப்பர்னா
எல்லாத்தையும் அழிக்கும்
என்றான் சிறுவன்.

தனது வாழ்வில் ஒரு நாளை அழித்துவிட எத்தனிப்பவனும் எல்லாவற்றையும் இங்க் ரப்பரால் அழித்துவிட முடியும் என நம்பும் சிறுவனும் சந்தித்துக் கொள்ளும் இந்தக் கவிதை எவ்வளவு பெரிய அபத்தத்தை சாதாரணமாகச் சொல்கிறது. இதையெல்லாம் எப்படி வெறும் வார்த்தை விளையாட்டு என்று சொல்ல முடியும்? இசையின் கவிதைகளின் பாடுபொருள்கள் வலி மிகுந்தவை. ஆனால் அதை வெளிப்படுத்தும் தொனியானது அட்டகாசமானது. ஒரு சாமானிய வாசகனை தனக்குள் இழுத்துப் போட்டுக் கொள்ளும் வசீகரக் கலைடாஸ்கோப்பை தனது கவிதைப் பயணத்தில் இசை திறமையாகக் கையாள்கிறார்.

மேற்சொன்ன கவிதைகள் உதாரணத்துக்காகச் சுட்டிக்காட்டப்பட்ட இசையின் சில கவிதைகள். இசையின் கவிதைகள் இயல்பானவை. நம்மோடு உரையாடும் தொனியைக் கொண்டவை. 

சக நண்பனொருவன் ஆழமான விஷயத்தை நமக்குப் பரிச்சயமான முறையில் சொல்லிவிட்டுச் சென்ற பிறகு அதைப் பற்றி யோசிக்கத் தொடங்குவோம் அல்லவா? அத்தகைய முறையை இசை தனது கவிதைகளில் கையாள்கிறார். இசை தனக்கென உருவாக்கிக் கொண்டிருக்கும் தனித்துவமான மொழியும் அதற்குள் அவர் நடத்தும் விளையாட்டுகளும் கவிதையின் வாசகனுக்கு புதிய அனுபவத்தை உருவாக்குகின்றன.

இசையின் கவிதைகள் குறித்து எனக்கு சிற்சில விமர்சனங்களும் இருக்கின்றனதான். எளிமையாக்குதல் என்ற பெயரில் கவிதையையும் அதன் மொழியையும் மிகவும் நீர்மைப்படுத்துகிறாரோ என்கிற ஐயம் இருக்கத்தான் செய்கிறது. இது விமர்சனமில்லை. ஐயம்தான். அதே போல ஒரே வகையிலான கவிதைகளைத் பல சமயங்களில் எழுதுகிறார் என்றும் கூடத் தோன்றியதுண்டு. ஆனால் காலம் என்னும் பெருவெள்ளத்தில் ‘கவிதை’ மட்டுமே நிற்கும். கவிதையல்லாத மற்றவையெல்லாம் கரைந்துவிடும். இசையின் கவிதைகளில் எவையெல்லாம் மிக அதிகமாக நீர்மைப்படுத்தப்பட்டிருக்கின்றனவோ, எவையெல்லாம் ஒரே வகையினதாக இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் அழித்துவிடும் வேலையை காலமும் கவிதையும் பார்த்துக் கொள்ளும். அதைப் பற்றி நாம் பெரிதாக புலம்ப வேண்டியதில்லை என நினைக்கிறேன். 

கவிதையில் தேக்கம் வந்துவிட்டதான பாவனை எழும்போதெல்லாம் இசை போன்ற கவிஞர்கள்தான் கவிதையின் மடையை மாற்றிவிடுகிறார்கள். அந்த அடிப்படையில் இசையின் இருப்பும் செயல்பாடும் தமிழ்க் கவிதைக்கு மிக அவசியமானது என அழுத்தமாக நம்புகிறேன்.  கவிதையின் போக்கில் சலனத்தை உண்டாக்குவதும் அது குறித்து உரையாடுவதுமான செயல்பாடுகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் இசை போன்றவர்கள் காலத்தின் தேவை. எப்பொழுதுமே ‘இதுதான் கவிதை’ என்று காலங்காலமாக கட்டமைக்கப்பட்ட ஒரு வடிவத்திலிருந்துதான் பெரும்பாலான கவிஞர்கள் நீட்சியடைவார்கள். அதிலிருந்து தமக்கேயுரிய தனித்துவமிக்க சில மாறுதல்களைச் செய்யும் கவிஞர்கள் தமக்கான இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வார்கள். மற்றவர்களின் இடம் காலியாகிவிடும். இந்தப் போக்கிலிருந்துதான் இசை மாறுபடுகிறார். காலங்காலமாக உருவாக்கப்பட்டு வைத்திருக்கும் கவிதையின் கட்டமைப்பை அடித்து நொறுக்கி உடைத்து சிதிலப்படுத்துகிறார் என்று தயங்காமல் சொல்ல முடியும். இப்படி உடைக்கப்பட்ட கவிதைதான் மீண்டும் புதுப்பொலிவுடன் மேலே வரும். அப்படித்தான் காலந்தோறும் தனக்கான மொழியையும் கட்டமைப்பையும் கவிதையானது புதுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தவிதத்தில் இசையை இன்றைய கவிதைக்கான தேவை என்று சொல்ல முடிகிறது. 

கவிஞர் இசைக்கு மெய்ப்பொருள் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இருபத்தைந்தாயிரம் பரிசுத் தொகையுடன் கூடிய விருது இது. தமிழில் கவிதை சார்ந்து இயங்குபவர்களுக்கனெ ஒரு விருது உருவாக்கப்பட்டிருப்பது முக்கியமான காரியம். இந்த விருது அறிவிப்பில் அரசியல் இருப்பதாக மற்றவர்கள் சொல்வதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. விருதுகள் அறிவிக்கப்படும் போது யாராவது எங்கேயாவது இருந்து சத்தம் போடுவது வாடிக்கைதான். ‘ஏன் மற்றவர்களை எல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லையா?’ என்பார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். இசையும், மெய்ப்பொருள் விருதுக் குழுவினரும் இதை கண்டுகொள்ள வேண்டியதில்லை.

‘மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா’ என்பதை விடவும் விருதைப் பெற்றுக் கொள்பவர் தகுதியானவர்தானா என்பதைத்தான் கவனிக்க வேண்டும். இசையைத் தொடர்ந்து கவனித்து வருகிற வகையில் இந்த விருதுக்கு அவர் முழுமையாகத் தகுதியானவர்தான் என்று நம்புகிறேன். 

இசைக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.


2 எதிர் சப்தங்கள்:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

உங்களுக்காக பேசுவதை விட மற்றாவருக்காக ( சக தோழர்கள்தான் )
பேசும்போது உரக்கவே பதிவு செய்கிறீர்கள் .இது ஆரோக்கியமானதுதான் ஆனால் யாரோ அந்த பேர்வழிகளுக்கா நாம் ஏன் இவ்வளவு மெனெக்கெட வேண்டும் ?

சேக்காளி said...