Jul 23, 2015

அப்புறம் என்ன ஆச்சு?

அமெரிக்காவில் ஒரு மேலாளர் இருக்கிறார். கேரளாக்காரர். ஆரம்பத்தில் பெயரைப் பார்த்து என்னையும் மலையாளி என்று நினைத்துக் கொண்டார் போலிருக்கிறது. பேச்சுவாக்கில் ‘ஞான் நன்னாயிட்டு மலையாளம் சம்சாரிக்கும்’ என்று அடித்து விட்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ‘எங்க மாமன் அய்யப்ப பக்தருங்க..அதனால இந்த பதருக்கு அந்தப் பேரையே வெச்சுட்டாங்க’ என்று சொன்னதிலிருந்து பேச்சைக் குறைத்துக் கொண்டார். ஆனாலும் முழுமையாகக் கத்தரித்துவிட்டுவிட்டார் என்று சொல்ல முடியாது. அவ்வப்போது பேசிக் கொள்வோம்.

பொதுவாகவே மேலாளர்களிடம் பேசும் போது ‘எந்தெந்த ஏரியாக்களில் நான் வீக்காக இருக்கிறேன்?’ என்று கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். குற்றங்குறைகளை நிவர்த்தி செய்கிறோமோ இல்லையோ- குறைந்தபட்சம் எங்கேயெல்லாம் கோட்டை விடுகிறோம் என்று தெரிந்து வைத்துக் கொள்ளலாம். ‘பரவாயில்லையே...குறைகளைத் தெரிஞ்சுக்க ஆசைப்படுறான்’ என்று அவர்களுக்கும் நம் மீது நல்ல எண்ணம் வரும். கேட்காமல் விட்டுவிட்டால் எதையும் சொல்ல மாட்டார்கள். கமுக்கமாக வைத்துக் கொண்டு வருட இறுதியில் ‘நீ அதுல சரியில்லை...இதுல மோசம்’ என்று சொல்லும் போது நமக்கும் கிரகித்துக் கொள்வது சங்கடமாகத்தான் இருக்கும். ‘வருடம் பூராவும் இவன்  வாயைத் திறக்கவேயில்லை...இப்போ சம்பளம் உயர்வு கேட்டுடுவான்னோன்னு அடிச்சு ஊத்துறான்’ என்று நினைத்துக் கொள்வோம். அவர்கள் சொல்லக் கூடிய குற்றச்சாட்டுக்களில் உண்மை இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் நம் மனம் ஏற்றுக் கொள்ளாது. அப்படியேதான் காலத்தை ஓட்டிக் கொண்டிருப்போம். 

இதையெல்லாம் ஏதோவொரு மேலாண்மை பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள்.  அதனால் மேலாளர்களிடம் பேசும் போதெல்லாம் கேட்டு வைத்துக் கொள்வதுண்டு. சென்ற வாரத்தில் அந்த மலையாள மேலாளரிடம் இப்படிக் கேட்ட போது ‘நீ அப்படியொண்ணும் மோசமா இல்ல....ஆனா சரியா ஃபாலோ-அப் செய்யறதில்லை’ என்றார். அவரிடம் சில உதாரணங்களும் இருந்தன. சில பிரச்சினைகளைப் பற்றி ஆரம்பத்தில் சில மின்னஞ்சல்களை அனுப்பியிருக்கிறேன். அதன் பிறகு ‘எப்படியோ தொலையட்டும்’ என்று விட்டிருப்பேன். மலையாளத்தான்கள் விவரமானவர்கள் என்று சும்மாவா சொல்கிறோம்? துல்லியமாகக் கணித்து வைத்திருந்தார். இத்தனைக்கும் நேரில் கூட பார்த்ததில்லை. பக்கத்திலேயே இருந்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருப்பாரோ தெரியவில்லை.

ஐயப்பனுக்குத்தான் வெளிச்சம்.

‘ரொம்ப நன்றி ஐயா. திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறேன்.

யோசித்துப் பார்த்தால் இது தமிழ்நாட்டு தோஷம் என்று தெரிகிறது. ஏதாவது ஒரு செய்தி அல்லது அறிவிப்பு வெளிவரும். ஆளாளுக்கு கிளர்ச்சியடைந்து அதைப் பற்றிப் பேசித் தீர்ப்போம். அதோடு அந்தச் செய்தியையும் அறிவிப்பையும் புதைத்துவிட்டு அடுத்த செய்திக்குச் சென்றுவிடுகிறோம். 

சமீபகாலத்தில் நாம் எத்தனை விவகாரங்களை ஃபாலோ-அப் செய்திருக்கிறோம்? அதிகம் வேண்டாம்- இந்தக் கணத்தில் ஞாபகம் வரக் கூடிய சில செய்திகள் என்றாலும் கூட- சென்னை சிறுசேரியில் உமா மகேஸ்வரி என்ற டிசிஎஸ் பணியாளரை பலாத்காரம் செய்து கொன்றார்கள். அதன் பிறகு அந்தக் குற்றவாளிகள் என்ன ஆனார்கள்? பெண்களின் பாதுகாப்புக்காக அரசாங்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? கடலூரில் ஒரு பெண்ணை சில காலிப்பயல்கள் வன்புணர்வு செய்தார்கள். அந்த விவகாரம் என்ன ஆனது? பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் சிலர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்கள். அதைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் இருக்கின்றனவா? ராமஜெயம் கொலை வழக்கு என்னவாயிற்று? ஆம்பூர் கலவரம்? கோகுல்ராஜைக் கொலை செய்த யுவராஜைக் கைது செய்தார்கள். என்ன தகவல்களைக் கறந்தார்கள்?- என்று பட்டியலை நீளமாக்கிக் கொண்டே போக முடியும்.

மேற்சொன்ன எல்லாச் செய்திகளும் அந்தந்தச் சமயத்தில் ‘கவர்ஸ்டோரிகள்’ ஆக்கப்பட்டு மிக அதிக வெளிச்சம் அளிக்கப்பட்ட செய்திகள். பூதாகரமாக விவாதிக்கப்பட்டவை. ஆனால் ஒரு நாள்தான் ஆயுள். அடுத்த நாள் அப்படியே விட்டுவிட்டு மற்றொரு தினச் செய்திக்கு நகர்ந்துவிடுகிறோம். நம்முடைய மூளையே அப்படித்தான் ட்யூன் செய்யப்படுகிறது. பத்திரிக்கையாசிரியர்களிடம் பேசினால் ‘தொடர்கதையெல்லாம் இப்போ யார் படிக்கிறாங்க?. அந்தந்த இஷ்யூல அந்தந்தக் கட்டுரையும் கதையும் முடிந்துவிட வேண்டும்’ என்கிறார்கள். எதையுமே பின் தொடரும் மனநிலை நம்மிடம் இல்லை. நேற்று அன்புமணியின் போஸ்டர். இன்று கருணாநிதியின் மதுவிலக்கு அறிக்கை. நாளை நயன் தாராவோ த்ரிஷாவோ. ஒவ்வொரு செய்திக்கும் இங்கேயிருக்கும் மரியாதை அவ்வளவுதான்.

ஒருநாள் செய்தி என்று கூடச் சொல்ல முடியாது. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் புதுச் செய்தியை எதிர்பார்க்கிறோம். விகடன், தி இந்துவிலிருந்து மாலைமுரசு, தினத்தந்தி வரைக்கும் அத்தனை பேரும் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ஆட்களை வைத்து ஏதேனும் தகவலை அல்லது நிழற்படத்தைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வாசகர்களை உள்ளே இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்திகளில் முக்கால்வாசி கண நேரக் கிளர்ச்சிக்கானவை. ஆண் ஒருவனை வன்புணர்வு செய்த டெல்லிப் பெண் என்கிற செய்தி வரவேற்பு பெறும் அளவுக்கு கர்நாடகா காவிரியில் அணை கட்டும் செய்தி கவனம் பெறாது என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்களும் பெரிய அளவில் முக்கியமான பிரச்சினைகளில் கவனம் கொள்வதில்லை.

இங்கு அரசாங்கத்தைப் பற்றியும் பேச வேண்டியதில்லை. சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்துவதற்கே இவ்வளவு தயங்குகிறார்கள். அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? 

காவிரி பிரச்சினை என்று சொன்னவுடன் தான் ஞாபகம் வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக ‘மேகேதாட்டு’ என்று ஆளாளுக்கு கதறினோம். ஞாபகமிருக்கிறதா? காவிரி தமிழகத்திற்குள் நுழையும் இடத்தில் இருக்கிறது. மேகே என்றால் ஆடு;  தாட்டு என்றால் தாண்டுதல்.  இந்த இடத்தில் ஆடு தாண்டுகிற அளவுக்கு காவிரி குறுகி ஓடியதால் மேகேதாட்டு என்று பெயர். அங்கு ஒரு அணையைக் கட்டுவதாக கர்நாடகம் அறிவித்தவுடன் தமிழகக் கட்சிகள் அறிக்கைவிட்டன. முதலமைச்சர் கடிதம் எழுதினார். செய்தித்தாள்கள் முதல் பக்கத்தை நிரப்பின. புலனாய்வு வார இதழ்கள் கவர்ஸ்டோரி எழுதின. ஒரே வாரம். அவ்வளவுதான். விட்டுவிட்டோம். மறந்தும் போய்விட்டோம். ஆனால் கர்நாடகா வெறும் பேச்சோடு நிற்கவில்லை. வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதங்களில் அறிக்கை வந்தவுடன் வேலையை ஆரம்பிக்கவிருக்கிறார்கள்.

தமிழகத்தின் விவசாய அமைச்சர் யார்? யாரோ இருந்துவிட்டு போகட்டும். ஆனால் கர்நாடகாவில் நீர்ப்பாசனத் துறைக்கு என்றே தனி அமைச்சர் இருக்கிறார். வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது  எம்.பி. பட்டீல் என்கிற அந்த அமைச்சரின் பெயர் செய்தியில் வரும். எதையாவது செயல்படுத்திக் கொண்டேயிருக்கிறார். துங்கபத்ரா அணையில் சகதியை நீக்க சர்வதேச நிறுவனங்களிடம் டெண்டர் கேட்கப் போகிறோம் என்கிறார். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 20 முதல் 50 டிஎம்சி தண்ணீர் தமிழகத்தின் வழியாக ஓடி கடலில் கலக்கிறது. ஏன் வீணாக விட வேண்டும்? அவர்கள்தான் பயன்படுத்துவதில்லை. நாமாவது பயன்படுத்துவோம் என்கிறார். மேகே தாட்டுவில் அணையைக் கட்டி உபரி நீரை நாமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார். கர்நாடகா முழுவதும் காவிரி நீரை 781 ஏரிகளில் நிரப்பி வைக்கலாம் என்கிறார். அதற்கு கிட்டத்தட்ட எழுநூறு கோடி ரூபாய் ஒதுக்கி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.  

இந்தச் செய்திகளையெல்லாம் எதிர்கொள்ளும் போது தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று யோசிக்காமல் இருக்க முடிவதில்லை. ஆனால் யோசித்து மட்டும் என்ன நடக்கப் போகிறது?

2 எதிர் சப்தங்கள்:

Selva said...

மிகவும் உண்மை. நீர் மேலாண்மை தற்போது மிகவும் அவசியம். தமிழ் நாட்டுக்கு எப்போதுதான் விடிவு களம் வருமோ தெரியவில்லை? காமராஜர் போன்ற அரசியல்வாதிகள் நமக்கு எப்போது கிடைப்பார்கள்?

Vinoth Subramanian said...

Ethuvum nadakka povathillai. polambikitte irukka vendiyathuthan sir.