Aug 14, 2015

உணவு

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் வீணடிக்கப்படும் உணவின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? நாற்பத்து நான்காயிரம் கோடி ரூபாய் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. நம் தட்டுகு வந்த பிறகு உண்ணாமல் கொட்டும் உணவாக இருக்கலாம் அல்லது ஐம்பது பேருக்கு செய்ய வேண்டிய இடத்தில் எழுபது பேருக்கு செய்து எடுத்துக் குப்பையில் கொட்டும் உணவாக இருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை உணவாக மாற்றி சாக்கடையில் கலக்கச் செய்கிறோம் என்பது மட்டும் உண்மை. அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் உலகம் முழுக்கவும் குறைந்தபட்சம் இருபதாயிரம் குழந்தைகள் பசியால் இறப்பதாக- ஒவ்வொரு நாளும் என்பதற்கு அழுத்தம் கொடுக்கவும்- ஐநாவின் உணவு அமைப்பு தெரிவிக்கிறது.

நம் ஊர்களின் திருமணங்களிலும் ரெஸ்டாரண்ட்களிலும் உணவு உண்ட பிறகு சர்வசாதாரணமாக தூக்கி வீசப்படும் இலைகளைப் பார்த்தால் ரத்தக் கண்ணீர் வந்துவிடும். இலை முழுக்கவும் உணவு இருக்கும். அப்படியே சுருட்டி வீசுவார்கள். வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் உணவு வீணடிக்கப்படுகிறது. துளி உணவுதானே என்று நாம் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. ‘கொஞ்சம் வேஸ்ட் ஆகிடுச்சு’ என்பதோடு முடித்துக் கொள்கிறோம். ஆனால் ஒரேயொரு இட்லி கூடக் கிடைக்காதவர்கள் திரும்பிய பக்கமெல்லாம் இருக்கிறார்கள்.

இப்பொழுது அத்தனை நிகழ்ச்சிகளிலும் ஃபபே வந்துவிட்டது. திருமணம், பிறந்தநாள், காதுகுத்து, பூப்பு நன்னீராட்டு விழா என்று எதுவாக இருந்தாலும் ஃபபேவுக்கு ஏற்பாடு செய்துவிடுகிறார்கள். உண்கிறோமோ இல்லையோ- இலை நிறைய வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையோடுதான் தட்டைக் கையிலேயே ஏந்துகிறார்கள். உணவு வகைகளின் எண்ணிக்கை நம் கெளரவத்தின் அடையாளமாகப் போய்விட்டது. ஒரு மனிதன் திருப்தியாகச் சாப்பிட நான்கைந்து வகைகள் போதுமானது. ஆனால் ஒரு விருந்தில் முப்பது வகை பதார்த்தங்களை இலையில் நிரப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டுகிறார்கள். அதைச் சாதித்தும் காட்டுகிறார்கள். அனைத்தையும் நிரப்பி வைத்து கால்வாசியை வயிற்றுக்குள்ளும் முக்கால்வாசியை குப்பையிலும் கொட்டுகிறோம். ஐந்து வயதுக் குழந்தையின் தட்டத்தில் நான், பட்டர், தோசை, இட்லி என்று நிரப்புகிறார்கள். ‘எனக்கு வேண்டாம்’ என்று அந்தக் குழந்தை எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஐஸ்க்ரீமை நோக்கி ஓடுகிறது. 

உணவை இப்படிக் கொட்டி வீணடிக்கும் இந்த நாட்டில்தான் ஒரு வேளை சோற்றுக்காக வயிறைத் தடவிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. ஆயிரமாயிரம் குழந்தைகள் அடுத்தவர்களின் இலைகளை நோக்கியபடி காத்திருக்கிறார்கள். உணவை வீணாக்குவது போன்ற பாவச்செயல் எதுவுமில்லை. ஆனால் அதை சர்வசாதாரணமாகச் செய்து வருகிறோம் என்பதுதான் வேதனையான உண்மை.

பெரும்பாலான மனிதர்கள் எதில் எல்லாம் தவறு இழைக்கிறார்களோ அந்தத் தவறை தன்னால் முடிந்த அளவுக்கு நிவர்த்தி செய்ய சில மனிதர்கள் உதயமாகிறார்கள். பெரும்பான்மை மனிதர்களைத் திரும்பிப் பார்க்கச் செய்கிறார்கள். அவர்கள்தான் இந்த உலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள். பத்மநாபனும் அவரது நண்பர்களும் அப்படியான மனிதர்கள்.

பத்மநாபன் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படித்தவர். இறுதியாண்டில் சக நண்பர்கள் கேம்பஸ் இண்டர்வியூவுக்குத் தயாராகிக் கொண்டிருந்த போது பத்மநாபன் அரசுப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு தனிப்பயிற்சி நடத்திக் கொண்டிருந்தாராம். இந்த ஒரு நிகழ்ச்சி போதும். பத்மநாபனின் நோக்கம் என்ன என்பதைச் சொல்வதற்கு. எந்த நிறுவனத்திலும் வேலைக்குச் செல்வதில்லை. முழு நேரமும் இந்த வேலைதான்.


பத்மநாபன், தினேஷ், ஹரி பிரகாஷ் என்கிற மூன்று நண்பர்கள் இணைந்து SPICE என்ற தன்னார்வ அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். கோவை நகரில் வீணடிக்கப்படும் உணவுகளை- திருமண மண்டபங்கள், உணவுவிடுதிகள் உள்ளிட்ட இடங்களிலிருந்து சேகரித்து தரம் பிரித்து தேவைப்படும் ஆதரவற்றோர் விடுதிகளுக்கும் குடிசைப்பகுதி மக்களுக்கும் வழங்குகிறார்கள். பொறியியல் முடித்துவிட்டு- அதுவும் ஜி.சி.டி மாதிரியான நல்ல கல்லூரியில் முடித்துவிட்டு சமூக சேவை செய்யப் போகிறேன் என்று மண்டபங்கள் ஹோட்டல்கள் என அலைந்து திரிந்து உணவுப் பாத்திரத்தை பைக்கில் வைத்துத் தூக்கியபடி அலையும் மனிதர்கள் இவர்கள். ஒருவகையில் தெய்வங்கள்.

அடுத்தவர்களின் சாப்பாட்டுக்கு வழி செய்துவிட்டார்கள். தங்கள் பிழைப்பு ஓட வேண்டுமல்லா? அதற்கு ஒரு நிறுவனம் நடத்துகிறார்கள். ஒரு குட்டி நிறுவனம். இந்த மாதிரியான சமூக சேவைகளுக்குத் தேவையான மொபைல் ஆப்களை அவர்களே தயாரிக்கிறார்கள் போலிருக்கிறது. ‘உங்களையெல்லாம் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இதே வேலையை பெங்களூரில் ஆரம்பிக்கலாம்...சிறிய அளவில் தொடங்க உதவ முடியுமா?’ என்று கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்களின் அளவுக்கு அர்பணிப்போடு செய்ய முடிவதெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது. 

பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களிடையே உணவை மிச்சமாக்குவது குறித்துப் பேசுகிறார்கள். கோவையில் எங்கு எவ்வளவு உணவு வீணடிக்கப்படுகிறது என்று கணக்கெடுக்கிறார்கள். உணவு மிச்சமிருக்கிறது என்று தெரிந்தவுடன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்கள். இதுவரைக்கும் பைக்தான். மிகச் சமீபத்தில் ரோட்டரி சங்கம் ஒரு ஆம்னி வண்டியை வாங்கிக் கொடுத்திருக்கிறது. உணவைத் தரம் பிரித்து யாரோ இலவசமாகக் கொடுத்திருக்கும் இடத்தில் குளிர்பதனப் பெட்டியில் வைத்து கெட்டுப் போகாமல் பாதுகாத்து தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்கிறார்கள். 

எவ்வளவு அலைச்சல் இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாலே தலை சுற்றுகிறது. 


சற்று தாமதமாகச் சென்றாலும் கூட  ‘பாத்திரக்காரர்கள் அவசரப்படுத்தினார்கள்..அதனால் கொட்டிவிட்டு கழுவிக் கொடுத்துவிட்டோம்’ என்பார்களாம். அதற்காக தலை தெறிக்க ஓடுகிறார்கள். பத்மநாபனிடம் விரிவாகப் பேச வேண்டும் என்னும் விருப்பம் இருக்கிறது. அவரது நோக்கம், எதிர்கால லட்சியம், அதை எப்படி அடையப் போகிறார், இந்தச் செயல்பாடுகளை குடும்பத்தினர் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் விவாதிக்க வேண்டும். இவர்களைப் போன்ற லட்சிய மனிதர்கள்தான் எதிர்கால இந்தியாவின் தூண்கள். சத்தமில்லாமல் காரியம் சாதிக்கும் இவர்களைத்தான் இந்த தேசத்தின் சுதந்திர தினத்தில் கெளரவிக்க வேண்டும். அதைச் செய்வோம்!

10 எதிர் சப்தங்கள்:

”தளிர் சுரேஷ்” said...

பத்மநாபன் போன்றவர்களை நினைத்துபெருமிதம் அடைவோம்! முடிந்தவரை இனி உணவை வீணாக்குவதில்லை என்ற ஒரு சபதத்தையாவது எடுத்துக் கொள்கிறேன்! நன்றி!

Mahesh said...

ஒவ்வொரு வருடமும் இங்கு மேமாதம் ஒரு விழா கொண்டாடுவார்கள். கோழி அருத்து, பொங்கள் வைத்து அம்மனை கும்பிடுவது வழக்கம்.
பொங்கலை சாமிக்கு படைப்பதாகச் சொல்லி
இலையில் பொங்கலை வைத்து அப்படியே கோவிலுக்கு முன்பு விட்டுச் செல்வார்கள்.

பல்லாயிர கணக்கானவ்அர்கள் கோவிலுக்கு செல்வதால் படைக்க பட்ட பொங்கலை மிதிப்பதும், தாங்கள் கொண்டுவந்த பொங்கலை படைப்பதுமாக இருக்கும்
நான் சின்னவனாக இருந்தப்போ அதை மெதிச்சு எனக்கு ஒரு மாதிரி இருந்திச்சு.

அப்போ யோசிச்சது இப்படி வைப்பதர்க்கு பதிலாக பொங்கலை பெசாம சாமிக்காக ஒரு ட்ரம்மில் போட்டா உணவு இல்லாதவர்களுக்காவது உதவியாக இருக்கும் அல்லவா என்று.
அதை அமல் படுத்தனும் என்று அந்த வயதில் எனக்கு ஆசை.
எதுவும் செய்ய முடியாமல் போச்சு.

இப்போ பத்மநாபன் குழு பற்றிய இந்த பதிவை வாசித்ததும் மகிழ்ச்சியாக இருக்கு.
இது போன்ற நபர்கள் ஊருக்கு ஒருத்தராவது உருவாக வேண்டும்.

ஆனந்த் விருத்தகிரி said...

மிக அருமை !!
இவர்களை போன்ற இளைஞர்கள் பிரமிக்கவைக்கிறார்கள்.

Siva said...

Long live padmanaaban

சேக்காளி said...

https://www.youtube.com/watch?v=j3FZs2sebCo

Sundar Kannan said...

Hats off to Padmanaban & Co.

We are here (&hearing) to help you.

Sundar K

Unknown said...

Hi....hats off to SPICE....though I am 66 years old ,I salute them.May Almighty bless them with everything.......

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டமையறிந்து மகிழ்ச்சி. தங்கள் பதிவினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.

Uma said...

Hats off to Padmanabhan,Dhinesh and Hari. Claps for you SPICE

நானும் இனி ஒரு பருக்கை அளவு உணவைக் கூட வீணாக்கக் கூடாது என உறுதி எடுத்திருக்கிறேன். அம்மா அடிக்கடி சொல்றாங்க,நான் நிறைய வேஸ்ட் பண்ணுவதாக. உண்மைதான். இனி கவனமாக இருக்க வேண்டும்.

Unknown said...

அனைவருக்கும் அன்பு வேண்டுகோள்.
நாம் மற்றவர்களை பார்த்து அதைச் செய்யவில்லை இதைச் செய்யவில்லை எனறு சொல்கிறோம்.
நம்மால் முடிந்த செயலை ,நாமே ஏன் முதலில் செய்யக்கூடாது ?..
******உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள்.***********
எத்தனையோ பேர் வறுமை,வயோதிகம்,இயலாமை போன்ற பல காரணங்களினால், ஒரு சிறு உணவு கூட கிடைக்காமல் தவிக்கும் இந்த உலகில்,கிடைத்த உணவுப்பொருள்களை வீணாக்குவது என்பது எவ்வளவு பெரிய பாவம் ...நினைத்துப்பார்க்கவே பயங்கரம்...
நணபர்களுடனோ அல்லது குழுவாகவோ உணவருந்தும் போது கவனித்துப் பாருங்கள்.
எவ்வளவு உணவுப் பொருட்கள் வீணாகிறது என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்..
முன்னரே பந்தியில் பரிமாறப்பட்ட உணவுப் பொருட்களில், சில உணவுகள் ஒரு சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம், அதனால் வீணாகிறது..
இது தவிர்க்க முடியாததது.(இதையும் தவிர்க்க முடியும்)
ஆனால் தாங்களே விரும்பும் உணவுகளை எடுத்துச் சாப்பிடும் பபே முறையிலும்,
ஏன் உணவுப் பொருட்களை வீணாக்க வேண்டும் ?.
நீங்கள் உங்கள் தட்டில் ஒரு பருக்கை உணவைக் கூட விடாமல் சாப்பிடுங்கள்..
நினைததுப் பாருங்கள்..அந்த ஒரு அரிசி மணி / ஒரு துளி உணவுப்பொருள் உங்கள் சாப்பாட்டுத் தட்டிற்கு வந்து சேர எத்தனை பேருடைய உழைப்பு நேரடியாக / மறைமுகமாக தேவைப்படுகிறது ?.
ஏன் உங்களுடைய உழைப்பும் அதில் இருக்குமே ?
எனவே, ஒரே ஒரு அரிசி மணியைக்கூட ,ஒரு துளி உணவைக்கூட ….’’…..உங்கள் உணவுத்தட்டில் வீணாக்காதீர்கள்…”…..
இதை நீங்கள் செய்ய முடியாதா ? .. முடியும்...............................
ஒரு விவசாயி இயற்கையோடு இணைந்து / போராடி, விளைவித்து மற்றும் பலருடைய உழைப்பின் மூலம் நம் தட்டிற்கு வரும் உணவுப்பொருளை, சுவைத்து சாப்பிடும் கடமை மட்டுமே நமக்கு உள்ளது..*****அதை வீணாக்கும் உரிமை யாருக்கும் கிடையாது*****.....
இன்றே இப்போதே உறுதியெடுங்கள் "உணவுப்பொருளை வீணாக்க மாட்டோம்" என்று.
உணவுப் பொருட்களை வீணாக்கக் கூடாது என்பதை உங்கள் குழந்தைகள்,உறவினர்,நண்பர்கள் மற்றும் அனைவரிடமும் தயங்காமல் சொல்லுங்கள்.... இது நம்மால் செய்யக்கூடிய ஒரு எளிய செயல்தானே......
நல்வாழ்த்துக்கள்!.
I am doing..
You can do….
We can do…..
India can do……