Sep 7, 2015

புத்தகமும் அச்சாக்கமும்

தங்களுடைய எழுத்துக்களை புத்தகமாகக் கொண்டு வர விரும்புவதாக ஆசையை வெளிப்படுத்தும் சிலரை அவ்வப்போது சந்திக்க நேர்கிறது. நம்மூரில்தான் அறிவுரை இலவசமாகக் கிடைக்குமே! நானும் ஒன்றைச் சொல்ல விரும்புவேன். அந்தப் பக்கமாகச் சென்று ‘இவன் பெரிய இவனாமா’ என்று பழித்துவிட்டுச் செல்வார்களோ என்று பயந்து ‘நல்ல விஷயம்...செய்யுங்க’ என்று ஒரு வரியோடு முடித்துக் கொள்வதுண்டு. புத்தகமாக்குவது என்பது நல்ல காரியம்தான். என்னதான் இணையத்தில் எழுதிக் கொண்டிருந்தாலும் நம் மீதான ஒரு குவிந்த கவனத்தை புத்தகம்தான் உருவாக்குகிறது.

புத்தகமாகக் கொண்டு வருவதற்கு முன்பாக நம்முடைய எழுத்துக்களையும் வாசிப்பதற்கு சில நூறு பேர்களாவது இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருப்பது அவசியம். இல்லையென்றால் நோட்டீஸ் அடிப்பது போல அடித்து வைத்து சொந்தக்காரர்களுக்கு இனாமாகத்தான் கொடுக்க வேண்டும். நம்முடைய எழுத்தை மற்றவர்களை வாசிக்கச் செய்வதற்கு பத்திரிக்கைகளில் எழுதலாம். இணையத்தில் கூட எழுதலாம்தான். ஆனால் இணையத்தில் நாமே ராஜா நாமே மந்திரி என்பதால் ஆக்கப்பூர்வமான விமர்சனம் எதுவும் உடனடியாகக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் பத்திரிக்கைகள் (அல்லது இணையப்பத்திரிக்கைகள்) அப்படியில்லை. நாம் எழுதி அனுப்பிய படைப்புகள் நிராகரிக்கப்படுமாயின் ‘ஏதோ குறைகிறது’ என்று எழுத்தை சீர்படுத்த முயற்சி செய்வோம். அடுத்தடுத்த முயற்சிகளில் நம்மையுமறியாமல் நம்முடைய எழுத்தில் மெருகேறிக் கொண்டிருக்கும். பத்திரிக்கைகள்தான் அத்தாரிட்டி என்று சொல்லவில்லை. ஆனால் அவர்களுக்கு அனுபவமிருக்கிறது. நிறைய எழுத்துக்களிலிருந்து தோதானவற்றைத் திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கும் பயிற்சியைப் பெற்றிருக்கிறார்கள். எனவே அவர்கள் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நம்முடைய படைப்புகள் இருக்குமாயின் முதல் படியைத் தாண்டிவிட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாவது விஷயம்- தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பது. இந்த மாதம் ஒரு கவிதை வெளிவந்து அடுத்த ஆறு மாதம் கழித்து வேறொரு இதழில் இன்னொரு கவிதை என ஆடிகொன்றும் அமாவாசைக்கு ஒன்றுமாக இருந்தால் அவ்வளவு உசிதமில்லை. மறந்துவிடுவார்கள். கண்மணி குணசேகரன் ஒரு கூட்டத்தில் பேசும் போது சொன்னார். கவிதை, கதை என எதுவாக இருந்தாலும் கை நிறையச் சேருமளவுக்கு எழுதி வைத்துக் கொள்வாராம். அதன் பிறகு பத்திரிக்கைகளுக்கு வரிசையாக அனுப்பத் தொடங்குவாராம். புதிதாக எழுத வருபவர்களுக்கு இது அற்புதமான ஐடியா. ஒரு கதையோ, கவிதையோ எழுதி முடித்தவுடன் அனுப்பி பிரசுரம் செய்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் மூன்று நான்கு மாதங்களுக்கு எதைப் பற்றியும் யோசிக்காமல் எழுதிக் குவித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஆறு மாதங்களுக்கு வெவ்வேறு பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக் கொண்டேயிருக்கலாம். எந்தப் பத்திரிக்கையை எடுத்தாலும் நம்முடைய பெயர் இருக்கிறது என்பது இளம் எழுத்தாளனுக்கு மிகச் சிறந்த கவனத்தை உருவாக்கிக் கொடுத்துவிடும். ‘யாரு புதுசா?’ என்று கேட்க வைத்துவிடலாம்.

இந்த இரண்டு விஷயங்களும் சாத்தியமாகிவிட்டால் பதிப்பகங்களை அணுகலாம். நம்முடைய பெயர் ஓரளவு வெளியே தெரியத் துவங்கியிருந்தால் பதிப்பகங்களை அணுகுவது எளிதான காரியம். ஆனால் அதைவிடவும் சிறந்த வழி self publishing. இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான தொகை இருந்தாலும் கூட புத்தகத்தை அச்சிட்டுவிடலாம். ஆனால் முதல் புத்தகத்தையே  சுயமாக வெளியிடுவதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. விற்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். நாம் சென்னையில் வசித்தால் சென்னையில் ஒன்றிரண்டு கடைகளில் வைக்கலாம். மதுரையிலும் ஈரோட்டிலும் புத்தகங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். என்னதான் ஆன்லைன் விற்பனை என்பதையெல்லாம் சாத்தியப்படுத்தினாலும் புத்தகக் கடைகளிலும் புத்தகக் கண்காட்சிகளிலும் கிடைக்கச் செய்வதைப் போன்று இருக்காது. மாற்று உபாயமாக ஒரு புத்தக விற்பனையாளரைப் பிடித்து அவரிடம் விற்பனை உரிமையைக் கொடுத்துவிடலாம்தான். ஆனால் விற்பனை தொகையில் நாற்பது சதவீதம் அவரைத்தான் சேரும். நூறு ரூபாயில் ஒரு புத்தகத்தை அச்சிட்டு அது ஆயிரம் பிரதிகள் விற்றால் நாற்பதாயிரம் ரூபாய் விற்பனையாளருக்கு. அதிகமான தொகைதான். ஆனால் வேறு வழியில்லை.

மற்றபடி புத்தகத்தை அச்சிடுவது பெரிய காரியமில்லை. கொஞ்சம் மெனக்கெட வேண்டும். அட்டை வடிவமைப்பிலிருந்து, பிழை திருத்தம் வரைக்கும் ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டும். அட்டைப் படத்தைத் தேர்ந்தெடுத்து அதை சரியான வடிவமைப்பாளருக்குக் கொடுத்து ஒரு பக்கம் அட்டை வடிவமைப்பைப் பார்த்துக் கொண்டால் இன்னொரு பக்கம் புத்தக வடிவமைப்பாளரிடம் சொல்லி தேவையான font உள்ளிட்டவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அந்த வேலையையும் முடிக்க வேண்டும். பதினைந்து நாட்களில் இதையெல்லாம் முடித்து அச்சகத்தில் கொடுத்துவிடலாம். எந்த மாதிரியான தாளில் அச்சிட வேண்டும் என்பதைப் பற்றி மேலோட்டமான புரிதல் இருந்தால் போதும் அல்லது ஒரு புத்தகத்தை சாம்பிளாக எடுத்துக் கொண்டு மேற்சொன்ன ஒவ்வொருவரிடமும் ‘எனக்கு இதே மாதிரி டிசைன் செஞ்சு கொடுங்க’ என்று கேட்டு வேலையைச் சுலபமாக்கிக் கொள்ளலாம். ஜீவகரிகாலன் மாதிரியான ஆட்கள் உதவிக்கு இருந்தால் பாதி வேலை குறைந்துவிடும். 

புத்தகத்தை அச்சிடுவது என்பது குழந்தை பெற்றுக் கொள்வது மாதிரி. சிரமம்தான் என்றாலும் போகிற போக்கில் நடந்துவிடும். ஆனால் அதைப் பரவலாக்குவதும் அடுத்தவர்கள் முகம் சுழிக்காதவாறு மார்கெட்டிங் செய்வதும் குழந்தையை வளர்ப்பது மாதிரி. அதில்தான் புத்தகத்தின் வெற்றி இருக்கிறது. பிற மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பிரதிகளை விற்கிறார்கள். தமிழில் அதெல்லாம் சாத்தியமில்லை என்றும் அறிமுக அல்லது இளம் எழுத்தாளர்களின் புத்தகங்கள் முந்நூறு பிரதிகள் விற்பதே பெரிய காரியம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நானும் அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது ஆயிரம் பிரதிகளை விற்றுவிட முடிகிறது. ஆனால் ஆயிரங்களைத் தாண்டுவதுதான் கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது. அதற்கு அடிப்படையான காரணம் விற்பனை நெட்வொர்க் இல்லாததுதான். அதுதான் சிறிய பதிப்பகங்களுக்கும் சுயமாக புத்தகத்தை வெளியிடும் எழுத்தாளர்களுக்கும் இருக்கக் கூடிய மிகப் பெரிய சவால்.

சிறிய பதிப்பகங்கள் அல்லது சுயமாக புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவதில் இருக்கக் கூடிய இத்தகைய சாதக பாதகங்களை விவாதிப்பதற்காக Publishing next நிகழ்வுக்கு அழைத்திருக்கிறார்கள்.


தேசிய அளவில் பதிப்பகங்கள் சந்திக்கக் கூடிய சவால்கள், அவற்றுக்கு முன்பாக இருக்கக் கூடிய வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை பற்றி விரிவாக புரிந்து கொள்வதற்கு ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் கருத்தரங்கு இது. இந்த ஆண்டு கோவாவில் நடைபெறும் இந்த நிகழ்வில் பெருந்தலைகள் பலரும் கலந்து கொள்கிறார்கள். 

என்னை எந்த நம்பிக்கையில் அழைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. காலச்சுவடு கண்ணன்தான் என் பெயரைப் பரிந்துரை செய்திருக்கிறார். அவருக்கு என் மீது ஏதோவொரு நம்பிக்கையிருக்கிறது. அவரும் நிகழ்வில் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொள்கிறார். காந்தி கண்ணதாசனும் கலந்து கொள்கிறார். தமிழிலிருந்து வேறு யாரும் கலந்து கொள்கிறார்களா என்று தெரியவில்லை. சனிக்கிழமை மாலையில் நடைபெறும் கலந்துரையாடலில் க்ராஸ்வேர்ட் புத்தகக் கடைகளின் முன்னாள் chief operating officer உட்பட பேசுகிறார்கள். அதில்தான் என்னையும் பேசச் சொல்லியிருக்கிறார்கள். வேட்டி சட்டை அணிந்து சென்றால் வேறு மாதிரி பார்ப்பார்களோ என்று யோசனையாக இருந்தது. எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளட்டும். நல்ல கதர் சட்டையும் வேட்டியுமாக எடுத்து வைத்திருக்கிறேன். 

நிகழ்வில் கலந்துவிட்டு வந்து கருத்தரங்கு வழியாகக் கிடைத்த அனுபவங்களையும், புரிதல்களையும் நான் என்ன பேசினேன் என்பதையும் விலாவாரியாகச் சொல்கிறேன்.

2 எதிர் சப்தங்கள்:

Uma said...

வாழ்த்துக்கள் மணி.

சேக்காளி said...

//எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளட்டும். நல்ல கதர் சட்டையும் வேட்டியுமாக எடுத்து வைத்திருக்கிறேன்.//
அதான பா(ர்)த்தேன்.அமெரிக்க குடியரசு தலைவரு ஆகணும் னா இப்பவே ஆரம்பிச்சா தான சரியா வரும்.