Jul 7, 2015

நம்பிக்கை.அம்மாவும் அப்பாவும் அரசு ஊழியர்கள். அப்பா மின்வாரியத்தில் இருந்தார். மின்வாரியத்தில் கிம்பள நிலவரம் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அப்பா இருந்த வேலையும் அப்படியானது. Draughtsman. ஒப்பந்ததாரர்களுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத வேலை அது. ஆனால் அம்மா இருந்த வருவாய்த் துறை பற்றித் தெரியும். பெயருக்கேற்றபடி காசு கொழிக்கும் துறை. யாரிடமும் வலுக்கட்டாயமாகக் கூட கேட்க வேண்டியதில்லை. தானாகவே வரும்.

அம்மாவிடம் ‘உங்க டிபார்ட்மெண்ட்ல ஏன் இவ்வளவு பணம் வாங்குறாங்க?’ என்று கேட்டால் ‘பட்டா மாறுதல் செஞ்சு தரணும்ன்னா மணியகாரரில் ஆரம்பித்து ஆர்.ஐ, துணை தாசில்தார், தாசில்தார் வரைக்கும் அத்தனை பேரும் அவங்கவங்க பங்கு வந்தாத்தான் கையெழுத்து போடுவாங்க’ என்பார். ‘அவங்களோட நிக்குதா? தாலுக்கா ஆபிஸ் ப்யூன், க்ளார்க்கிலிருந்து தண்டல்காரர் வரைக்கும் கொடுத்தாத்தான் வெளியே வர முடியும்’ என்பது அம்மாவின் வாதம்.

கிட்டத்தட்ட வருவாய்த் துறையே அப்படித்தான். மணல் வண்டியை பிடித்தால் காசு, ஆற்றிலிருந்து வறண்ட பூமிக்கு நீர்க் குழாய் அமைத்தால் காசு என்று சகட்டு மேனிக்கு காசு வாங்குவார்கள். ஒரு சமயம் இலவச வேஷ்டி சேலையைத் திருடி நான்கைந்து கிராம நிர்வாக அலுவலர்கள் சிக்கிக் கொண்டார்கள். அந்தத் துணியைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு முறை தண்ணீருக்குள் முக்கி எடுத்தால் சாயம் வெளுத்து நாறிப் போய்விடும். அதைச் சுருட்டிச் சிக்கிக் கொண்டார்கள். சிறைச்சாலைக்குள் இருந்தவர்களைப் பார்த்து வர கிராம நிர்வாக அலுவலர்கள் எல்லோரும் சென்ற போதும் நானும் தொற்றிக் கொண்டேன். சிறைக்குள் இருந்தவர்கள் அழுது தீர்த்துவிட்டார்கள். ‘ஆர்.ஐ தான் நாலு சேலை எடுத்து வைக்கச் சொன்னாரு’ ‘D.T தான் ஐஞ்சு வேஷ்டி வேணும்ன்னு கேட்டாரு’ ஆளாளுக்கு பழியை மற்றவர்கள் மீது போட்டார்கள். என்ன அழுது என்ன பலன்? பணி இடை நீக்கம், வழக்கு, வாய்தா என்று நாறிக் கிடந்தார்கள்.

வருவாய்த் துறையைப் பொறுத்தவரைக்கும் காசு கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று பொதுமக்களுக்கும் தெரியும். 

சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும்- ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் இருநூறைப் பிடித்துக் கொண்டான், முந்நூறைப் பிடித்துக் கொண்டான் என்று பட்டுவாடா செய்யும் க்ளார்க்கை அம்மா திட்டிக் கொண்டிருப்பார். அப்பொழுது வங்கி வழியாகச் சம்பளம் வழங்கப்படவில்லை அல்லவா? அதனால் அந்த க்ளார்க்குக்கு கப்பம் கட்டினால்தான் சம்பளம் வந்து சேரும். இடம் மாறுதலுக்காக ஆர்.டி.ஓவுக்கு காசு, துப்பாக்கி உரிமத்துக்காக மாவட்ட ஆட்சியருக்குக் காசு என்று தண்டல்காரரிலிருந்து மாவட்ட ஆட்சியர் வரைக்கும் வழித்துக் கட்டும் அரசாங்கத் துறைகளில் ஒன்று வருவாய்த் துறை.

இப்பொழுது வருவாய்த் துறை என்றில்லை- அதை உதாரணத்திற்காகச் சொல்கிறேன் - மற்றபடி கிட்டத்தட்ட அத்தனை அரசுத் துறைகளும் அப்படித்தான் இருக்கின்றன. எந்தத் துறையின் கடைநிலை ஊழியர் பணி என்றாலும் கூட அமைச்சர் வரைக்கும் பணம் அழ வேண்டியிருக்கிறது. ஏழு லட்ச ரூபாய் எல்லாம் சர்வ சாதாரணம். இப்படி பணம் கொடுத்து வேலைக்கு வந்தவனிடம் ‘நீ காசு வாங்கக் கூடாது’ என்று சொன்னால்- கொடுத்த பணத்துக்கு வட்டியாவது வாங்கிக் கொள்கிறேன் என்பார்கள். யாரையும் எங்கேயும் தடுக்க முடியாது. இந்தியன் படத்தில் ஒரு வசனம் வருமல்லவா? எல்லாப் பக்கமும் லஞ்சம் இருக்கிறது. மற்ற நாடுகளில் கடமையை மீறுவதற்குத்தான் லஞ்சம். இங்கு மட்டும்தான் கடமையைச் செய்வதற்கே லஞ்சம்.

இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்ன ஆகும்? 

காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது குப்பை என்று பார்க்குமா? பூ என்று பார்க்குமா? எல்லாமே ஒன்றுதான் - அடித்து நொறுக்கி இழுத்துச் சென்று கொண்டேயிருக்கிறது. எனக்கு அடுத்தவர்களின் பணம் வேண்டாம் என்று சொல்லுகிற மனிதர்களையும் சுழற்றி இழுத்துக் கொண்டுதான் ஓடுகிறது. யாராவது விதிவிலக்குகள் இருக்கலாம். அவ்வப்போது மின்னி மறையலாம். அதோடு சரி. பெரும்பாலானவர்கள் முக்குளிக்கிறார்கள். 

புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வரும் போது கையெழுத்து போடுமிடத்தில் அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் பங்குகள் முடிவு செய்யப்படுகின்றன. அதன் பிறகு எல்லாவற்றிலுமே பணம்தான். எல்லோருக்குமே லஞ்சம்தான். உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் யாராவது இருந்தால் விசாரித்துப் பார்க்கலாம்- ஒரு வேலை நடக்க வேண்டுமானால்- அது சாலை அமைப்பதாக இருந்தாலும் சரி; சாக்கடை அமைப்பதாக இருந்தாலும் சரி- அந்தத் துறை சார்ந்த அமைச்சருக்கு இத்தனை சதவீதம், உள்ளூர் அமைச்சருக்கு இத்தனை சதவீதம், அதிகாரிகளுக்கு இத்தனை சதவீதம் என பக்காவாக பிரித்துக் கொடுக்கிறார்கள். ‘இத்தனையும் கொடுத்தது போக கவுன்சிலருக்கும் பிரெசிடெண்ட்டுக்கும் என்ன மிச்சம் ஆகும்?’ என்கிற அவர்களின் கவலை அவர்களுக்கு.

ஒவ்வொரு முறையும் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வரும் போது பிரமிப்பாக இருக்கும். இந்தியாவிலேயே கடும் போட்டி நிறைந்த தேர்வுகளில் ஒன்று. வென்றவர்கள்தான் எதிர்கால இந்தியாவின் சிற்பிகள். ஆனால் எத்தனை பேர்கள் ஜொலிக்கிறார்கள் என்று கணிக்கவே முடிவதில்லை. அதே காட்டாற்று வெள்ளம்தான். சுருட்டி வாரிக் கொள்கிறது. செய்தித் தாள்களிலும் டிவிகளிலும் ஃப்ளாஷ் அடித்த முகங்கள் வெகு சீக்கிரமாகக் காணாமல் போய்விடுகின்றன. ஆனாலும் யாராவது தெரிந்தவர்கள் தேர்வாகியிருக்கிறார்களா என்று ஒவ்வொரு முறையும் கண்கள் தேடிக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த முறை உமேஷ். மதுரைக்காரர். அகில இந்திய அளவில் 77வது ரேங்க். எதிர்காலத்தில் மிகப்பெரிய அதிகாரியாகிவிடுவார். ‘மிகச் சிறந்த ஆளுமைப்பண்புடன் கூடிய நேர்மையான அதிகாரியாக உருவெடுக்க வேண்டுமென மனப்பூர்வமாக விரும்புகிறேன்’ என வாழ்த்துச் செய்தி அனுப்பினேன். 'Will definitely serve as a true public servant rather than as a officer'. சந்தோஷமாக இருந்தது. 

அவரை வாழ்த்தி ஒரு சிறு குறிப்பை எழுத வேண்டும் என்று தோன்றியது. சாமானிய மனிதனின் அத்தனை விதமான நம்பிக்கைகளும் அதிகார வர்க்கத்தினால் அடித்து உடைக்கப்படும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படி நேரடியாகத் தொடர்பு கொள்ளக் கூடிய மனிதர்கள் யாராவது வெற்றி பெறும் போது ‘இப்படித்தான் எல்லாமும் இருக்கின்றன. உங்களால் விதிவிலக்காக இருக்க முடியும் என நம்பிக்கையிருக்கிறது’ என்ற செய்தியைச் சொல்லும்படியாக வாழ்த்தத் தோன்றுகிறது. அந்தவொரு நம்பிக்கையைத்தான் உமேஷ் மீது வைக்கிறேன். அதிகாரமும் பணமும் ஆட்சி செலுத்தும் இந்த தேசத்தில் அதிகாரி நினைத்தால் ஆங்காங்கே மாற்றங்களை உருவாக்க முடியும். வளையாத முதுகெலும்பும் விரிவடையாத சட்டைப் பாக்கெட்டும் கொண்ட அதிகாரிகளுக்காக இந்த தேசம் எல்லாக் காலத்திலும் காத்துக் கொண்டேதானிருக்கிறது. இப்பொழுதும் அதே சூழல்தான். உமேஷ் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்கிற ஆசையிலும் நம்பிக்கையிலுமான வாழ்த்து இது.

6 எதிர் சப்தங்கள்:

Fairy Lass M said...

வாழ்த்துக்கள் உமேஷ் (இஆப)

‘இப்படித்தான் எல்லாமும் இருக்கின்றன. உங்களால் விதிவிலக்காக இருக்க முடியும் என நம்பிக்கையிருக்கிறது’

Pandiaraj Jebarathinam said...

இலவச சேலைகள் சாயம் வெளுத்துப்போவதில்லை, ஆனால் அதன் தோற்றம் அப்படி. என் அம்மாவின் அந்த இலவச சேலை தரும் குளுமையை வேறெந்த காசு கொடுத்து வாங்கிய சேலையும் தருவதில்லை. அந்த தரத்திற்காகத்தான் வாரி சுரிட்டியிருக்கிறார்கள். அதையெல்லாம் சுருட்டி மாட்டிக் கொண்டனர் என்ற பாங்கில் நீங்கள் கூறுவதை ஏற்க முடியவில்லை. அந்த இலவச பொருளால் பயன்பெறுவோர் பல லட்சம் மக்கள். மக்களுக்கு சேரவேண்டிய எந்த பொருளை எவன் சுரிட்டினாலும் தண்டிக்கப்பட வேண்டும், உயர்ந்தது தாழ்ந்தது என்ற பிரிவினைவாதம் வேண்டாமே.

வாழ்த்துகள் உமேஷ்.
மக்கள் உங்களை வாழ்த்துமளவு பணி செய்யுங்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முன்பை விட சற்று குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது.இதற்கு காரணம் பல சேவைகள் ஆன்லைன் மூலம் பெற முடிகிறது.அனால் அவை முழுமையாக்கப் படவில்லை
இதை வைத்து ஒரு சாரார் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரசுப் பணியாளர்களை நேர்மையாக இயங்க விடமாட்டார்கள்.நமது அவசரமும் அறியாமையும் விதிமீறிய தேவைகளும் லஞ்சம் பெருக காரணமாக அமைகிறது. ஒரு சில துறைகளில் தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். புதிதாக வரும் அலுவலர் அதை கண்டு பிடித்து மேலிட கவனத்துக்கு கொண்டு வருவார். ஆனால் அத்தவறுக்கு அவரே பதில் சொல்ல வேண்டிய நிலை வந்து விடும்.

சேக்காளி said...

ilavalhariharan said...

உமேஷ் பற்றியகுறிப்புக்கு நன்றி. எங்கள் ஊர் , இன,மொழிக்காரர். நீங்கள் வாழ்த்தியவாறே நானும் வாழ்த்தினேன். எத்தனை பேர் தாம் எடுத்துக் கொண்ட உறுதியோடு கடைசிவரை வாழ்கிறார்கள் திரு சகாயம் போல. ல்லை இந்த சமூக அமைப்பு யாரை அவ்வாறு வாழ விட்டிருக்கிறது. உமேஷ் அவ்வாறு வாழட்டும் உறுதியுடன்.
வருவாய்த்துறை குறித்து எழுதியது அத்தனை துறைக்கும் பொருந்தும். துணிச்சலோடு எழுதியுள்ளீர்கள். சபாஷ். சாதாரண இடமாறுதலுக்கும்,இருக்கும் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும் இலட்சக் கணக்கில் அழ வேண்டியிருக்கும் போது இலட்சியங்களை எங்கே வைப்பது. உண்மை எழுதியுள்ளீர்கள்.
பின்னூட்டத்தில் முரளிதரன் 'முன்பை விடச் சற்று குறைவாக இருப்பதாய்' எழுதியிருக்கிறார். அது தவறு. முன்பை விட அதிகம் தான். எப்படியெல்லாம் வசூலிக்கலாம் என்பதே கவலை. இதில் மாட்டுவது அப்பாவிகள் தான். காலம் தான் கரையேறறும்.

Sita said...

All the best to him! He is my close friend's cousin! We all in our college group were very happy when we heard the news as if one of us in the group cleared the exam!