Jul 31, 2015

எல்லி

கதை சொன்னால் நேர்கோட்டில் சொல்ல வேண்டும் அதுவும் ஒவ்வொரு காட்சிக்கும் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்றெல்லாம் சிலர் சொல்லியதைக் கேட்டதுண்டு. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. துண்டிக்கப்பட்ட காட்சிகளை கோர்த்துக் கோர்த்து ஒரு கதையை மிகச் சிறப்பாகச் சொல்லிவிட முடியும் என்பதை சில இயக்குநர்கள் நிரூபித்துவிடுகிறார்கள். அதற்கான உதாரணமாக எல்லி(Heli)ஐ சொல்லலாம். 

2013 ஆம் ஆண்டில் வெளியான மெக்ஸிகன் படம்.

எல்லி இளைஞன். மெக்ஸிகோ நாட்டில் ஓர் ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் பணி புரிகிறான். மனைவி குழந்தையோடு ஒரு ஓட்டை வீட்டில் குடியிருக்கிறான். இவர்களுடன் எல்லியின் தந்தையும் தங்கையும் தங்கியிருக்கிறார்கள். மேடு பள்ளமில்லாமல் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. எல்லியின் தங்கை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் இளம்பெண். கிட்டத்தட்ட பால்யம் மாறாத பருவம். அவளுக்கு பதினேழு வயதுப் பையனுடன் காதல் மலர்கிறது. அவன் ராணுவத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவன். அவ்வப்போது எல்லியின் தங்கை எஸ்டெல்லாவிடம் எல்லை மீற முயற்சிக்கிறான். ஆனால் அவள் பயத்தில் ஒத்துழைப்பதில்லை. ‘உன்னைப் பிடிக்கும்...ஆனால் கர்ப்பமாகிடுவனோன்னு பயமா இருக்கு’ என்கிறாள். அப்பொழுது அவளிடம் ஒரு குட்டி நாய் இருக்கிறது.

‘இப்போதைக்கு இந்த நாய்க்குட்டியே போதுமா?’ என்கிறான்.

காதல் இப்படி போய்க் கொண்டிருக்கும் ஒரு சமயத்தில் ‘என்னை கல்யாணம் செஞ்சுக்குவியா?’ என்று காதலன் கேட்க இவள் சம்மதித்துவிடுகிறாள். பணம் வேண்டுமல்லவா? அதற்காக ஒரு பழைய வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் போதைப் பொருளைத் திருடி எடுத்து வந்து எல்லியின் வீட்டு மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் பதுக்கி வைக்கிறான். அதை விற்று பணம் சேர்த்து எஸ்டெல்லாவை அழைத்துச் சென்று விடுவதாகச் சொல்கிறான். அது இரண்டு பெரிய பொட்டலங்கள். எல்லியின் மனைவி குளித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் பொட்டலங்கள் தொட்டியின் நீர்ப்பாதையை அடைத்துக் கொள்ள குழாயில் நீர் வருவதில்லை. எல்லி தொட்டியைத் துழாவும் போது கையில் பொட்டலங்கள் சிக்குகின்றன.

மெக்ஸிகோவில் அவ்வப்போது கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள், திருட்டுப் பொருட்கள் போன்றவற்றை ஓரிடத்தில் குவித்து இராணுவம் எரிக்கிறது. அப்படியொரு சமயத்தில் இரண்டு பொட்டங்லங்களை ராணுவ அதிகாரி ஒருவர் அபேஸ் செய்து அந்த பழைய வீட்டில் ஒளித்து வைத்திருக்கிறார். அதைத்தான் இவன் அமுக்கி எடுத்து வந்து தண்ணீர் தொட்டியில் போட்டு வைக்கிறான். மெக்ஸிகோவில் போதைப் பொருள் வைத்திருப்பதாகத் தெரிந்தால் கதையை முடித்துவிடுவார்கள் என்பதால் அவசர அவசரமாக எல்லி அவற்றை எடுத்துச் சென்று ஒரு கிணற்றில் கரைத்துவிடுகிறான். கடுப்பு தீராமல் வீட்டிற்கு திரும்ப வந்து எஸ்டெல்லாவை பூட்டி வைக்கிறான். இனி பிரச்சினை எதுவும் இருக்காது என நினைக்கிறான். ஆனால் மோப்பம் பிடித்து வந்து கதவை உடைக்கிறார்கள். கதவை உடைப்பவர்கள் ராணுவ உடையில்தான் இருக்கிறார்கள். எல்லியின் அப்பா தனது நாட்டுத் துப்பாக்கியை எடுக்க எத்தனிக்கும் போது அவரைச் சுட்டு பிணத்தை சாலையில் வீசி விட்டு எல்லியையும் எஸ்டெல்லாவையும் இழுத்துச் செல்கிறார்கள். 

எல்லி அவர்களிடம் தனக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லி விடுகிறான். வந்து பிடித்தவர்கள் ராணுவம் இல்லை. உடை மட்டும்தான் ராணுவ உடை. எஸ்டெல்லாவின் காதலன் குறித்த விவரம் தெரிந்த பிறகு அவனை மட்டும் விடுவார்களா? எல்லியையும் எஸ்டெல்லாவின் காதலனையும் ஒரு வீட்டில் கட்டிப் போட்டு ரணகளமாக்குகிறார்கள். ரணகளம் என்றால் ஆடைகளை நீக்கிவிட்டு கைகளை மேல் நோக்கிக் கட்டி வைத்து ஆணுறுப்பின் மீது சாராயத்தை ஊற்றி நெருப்பை பற்ற வைப்பது வரை. இப்படியான சித்ரவதைகளுக்குப் பிறகு எல்லியைத் தப்பிக்கவிடுகிறார்கள். ஆனால் எஸ்டெல்லாவின் காதலனைக் கொன்றுவிடுகிறார்கள். 

எல்லி திரும்ப வந்த பிறகு அவனுடைய மனம் சஞ்சலத்திலேயே இருக்கிறது. வேலையில் கவனம் செயலுத்த முடிவதில்லை. ஆரம்பத்தில் விசாரணை அதிகாரிகளிடம் முழுமையான தகவல்களைக் கொடுக்காமல் மறைக்கிறான். மனைவியுடன் சண்டை பிடிக்கிறான். முன்பிருந்ததைக் காட்டிலும் நிறைய மாறிவிடுகிறான். இவனது செயல்பாட்டில் திருப்தியில்லாமல் வேலையை விட்டும் நீக்கிவிடுகிறார்கள். குழப்பமான சூழலில் விசாரணை அதிகாரிகளிடம் தங்களைக் கடத்திச் சென்றவர்கள் எங்கே ஒளித்து வைத்திருந்தார்கள் என்பதைச் சொல்லிவிடுவதாக அழைக்கிறான். ‘இத்தனை நாள் ஏம்ப்பா சொல்லல?’ என்று அவர்கள் கேட்கும் போது ‘சொன்னால் தங்கச்சியைக் கண்டுபிடிச்சு தந்துடுவீங்க என்கிற ஆசைதான்’ என்கிறான். ‘அந்தக் கேஸை மூடியாச்சு...இனி மறுபடி திறக்கணும்’ என்கிறார்கள். அதன் பிறகு திடீரென்று எஸ்டெல்லாவே திரும்ப வந்துவிடுகிறாள். ஆனால் யாரிடமும் பேசுவதில்லை. அவளுக்கு கருக்கலைப்பு நடந்திருக்கிறது. எல்லி மெல்லத் தன் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முயற்சிக்கிறான். ஆனால் எஸ்டெல்லா மட்டும் அந்த அதிர்ச்சியிலேயே இருக்கிறாள். 

சமீபத்தில் பார்த்த நல்ல படங்களில் ஒன்று Heli. 

முதல் பத்தியில் குறிப்பிட்டது போல படத்தில் பெரும்பாலானவை துண்டிக்கப்பட்ட காட்சிகள். ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை போலத் தெரிகிறது. ஆனால் ஒரு இழை மாதிரியான தொடர்புதான் கதையை நகர்த்துகிறது. உதாரணமாக ஒரு காட்சியில் எல்லி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கிரேன் இயக்கத்தில் தவறு செய்துவிடுகிறான். சூப்பர்வைசர் வந்து கத்திவிட்டுப் போகிறான். அவன் என்ன கத்துகிறான் என்று பார்வையாளர்களுக்கு புரிவதில்லை. எல்லியின் கவனம் சிதறிக் கொண்டிருக்கிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றொரு சமயம் தூரத்தில் நிற்கும் சூப்பர்வைசரை எல்லி உற்று நோக்குகிறான். அப்பொழுது எல்லிக்கும் அவனுக்கும் உறவு சரியில்லை என்று புரிகிறது. இன்னொரு காட்சியில் தன் மனைவியிடம் தனது வேலையைப் பறித்துவிட்டார்கள் என்று சொல்கிறான். இப்படித்தான் படம் முழுமையாகவே கத்தரிக்கப்பட்ட காட்சிகளால் நிரம்பியிருக்கிறது. இதை விவரிக்கும் போது அவ்வளவு சுவாரசியத்தையும் எழுத்தில் கொண்டு வர முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் படமாகப் பார்க்கும் போது இந்தத் துண்டுச் சித்திரங்கள் உருவாக்கும் கிளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்னொரு முக்கியமான விஷயம் பின்னணி இசை. இசை என்று சொல்ல முடியாது. சப்தங்கள். படம் முழுக்கவும் லைவ் சவுண்ட்தான். பாத்திரங்கள் நடப்பதும் பேசுவதும் ஓடுவதும் படமாக்கத்தின் போது நேரடியாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதுவும் பல காட்சிகளில் வித்தியாசப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக ஒரு காட்சியைச் சொல்ல முடியும். எஸ்டெல்லாவை எங்கே வைத்திருந்தார்கள் என்று எல்லி கேட்கும் போது அவள் பதில் எதுவும் சொல்வதில்லை. மற்றொரு காட்சியில் அவள் ஒரு ரூட் மேப் வரைந்து கொண்டிருக்கிறாள். அதுதான் அவள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த இடம் என்பதை படம் பார்க்கிறவர்கள் புரிந்து கொள்ள முடியும். அதைத் தூக்கிக் கொண்டு எல்லி ஓடுகிறான். அவள் அடைக்கப்பட்டிருந்த வீட்டுக்குள் நுழையும் போது ஒருவன் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் ஜன்னல் வழியாகத் தப்பி ஓடுகிறான். எல்லி துரத்துகிறான். காமிரா வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. நமக்கு டிவி ஓடும் சப்தம்தான் கேட்கிறது. ஆனால் திரையில் எல்லி அவனைக் கொலை செய்து கொண்டிருக்கிறான். இப்படி காட்சிக்கு முற்றும் சம்பந்தமில்லாத ஆனால் தொடர்புடைய இசையை ஓட விடுவது என படம் முழுக்கவுமே கேமிராவுக்கும் பின்னணி இசைக்குமான வித்தியாசமான பந்தத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

வழமையான காட்சிப்படுத்துதல், இசையாக்கம் என்பனவற்றிலிருந்து முழுமையாக விலகிய படம் Heli. திரைப்பட ஆர்வலர்கள் கற்றுக் கொள்வதற்கும் பிரியர்கள் உற்சாகமடைவதற்கும் ஏகப்பட்ட வஸ்துக்களை தனக்குள் உள்ளடக்கியிருக்கிறது.

ஆன்லைனில் கிடைக்கிறது. இணைப்பை கொடுத்தால் ‘திருட்டு டிவிடி சைட்டை இப்படி வெளிப்படையாகக் கொடுக்கலாமா?’ என்று யாராவது வந்து திட்டிவிட்டுப் போகிறார்கள். அதனால் Heli Solarmovies என்று கூகிளில் தேடுங்கள். நான் அப்படித்தான் பார்த்தேன். 

1 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

please watch this also.
http://www.imdb.com/title/tt0245712/?ref_=nv_sr_1