Jul 27, 2015

மருத்துவர்கள்

மருத்துவர்களின் மகத்துவத்தை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. அதுவும் சமூக ஊடகங்களின் பெருக்கத்திற்கு பிறகு அவர்களின் மீது ஏதாவதொரு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருக்கிறோம். காசு பறிக்கிறார்கள் என்பதோ மருத்துவர்கள் எந்திரத்தைப் போல மாறிவிட்டார்கள் என்பதோ நம்முடைய முக்கியமான குற்றச்சாட்டாக மாறியிருக்கிறது. இருபது வருடங்களுக்குப் முன்பு வரைக்கும் கூட பொதுவெளி விவாதங்களில் பெரும்பான்மையைப் பற்றித்தான் பேசுவார்கள். பத்து நல்லவர்களுக்கிடையில் ஒரு தீயவன் இருந்தால் தீயவனைத் தவிர்த்துவிட்டு நல்லவர்களைப் பற்றி பேசுவதை கவனித்திருக்கிறேன். இப்பொழுது உல்டா. ஆயிரம் நல்லவர்களுக்கிடையில் ஒரேயொரு தீயவன் இருந்தால் அவனைப் பற்றித்தான் புரட்டியடிப்போம். மற்றவர்களைக் கண்டு கொள்ளமாட்டோம். குறைகளைப் பிரதானப்படுத்தும் Social Media era!

மருத்துவர்களிலும் அப்படித்தான். விதிவிலக்குகளை மட்டுமே பிரதானப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. நெருங்கிய உறவொன்று மருத்துவமனையின் ஐசியூவுக்குள் கிடக்க வெளியில் காத்திருக்க வேண்டிய அந்தத் தருணத்தில் உணர முடியும்-  மருத்துவர்களின் மகத்துவத்தை. அதைப் போன்ற வேதனை நிறைந்த நேரம் என்று வேறு எதையும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. மருத்துவத் துறை எவ்வளவோ வளர்ச்சியடைந்துவிட்டது. இருந்தாலும் மருத்துவமனைக்குள் நம்முடைய பதற்றங்கள் தணிவதேயில்லை. அவர்கள் கை வைப்பது ரத்தமும் சதையுமான நம்முடைய உறவல்லவா? விபத்து, காய்ச்சல் என்பதெல்லாம் இருக்கட்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது காத்திருப்பவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? அதுவே இருதய மாற்று அறுவை சிகிச்சை என்றால்? கரணம் தப்பினால் மரணம். 

முப்பது வருடங்களுக்கு முன்பாக போலந்து நாட்டில் இருதய அறுவை சிகிச்சைக்கு அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைக்காது. போலந்து நாட்டில் மட்டுமில்லை உலகம் முழுக்கவுமே அப்படித்தான். இருதய மாற்று அறுவை சிகிச்சையெதுவும் வெற்றிகரமாக நிரூபிக்கப்படாத சமயம் அது. அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்தி வருவதோடு சரி. இந்தச் சூழலில் ரெலிகா என்றொரு மருத்துவர் துணிந்து சில இருதய அறுவை சிகிச்சைகளைச் செய்தார். முதல் சில அறுவை சிகிச்சைகள் தோல்விதான். இருதய சிகிச்சையில் தோல்வி என்றால்? பரலோக பதவிதான். நோயாளிகள் இறந்து போகிறார்கள். ஆனால் தொடர் முயற்சியில் வெற்றியடைகிறார். இடையில் அவர் சந்தித்த எதிர்ப்புகளும் தடைகளும் வெளியில் தெரியாதவை. சிரமப்பட்டுத்தான் தடைகளை உடைத்திருக்கிறார். அந்த ரெலிகாவின் கதையை அடிப்படையாகக் கொண்டு போலிஷ் மொழிப் படம் ஒன்று வந்திருக்கிறது. Bogowie. 

எண்பதுகளில் நடக்கும் கதை. நடிகர்களின் கிராப்பிலிருந்து பயன்படுத்தும் கார் வரைக்கும் அந்தக் காலகட்டத்திற்கு ஏற்பத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ரெலிகாவாக நடித்திருப்பவர் அட்டகாசப்படுத்தியிருக்கிறார் என்று தயங்காமல் சொல்லலாம். நெடுநெடுவென்று உயரம். தலையைச் சாய்த்தபடி நடப்பதும், சிரத்தையேயில்லாமல் சிகரெட் பிடிப்பதும், படு இயல்பாக நோயாளியின் நெஞ்சைக் கிழிப்பதுமாக ஒரு ஐரோப்பிய மருத்துவரைக் கண் முன்னால் நடமாடச் செய்கிறார். 

ஆரம்பத்தில் ரெலிகா ஒரு மருத்துவமனையில் வேலை செய்கிறார். அது போலந்து தலைநகரம் வார்ஸாவில் இருக்கிறது. ஆனால் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எந்த முடிவையும் துணிந்து எடுப்பதில்லை. எல்லாவற்றிலும் ஒரு தயக்கமும் பயமும் அவருக்கிருக்கிறது. ரெலிகா அவருக்கு அப்படியே எதிர்பதமாக இருக்கிறார். எல்லாவற்றிலும் துணிந்து அடிக்கிறார். சடாரென்று நோயாளியின் இருதயத்தை மாற்றி வைக்க வேண்டும் என கேட்கிறார். அதிர்ச்சியடையும் தலைமை மருத்துவர் ‘நான் இருக்கிற வரைக்கும் அனுமதிக்க மாட்டேன்’ என்கிறார். ரெலிகாவுக்கு பயங்கரக் கடுப்பு. இந்தச் சமயத்தில் வார்ஸாவிலிருந்து சற்று தள்ளியிருக்கும் ஒரு நகரத்தில் இருதய சிகிச்சைக்கான மருத்துவமனை தயாராகிக் கொண்டிருக்கிறது. ‘தலைமை மருத்துவராகச் செல்ல உங்களுக்கு விருப்பமா?’ என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லும் மனைவியை முறைத்துவிட்டு அந்த ஊருக்குச் செல்வதற்கான சம்மதத்தைத் தெரிவிக்கிறார். அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது- அது ஒரு வசதியுமில்லாத மருத்துவமனை என்று. அப்பொழுதுதான் கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் சோப்பலாங்கித்தனமாக படு மெதுவாக வேலை நடக்கிறது. அதற்குள் ரெலிகாவுடன் வேலை செய்வதற்காக புது ஆட்கள் ஒவ்வொருவராக வந்து சேர்கிறார்கள். அனுபவமில்லாத மருத்துவ அணி தயாராகிவிட்டது. ஆனால் மருத்துவமனையைக் கட்டி முடிப்பதற்கான நிதி ஆதாரம்தான் இல்லை. ரெலிகா அலைந்து திரிந்து பணத்தை தயார் செய்கிறார். 

பணம் தயாரான பிறகு தன்னுடைய அணியை வைத்தே மருத்துவமனையைத் தயார் செய்கிறார். ஆண் மருத்துவர்கள் டைல்ஸ் ஒட்டுகிறார்கள். செவிலியர்கள் கண்ணாடிகளைக் கழுவி சுத்தம் செய்கிறார்கள். மருத்துவமனை தயாராகிறது. அடுத்தது நோயாளிகளுக்கு தேவையான இருதயத்தை வழங்கக் கூடிய மூளைச்சாவடைந்த நன்கொடையாளர்களைப் தேடுவதும், அவர்களின் உறவினர்களிடம் அனுமதி வாங்குவது என்று இன்னொரு அலைச்சல். இதெல்லாம் ஒத்து வந்த பிறகு அறுவை சிகிச்சை. தொடர்ந்து ஒன்றிரண்டு தோல்விகளும் அதன் பிறகான வெற்றியும் ரெலிகாவை உலகின் மருத்துவ வரலாற்றில் அழிக்கவியலாத இடம் பெறச் செய்கின்றன. இதற்கிடையில் அவர் சந்திக்கும் விசாரணைக் கமிஷன்களும் எதிர்கொள்ளும் விமர்சனங்களுமாக படம் நகர்கிறது. 

2014 ஆம் ஆண்டில் வெளி வந்த படம் இது. இரண்டரை மணி நேரப் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் பார்க்கத் துவங்கியிருந்தேன். ஆனால் சிலிர்க்கச் செய்துவிட்டார்கள். படத்தில் செண்டிமெண்ட் உண்டு; நகைச்சுவை உண்டு ஆனால் எதுவுமே துருத்திக் கொண்டு நிற்பதில்லை. இருதயம் செயலிழந்து இறந்து போகும் சிறுமியும் அவளுடைய கடைசி உரையாடலும் நெகிழச் செய்கின்றன என்றால் பைக் விபத்தில் மூளைச் சாவை அடையும் இளைஞனின் அம்மாவும் அப்பாவும் கண்ணீர் கசிய வைக்கிறார்கள்.

புதிய மருத்துவமனையின் முதல் அறுவை சிகிச்சையை நடத்தித் தருவதற்கு தனது பழைய தலைமை மருத்துவரை ரெலிகா அழைக்கிறார். ‘இந்த மாதிரி சிம்பிளான ஆபரேஷனை செய்யறதுக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீங்க..இந்த ஆபரேஷனையெல்லாம் பேஷண்ட்டே கூட செஞ்சுக்கலாம்..அவ்வளவு ஈஸி’ என்று நெஞ்சில் கத்தியை வைக்கிறார். மின்சாரம் போய்விடுகிறது. black humour காட்சி அது. ‘இதயத்தை மாத்தினா என் புருஷன் என்னை மறந்துடுவானா?’ என்று கேட்கும் பெண்ணுக்கும் படத்தில் இடம் உண்டு. அவசரத் தேவைக்காக பன்றியின் இருதயத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று ரெலிகா சொல்ல பன்றியோடு போராடும் உதவி மருத்துவர்களும் படத்தில் உண்டு. அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் இதயத்தை எடுத்துவிட்டு புதிய இதயத்தை வைக்கும் இடைப்பட்ட நேரத்தில் ‘இப்போ இவன் heartless' என்று சிரிப்பே வராத ஆனால் அர்த்தம் பொதிந்த ஜோக்கை ரெலிகா உதிர்க்கிறார். இப்படி படம் முழுக்கவுமே சுவாரசியங்களை நிறைத்து வைத்திருக்கிறார்கள். 

இதை ஒரு தனிமனிதனின் வாழ்க்கை சார்ந்த படம் என்று சொல்லிவிட முடியாது. ஒரு மருத்துவ வரலாறின் படம். அதை இவ்வளவு சுவாரசியமாகவும் பார்வையாளனைப் பிணைக்கும்படியும் படமாக்கியிருப்பது பெரிய விஷயம். மருத்துவம் சார்ந்த உலகத் திரைப்படங்களில் இந்தப் படத்துக்கு நிச்சயமான இடம் உண்டு. திரைக்கதையும் இசையும் நடிப்பும் கலந்து கட்டி ஒரு அற்புதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். 

படத்தின் பெயருக்கு கடவுள் என்று அர்த்தமாம். மிகச் சரியாக வைத்திருக்கிறார்கள்.

6 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

Anonymous said...

"மருத்துவத் துறை எவ்வளவோ வளர்ச்சியடைந்துவிட்டது. இருந்தாலும் மருத்துவமனைக்குள் நம்முடைய பதற்றங்கள் தணிவதேயில்லை." - அருமை

Ram said...

பாஸ், நீங்க சொல்லி நான் பார்த்த கடைசியாய்க் கடைசிப்படம் ரன் ஆல் நைட். என்னமோ, உங்க ரசனையும் எனதும் ஒரு படத்தில்கூட ஒத்துப்போவதில்லை. அதனால் உங்கள் விமர்சனங்களை இனி படிக்க மாட்டேன் என நினைக்காதீர்கள். மிக அவசியமாய்ப் படிப்பேன். எதற்கு என்று சொன்னால் வருத்தப்படுவீர்கள். ஹி..ஹி...

Siva said...

ஒரு அற்புதமான படத்தை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. ஒரு தலைசிறந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணருடன் இருந்த உணர்வை குடுத்தது. இந்த படத்தை இன்னும் விரிவாக ஒரு விமர்சனம் செய்ய ஆசை. எழுதியவுடன் தெரியப்படுத்துகிறேன்.

மணி, இது போன்ற ஒரு அற்புதமான படைப்பு தமிழில் வர வாய்ப்பே இல்லை தானே? என்னே அந்த மருத்துவரின் மிடுக்கு, ஆஜானுபாக உடலமைப்பு, கோபம், சந்தோஷம், தொழில் பக்தி..... வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

மிகவும் அற்புதமான படம். என்ன மருத்துவர் எல்லா காட்சியிலும் புகைத்துக்கொண்டே இருக்கிறார்.

Siva said...

ஒரு அற்புதமான படத்தை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. ஒரு தலைசிறந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணருடன் இருந்த உணர்வை குடுத்தது. இந்த படத்தை இன்னும் விரிவாக ஒரு விமர்சனம் செய்ய ஆசை. எழுதியவுடன் தெரியப்படுத்துகிறேன்.

மணி, இது போன்ற ஒரு அற்புதமான படைப்பு தமிழில் வர வாய்ப்பே இல்லை தானே? என்னே அந்த மருத்துவரின் மிடுக்கு, ஆஜானுபாக உடலமைப்பு, கோபம், சந்தோஷம், தொழில் பக்தி..... வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

மிகவும் அற்புதமான படம். என்ன மருத்துவர் எல்லா காட்சியிலும் புகைத்துக்கொண்டே இருக்கிறார்.

Anonymous said...

Watched this movie today only. Such an amazing movie! Thank you very much for making me to watch this movie. Really wished to meet Dr. Religa, however we missed him on 8th March 2009 (info from movie). As a researcher I can very well understand how a new trial and successive failures in every attempts make a man disappointing and how much painful it would be. Lot more words and feelings are hidden.. One of the best movie I watched ever and it will be long lasting in my heart and even in my cardiac wall. Please keep sharing such kind of movies review... Thanks again!