Jul 15, 2015

புதைகுழிகள்

சில நாட்களுக்கு முன்பாக ஊரிலிருந்து ப்ளஸ் டூ மாணவன் அழைத்திருந்தான். அவனுடைய அப்பா கோவிலில் பறை அடிப்பவர். வசதி இல்லை என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. படிப்பு சம்பந்தமான விவரமும் இல்லை. அடுத்து என்ன படிக்கலாம் என்பதைப் பற்றி பேசுவதற்காகத்தான் அழைத்திருந்தான். பெங்களூரில் ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா இருப்பதாக அவனிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவனும் நம்பிவிட்டான்.

‘ப்ளஸ் டூ முடிச்சுட்டு பயோ டெக்னாலஜி படிக்கலாம்ன்னு இருக்கேன்’ என்றான். 

‘நல்ல படிப்புதான்.. ஆனா படிச்சு முடிச்சுட்டு என்ன செய்யப் போறோம்ன்னு கொஞ்சம் ஐடியா இருக்கணும்’ என்று சொல்லிவிட்டு அவனிடம் சில கேள்விகளைக் கேட்ட போது பயோ டெக்னாலஜி பற்றி அவனுக்கு எந்த விவரமும் இல்லை. ஆழமான அறிவு வேண்டியதில்லைதான் ஆனால் அதைப் படித்துவிட்டு என்ன விதமான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்கிற அளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும். ம்ஹூம். 

‘பயோ டெக்னாலஜின்னு எதுக்கு முடிவு செஞ்ச?’ என்று கேட்டதற்கு யாரோ சிலர் சொன்னதாகவும் வித்தியாசமான பெயராக இருக்கிறது என்று முடிவு செய்து கொண்டதாகவும் சொன்னான்.

இது சரிப்பட்டு வராது. என்னவென்றே தெரியாமல் குருட்டுவாக்கில் விழுவதற்கு ஏற்ற படிப்பு இல்லை பயோ டெக்னாலஜி. 

‘ரிசல்ட் வர வரைக்கும் பொறுமையா இரு...வந்த பிறகு முடிவு செஞ்சுக்கலாம்’ என்று சொல்லி வைத்திருந்தேன். ப்ளஸ் டூ முடிவுகள் வந்த போது அவனது பள்ளியில் அவன் தான் முதலிடம். ஆயிரத்து நூறைத் தொட்டிருந்தான். அரசு மேல்நிலைப்பள்ளி. பொறியியல் கல்விக்கான கட் ஆஃப் 190ஐத் தாண்டியிருந்தது. யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. எப்படியும் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்பதால் பொறியியல் கல்வி பற்றிய விவரங்களைத் தேடச் சொல்லியிருந்தேன். அதையெல்லாம் அவன் எதுவும் செய்யாமல் சாதாரணமாகவே இருந்திருக்கிறான்.

கவுன்சிலிங் தொடங்கியிருந்தது. அவனிடமிருந்து சத்தம் எதுவுமில்லை. நான்கைந்து நாட்கள் கழித்து அழைத்து ‘என்ன முடிவு செஞ்சிருக்க?’ என்று கேட்ட போதுதான் அதிர்ச்சியைக் கொடுத்தான். பக்கத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியிலிருந்து பையனை அணுகியிருக்கிறார்கள். அதுவொரு பொக்கனாத்தி கல்லூரி. ‘எங்க காலேஜ்ல சேர்ந்துக்க...நீ 190க்கு மேல மார்க் வெச்சிருக்கிறதால ஒரு பைசா கூட கட்டத் தேவையில்லை..காலேஜ் பஸ் வருது..அதுவும் கூட ஃப்ரீதான்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இவர்களும் தலையை ஆட்டிவிட்டார்கள். ‘ஸ்காலர்ஷிப் கூட வாங்கித் தர்றோம்’ என்று சர்க்கரையைத் தடவி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

‘நாளைக்கு அட்மிஷன் போட்டுக்க வரச் சொல்லியிருக்காங்க’ என்றான். 

பையன் அருந்ததியர் பிரிவைச் சார்ந்தவன். பொறியியல் தகுதிப்பட்டியலில் ரேங்க் நூறுக்குள் இருந்தது. கலந்தாய்வுக்குச் சென்றால் நிச்சயமாக நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆனால் இப்படி முடிவெடுத்து வைத்திருக்கிறான். இவன் ஒரு உதாரணம். இப்படித்தான் வலை விரிக்கிறார்கள். நல்ல மாணவர்களையெல்லாம் தங்கள் கல்லூரியில் சேர்த்துக் கொள்வதற்கு அலைகிறார்கள். அது தவறில்லை. ஆனால் அந்த மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க என்னவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்றால் எதுவும் இல்லை. இத்தகைய மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இலவசமாக படிப்பைத் தருகிறோம் என்று சொல்லி இழுத்துச் சென்று நான்கு வருடங்களுக்குப் பிறகு எச்சிலைப் போல வெளியில் துப்புவார்கள். அலைந்து திரிய வேண்டியதுதான்.

நல்ல வேளையாக ஃபோன் செய்திருந்தேன். ‘வெளியில் யார்கிட்டவாச்சும் ஐடியா கேட்டியா?’ என்றேன். 

‘இல்லைங்க’ என்றான்.

அடுத்தவர்களிடம் கேட்பதற்கு அவனுக்குத் தயக்கம். வியாழக்கிழமையன்று அவனிடம் இதைப் பேசிக் கொண்டிருக்கிறேன். சனிக்கிழமையன்று கலந்தாய்வு. நடுவில் ஒரு நாள்தான் இருக்கிறது.

‘நீ அவங்க காலேஜ்லேயே சேர்ந்துக்க..வேண்டாம்ன்னு சொல்லல...ஆனா எதுக்கும் கவுன்சிலிங் போய்ட்டு வந்துடு’ என்றதற்கு ‘நாளைக்கு காலேஜ்ல அட்மிஷனுக்கு வரச் சொல்லியிருக்காங்க....சர்டிபிகேட்ஸ் எல்லாம் கொடுக்கணும்’ என்றான். இதுதான் கல்லூரியின் சில்லரைத்தனம். விட்டால் கவுன்சிலிங்குக்குச் சென்றுவிடுவான் என்பதற்காக முந்தின நாளே அனைத்து சான்றிதழையும் பறித்துக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார்கள்.

‘ஏதாச்சும் காரணம் சொல்லிக்கலாம்..நீ கவுன்சிலிங்குக்கு போற வழியைப் பாரு..’ என்று சொன்னதற்கு ஒத்துக் கொண்டான். தனது தந்தை எப்படி செலவுகளைச் சமாளிப்பார் என்பதுதான் அவனுடைய கவலை. அதனால்தான் யோசித்திருக்கிறான்.

எப்படியும் அவனுக்கு ஏதாவதொரு அரசுக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிருந்தது. அப்படித்தான் நடந்தது. வெள்ளிக்கிழமை இரவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் காலி இடங்களைப் பார்த்த போது கோவை பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் இடம் இருந்தது. சனிக்கிழமை வரைக்கும் இவனுக்காக காத்திருந்த அந்த இடத்தை எடுத்துக் கொண்டான். 

கலந்தாய்வை முடித்துவிட்டு ஓரிரு நாட்களில் ‘காலேஜூக்கு பணம் வேண்டும்’ என்று கேட்பான் என நினைத்திருந்தேன். நேற்று வரை அழைக்கவேயில்லை. வேறு சிலரிடம் எதேச்சையாக விசாரித்த போது ‘பணத்துக்குத்தான் அலைஞ்சுட்டு இருக்கான்...ஃபேங்க் லோன் கிடைக்குமான்னு பார்த்துட்டு இருக்கான்’ என்றார்கள். ஃபோனில் அழைத்த போது பாதிப்பணத்தை வெளியில் கடனாக வாங்கியிருப்பதாகவும் மீதிப் பணத்தை பிறகு கட்டுவதாக கல்லூரியில் அனுமதி கேட்கவிருப்பதாகவும் சொன்னான். அவர்கள் சமாளிக்கும் திறன் இருக்கும் வரைக்கும் சமாளிக்கட்டும். அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. இறுதியில் அவர்களால் புரட்ட முடியாத பணத்தை அறக்கட்டளையிலிருந்து கொடுத்துவிடலாம். அந்தக் குடும்பத்தைப் பொறுத்த வரைக்கும் அடுத்த நான்கு வருடங்களுக்கு கஷ்டம்தான். ஆனால் இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக சாக்கடையில் விழ முடியுமா? நான்கு வருடங்களைச் சமாளித்துவிட்டால் அவனது குடிசையில் நிரந்தர விளக்கு எரியத் தொடங்கிவிடும்.

இதை எதற்காகச் சொல்ல வேண்டியிருந்தது என்றால் கிராமப்புற மாணவர்களின் அறியாமையும் அதை தனியார் கல்லூரிகள் பயன்படுத்திக் கொள்வதையும் பார்க்கும் போது எரிச்சலாக இருக்கிறது. பெரும்பாலான மாணவர்களிடம்- இவனைப் போன்ற நன்றாகப் படிக்கும் மாணவர்களிடமும் கூட போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. குழிக்குள் விழுந்து இருளுக்குள் எதையோ தேடும் ஆயிரக்கணக்கான மாணவர்களால் தமிழ்நாடு நிரம்பிக் கொண்டேயிருக்கிறது.

8 எதிர் சப்தங்கள்:

Unknown said...

In Gobi area, this is a common practice is all private schools. All the rural government high school top scorers are approached (poached?) for +1 and +2 in these private schools. This is news that even private engineering colleges are doing that.

Mahesh said...

சார், எப்படியொ ஒரு மானவணை காப்பாற்றி விட்டீங்க.
பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் அரசு இடம் கிடைத்தது சந்தோஷம்.
அதே கல்லூரியில் திருப்பதியில் இருந்து சிலர் மாணவர்கள் படிக்கிராங்க. அவர்கள் டொணேஷன் கட்டி சீட்டை வாங்கி படிப்பதை கேட்டு வாய் அடைத்து போய்விட்டேன்.

Anonymous said...

HATS OFF.THIS IS A REAL SERVICE TO A DESERVING STUDENT/HIS POOR FAMILY.. YOU HAVE SAVED AN ENTIRE AREA. THE MESSAGE WILL SPREAD AT LEAST TO A FEW PEOPLE.
THIS IS MORE MEANINGFUL THAN ALL THE MEDICAL HELP YOU ARE DOING THRU' "NISAPTHAM" TRUST.
GOD WILL BLESS YOU.
GOVT. SHOULD AT LEAST BAN ALL ADVERTISEMENTS BY PRIVATE EDUCATIONAL INSTITUTIONS.
THE SCHOLARSHIP/ FREE BUS ETC ARE ONLY ON PAPER. AT THAT TIME OF ISSUING HALL TICKETS FULL MONEY IS EXTRACTED. IT IS BLACK MAIL AT ITS WORST.
YOU HAVE REALLY SAVED AN ENTIRE FAMILY.
HAAAAATS OFF AGAIN.
NAGESWARAN.

சேக்காளி said...


”தளிர் சுரேஷ்” said...

ஒரு விட்டில் பூச்சியை காப்பாற்றி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

முனைவர் அ.கோவிந்தராஜூ said...

You have done a commendable job

Bala Vishwanath said...

Mani . I guess you might already have searched for it . Still check if this can help .
Apart from all the Tamil Nadu state / Central sector scholarships , there are few other self financed scholarships issued by PSG/GRD trust.
http://www.psgtech.edu/scholarship.php
http://www.psgtech.edu/Scholorship.pdf

They were not just names for publicity but When i passed out (2 years back) I personally found many of my college friends got benefited out of it.
There is a separate scholarship section in the accounts section which when contacted , we can get all the details we need. Let him know about these as well :)

Unknown said...

I'm in Coimbatore..If you wish,I am awaiting a Chance to offer my Service. I could arrange him the Books he requires thro out the Course..